அலசல்
சமூகம்
Published:Updated:

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
News
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேறுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரபட்டினத்தில் நாட்டின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. பாதுகாப்பு, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையிலும் பலன்தரக்கூடிய அந்த ஏவுதளத்தை அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துவருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் முயற்சிகளால் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது. இஸ்ரோவின் சார்பாக விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கின்றன. இந்தத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மூன்றாவது ஏவுதளத்தை அமைப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தைத் தேடினார்கள். அப்போது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டால், தென் மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கொண்டுவர தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி ஆர்வம் காட்டினார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருக்கிறார். பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜனும் குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்காக மத்திய அரசிடம் பேசி வருகிறார். 2014-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்க அமைப்பு மையத்தின் ஊழியர் கூட்டமைப்புச் சார்பாக இதுகுறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில், குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய நன்மைகள், தொழில்நுட்ப ரீதியாகக் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

அதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இஸ்ரோவின் தலைவர் சிவன் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரோ மையத்தின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானியான சிவசுப்பிரமணியன் இதுகுறித்துப் பேசுகையில், “விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உள்நாட்டு ராக்கெட் தொழில்நுட்பத் தயாரிப்பில் திறமையாகச் செயல்படுவதால், பல்வேறு நாடுகளும் நம் நாட்டை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ராக்கெட் ஏவுதளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கும். ஓர் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், வேறோர்  இடத்திலிருந்து விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், நம் நாட்டில் இரு ஏவுதளங்களும் ஸ்ரீஹரிகோட்டாவிலேயே அமைந்துள்ளன. அதனால் வேறோர் இடத்தில் ஏவுதளத்தை அமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

தவிர, ஏவுதளம் அமைக்க ஸ்ரீஹரிகோட்டாவை விடவும் மிகச்சிறந்த இடம் குலசேகரபட்டினம்தான். பொதுவாக, நிலநடுக்கோடு பகுதிக்கு எவ்வளவு அருகில் இருந்து ஏவுகிறோமோ அந்த அளவுக்குக் குறைவான எரிபொருள் மூலமாக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும். தற்போது உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிகவும் உகந்த இடமாக அமெரிக்காவின் ப்ரெஞ்ச் கயானா. காரணம், அது நிலநடுக்கோட்டுக்கு ஐந்து டிகிரி கோணத்தில் நெருக்கமாக இருக்கிறது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

ஏவுதளம் நிலநடுக்கோட்டிலிருந்து 13.43 டிகிரியில் இருக்கிறது. ஆனால், குலசேகரபட்டினம் நிலநடுக்கோட்டிலிருந்து எட்டு டிகிரியில் இருப்பதால் மிகச்சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஏவுதளம் அமைக்கப் பட்டால், எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும். எரிபொருளை ஏற்றிச்செல்லக்கூடிய கூடுதல் எடைக்குப் பதிலாகச் செயற்கைக் கோள்களைக் கொண்டு செல்ல வாய்ப்புக் கிடைக்கும்’’ என்றார். 

இதற்கிடையே சென்னைவாழ் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அமைப்பினர் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த கண்ணனிடம் பேசினோம். “நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதாகத் தொழில் வாய்ப்புகள் இல்லாததால் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களை நோக்கி மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல்களுக்கும், தொழில் வாய்ப்புகள் இல்லாததே காரணம் என்று ரத்தினவேல்பாண்டியன் ஆணையம் அறிவித்த பின்னரும், போதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை. தற்போது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கான சூழல் கனிந்துவருகிறது. இதைத் தமிழக அரசு சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், முதல்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். மறைமுகமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

விமானநிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம் நடக்கும். நாங்குநேரியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ராக்கெட்டுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மகேந்திரகிரியில் உள்ள மலைப்பகுதியில் 7,000 ஏக்கர் பரப்பளவில் திரவ இயக்க அமைப்பு செயல்படுகிறது. இந்த மையத்திலும் கூடுதல் ஆய்வு மையங்களை அமைக்கலாம். அதனால் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும்’’ என்றார் அக்கறையுடன்.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் பேசினோம். “குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாகப் புதிதாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மூத்த விஞ்ஞானியான கும்பகர்ணன் தலைமையில் விஞ்ஞானிகள் கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சதீஷ்குமார், பி.வி.சுப்பாராவ், ஜி.அப்பண்ணா, பி.ஏ.சரவணபெருமாள் ஆகியோர் அடங்கிய ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இஸ்ரோ தலைவரான சிவன் உத்தரவிட்டுள்ளார்” என்றார்கள்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம், அணு உலைத் திட்டம், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ராக்கெட் ஏவுதளத் திட்டத்தை குலசேகரபட்டினத்தில் அமைக்க தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

- பி.ஆண்டனிராஜ்