
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”

உலக அளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர் தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். ஹைதராபாத்தில் வசிக்கும் தீபா, பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பயமற்று எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் சில கதைகளை வழங்குகிறார். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்களேன்!
எலியிலிருந்து எலி வரை…
முனிவரின் ஆசிரமத்துக்குள் ஓடிவந்து தஞ்சம்புகுந்த எலி, “தயவுசெய்து என்னை இங்கே தங்க அனுமதியுங்கள். வெளியே பூனை ஒன்று என்னை அடித்துத் தின்னக் காத்திருக்கிறது. அதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்று அலறியது.
“உன் வாழ்க்கையை நீதானே வாழ வேண்டும்? இப்படிப் பயந்தால் எப்படி?” என்று வினவிய முனிவர், எலியின் மேல் சிறிது தண்ணீர் தெளிக்க எலி, நாயாக மாறி வாலை அசைத்தது. முனிவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஊருக்குள் ஓடியது.
சில நாள்கள் கழித்து, மீண்டும் முனிவரிடம் ஓடிவந்து தஞ்சமடைந்தது அந்த நாய்.
“ஐயோ… என்னைக் காப்பாற்றுங்கள் சாமி. அந்த ஓநாய் என்னைக் கொல்ல வந்துகொண்டிருக்கிறது. நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” என்றது. நாயின் மீது முனிவர் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க, நாய் சிறுத்தையாக மாறியது. நன்றி சொல்லிவிட்டுச் சென்றது.

மீண்டும் ஒருநாள், முனிவரிடம் அடைக்கலம் தேடிவந்தது சிறுத்தை. “நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன் குருவே. என்னை அந்த வேட்டைக்காரனிடமிருந்து காப்பாற்றுங்கள்” என்று அலறியது. அதன்மீது பரிதாபம்கொண்ட முனிவர், சிறுத்தையை மனிதனாகவே மாற்றிவிட்டார். மகிழ்ச்சியாக தாவிக்குதித்து ஊருக்குள் ஓடினான் அவன்.
சில நாள்களில்... முனிவரிடம் மீண்டும் ஓடி வந்தான் அந்த மனிதன். “குருவே... உங்களுடனேயே நான் தங்கிக்கொள்கிறேன். அனுமதியுங்கள். அங்கே ஜன்னல் மேலிருக்கும் பூனை ஒன்று என்னை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறினான்.
“இதற்கு மேல் உன்னைக் காப்பாற்ற என்னால் முடியாது. காரணமே இன்றி அச்சம் என்ற ஒன்றுதான் உன்னை விரட்டிகொண்டே இருக்கிறது. இந்தப் பயம் உனக்குள் இருக்கும் வரை, உன்னால் நிம்மதியாக வாழவே முடியாது” என்று சொன்ன முனிவர், அந்த மனிதன் மேல் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க, அவன் எலியாக மாறினான்!
ஏதோ ஒன்றைப் பார்த்து நாம் பயம் கொள்ளும் வரை, நம்மால் வாழவே முடியாது. அச்சத்தை துணிவுடன் எதிர்கொண்டு வெல்வதே நிம்மதியான வாழ்க்கைக்கு வழி!
எமனும் தோட்டக்காரனும்
அரண்மனைத் தோட்டத்தில் அமைதியாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்த தோட்டக்காரனின் கண்ணில்பட்டான், செம்பருத்திச்செடி மறைவில் ஒளிந்திருந்த எமதர்மன். அவன் கைகளில் இருந்த பாசக் கயிறும் கதையும் பீதியைத் தர, “ஐயோ…இங்கே என்ன செய்கிறாய் நீ?” என்று கேட்டபடி அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஓடும்போது அவன் திரும்பிப் பார்க்க, அவன் இருந்த திசை நோக்கி கைகளை அசைத்துக்கொண்டிருந்தான் எமன்.
நேரடியாக மன்னனிடம் ஓடோடிச் சென்ற அரண்மனை தோட்டக்காரன், “ஐயையோ… அவன் என்னைப் பிடிக்கத்தான் வந்திருக்கிறான் அரசே. என்னைப் பார்த்து கைகளை வேறு ஆட்டி பயமுறுத்தினான். நான் அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் செத்துடுவேன். என்னை தயவுசெய்து ஏதேனும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிடுங்கள். உங்கள் குளிர்கால அரண்மனைக்கு என்னை பத்திர மாக அனுப்பிவிடுங்கள்” என்று அரற்றினான்.
“கவலைப்படாதே… இங்கு எந்தத் தீங்கும் உனக்கு வராது. நான் உன்னைப் பாது காக்கிறேன்” என்று மன்னன் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், அதைக் கேட்கும் மனநிலையில் தோட்டக்காரன் இல்லை.
“தயவுசெய்து இந்த ஒரே ஒருமுறை மட்டும் என்னை பத்திரமான இடத்துக்கு அனுப்பிவிடுங்கள் மன்னா. உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று அழுது புலம்பினான்.

அவன் மேல் இரக்கம்கொண்ட அரசனும், “சரி… சரி… நீ இவ்வளவு பிடிவாதமாகக் கேட்ப தால் உன்னை குளிர்கால அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லி, அவனைத் தன் தேரில் அனுப்ப ஏற்பாடு செய்தான்.
அன்று மாலை, அரசன் தன் தோட்டத்தில் உலவும்போது, செடி மறைவில் இன்னமும் ஒளிந்திருந்த எமனைக் கண்டான். “என் தோட்டக்காரனை ஏன் நீ இன்று இவ்வளவு பயமுறுத்தினாய்?” என்று கேட்டான்.
“அடடே… அவனை நான் பயமுறுத்தவே இல்லையே? அவனை இங்கே எதிர்பாராத ஆச்சர்யத்தில்தான் நான் கையசைத்தேன். அவனை, இன்று இரவு நான் குளிர்கால அரண்மனையில்தான் சந்திப்பதாக இருந்தது” என்று சொன்ன எமன், தன் எருமையின்மீது ஏறி, குளிர்கால அரண்மனையை நோக்கி தோட்டக்காரனைச் சந்திக்கச் சென்றான்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதுதான் போல… பயத்தாலே எமனிடம் மாட்டிக்கொண்டான் தோட்டக்காரன்!