
''பெயிண்ட் அடிப்பதற்காக என் மகனைத் சென்னைக்கு கூட்டிட்டு போனாங்க. 6 மாதம் ஆகியும் ஆள் அட்ரஸே இல்லை. எங்கு இருக்கிறார், என்ன ஆனாரென்றே தெரியவில்லை. கூட்டிட்டு போனவர்களிடம் கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டங்கறாங்க. பெத்த வயிறு பத்தி எரியுது. சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் சென்னைக்கு போய் புகார் கொடுன்னு சொல்லறாங்க. சென்னையில் போய் கொடுத்தால் சேலத்துக்கு போய் கொடுன்னு சொல்லி அலைக்கழிக்கிறாங்க. என்ன பண்ணறதுன்னே தெரியல'' என்று கண்ணீர் விட்டு அழுகிறார் தமிழ்செல்வி என்ற தாய்.
இதுபற்றி அந்தத் தாய் தமிழ்செல்வியிடம் கேட்டதற்கு, ''எங்க வீட்டுக்காரர் பேரு அய்யாவு. எங்க வீட்டுக்காரர் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு போயிட்டு இருக்கிறார். எங்களுக்கு மோகன், ரவிக்குமார் என ரெண்டு பசங்க. நாங்க சேலம் அன்னதானப்பட்டியில் குடியிருக்கிறோம். எங்க மூத்தப்பையன் விபத்தில் இறந்துட்டான். இப்ப எங்களுக்கு ரவிக்குமார் மட்டும் தான் இருக்கிறான். இவனை நம்பி வாழ்ந்துட்டு இருந்தோம்.
அவனுக்குப் படிப்பறிவு இல்லை. கட்டிய மனைவியும் இவனை விட்டு போயிட்டதால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிட்டான். இப்ப அவனுக்கு வயது 37. சேலத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குப் போவான். அவன் செலவு போக மீதி பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுப்பான். ஆறு மாசத்திற்கு முன்னாடி சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த மேஸ்திரி சுகுமார் சென்னை பூந்தமல்லி பழஞ்சூர் டி.எம்.ஐ பொறியியல் கல்லூரிக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு கூட்டிட்டு போனார். அதிலிருந்து போன் பண்ணவும் இல்லை, ஆள் எங்க இருக்கிறான். என்ன செய்யறான்னே தெரியல கூட்டிட்டு போன சுகுமாரிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை. நானும் கடந்த 6 மாதமாக இருக்கிறானா, இறந்துட்டானான்னு தெரியவில்லை'' என்று தேம்பி தேம்பி அழுதார்.
அதையடுத்து வேலைக்கு கூட்டிச் சென்ற சுகுமாரிடம் கேட்டதற்கு, ''சார் அவன் நல்ல பையன்னு நினைத்து கூட்டிட்டு போனேன். அவன் மது அருந்தி விட்டு கல்லூரியில் ரொம்ப தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனால் அவனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பிட்டாங்க. அவன் எங்க போனான் என்று எங்களுக்குத் தெரியாது'' என்றார்.