
ஸ்ரீஜா
``முகநூலில் நான் எழுதிய பதிவுகள்தாம் என்னைக் கவிஞராக்கியது” என்கிற மனோஹரி, பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர். எனினும், தமிழ்நாட்டின் பல பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் வசித்திருக்கிறார்.

‘‘அப்பா மருத்துவர். அவர் படித்த தொன்மையான தமிழ் நூல்களால் தமிழ்மீது எனக்குச் சிறுவயதிலேயே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. நான்கைந்து வரிகளுக்குள் கவிதைகள் எழுதுவேன். ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்று சொன்ன பாரதியின் வரிகளே என்னை காதல் கவிதைகளை எழுதத் தூண்டியது. முகநூலில் எனக்குக் கிடைத்த நண்பர்களைவிட, என் கவிதைகளுக்கு உலகம் முழுக்கக் கிடைத்த முகம்தெரியாத ரசிகர்கள் அநேகர். விருப்புவெறுப்பின்றி விமர்சனம் செய்வார்கள். அவர்களால் மேன்மேலும் பக்குவடைந்தேன்'' என்கிற மனோஹரியின் சமீபத்திய கவிதை நூல், ‘விரல்களில் சிக்காத காற்றாய் நெஞ்செல்லாம் நிறைந்தாய்!’
மனோஹரியின் மனம் சொல்லும் கவிதைகள் சில இங்கே விரிகின்றன.

விடிவெள்ளியில் ஒரு நாள்
புவியின் ஓர் ஆண்டைவிட நீளமானது
என்று பூகோளம் அறிந்த நீ
இப்புவியிலும்
உன்னைக் காணாத ஒரு தினம்
எனக்கு ஒரு யுகமென நீளும்
என் உளவியலை அறியாததேனோ!
இரவின் தனிமையில்
நானும் நிலாவும்...
நிலா ஆதவனைப் பற்றியே பேச
நானோ உன்னைப் பற்றியே
பேசுகிறேன்!
கடலை ஏமாற்றிக் கரை தாண்டிட
துடிக்கும் அலை
உருண்டோடி வரும் அலையில்
முந்திக்கொண்டுவரும் நுரை
வெண்ணுரை சுமந்து வரும் நீர்க்குமிழிகள்
குமிழி முழுவதும் உன் பிம்பங்கள்
கரை மோதி உடையுமோவென
கைகளில் அள்ளி முகர்ந்தேன்
குமிழி உடைய பிம்பம் கலைந்து
காற்றாக சுவாசத்தில் நுழைந்தாய் நீ!
நாள்கள் என்று ஏதுமில்லை
நாம் குறித்ததே!
கண்டங்கள் என்று ஏதுமில்லை
நாம் வரைந்ததே!
பொழுதுகள் என்று ஏதுமில்லை
நாம் வகுத்ததே!
நீயும் நானும்
வேறாகிப்போவோமோ...
என் நினைவில் நீயும்
உன் நினைவில் நானும்
ஒன்றாகும்போது!
இடையே இருப்பது
இரும்புக் கதவென்றா
திறக்கத் தயக்கம்...
சுற்றி இருக்கும் சுவரே
மாயை என்றறியாயோ!
முன்பொரு காலத்தில்
நான் நீ... வான் நிலவென ஒளிர்ந்து
வண்ணம் பல தந்தோம்!
பின்பொரு காலத்தில்
பெருமழை நிலமெனக் கலந்தே
செழுமை செய்தோம் ஜகத்தினை!
வேறோரு வேளையில்
ஆதாம் ஏவாளாக ஆசைகொண்டு
சிருஷ்டி செய்தோம்!
இதோ... இது ஒரு நிலாக்காலம்!
அருகருகே கற்பாறைகளாகி
ஏகாந்தத்தில் பிரபஞ்சத்தை
உள்வாங்குகிறோம்!
பிரிவென்பதே இல்லை...
என்றும் இணைந்திருப்போம்
யுகம் யுகமாக!
ஒரு மொழியும் நீ
சொல்லத் தேவையில்லை
சிரிப்பெனும் ஒரு மொழி போதும்
எவருக்கும் பொது மொழி
சிலர் மறக்கும் அழகிய மொழி
உனக்குத் தெரிந்த ஒரே மொழி
உன் உதட்டில் பூக்கும் சிரிப்பொலி
அது போதுமே... நீயுன் அன்பைச்சொல்ல
என் உள்ளம் கொள்ளைபோக!