அலசல்
சமூகம்
Published:Updated:

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

டந்த வாரம் மதுரைக்கு வந்துவிட்டுச் சென்ற தடம்கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் மீண்டும் இன்னொரு முறை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை அரங்கேற்றியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் ஜி.எஸ்.டி-யால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் பின்னலாடை மாநகரமான திருப்பூரில்.

மோடியின் வருகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி காலை முதலே திருப்பூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தன் கட்சியினருடன் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாகத் திரண்ட வைகோ, மோடி திருப்பூருக்குள் நுழையும்வரை ஆர்ப்பாட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார். கொடுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை மொத்தமாகக்  கைதுசெய்து அள்ளிக்கொண்டு போனது காவல் துறை. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கு.ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி என மற்றொரு படையும் கறுப்புக்கொடிகளுடன் களத்துக்கு வந்ததால் காவல் துறையினர் திக்குமுக்காடிப் போனார்கள்.

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

இறுக்கமான மோடி!

மோடிக்கு மதுரையைவிட திருப்பூரில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் என்று பி.ஜே.பி தேசியத் தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இந்து அமைப்புகள் வலுவாக உள்ள பகுதிகளில் முக்கியமானது திருப்பூர். ‘திருப்பூரில் எந்தச் சச்சரவும் இருக்காது’ என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர்கள் உறுதியளித்த காரணத்தால்தான், திருப்பூர் பொதுக் கூட்டத்துக்கே ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அளவுக்கு மீறிப்போகவே, பி.ஜே.பி தலைவர்கள் அனைவருக்குமே அதிர்ச்சிதான். மோடியும் பொதுக்கூட்டம் முடியும்வரை இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.

இடிச் சிரிப்பில் எடப்பாடி..!

ஏற்கெனவே பிரதமர் மோடி சென்னை மற்றும் மதுரைக்கு வந்திருந்தபோது பி.ஜே.பி எதிர்ப்பாளர்களிடம் காவல் துறையினர் காட்டிய கெடுபிடிகள் ஏனோ இம்முறை திருப்பூரில் இல்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், “திருப்பூரில் மோடிக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பெரிய அளவில் கிடுக்கிப்பிடி போட வேண்டாம் என மேலிருந்து உத்தரவு வந்திருக்கிறது” என்றார்.

இதுகுறித்து பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “பி.ஜே.பி-யுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை அமைத்தால், எப்படியும் கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட தொகுதிகளைப் பெற பி.ஜே.பி தரப்பில் அழுத்தம் கொடுப்பார்கள். தற்போது திருப்பூரில் கிளம்பிய மோடி எதிர்ப்பைக் காரணம் காட்டியே, தொகுதிப் பங்கீட்டில் கொங்கு மண்டலத் தொகுதிகளைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கொங்கு அமைச்சர் ஒருவர்தான், அ.தி.மு.க தலைமைக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த ஏற்பாடு. மேடையில் மோடியுடன் அமர்ந்திருந்த முதல்வரின் முகத்தில் வெளிப்பட்ட இடிச் சிரிப்பே இதற்கு சாட்சி” என்றார்கள்.

அதிருப்தியில் தொழிற்துறையினர்!

திருப்பூர் தொழில் துறையின் சில முக்கிய அமைப்புகள், பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவை என்கிறார்கள். இது குறித்தும் பேசியவர்கள், “மோடியின் பொதுக் கூட்டத்துக்கு சில தொழிலதிபர்கள் நிதியுதவியை வாரி வழங்கியுள்ளனர். மேலும் அவர்களிடம், ‘விடுமுறை தினத்தில் மோடி வருவதால், ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் ஆட்களை அழைத்துவந்து, கூட்டத்தைக் காண்பிக்க வேண்டும்’ என்ற அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அன்றைய தினமே மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல முதலாளிகள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்தையும் வழங்கி, இந்தக் கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். ஆனால், மோடியுடன் சந்திப்பு நிகழாமல் போனதால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்” என்றார்கள்.

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் புறக்கணிப்பு!

பொதுக்கூட்டம் நடைபெற்ற அதே திடலில் முன்னதாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன், கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் பங்கேற்றனர். 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தது, திருச்சி விமானநிலையம் தொடர்பானத் திட்டம், திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மதுரையைப் போன்றே இங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டன. அரசு விழா முடிந்து, பி.ஜே.பி பொதுக் கூட்டமும் முடியும்வரை எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் காத்திருந்து, மோடியை ஹெலிகாப்டரில் ஏற்றி, வழியனுப்பிய பிறகே கிளம்பியுள்ளனர். கோவையில், மோடியைச் சந்திக்க தம்பிதுரை முயற்சி செய்துள்ளார். அவரை, மோடி சந்திக்கவில்லை.

அதேசமயம், “துணை முதல்வர் பன்னீர்செல்வம் மூலம் நிறைய விஷயங்கள் பிரதமரிடம் பரிமாறப் பட்டுள்ளன. விரைவில் அதிரடிகள் அரங்கேறும்” என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்!

- தி.ஜெயப்பிரகாஷ், இரா.குருபிரசாத்
படங்கள்: எம்.விஜயகுமார், க.தனசேகரன்