
இறையுதிர் காடு - 11

அன்று போகர், சனத்குமாரன் என்கிற தண்டபாணி குறித்து விரிவாகக் கூறத் தொடங்கினார்.
``சீடர்களே, நிறைய கேள்விகளை எழுப்பினீர்கள். அவற்றுக்கான பதிலைத்தான் நான் கூறப்போகிறேன். நான் இப்போது கூறப்போவது எனக்கு என் குரு கூறியது. நாம் இருக்கும் இந்தப் பொதினி எப்படி நிலக்கூறுகளால் சேர சோழ பாண்டிய மண்டலங்களுக்கு சம தூரத்தில் உள்ளதோ இதுபோலவே, அதே சமயம் வேறுபட்ட பல சிறப்புகள்கொண்ட ஒரு மலையகம் ஒன்று இங்கிருந்து தென்மேற்குத் திசையில் உள்ளது. `சதுரகிரி’ என்பது அதன் பெயர்.

தூய தமிழில் சொல்வதானால், `நான்கு மலையகம்’ எனலாம். என் போன்றோருக்கு அது சித்தன் காடு! சித்தனும் இறையாகிய சிவனும் வேறு வேறில்லை என்ற காரணத்தால், அது சிவன் காடும்கூட. அந்தக் காட்டில் ஏராளமான சித்தர்கள்! அந்தக் காடு, இலைகளை உதிர்ப்பதற்கு சமமாக இறை அம்சங்களையும் உதிர்க்கிற காடு. ஆதலால், அது ஓர் இறையுதிர்காடும்கூட!’’ போகர் `இறையுதிர்காடு’ என்று புதிய பொருளில் சொன்னதை, சீடர்கள் வெகுவாக ரசித்தனர்.

``அரிய சொல் விளக்கம். இலையுதிர் காலத்தை அறிவோம்... இலையுதிர் காட்டையும் அறிவோம். ஆனால், இறையுதிர் காடு எனும் பதப் பிரயோகமே புதிதாக உள்ளது’’ என்றான் போகருக்கு மிகவும் பிடித்த அஞ்சுகன் என்கிற சீடன்.
``ஆம். அது இறையுதிர்காடுதான்! செந்தமிழின் மற்றொரு பொருளில் சொல்வதானால், அது இரையுதிர் காடும்கூட! இந்த இரை, இறைவனுக்கானதல்ல. ஆனால், அவனையொத்த உணவைக் குறிப்பது. `உயிர் வாழ்ந்திடத் தேவை உணவு என்னும் வகையில், உணவும் இறைவனுக்கு இணையானது’ என்று நாம் உணர்ந்து தெளியவே வல்லின இடையின றகரங்களைக்கொண்டு இந்தச் சொல் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட இறையுதிர்காடு அமைந்த அந்தச் `சித்தன் காடு’ எனும் சதுரகிரியை, ஆன்மிக உலகம் `பூலோகக் கயிலாயம்’ என்றும் கூறிடும்.’’
``சதுரகிரி குறித்து, தாங்கள் இத்தனை விளக்கம் தரக் காரணம்?’’
``இருக்கிறது அஞ்சுகா! என் தேசாடனங்களில் சதுரகிரி யாத்திரையும், பொதிகை உலாவும் என்னைப் புடம்போட்டவை.’’
``எப்படி என்று கூற முடியுமா?’’
``இங்கேதான் நான் பல சித்தர் பெருமக்களைச் சந்தித்தேன். இந்தச் சதுரகிரியின் பருவச்சூழல், சித்தர் கூட்டத்துக்கு மிகவும் ஏற்ற ஒன்று. உறைபனிக்கும் நிறை வெப்பத்துக்கும் இடமின்றி, அதேசமயம் இரண்டுக்கும் சிறிது இடமும் தருகின்ற பருவங்களைக்கொண்டது இந்தச் சதுரகிரி’’ - போகர் பேச்சோடுகூடிய செயலாக ஆசனத்தை மாற்றிப் போட்டு அமர்ந்து, குக்குடாசன கோலத்தில் சீடர்களைப் பார்த்தார்.

பார்க்க, கோழி ஒன்று அமர்ந்திருப்பதுபோல் காட்சிதரும் அந்த ஆசனம், உடல் மெலிதாக உள்ளவருக்கே சாத்தியம். அதிலும், ஒற்றை நாடியில் `வற்றிய ஒற்றை நாடி’ என்றொரு ரகமுண்டு. அவர்தம் எலும்புகளைத் துல்லியமாக எண்ணிவிடலாம். ஆனாலும் சடைமுடி உடல் எடையைவிடவே கூடுதலாக இருக்கும். கண்டுகண்டாகக் கட்டிக்கொண்டு இன்னோர் உடல்போல் தொங்கிக்கொண்டு கூடவே வரும்.
மிதமிஞ்சிய தவத்தினாலும், அசைவற்ற தன்மையாலும் தலைமுடிகள் ஒட்டிக்கொண்டு, பிறகு கட்டிக்கொண்டு, அதற்கும் பிறகு அவர்கள் புரியும் குண்டலினி யோகத்தால் உச்சி குளிரப்போய் கல்போல் ஆகிவிடும். இந்தச் சடைமுடியால் இவர்கள், நம்மைச் சுற்றி ஊடாடும் பிரபஞ்சக் கதிர்களை உடம்பினுள் புகாமல் தடுக்கவும் திருப்பி அனுப்பவும் வல்லவர்கள்.

பிரபஞ்சக் கதிர்களால் நொடிக்கு நொடி ஆட்டுவிக்கப்படுவதே நம் தேகம். அந்தக் கதிர்கள் உட்புகுவது முடிகளால்தான். உடம்பில் சிரத்தின் மேல் முடிவடைவதால் அதை `முடி’ என்றும், உள்ளோட்ட உயிர் மண்டை ஓட்டில் துளிர்ப்பதால் `மயிர்’ என்றும் விளிக்கப்படும் மயிராகிய முடி, போகர்பிரானிடமும் சடை கட்டிக்கொண்டு அவர் தவத்துக்குச் சாட்சியாகக் காட்சிதந்தது. அந்தக் குக்குடாசனத்தில் அந்தச் சடைமுடியும் ஒட்டிக்கிடந்தது.
வகுப்புக் காலங்களில் அவர் இதுபோல ஆசனம் புரிவதும், அதைக் கண்டு மாணவர்கள் வியப்பதும் மிக சகஜம். அந்த ஆசனத்தையொட்டியும் கேள்விகள் எழும்பும். அதற்கான பதிலைச் சொல்லும்போது, பல யோக ரகசியங்கள் பட்டவர்த்தனமாகும். ஆனால், இப்போது அவர் அந்த யோக ரகசியம் பக்கமே செல்லவில்லை. சனத்குமாரனாகிய தண்டபாணி பற்றியும், பிரம்மன், சிவன் பற்றியும் கூற விழைந்தவர், இடையில் சதுரகிரி பற்றிக் கூறியதற்கும் காரணமுண்டு. அங்கேதான் போகரின் குருவான காலாங்கிநாதர் மோனத் தவத்தில் இருக்கிறார். இமயவாசியான காலாங்கிநாதர், சப்த ரிஷிகளோடும் நவநாயகச் சித்தர்களோடும் சத்சங்கம் நிகழ்த்தியவர். நான்மறை வேதங்களோடு அதன் கிளைகள் அவ்வளவையும் அவர்களிடம் கேட்டறிந்தவர். அப்படி அவர் அறிந்த ஒரு விஷயமே சனத்குமாரன், சிவகுமாரன் ஆன சம்பவம்.
``ஆம் சீடர்களே, நான் சதுரகிரி பற்றி உரைக்கக் காரணமுண்டு. அந்தச் சித்தன் காட்டில்தான், அந்த இறையுதிர் காட்டில்தான் நான் என் ஞானகுருவான காலாங்கிநாதரிடம் யோகப் பயிற்சிகளுடன், உபதேசமும் பெற்றேன். அவருக்கு சேவைசெய்து அரிய பல காயகற்பங்களை நாங்கள் அவர் வழிகாட்டுதலில் தயாரித்தபோது, `உடம்பை வெல்லவே கற்பங்கள்... ஆனால், சிலர் தவறாக, `உடம்பால் வெல்லவே கற்பங்கள்’ என்று பொருள்கொண்டு, தங்கள் உடலையும் கற்பமாக்கிக்கொண்டு ஆசை மிகுந்த வாழ்வு வாழச் சென்றுவிட்டனர். பாவம் அவர்கள்!’ என்றார் ஒரு நாள்.
`உடம்பை வெல்ல... உடம்பால் வெல்ல’ என்று அவர் சொன்ன சொற்களைக் கூர்ந்து கவனித்த நான், ``இரண்டுக்கும் என்ன வேற்றுமை குருநாதா?’’ என்று கேட்டேன். அவரும் பதில் சொன்னார்.
``இந்த உடம்பு என்பது, திருமூலன் வரையில் ஒரு கோயில்! கடுவெளிச்சித்தனோ `வெறும் காற்றடைத்த பை’ என்கிறான். எதுவாக இது உள்ளது என்பது, உங்கள் உடம்பின் மூலக்கூறுகளையும் உங்களை ஈன்ற உங்கள் முன்னோர்களையும் பொறுத்தது. அது எப்படி இருப்பினும், போக உடம்பை அடக்காமல் ஒருவன் யோகியாக முடியாது. உடம்பை அதன் பொருட்டு அடக்குவதற்கே கற்பங்கள் பயன்பட வேண்டும். ஆனால், கற்பங்களால் உடம்பை உறுதிப்படுத்திக்கொண்டு யோக வாழ்வு வாழாமல்... போக வாழ்வு வாழ முற்படுவது, மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும். இவ்வகை மனிதர்கள், அசுர வித்துகளை ஜனித்துவிடும் ஆபத்து உண்டு. கற்பங்கள், ஒரு மனிதனை யோகியாக்கி, பிரம்மரிஷி என்னும் பிரம்ம சித்தனாக்க வேண்டும். அசுரம் தழைக்கப் பயன்பட்டுவிடக் கூடாது. அப்போதுதான் நானும் `பிரம்மரிஷி’ எனும் சொல்லைக் கேட்டேன். பிறகு, பிரம்மரிஷிக்குப் பொருள் கேட்டபோதுதான் சனத்குமாரனாகிய தண்டபாணியின் விளைவைக் கூறினார், `காலாங்கிநாதர்’ எனும் என் குரு!’’ - போகர், தண்டபாணி குறித்துத் தான் அறிந்தவிதத்தைக் கூறும்போது, அந்தச் சீடர்கள் பொதிகை, சதுரகிரி மலைத்தலங்களைப் பற்றி அறிந்துகொண்டதோடு, போகரின் குருவான காலாங்கிநாதரைப் பற்றியும் அறிந்துகொண்டனர்.
தொடர்ந்து, சனத்குமாரனின் வாழ்வுக்குள் புகலானார் போகர்!
``அருமைச் சீடர்களே... சனத்குமாரன் யார் என்பதோடு, அவர் கண்ட சொப்பனம் குறித்தும் அறிந்தோமல்லவா? அந்தச் சொப்பனப்படி சனத்குமாரர் அசுரர்களோடு எப்படிச் சண்டையிடப்போகிறார் என்று பார்ப்போம்.
ஒரு சமயம், பார்வதிதேவியானவள், பரமேஸ்வரன் சகிதமாக பிரம்மாவின் இருப்பிடமான சத்யலோகம் வந்தாள். பிரம்மா, இருவரையும் வணங்கி வரவேற்றார். ஆனால், அங்கிருந்த சனத்குமாரர் எந்தச் சலனமுமின்றி இருவரையும் பார்த்தபடி இருந்தார். `தங்களைக் காண, பல உயிர்கள் தவமாய் தவமிருக்கும் நிலையில், தங்களைக் கண்டும் ஒருவன் சலனமின்றி இருக்கிறானே!’ என்று வியந்த பார்வதி, பரமேஸ்வரனைப் பார்த்திட... பரமேஸ்வரனோ பதிலுக்கு, ``வந்தனங்கள் சனத்குமாரா!’’ என்று சனத்குமாரனை முதலில் வணங்கினார். இது பார்வதிதேவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே சமயம் சனத்குமாரர், பதிலுக்கு ஒரு சிறு புன்னகை சிந்தியதோடு சரி. `ஒருவர் வந்தனம் கூறிடும்போது பதில் வந்தனம் கூறுவதுதானே பண்பாடு! பிரம்மபுத்திரனுக்கு எப்படி இதுகூடத் தெரியாமல்போயிற்று?’ என்கிற கேள்வி, பார்வதிக்குள் எழும்பிய நிலையில், பரமேஸ்வரனோ, சனத்குமாரனிடம் உரையாடத் தொடங்கிவிட்டார். அந்த உரையாடல், மிகுந்த பொருளுடையது.
``சனத்குமாரா, எப்படி இருக்கிறாய்?’’ என்று அவர் கேட்க, ஆரம்பமாயிற்று அவர்களின் உரையாடல்.
``ஒரு பிரம்மரிஷியைப் பார்த்து இப்படிக் கேட்பதே பிழை என்பதைத் தாங்கள் அறியாதவரா சுவாமி?’’ என்று திருப்பிக் கேட்டார் சனத்குமாரர்.
``இப்படித்தானே எப்போதும் பேச்சைத் தொடங்குவோம்?’’
``அப்படியாயின் பேசுங்கள்!’’
``உன் பேச்சிலிருந்தும், சலனமில்லாத நோக்கிலிருந்தும் நீ முற்றி விளைந்த ஞானியாகிவிட்டது தெரிகிறது.’’
``... ... ...’’
``என்ன சனத்குமாரா, என் கருத்துக்கு பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறாய்?’’
``நான் உங்கள் கருத்தை ஆமோதித்தால், என்னை நானே ஞானியாகக் கருதுவதுபோலாகுமே!’’
``அதில் தவறொன்றும் இல்லையே!’’
``சரி, தவறு இரண்டுமே எனக்கில்லை என்பதல்லவா என் நிலை?’’
``புரிகிறது... பிரம்மபுத்திரனான நீ, பிரம்மஞானியாக சகலத்தையும் சமமாக நோக்கும் தன்மைகொண்டவனாக மிளிர்கிறாய். உன்னை எண்ணி மகிழ்கிறேன். உன்னை சீடானாகப் பெற்றதற்காகப் பெருமிதமும் அடைகிறேன்.’’

``இன்னமுமா இந்தப் பெருமிதம், மகிழ்ச்சி இவையெல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகின்றன?’’ - சனத்குமாரனின் கேள்வி, பரமனை மட்டுமல்ல... பார்வதிதேவியையும் சற்று உலுக்கியது!
இன்று அந்த சந்தோஷ் மிஸ்ரா என்பவரின் கட்டளைக் குரல், அங்கு இருப்பவர்களை யெல்லாம் வேகமாக இயங்கவைத்தது. சற்றுத் தள்ளி இயங்க ஆரம்பித்திருந்த ராட்சத மண் அள்ளும் இயந்திரத்தை நோக்கி ஒருவர் ஓடினார்.
``யோவ்... வண்டியைத் திருப்பிக்கிட்டு அந்தச் சமாதிகிட்ட வா. அதை இடிக்கச் சொல்றார் பாஸ்...’’ என்று அவர் கூறவும், அதை இயக்கிக்கொண்டிருந்தவர் முகத்தில் திகைப்பு.
``என்ன பார்க்கிறே... வாய்யா..!’’
``அதுக்கென்னங்க இப்ப அவசரம்?’’
``என்ன, உனக்கும் சென்டிமென்ட்டா..?’’
``இல்லீங்க... நம்பிக்கையா எங்கெங்கேயோ இருந்தெல்லாம் வந்து கும்பிடுறாங்க. அதனால சொன்னேன்.’’
``அதுக்காக அங்கே கோயிலா கட்ட முடியும்? அங்கதான்யா பாஸோட கெஸ்ட் ஹவுஸ் வரப்போகுது. வாய்யா...’’ - சொல்லிவிட்டு அவர் திரும்பி வந்தார். கையில் ஒரு ஃபைல் வைத்திருந்தார். கழுத்தில் ஒரு டை வேறு... அதைத் தளர்த்தியபடி, அந்த சந்தோஷ் மிஸ்ரா அருகில் வந்து பணிவாக நின்றார்.
மண் அள்ளும் இயந்திரமும், தனக்கே உண்டான சத்தத்தோடு தடதடவென வரத் தொடங்கிற்று. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்திட, அப்போது பார்த்து சுவர் எட்டிக்குதித்த நிலையில் ஒரு வேட்டி - சட்டைக்காரர், சமாதியை நோக்கி இயந்திரம் வருவதையும், சுற்றி கூட்டமாகப் பலரும் நிற்பதையும் பார்த்துப் பதைக்க ஆரம்பித்தார். அவர் கையில் பூஜைப் பொருள்கள்! எதிர்பாராத ஒரு திருப்பம்போல் சமாதியை நெருங்கிவிட்ட அந்த இயந்திரம், பலத்த ஒரு சத்தத்துடன் அப்படியே நின்று இன்ஜின் பகுதியிலிருந்து நீராவிபோல் ஆவிக்காற்று பீய்ச்சி அடிக்கத் தொடங்கியது.
டை கட்டிய மனிதர், அதைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தார்.
``என்னய்யா... என்ன ஆச்சு?’’
``தெரியலீங்க. பேனட்டைத் திறந்து பார்த்தாதான் தெரியும். ரேடியேட்டர்ல ஏதோ சிக்கலுங்க...’’ என்றபடியே அதை இயக்கியவன் கீழிறங்கி வந்து, பேனட்டைத் திறக்க முனைந்தான்.
குக்கர்க் காற்றுபோல் இண்டு இடுக்கிலெல்லாம் `ஸ்ஸ்ஸ்’ சத்தம்! பேனட்டைத் திறக்கவும் குப்பென ஆவி முகத்தில் அறையவும், தெறித்துப் பின்புறம் விழுந்தவன், அந்த மிஸ்ராவையும் தள்ளிவிட்டான். அவரும் மன்னிப்புக் கேட்பதுபோல் சமாதிமேல் விழுந்தார். அப்படி விழுந்த நொடியில் அவர் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஓர் அதிர்வு. உடனே அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தினர். அவரும் தூசு தட்டிவிட்டுக்கொள்ள ``ஸாரி சார்... வெரி ஸாரி...’’ என்று அந்த இயந்திரத்தை இயக்கியவன் சொல்ல, ``இட்ஸ் ஓ.கே... இட்ஸ் ஓ.கே..!’’ என்றபடியே திரும்பி, சமாதியைப் பார்த்தார்.
சில நொடிகள் அவரிடம் ஒருவித மௌனம் மற்றும் சலனம்! சமாதி முகப்பில் தெரிந்த `பிரமாண்ட ராஜ உடையார் 1832 - 1932’ என்கிற எழுத்துகள், `அது என்ன?’ என்று அவரை ஆங்கிலத்தில் கேட்கவைத்தன. பதிலும் ஆங்கிலத்திலேயே அவருக்கு அளிக்கப்பட்டது.
``இது சமாதியில் இருக்கிற உடையார் பேர் சார். 1832-ல பிறந்த அவர், 1932-ல அவர் பிறந்த அதே தேதி, அதே நட்சத்திரத்துல இந்தச் சமாதிக்குள்ள ஐக்கியமாயிட்டதா சொல்வாங்க’’ என்றார், அவரைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்.
``ரியலி!’’
``யெஸ் சார்!’’
``அது சரி... இங்கே எதுக்கு பூஜையெல்லாம் நடக்குது?’’
``இது வழக்கமான சுடுகாட்டுச் சமாதி இல்லை சார்... ஒரு சித்தன் சமாதி.’’
``சித்தன் மீன்ஸ்..?’’
``உங்க வடநாட்டு பாஷையில சொல்லணும்னா, யோகி... ஏன் அகோரின்னும் சொல்லலாம்’’ - தனக்குத் தெரிந்ததை ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒருவன் வேகமாக ஓடிவந்து, மூச்சு வாங்க ``சார், நம்ப இன்ஜினீயர் ஒருத்தரை நட்டுவாக்கிளி கடிச்சிடுச்சு சார்... வாயில நுரைதள்ள விழுந்து துடிக்கிறார் சார்’’ என்றான்.

``வாட்?’’ - சந்தோஷ் மிஸ்ரா அடுத்தகட்ட திகைப்புக்குச் செல்ல, ``அனதர் ஒன் பேட் இன்சிடென்ட் சார்’’ என்று விளக்கமளித்தபடியே அங்கிருந்து ஓடத் தொடங்கினர் எல்லோரும்.
ஓங்கலாக வளர்ந்திருந்த மருத மரத்துக்குக் கீழே அந்த இன்ஜினீயர் விழுந்து கிடக்க, வாயெல்லாம் புகுபுகுவென நுரை! உடம்பிலும் ஒருவித முறுக்கு. எல்லோரும் அங்கு வந்து சேர்ந்த நிலையில், மரத்தின் மேலிருந்து ஒருவன் கயிறு ஒன்றை விழுதுபோல் தொங்கவிட்டவனாக சர்ரென அதில் இறங்கித் தரையைத் தொட்டு நின்றான்.
சிலர், வாட்ச்மேன் கிழவரின் கட்டிலைத் தூக்கிவந்து, அதில் உடம்பைத் தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்லத் துரிதமாகினர். மரத்தின் அடியில் மிதித்துக் கொல்லப்பட்ட நட்டுவாக்கிளி தேளின் கறுத்த உடம்பு கிடந்து, பார்ப்பவர்களை ஒரு மிரட்டு மிரட்டியது.
``ஆத்தாடி... எம்புட்டு பெரிய தேளு!’’ என்றான் கூலிக்கு மரம் அறுக்கும் ஒருவன்.
``சார், `இந்த மரத்தை இன்னிக்கு துப்புரவா வெட்டிட்டுதான் மறு வேலை பாக்கணும்’னு சார் சொன்னார். `நான் மேல போய், கயித்தைக் கட்டிட்டு வர்றேன். முக்காவாசி வெட்டின பிறகு கயித்தால இழுத்தா மரம் சாஞ்சிடும்’னு சொல்லி நான் மேல ஏறினேன். மேல இருந்து கயித்தைக் கட்டும்போது கீழே சத்தம் கேட்டது. பாத்தா, இந்த நட்டுவாக்கிளி, சாரோட தலை மேல விழுந்து அப்படியே சட்டை காலர் வழியா கழுத்துப் பக்கம் இறங்கி நல்லா போட்ருச்சு. மரத்து மேல கிளைலதான் இருந்திருக்கு. நான் மேலே ஏறவும், கிளை அதிர்ந்து உதிர்ந்து மேலே விழுந்துடுச்சு. மேலே இருக்கிற எனக்கு, கையும் ஓடலை, காலும் ஓடலை சார். அதுக்குள்ள சாரே தட்டிவிட்டு அது கீழே விழுந்ததுல ஷூக்காலால மிதிச்சுக் கொன்னுட்டார். ஆனா, கழுத்துகிட்ட நல்லா கொட்டினதுல விஷம் விர்ர்ருனு ஏறி, நுரை தள்ளிடுச்சு. சுருண்டு விழுந்துட்டார்’’ - மரத்திலிருந்து இறங்கியவனின் விளக்கம் மொழிபெயர்த்து சந்தோஷ் மிஸ்ராவுக்குச் சொல்லப்படவும், அவரிடம் மீண்டும் ஒருவித அமைதி.

அப்போது அந்தக் காவல்காரக் கிழவர் அவர் முன்னால் வந்து நின்றார். உக்கிரமாகப் புலம்பத் தொடங்கினார். ``அய்யா முதலாளி... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. இது வழக்கமான இடமில்லீங்க. இதுக்கு ஒரு பெரிய வரலாறு இருக்குதுங்க. இங்கே இருக்கிற மரமெல்லாம் காக்கா, குருவி எச்சில்ல முளைச்சதில்லீங்க. பொதிகைமலையில முளைச்சு இங்கே வந்து நட்டு வளர்த்த மரங்க! ஒவ்வொரு மரமுமே ஒரு சாமி... எப்பேர்ப்பட்ட பஞ்ச காலத்துலயும் இந்தத் தோட்டம் தண்ணிக்குத் தவிச்சதில்லை! இந்த மரங்க நல்லா இருந்தா, பல விஷயங்க நல்லா இருக்கும். இதுங்க அழிஞ்சா, பல விஷயங்க அழிஞ்சிடுங்க. தயவுசெய்து இங்கே எதையும் அழிச்சு, எந்தக் கட்டடமும் கட்டாதீங்க. அப்படிக் கட்டப் பார்த்தீங்கன்னாலும் உங்களால முடியாது. என் சாமி கனவுல வந்து சொல்லிட்டாரு!’’ என்று வெடவெடக்கச் சொன்ன அவர் பேச்சை, ஒருவர் மிஸ்ராவுக்கு மொழிபெயர்த்தார்.
மிஸ்ரா அதற்கு மேல் அங்கு நிற்கத் தயாராயில்லை. டை கட்டிய மனிதரை அருகில் அழைத்து ``ஸ்டாப் ஆல் த ஒர்க்’’ என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னவர், மாளிகை முகப்பில் நின்றுகொண்டிருந்த அவரின் ஆடி கார் நோக்கி நடந்தார். நடக்கும்போதே பலவித உத்தரவுகள். உச்சபட்சமாக, ``அந்த பிரமாண்ட ராஜ உடையார் ஹிஸ்டரி எனக்குத் தெரியணும்’’ என்பதாகத்தான் இருந்தது.
அவர் உத்தரவு மின்னல் வேகத்தில் எல்லோரையும் சென்றடைந்ததில், சத்தமும் புழுதியுமாக இருந்த அந்தப் பகுதி, பந்த் நடப்பதுபோல் ஓர் அமைதிக்கு சில நிமிடத்திலேயே வந்துவிட்டது.
அவர் காரில் ஏறவும், அவரின் செகரட்டரி போன்ற ஒருவன் ஓடிவந்து முன் சீட்டில் ஏறிக்கொண்டான். வெள்ளை யூனிஃபார்மில் சட்டைத் தோள்பட்டைக்கு கலர் லூப் எல்லாம் வைத்து அணிந்திருந்த டிரைவரின் சட்டை முகப்பில் சந்தோஷ் மிஸ்ராவின் புளூ மூன் குரூப்பின் அடையாளக்குறி `BMG’ என்கிற கலிக்ரஃபி எழுத்தில் மின்னிட, டிரைவர் காரைக் கிளப்பினார். எல்லோரும் வழிவிட்ட நிலையில் நிதான வேகத்தில் சென்ற அந்தக் கார், மெயின் கேட்டை அடைந்த நிலையில், சக்கென சடன்பிரேக் பிடிக்கப்பட்டு ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.
``வாட் நான்சென்ஸ்...’’ என்று சந்தோஷ் மிஸ்ரா கோபமாகக் கத்தவும், முன் சீட்டில் அமர்ந்திருந்த செகரட்டரி வெளிறிய முகத்தோடு திரும்பி வலது கையால் காருக்கு முன்னால் வெளியே பார்க்கச் சொன்னார். தலையைச் சற்று வளைத்து மிஸ்ராவும் இரு சீட்டுகளின் இடைவெளி வழியாக வெளியே பார்க்கவும், நடுச்சாலை மேல் அந்த 12 அடி நீள நாகம் 3 அடி உயரம் ஒரு கைத்தடிபோல் எழும்பி நின்ற நிலையில் காரைப் பார்த்துக்கொண்டிருந்தது!
மிஸ்ரா முகம் பயத்துக்கு இலக்கணம் படைக்க விரும்பியதுபோல் மாறிட, அந்தப் பாம்பும் தழைந்து சாலை மேல் ஓடி, அருகிலிருந்த புதர்களில் புகுந்து மறைந்துபோனது!
வியர்த்துப்போன டிரைவரும் காரை மெள்ளக் கிளப்பினார்! சந்தோஷ் மிஸ்ரா திரும்பி, பின்புறக் கண்ணாடி வழியாக அந்த பிரமாண்ட பங்களாவைப் பார்த்தார். `நான் ஒரு புதிர்களின் கொட்டாரம், மர்மங்களின் நிலைக்களன்’ என்பதுபோல், அது அவர் பார்வையில் சுருங்கத் தொடங்கியது!
`செங்குன்றம்’ எனப்படும் ரெட்ஹில்ஸைக் கடந்து, நான்கு வழிப்பாதையிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சர்வீஸ் ரோட்டின் ஓரத்திலிருந்தது அந்த மார்பிள் குடோன். வெட்டவெளியில் குப்பல் குப்பலாக ஒழுங்கில்லாத சதுரங்களில் மார்பிள் கற்கள் ஆயிரக்கணக்கில் கண்ணில்பட்ட நிலையில், வர்த்தகக் கட்டடம் ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடு ஒரு பக்கமாக இருந்தது. அதனுள் நுழைய முயன்றது பாரதியின் கார். கான்ட்ராக்ட் செக்யூரிட்டி கார்டு கதவைத் திறந்துவிடாமல் அருகில் வந்து பார்த்தான்.
சர்ரென கண்ணாடி இறங்கிட, அவனைப் பார்த்த கணேசபாண்டியன் ``கதவைத் திறய்யா... எம்.பி மக வந்திருக்காங்க. உனக்குத் தகவல் தரலையா?’’ என்று கேட்கவும்தான் கதவு திறக்கப்பட்டது.
கப்பிச்சாலை... கார் கடக்கவும் புழுதிக் கவளங்கள் செக்யூரிட்டியின் கண்களைக் கரிக்கவிட்டன. கடந்து சென்ற காரிலிருந்து பாரதியும் உதிர்ந்தாள். சுடிதாரில் துப்பட்டாவை கழுத்தைச் சுற்றவிட்டுத் தொங்கவிட்டிருந்தாள். கணேசபாண்டியனும் இறங்கி உள்ளே அழைத்துச் சென்றார். எதிரில் ஒருவர் செல்போனில் பேசியபடியே வந்தவராக ``வாங்க பாண்டி...’’ என்று கூறிவிட்டு, போனில் திரும்பவும் ``நான் அப்புறம் பேசறேன்’’ என்றவராக கட் செய்தார். முன் நடந்தார்.
உள்ளேயும் மார்பிள் கற்கள் சரித்து வைக்கப்பட்டிருந்தன. நடக்கும்போது உருவத்தை அப்படியே பிரதிபலித்தன. பாரதியைப் பார்த்த சிலர் முகத்தில் வியப்பு. உள்ளே ஓர் ஏ.சி அறை! அறைவாசலில் சட்டை பட்டன் போடாமல் மார்பைக் காட்டிக்கொண்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்த ஒருவன், மேலும் கீழுமாகப் பார்த்தான் கணேசபாண்டியை... அப்படியே பாரதியையும்!
``நீங்கதான் அந்த எம்.பி பார்ட்டியா?’’
``ஆமா...’’
``போங்க...’’ என்று கதவைத் திறந்துவிட்டான். உள்ளே ஃபுல் ஏ.சி! குளிர், கண்களில் ஏறிச்சில்லிட்டது. அறைக்குள் ஒரு நாற்காலியில் தலை, கை என்று பல இடங்களில் கட்டோடு அந்த வேங்கையன்!
``என்ன வேங்கையா... உன்னைப் பிடிக்க பட்டபாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியையே பார்த்துடலாம்கிற அளவுக்குக் கஷ்டப்படுத்திட்டியேப்பா!’’ - கணேசபாண்டியன் குரலில் பரிச்சயமும் கிண்டலும் அதனூடே ஒரு நூலளவு கோபமும் இழையோடிற்று.
``விஷயத்துக்கு வா பாண்டி... என்னா மேட்டர்?’’
``அது சரி... பாப்பா யார் தெரியும்ல?’’
``ஏன் தெரியாம... அதான் போன்லயே சொல்லிட்டியே! டேக் யுவர் சீட் மேடம்.’’
``நான் உட்காந்து உன்னைப் பேட்டியெடுக்க வரலை. வார்ன் பண்ண வந்திருக்கேன்’’ - பாரதியிடம் ஆரம்பமே அதகளமாக இருந்தது. அது வேங்கையனையும் ஊசியாகக் குத்தியதில், கணேசபாண்டியைத்தான் அடுத்து வெறித்தான்.
``பாப்பா... கொஞ்சம் பார்த்துப் பேசுங்க. அய்யாகூட வேங்கையன்கிட்ட ரொம்ப மரியாதையாதான் பேசுவார்.’’
``இவன்கிட்ட மரியாதையா பேசி என்ன புண்ணியம்? அந்தக் குமாரசாமிகிட்டல்ல மரியாதையா நடந்திருக்கணும்? இப்ப அவர் உயிர் போய், அந்தக் குடும்பமே நிலைகுலைஞ்சு கிடக்குதே!’’ - பாரதி, துளியும் மடங்காமல் கோபத்தைப் பீறிடவிட்டாள்.

``சொத்த உடம்பு. அட்டாக் வந்து பூட்டான். அதுக்கு நான் என்ன பண்ணுவேன்?’’ - வேங்கையனும் பாரதிக்கு எதிர்ப்பான தொனியில் வேகமாக பதில் சொன்னான்.
``அதுக்குக் காரணம் நீ... உன்னோட பித்தலாட்டம்! நிஜமா சொல்லு, அது உன் இடமா?’’
``பின்ன?’’ - அசால்ட்டாகத் திருப்பிக் கேட்டான் வேங்கையன். பாரதி அவனிடம் அந்த பதிலை துளியும் எதிர்பார்க்கவில்லை. கணேசபாண்டிக்கும் தர்மசங்கடமாகிவிட்டது.
``வேங்கையா வேண்டாம்... பாப்பா கோபத்துல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா, நீ இப்படிப் பேசறது சரியில்லை.’’
``பாண்டி... நான் இப்ப செம காண்டுல இருக்கேன். என்னிய போட்டுத்தள்ள ராஜாபாதர் குரூப், அல அலன்னு அலைஞ்சுக்கிட்டிருக்காங்க. எனக்கு இப்ப என் உசுருதான் பெருசு. இப்பப்போய் அந்த முடிஞ்சுபோனவனைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கல்லாம் எனக்கு நேரமில்ல. நல்ல நேரத்துல நீ இவங்களக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’ - என்றபடியே ஒரு சிகரெட்டை எடுத்து ஒரு கையாலேயே இதழில் செருகி நெருப்புக்கு முயல, ஓர் அடியாள் நெருங்கி வந்து தன் சிகார் லைட்டைப் பற்றவைத்து வேங்கையன் புகையை உமிழ வழிசெய்தான்.
``ஏ.சி ரூம்ல சிகரெட் பிடிக்கிறியே. உனக்கு அறிவில்ல?’’ - பாரதி அவனைத் துளியும் பொருட்படுத்தாமல் கேட்கவும், ஒரு முறை முறைத்தான்.
``முறைக்காத... உன் உயிருக்கு ஆபத்து இருக்கலாம். அது நீ தேடிக்கிட்ட விஷயம். நான் இப்ப வந்திருக்கிறது அந்தப் போலிப் பத்திரத்தை வாங்கிக் கிழிச்சுப் போட... அந்தப் பத்திரம் எங்க?’’
``தா பார் மே... நான் இப்ப இருக்கிற நிலையில நீ இப்ப என்னைப் பார்க்க வந்ததே தப்பு. அத்தொட்டு போலிப் பத்திரம் அதைக் கிழிக்கணும்கிறதெல்லாமும் ரொம்ப ஓவர். உங்கப்பாவே வந்து `வேணாம் வேங்கையா’ன்னாலும் நான் கேக்கிற ஆள் கிடையாது. ஒண்ணு வேணா பண்ணு... அந்த இடத்தோட மார்க்கெட் ரேட்ல பாதியக் கொடு, போதும். பத்தரத்தைக் கொடுக்கிறேன். கிழிச்சும் போடு இல்ல வீசைக்குக்கூடப் போட்டுக்க. இப்ப கிளம்பு’’ - அசால்ட்டாகப் பேசினான் வேங்கையன்.
பாரதிக்கு ரத்தம் கொதித்தது. கணேசபாண்டியும் வேங்கையனின் அந்த அதிரடிப்பேச்சை எதிர்பார்க்கவில்லை.
``வேங்கையா... நீ பேசறது சரியில்லை! குமாரசாமி ஒண்ணும் சாதாரணமா சாகலை. முருகன் படத்துக்கு முன்னால நின்னு, சாபம் கொடுத்துட்டுதான் செத்துப்போயிருக்காரு. அதுக்கு தகுந்த மாதிரி அய்யாவும் இப்ப படுத்த படுக்கையில... உனக்கும் உன் எதிரிகளால காயங்க! தப்ப திருத்திக்கிட்டா நீ பிழைச்சுக்குவே! இல்லை... ரொம்பக் கஷ்டப்படுவே!’’ என்ற கணேசபாண்டியின் பேச்சு, வேங்கையனைச் சிரிக்கத்தான்விட்டது.
``எலே பாண்டி... உட்டா அவன் ஆவி வந்து சினிமாவுல வர்ற மாதிரி பழிக்குப்பழி வாங்கும்னுகூடச் சொல்லுவபோலத் தெரியுதே! எந்தக் காலத்துல இருந்துக்கிட்டு என்னா பேசறே நீ? முதல்ல இந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு இடத்தைக் காலிபண்ணு’’ - அணைய இருந்த சிகரெட்டை இழுத்து புகையைக் கொப்புளித்தான்.
பாரதியும் அதற்குமேல் நின்று அவனோடு பேசத் தயாரில்லை. ``பாண்டிண்ணே, கிளம்புங்க. இவனை நான் எப்படிச் சந்திக்கணுமோ அப்படிச் சந்திக்கிறேன்’’ என்றபடியே வேகமாய் அந்த ஏ.சி அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள். கணேசபாண்டியனும் வேங்கையனை முறைத்துப் பார்த்தபடியே பாரதியைத் தொடர்ந்த நிலையில், அவன் கைப்பேசியில் அழைப்பொலி. எடுத்துக் காதில் வைத்தபடியே நடந்தவன் முகத்தில் ஏராள அதிர்ச்சி!
- தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்