அலசல்
சமூகம்
Published:Updated:

ஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க!

ஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க!

ஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க!

தி.மு.க-வில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன. கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா, பா.ம.க உள்ளே வருமா என்றெல்லாம் கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துள்ள நிலையில், சேலத்தில் நடந்த ஆதித் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்துகொண்டு, அருந்ததியர் சமூகத்தினரை அரவணைத்துப் பேசியிருக்கிறது தி.மு.க.

ஆதித் தமிழர் பேரவையின் வெள்ளி விழா மாநாடு பிப்ரவரி 9-ம் தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான பெரும்பாலான ஏற்பாடுகளையும் தி.மு.க செய்திருந்தது என்று சொல்லப்படுகிறது. மாநாட்டில் தி.மு.க-வினர் மிக அதிகமாக இடம்பெற்றதையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் பேசிய தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளரான வி.பி.துரைசாமி, “இந்த மாநாட்டை அனைவரும் வாழ்த்திவிட்டுப் போனதைப்போல நான் போக முடியாது. நான் இச்சமூகத்தால் பயனடைந்தவன். ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இந்தச் சமுதாயத்துக்கு கலைஞர் மூன்று சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கியதால், நாம் தி.மு.க-வுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்’’ என்றார்.

ஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க!

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், “இரண்டு சமுதாயங்களையும் பிரித்துவிடலாம் எனச் சிலர் நினைக்கிறார்கள். நாம் பிரிந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலத்தில் வேளாளர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் கலவரம் நடந்ததாக வரலாறு இல்லை’’ என்றார்.

ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், “தி.மு.க., அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கியதைப்போல வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல கொங்கு வேளாளர் சமுதாயத்தை, முன்னேறிய சமுதாயத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்றியதும் தி.மு.க-தான். அதனால், இரு சமூகங்களும் வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்’’ என்றார்.

இறுதியாகப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்,  “பெரியாரிடம் இளைஞர் ஒருவர், ‘நான் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். நீங்கள் ஆட்சிக்கு வந்தால், திராவிட நாடு கிடைத்தால், எங்களுக்கு என்ன பயன்?’ என்று கேட்டார். அதற்குப் பெரியார், ‘உங்களுக்கு இழப்புதான். ஆதிதிராவிடர் என்ற பெயரில், ஆதி போய் அனைவரும் திராவிடர் ஆவீர்கள்’ என்றார். இயக்கம்தான் வேறு. சிந்தனையும், கொள்கையும் ஒன்றுதான். திராவிடக் கட்சிக்கும், அருந்ததியர் மக்களுக்கும் பல்வேறு தொடர்புகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் நீதிக்கட்சியிலும், திராவிடக் கட்சியிலும் இருந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அடிக்கடி மோடி தமிழ்நாட்டுக்கு வந்து, பி.ஜே.பி-யைக் காலூன்ற பார்ப்பதாகச் சொல்கிறார்கள். காலே இல்லாத பி.ஜே.பி எப்படிக் காலூன்ற முடியும். தமிழ்நாட்டில் கூலிப்படை ஆட்சி நடக்கிறது. ‘இங்கு கொலை, கொள்ளைச் செய்யப்படும்’ என்று போர்டு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி மாட்டவில்லை. கொடநாட்டில் பல கொலைகளைச் செய்துவிட்டு, கடப்பாரையை விழுங்கியதைப்போல கம் என்று இருக்கிறார் எடப்பாடி’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ்
படம்: க.தனசேகரன்