
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
நிர்வாணமாக அலைந்தபோது, மனிதர்களுக்குள் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லை. இலைகளைக்கொண்டு மறைத்தபோதும் யாரும் யாரையும் எந்தவிதமான பார்வை கொண்டும் பார்க்காமல்தான் இருந்திருப்பார்கள். ஆடை வந்தபோதுதான், மனிதனுக்குள் அகம்பாவம் வந்தது; கச்சை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஏளனத்தோடு பார்க்கவைத்தது. கோட் சூட் அணிந்த வர்க்கத்தின் மத்தியில் நைந்த புடவையில் நின்றபோது, அது சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆடைதான் மனித சமூகத்தின் முதல் அரசியல்.

கோட் சூட் அணிந்துகொண்டு ஒரு மனிதன் சைக்கிளில் சென்றால், அவனை இந்தச் சமூகம் எள்ளி நகையாடும். கோட் அணிந்தவர்கள் எல்லாம் காரில்தான் செல்ல வேண்டும் என்று இங்கே எழுதாத சட்டமொன்று இருக்கிறது. சைக்கிளில் போனால், கோட் சூட்டுக்கு வலிக்கவா செய்யும்? பிறர் என்ன நினைப்பார்கள் என நாம் நினைப்பதிலேயே நமது வாழ்நாள் சுதந்திரம் காணாமல்போகிறது. ஆனால், எங்கள் வாழ்வின் பிரச்னை வேறு மாதிரியானது. அதுவும் ஓர் ஆடைப் பிரச்னைதான். இப்போது அதுவோர் ஆடைப் புரட்சி என்பது, அப்போது எனக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை.
மாதம் நூறு ரூபாய் சம்பளத்துக்காகத் தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் இரும்பு குடோனுக்கு 18 குடம் தண்ணீர் அடித்து, பெரிய சிமென்ட் தொட்டியில் நிரப்பவேண்டும். இப்போது எங்களுக்கெல்லாம் சுதாம்மாவாக இருப்பவர், அப்போது எனக்கு அண்ணனாக இருந்தார். இந்த மாதிரியான வேலைகளை பேட்டையில் நிறைய அம்மாக்கள் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கூடமாட ஒத்தாசையாகச் சில அண்ணன்கள் குடங்களைத் தூக்கிவிடுவார்கள்.
எனக்கெல்லாம் அதிகாலை 4 மணியென்பது நட்டநடுநிசி என்பதால், அம்மாவும் அண்ணனும் வேலைக்குச் செல்வார்கள். கூடவரும் எல்லா அண்ணன்களும் தண்ணீர் நிரம்பிய குடத்தைத் தோளில் தூக்கும்போது என் அண்ணன் மட்டும் இடுப்பில் தூக்கியது. பொதுவாகவே தண்ணீர்க்குடத்தைத் தோளில் தூக்கினால் ஆண்; இடுப்பில் சுமந்தால் பெண். ``புள்ளைக்கு தோள்ல தூக்க பெலம் இல்லடா... அதான் இடுப்புல தூக்குது!” என்று எங்களிடம் சொல்வார் அம்மா.
எப்போதும் எல்லா நேரமும் எல்லோரையும் உற்று கவனித்துக்கொண்டிருப்பதே இந்தச் சமூகத்தின் வேலையாக இருக்கிறது. சகமனிதர்களின் நடவடிக்கையில் ஏதாவதொரு வித்தியாசத்தைக் கண்டுவிட்டால் போதும், அதைப் பேசிக் கொண்டாடிக் கழுவி ஊற்றுவதில் அவ்வளவு சுகம் அநேகருக்கு.
``ஏய்... உன் அக்கா, வீட்ல என்னடா பண்ணுது?” என்று கேட்கும் சிலரிடம் ``வேலைக்குப் போயிருக்குது” என்று மூத்த அக்காவைப் பற்றிச் சொல்வேன்.
``வீட்ல இருக்குல்ல... அந்த அக்கா என்னடா பண்ணுது?” என்று கேட்பார்கள். எனக்கு இப்படிக் கேட்கும்போதெல்லாம் என்னவோபோல் இருக்கும். ஏன் இப்படி ஊரே கேலிசெய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது, போகப் போக அண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் கோபமாக மாறியது.
சிறுவயதில் விளையாடும்போது அம்மாவின் புடவையைக் கட்டி அம்மாவாக நடித்ததைப் பார்த்த அம்மா ``எம்புள்ள கட்ற மாதிரி... புடவய பொண்ணுங்ககூடக் கட்டாது” என்று பெருமை பொங்கச் சொல்வார்.
பாலின மாற்றம் ஏற்படும் பிள்ளைகள், சில காலம் வீட்டை விட்டுப் பிரிந்தே தீருவார்கள் என்பது எழுதப்படாத விதி. செந்தில் என்ற பெயரைத் தன்னிலிருந்து தன் நிழலிலிருந்து உதறிவிட்டு, சுதாவாக மாற வீட்டை விட்டு வெளியேறினார் சுதாம்மா.

அவர் வெளியேறிய அந்த இரவை, அம்மா பல நாள் கடக்க முடியாமல் இருந்தார். ``எம்புள்ள போயிடுச்சே... எங்க இருக்குதோ... என்ன பண்ணுதோ” என்று அம்மா அரற்றும்போதெல்லாம், அப்பா எதுவும் பேசாமல் பீடியைப் புகைத்தபடி வானத்தை வெறித்துக்கொண்டிருப்பார். முற்றிலும் ஆண் என்னும் பிம்பத்தைக் களைய, ஒரு வனவாசம் மேற்கொள்வார்கள் திருநங்கையர்கள். அந்த வனவாசத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்தார் சுதாம்மா. விளையாடிக்கொண்டிருந்த நான் வந்து பார்த்தபோது, முடியெல்லாம் வளர்ந்து கொஞ்சமாய் மாறியிருந்தார். அம்மா பரபரப்பாக இருந்தார். சங்கரா மீன் வறுவல் தோசைக்கல்லில் பளபளத்து வெந்துகொண்டிருந்தது. என்னைப் பார்த்தவர் சிரித்தார். பதிலுக்கு நான் சிரிக்கவில்லை. ஒரு மீனை மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினேன். சுதாம்மாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும் என எனக்குத் தெரிந்தாலும், இந்த ஊரின் சிரிப்பு தொடர்ந்து வந்து என் முன்னால் நிற்க, ஊரின் சிரிப்புக்கு ஆளாகிவிடுவேன் என்றே அன்று சிரிக்காமல் வெளியேறினேன். நான் நினைத்துக்கொண்டிருந்த ஊர், எதைச் செய்தாலும் சிரித்துக்கொண்டேதான் இருந்தது.
``ஆபரேஷன்லாம் பண்ணி பொண்ணாவே மாறிடுச்சுடா” என்று அக்கா கொஞ்சம் பதற்றத்தோடு என்னிடம் சொன்னார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நான் வெறுமனே கேட்டுக்கொண்டேன். ``என்னவா மாறினாலும்... அது எம்புள்ள...” என்று அம்மா சொன்ன வார்த்தை, எனக்கு என்னைப் புரியவைத்தது. `ஊர் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அது என் பிள்ளை’ என்ற சொற்கள்தாம் இன்று சுதாம்மாவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
உண்மையில், திருநங்கையராக மாறிவிடும் ஒரு பிள்ளையை மனதார சிலர் வெளியே அனுப்ப மாட்டார்கள். ``அம்மா, வயசுக்கு வந்த பசங்க வீட்ல இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களை யெல்லாம் வீட்ல வாடகைக்கு வெச்சா... மத்தவங்க ஒரு மாதிரி பேசுறாங்கம்மா. தயவுசெஞ்சு வீட்டை காலிபண்ணிடுங்க” என்று ஒண்ணுமண்ணாய்ப் பழகியவர் சொன்னதும், நாங்கள் வீட்டை காலிசெய்தோம்.
`உங்க பிள்ளைக்குக் கல்யாணம் நடக்கணும்னா... இந்த மாதிரி ஒரு புள்ள இருக்கிறத மறைச்சாத்தான் நடக்கும்’ போன்ற எத்தனையோ விஷயங்களை அம்மா கடந்திருக்கிறார். எத்தனையோ விதவிதமான சொல்லாடல்களை சுதாம்மாவும் கடந்திருப்பார்!
அப்போது, சாராயம் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. பிளாஸ்டிக் கவரில் 50 மில்லி பத்து ரூபாய்க்குக் கிடைக்கும். உறையின் காதைக் கடித்துத் துப்பி, குவளையில் ஊற்றி, கொஞ்சூண்டு தண்ணீரைப் பதமாய்க் கலந்து, இலை ஊறுகாயை விரலில் வழித்து எடுத்துக்கொண்டு, சுறுசுறுவெனக் குடித்துவிட்டு, வழித்த ஊறுகாயை நாக்கில் தடவிக்கொள்வார் அப்பா. அப்படிச் சேர்ந்த சாராய உறைகளைக் கடையில் போட்டுக் கடலைமிட்டாய் வரை வாங்கிச் சாப்பிடலாம். உறை சாராயத்தில் தனது கவலைகளை ஒப்புக்கொடுத்துவிட்டார் அப்பா. அவர் காதுகளுக்கு எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லியிருப்பார்கள்தான். ஆனால், அதை ஒருபோதும் அம்மாவிடம் அவர் சொன்னதாகத் தெரியவில்லை. அம்மாக்கள் அழுதுவிடுகிறார்கள்; அப்பாக்கள் அழாமல் இருந்துவிடுகிறார்கள் அவ்வளவுதான்!

அன்று ஞாயிறு என்பதால், அப்பா கறி எடுக்கப் போயிருந்தார். சோற்றையும் கறிக்குழம்பையும் ஒரு தூக்குவாளியில் போட்டுக்கொண்டார் அம்மா. பையில் சுதாம்மாவின் பழைய லுங்கிகள், சட்டைகள் எல்லாம் வைத்துக்கொண்டு ``ஏ... நாங்க போய்ப் பார்த்துட்டு வந்துடுறோம்... நீங்க போட்டுச் சாப்பிட்டுக்கிடுங்க” என்று அம்மாவும் அக்காவும் சுதாம்மாவைப் பார்க்கப் போயிருந்தார்கள்.
வனவாசம் முடிந்து உடலாலும் உள்ளத்தாலும் லட்சணம் பொருந்திய ஒரு பெண்ணாக மாறிய சுதாம்மாவுக்கு, கறிச்சோற்றையும் துணிகளையும் கொடுக்க, கதவு தட்டியிருக்கிறார் அம்மா. கதவைத் திறந்த சுதாம்மா, நைட்டியில் இருந்திருக்கிறார். என்னதான் இருந்தாலும் அம்மாவும் மனுஷிதான் என்பதால் அழுதுவிட்டார். அக்காவுக்குப் புரிந்திருக்கிறது.
ஒரு சிறிய முன்கதை, என்னவென்றால்... சுதாம்மாவுக்கு முன்பு செந்திலாக இருந்தபோது ``அம்மா சொல்றத கேளு... ஒரு கல்யாணத்தப் பண்ணிக்கிட்டா... எல்லாம் சரியாப்போயிடும். அநாதயா விட்டுட்டுச் சாவக் கூடாது ராஜா” என்று பலதடவை அம்மா அழுதபோது, சுதாம்மா எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பிவிடும். அவர்களின் உலகத்தைப் புரிந்து கொண்டாலொழிய நமக்கான கேள்விக்கு அவர்களிடமிருந்து பதில் கிடைக்காது.
வெகுநேரம் சுதாம்மாவைப் பார்த்தவர் ``எப்படி இருந்தாலும் இது என்புள்ள” என்று கறிச்சோற்றை எடுத்து விளம்பியிருக்கிறார் அம்மா.
``அதென்னம்மா பையி?” என்று சுதாம்மா கேட்டதற்கு, நாசுக்காக ``சங்கரோட துணிங்கம்மா...” என்று, சுதாம்மாவுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு போன கைலியையும் சட்டையையும் மறைத்து, திரும்ப எடுத்துக்கொண்டு வந்தார். அன்று இரவு சாப்பிடவில்லை. அடிவயிறு முட்டியதால் எழுந்தேன். அப்பாவிடம் அம்மா அழுதுகொண்டிருந்தார். ``எப்படியிருந்தாலும் அது என் புள்ளதான். ஆனா, அது நைட்டியோடு இருந்ததைப் பார்க்கும்போது, பெத்த வயிறு சுருக்குன்னு இருந்துச்சுங்க. எனக்குதான் அதோட உலகம் தெரியாம லுங்கி-சட்டைன்னு எடுத்துக்கிட்டுப் போய் நின்னேன். என்னான்னு கேட்டுச்சு. நான் மறைச்ச லுங்கிய பார்த்துட்டு, என்னைப் பார்த்தது. அந்தப் பார்வை... `என்னைப் புரிஞ்சுக்கம்மா’ன்னு சொல்றா மாதிரி இருந்துச்சு. `அப்பா எப்பிடி இருக்காரு?’ன்னு கேட்டுச்சு” என்று முந்தியில் மூக்கைச் சிந்திக்கொண்டது அம்மா.
உலகத்தில் என் அப்பாதான் எல்லாவற்றுக்கும் ஒரே முகபாவனையை வைத்திருப்பார். அது அமைதி. பீடியைப் பற்றவைத்து வழக்கம்போல வானத்தை வெறித்தார்.
ஒருநாள் தூரத்தில் சுடிதாரோடு நான் மட்டுமல்லாமல் நண்பர்களோடும் பார்த்துவிட்டேன். என்னதான் அறிவுஜீவித்தனமாகப் பேசினாலும் ஓர் அண்ணனை சுடிதாரில் பார்த்தபோது சகஜமாக என்னால் பார்க்க முடியவில்லை. உடைதான் மனிதன் கண்டுபிடித்த மகத்தான அரசியல். உடையை வைத்தே எல்லாமும் இங்கே கணக்கிடப்படுகின்றன. தனக்கு இப்படி இருக்க வேண்டும் என ஒரு ஜீவன் யோசிப்பதில் என்ன தவறு இருக்கிறது? `இல்லை... இல்லை... அப்படியெல்லாம் நீ இருக்கக் கூடாது’ என்று சொல்ல, நமக்கு என்ன உரிமை இருக்கிறது? `நான் சட்டை அணிந்துகொள்வதுபோல அவர் சுடிதார் அணிந்துகொண்டிருக்கிறார். அவ்வளவுதான்’ என்று அப்போது என்னால் ஏன் எடுத்துக்கொள்ள முடியவில்லை என யோசித்தால், நாம்தான் அதற்கான காரணம். நாமாகவே ஏற்படுத்தியிருக்கும் பார்வைகள்தாம் இப்படிப் பதறவைக்கின்றன.
``சுதாம்மா ஹேப்பி பர்த்டே... நான் உங்களுக்கு ஒரு சுடிதார் கிஃப்ட் வாங்கி வெச்சிருக்கேன்” என்று என் பிள்ளை கண்ணம்மா சொல்கிறாள். இவ்வளவுதான். கண்ணம்மா வாங்கிக் கொடுத்த சுடிதாரோடு குடும்பத்தோடு சுதாம்மாவின் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்குப் போனோம். அப்போதுதான் எனக்கு அவர்களின் உலகம் புரிந்தது. சுதாம்மாவுக்கு என் அம்மா மட்டும் அம்மா அல்ல. வீட்டிலிருந்து வெளியேறி வனவாசத்தில் இருக்கும்போது ஓர் அம்மா கிடைத்திருக்கிறார். ஆகவே, சுதாம்மாவுக்கு இரண்டு அம்மாக்கள். சுதாம்மாவுக்கு நிறைய பிள்ளைகளைப் பார்த்தேன். ``இதான் என் தம்பி...” என்று அறிமுகப்படுத்தியபோது ``நல்லா இருக்கணும் ராஜா” என்று சுதாம்மாவின் இரண்டாவது அம்மா என்னை வாழ்த்தினார்.
மாரியம்மனுக்குப் பெரிய படையல்போட்டு விதவிதமாய் உணவுகளை வைத்தார்கள். ``எந்த நோய்நொடியும் வராம... என் பிள்ளைங்களை நீதாம்மா காப்பாத்தணும்” என்று பிள்ளைகளுக்குக் குங்குமத்தை வைத்தார் சுதாம்மா.

``ஏண்டி சுதா... அந்தப் பாயசத்துல இருக்குற முந்திரிய எடுத்துப் போடுடி... கண்ணம்மாவுக்கு முந்திரி வேணாமாம்” என்று என் பிள்ளைக்கு மல்லிகா எனும் மனுஷி ஊட்டிக்கொண்டிருந்தார்.
``நான்லாம் வீட்டை விட்டுட்டு வந்துட்டேன். யாரும் இதுவரைக்கும் தேடி வரல. அதப்பத்தி எனக்குக் கவலையும் இல்ல. ஏன்னா, எனுக்குத்தான் இங்க ஒரு அம்மா இருக்கே” என்று சுதாம்மாவைக் காட்டியபோது என் அம்மாவின் கண்கள் ஆனந்தமாய்க் கலங்கிக்கொண்டிருந்தன. உண்மைதான் சுதாம்மாவுக்குப் புதிதாய் அவ்வளவு அன்பான ஓர் அம்மா கிடைத்துவிடுகிறது அவரது வாழ்வில். அவருக்கும் ஒரு பிள்ளை கிடைத்துவிடுகிறது தன் வாழ்நாளில்.
என் அம்மா, நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் தன் பிள்ளையை அநாதையாக்கவில்லை. கையேந்தி நின்ற, ஒப்பனை செய்து நின்ற, அநேக நங்கையர்களை, தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கான பல வேலைகளைத் தன் பிள்ளை செய்துகொண்டிருக்கிறது என்பதே அம்மாவுக்கு அளப்பரிய சந்தோஷத்தைக் கொடுத்தது.
``எங்கியாவது டிரெயின்லயோ... மத்த எடத்துலயோ என் புள்ள கையேந்துச்சுன்னா... நா அன்னிக்கே உயிர விட்டுடுவேன்” என்று அம்மா அடிக்கடி சொல்லி அழும். இன்று `சுதாம்மாவின் அம்மா’ என்று பெருமை பொங்கச் செய்துவிட்டது. ``இது ஒரு பொறப்பு அவ்வளவுதான்... மத்தபடி நாங்க வருத்தப்படுறதுக்கும்... நீங்க எங்கள பார்த்துப் பரிதாபப்படுறதுக்கும் ஒண்ணும் இல்ல... சகமனுஷியா பார்த்தாலே போதும்” தொலைக்காட்சி ஒன்றில் சுதாம்மா பேசினார். இவ்வளவுதான் வாழ்க்கை. சுதாம்மாவைப் பார்த்துக் கேலிசெய்தவர்கள் எல்லாம் மக்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள்; அவர் ஏறிக்கொண்டிருக்கும் மேடையை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
``என்கூடப் பொறந்தவங்க மொத்தம் நாலு பேர். அதுல ஒருத்தங்க திருநங்கை” என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை பொங்குகிறது. வாழ்தலின் நம்பிக்கையை, சுதாம்மாவிடமிருந்தே நான் பார்க்கிறேன்.
சுதாம்மாவுக்கு போன் போட்டு அம்மாவிடம் கொடுத்தேன். ``அம்மா... ஏன் ஒரு வாரமா வீட்டுக்கு வரல... வாம்மா” என்றார். பிள்ளைகள் கார்த்திகாவும் கண்ணம்மாவும் ``சுதாம்மா, வரும்போது மீ... மீ... வாங்கிட்டு வா” என்றனர். இந்தப் பிள்ளைகளுக்கு இருக்கும் அன்பெனும் சொல் நமக்கு வாய்த்துவிட்டால் இங்கே யாரும் அநாதைகளாக வேண்டியதில்லை. இவ்வளவுதான் வாழ்க்கை. ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்குத்தான் ஒரு வாழ்வையே வாழவேண்டியிருக்கிறது. இப்போது என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் சுதாம்மா அம்மாவாகிப்போனார். இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது, `வரப்போகும் பிறந்த நாளன்று சுதாம்மாவுக்கு ஒரு சுடிதாரைப் பரிசளிக்க வேண்டும்’ என்று.
- மனிதர்கள் வருவார்கள்...