
இறையுதிர் காடு - 12

அன்று சனத்குமாரர் கேட்ட கேள்வி, மிக முதிர்ச்சியான கேள்வி. பெருமிதம், மகிழ்ச்சி, கோபம், சலனம் எல்லாமே உணர்வுசார்ந்தவை. சற்றே அறிவும் சார்ந்தவை. இன்னும் சொல்லப்போனால், வாழத் தொடங்கிவிட்டால் இவை இல்லாமல் வாழ இயலாது.

இவை அனைத்தையும் ஒருவன் முற்றாய்த் துறக்கும் ஒரு செயலுக்குப் பெயரே, துறவு! துறவியோ தவத்தில் அசைவதேயில்லை. அசைவுதானே வாழ்வு? அந்த வகையில் பார்த்தால், ஒரு துறவி தவத்தின்போது வாழ்வதேயில்லை. வாழ்வை ஏதோ ஒரு காரணத்துக்காக மறுத்துவிட்டதன் எதிரொலியே, துறவு. பெரும்பாலான துறவிகள் எவற்றையெல்லாம் துறந்து யாரை இலக்காக வைத்து தவம் செய்கிறார்களோ, அந்த இலக்காக இருப்பவனே ஈசன்.
அந்த ஈசனே பெருமிதம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளுக்கு ஆளாகிடும்போது, அதை சனத்குமாரர் கேள்வியால் கேட்டதும் சரிதானே? ஆனாலும் சனத்குமாரருக்கு இது ஈசனின் திருவிளையாடல் என்பது அப்போது தெரியவில்லை. ஈசனும் தன் திருவிளையாடலைத் தொடர்ந்தார்.
``சனத்குமாரா... உன் முதிர்ந்த கேள்வி என்னை வியக்கவைக்கிறது. நான்கூட பல சமயங்களில் அசைவற்ற ஒரு யோகிதான். ஆனால், அசைந்து இயங்கத் தொடங்கிடும்போது இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த நான் விரும்புவதில்லை. உன் பொருட்டு நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையக் கூடாதா என்ன?’’ என்று கேட்டார்.
``மகிழ்ச்சியோ பெருமிதமோ நீடித்த தன்மைகொண்டதல்லவே? அமைதியும் சாந்தமும் அப்படியல்ல... அதைத் தருவதும் பெறுவதுமே உகந்த செயல் என்பது என் எண்ணம்.’’
``அழகாகச் சொன்னாய்... அமைதியும் சாந்தமும்தான் சாஸ்வதமானவை. எல்லா உயிர்களுக்கும் தேவைப்படுவதும் அவையே. ஆனால், இன்று தேவருலகமே அமைதி, சாந்தம் மட்டுமல்ல... மகிழ்ச்சி, பெருமிதம் என்று ஏதுமின்றித் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.’’

``அதன் காரணத்தை நானும் அறிவேன். ஒருவன் எப்போது தான்தான் பெரியவன் என்று கருதுகிறானோ, அப்போதே அவனுக்கு ஓர் எதிரி உருவாகிவிடுகிறான். பிறகு, அவனைப் பகைவனாகக் கருதிப் போராடத் தொடங்குகிறோம். தேவர்களும் அப்படித்தான், அசுரர்களை உருவாக்கிப் போரிடுகிறார்கள். போர் வந்துவிட்டாலே மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் இடமிருக்காதே!’’ - சனத்குமாரரின் தெளிவான பதில், சிவபெருமானுக்குப் புன்னகையை மட்டுமே அளித்தது. பார்வதி தேவிக்கோ அது சற்று அதிகப்பிரசங்கமாகத் தோன்றியது.
தேவர்கள் பாடாய்ப்படக் காரணம் சூரபத்மன் என்னும் அசுரனும், அவன் தம்பிகளான சிங்கமுகாசுரனும் தாரகாசூரனும் ஆவர். இதில் சூரபத்மன் பலத்தோடு திகழக் காரணம், அவன் பெற்ற விசேஷ வரசித்தி. தன்னையே துண்டுதுண்டாக வெட்டி யாகத் தீயில் போட்டு அதையே ஈசனுக்கான அவிர் பாகமாக அளித்து ஈசனைத் தன் முன் தோன்றிடச் செய்தவன் சூரபத்மன். அந்த வேள்வி நெருப்பை, ஈசனார் தன் சடைக்குள் அடக்கிக் கிடந்த கங்கையைப் பாயச்செய்து அணைத்து, அவனைப் புண்ணியனாக்கியதோடு, இறவா வரத்துக்கு இணையாக அவன் கேட்ட வரத்தை, தன் அம்சத்தாலோ அல்லது சக்தியின் ஆயுதத்தாலோ அன்றி வேறு எதனாலும் மரணமில்லை என்று அவனுக்கு அருளியதோடு, உலகனைத்தையும் ஒரு குடையின்கீழ் அவன் ஆளும்படியான வரத்தையும் அருளிவிட்டார்.
இப்போது அப்படி வரம் அளித்துவிட்ட காரணத்தாலேயே தேவருலகம் பாடாய்ப்படுவதைக் கண்டு நிற்கும் வேளையில் சனத்குமாரர் சொன்ன கருத்து, `ஈசனாரே, இப்படியா ஒரு வரம் தருவீர்?’ என்று கேட்பதுபோல் இருந்தது. ஆனால் பிரம்மாவுக்கு, ஈசனாரின் அந்தக் கனிந்த பேச்சுக்குக் காரணம் தெரிந்திருந்தது. சனத்குமாரரும் அசுரர்களோடு போரிடுவதுபோல் கனவுகண்டுள்ளாரே! ஒரு பிரம்மஞானி காண்பது, நினைப்பது என்று எல்லாமே அப்படியே பலித்தாக வேண்டுமே! அதற்கேற்பத்தானே அடுத்தடுத்தும் நடக்கும்?
``சனத்குமாரா... உன் ஒவ்வொரு சொல்லும் என்னைப் புளகாங்கிதப்படுத்துகிறது. `பிரம்மனுக்கு இப்படி ஒரு புத்திரனா!’ என பிரம்மாவின் மீதே எனக்குப் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. நான் என்ன உன்னைப்போல் எதன்மேலும் பற்று பாசம் வைக்கா பிரம்மஞானியா? தேவர்கள், கின்னரர், கிம்புருடர், நாகர், யட்சர், கந்தர்வர், மானுடர் என சகலருக்கும் நான் இஷ்டதெய்வமாகவும், அவர்களுக்கு அருளவேண்டிய கடப்பாடு உடையவனாகவுமல்லவா இருக்கிறேன். இப்படி இருப்பதால் உன்போல் இருக்க என்னால் இயலவில்லை. ஆனாலும், நீ இப்படி இருப்பது அசாத்தியம்! எனவே, உன்னைப் பாராட்டி உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்’’ என்று நெஞ்சை நிமிர்த்தினார் ஈசனார். முதல்முறையாக அதைப் பார்த்துத் தன்னையும் மீறி அரைச் சிரிப்பு சிரித்தார் சனத்குமாரர்.
``என்னப்பா சிரிக்கிறாய்?’’
``நானெங்கே சிரித்தேன். சிரிக்கச் செய்தது தாங்களே! குறை இருப்பவருக்கே வரம் தேவைப்படும். ஒரு பிரம்மஞானிக்குக் குறை ஏது? குறைவில்லாதவனுக்கு எதற்கு வரம்?’’ - சனத்குமாரரின் பதில், பார்வதியை மேலும் சலனப்படுத்திவிட்டது. இப்படி ஒரு பதிலால், ஈசனார் அவமதிப்புக்கு ஆளாகிவிட்டதாய்க்கூடக் கருதினாள். ஆனால், ஈசனார் போக்கே வேறுவிதமாய் இருந்தது.
``அருமை சனத்குமாரா... எனக்கு நினைவுதெரிந்து நான் வரம் தருகிறேன் என்று கூறியும், `எனக்கு எந்தவிதமான ஒரு குறையும் இல்லை’ என்று கூறி, என்னை மேலும் வியப்புக்குள்ளாக்கிவிட்டாய். உனக்குள்ளேயே நீ நிறைந்து வழிகிறாய். இப்படிச் சொன்னவகையில் எனக்குத்தான் குறை ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே தேவர்களால் சலனம். அதோடு இந்தக் குறையும் சேர்கிறது’’ என்று கூறினார்.
``அப்படிச் சொல்லாதீர்கள்... ஒரு பிரம்மஞானி, தன் பொருட்டு ஒருவருக்குக் குறை ஏற்பட காரணமாக இருந்துவிடக் கூடாது. அதிலும் சர்வேஸ்வரனான உங்களுக்கே குறை என்றால், அது எல்லா உயிர்களுக்குமான குறை! நான் பொருட்படுத்தாவிட்டாலும் எனக்கே அது குறைவை உண்டாக்கிவிடும். உங்கள் குறை தீர, என்னால் இயலுமாயின் நான் காத்திருக்கிறேன்’’ - என்ற சனத்குமாரரின் பேச்சு, ஈசனாரை `இதற்காகத்தானே இங்கே நான் வந்தேன்’ என்கிற எண்ணத்தோடு ``ஆஹா! நீ இப்படிச் சொன்னதே போதும். அந்தக் குறை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது’’ என்று பேசவைத்தது.
``உங்கள் நம்பிக்கை பொய்க்கக் கூடாது. நான் என்ன செய்ய வேண்டும்?’’
``நீ இப்படிக் கேட்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது தெரியுமா?’’
``உங்கள் மகிழ்ச்சி, உலக உயிர்களின் மகிழ்ச்சியல்லவா?’’
``அது நீடித்து நிலைக்க வேண்டுமென்றால், நீ எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்!’’ - ஈசனார் அப்படி ஒரு விருப்பம் தெரிவிக்கவும், பார்வதி தேவிக்கு அதிர்ச்சி.
ஆனால் சனத்குமாரரோ, ``அதுவே உம் விருப்பமும் தேவையுமென்றால், அவ்வாறே ஆகட்டும். ஆயினும், இம்மட்டில் ஒரு நெறி எனக்குண்டு’’ என்று பீடிகை போட்டார்.
``அது என்னவென்று கூறு சனத்குமாரா.’’
``தாங்களே என்னை மகனாய்ப் பெற விரும்பினீர்... பார்வதி தேவியார் விரும்பியதுபோல் தெரியவில்லை. எனவே, உங்களுக்கு மட்டுமே நான் மகவாய்ப் பிறக்க இயலும்’’ என்றார்.

``உன் விருப்பப்படியே ஆகட்டும். ஒரு பிரம்மஞானி, சுத்தமான அக்னிக்கு ஒப்பானவன். எனவே, நானும் என் நெற்றிச்சுடர் வழியாக உனை உள்வாங்கிப் படைப்பேன். அதற்கேற்ப அனைத்தும் நடக்கட்டும்’’ - ஈசனார் அப்படிச் சொன்னதன் பிறகே, பார்வதிக்கு அவரின் திருவிளையாடல் புரிந்தது. நெற்றிச் சுடரொளி ஒரு பிரம்மஞானியைப் பிரசவிக்கும்பட்சத்தில் அவனால் மட்டுமே சூரபத்மன் போன்ற வரசித்தி பெற்ற மமதை உள்ளவனை அழிக்க இயலும். அசுரர்கள் எப்போதும் அப்போதுள்ள நிலையை மனதில்வைத்தும், அவ்வேளையிலான அறிவைவைத்துமே வரம் கேட்பர். எப்போதும் இறவா வரமும் விரும்பிடும்வண்ணம் வாழ்வதுமே அவர்கள் விருப்பம். இதில் இறவா வரம் தந்திட எவருக்கும் அனுமதியில்லை. அதற்கு இணையான வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு இணையானது எனும்போது, ஈரேழு பதினான்கு உலகங்களில் உள்ள எவராலும் எதனாலும் மரணம் நேரக் கூடாது என்று கேட்பதே உச்சபட்சமாகும். கூடுதலாக, தேவர்களால் மூவர்களால் (சிவா, விஷ்ணு பிரம்மா) என்பதைச் சேர்த்துக்கொள்வர். அப்படியெல்லாம் கேட்டும் அழிந்தவர் உண்டு. எனவே, பல படிகள் மேலே சென்று `இதுவரை பிறந்த... இனி பிறக்கப்போகின்ற எவராலும்’ என்று ஒரு ஷரத்தைச் சேர்த்துக்கொண்டு வரம் கேட்பர். சூரபத்மனும் அப்படி ஒரு வரசித்திகொண்டிருந்தான்.
சிவபெருமானின் அம்சம் மற்றும் சக்தியின் ஆயுதத்தால் அன்றி வேறு எதனாலும் அவனுக்கு மரணமில்லை. பிறப்பது என்றாலே, ஆண் பெண் சேர்க்கை நிகழ வேண்டும். இது இயற்கை நியதி! பரம்பொருளோ இந்த நியதியை மீறாமல், அதேசமயம் புதியதொரு வழிமுறையை உருவாக்கும். அப்படி அதனால் உருவாக்க முடியும் என்பதை அசுரம் யூகிக்கத் தவறிவிடும். சூரபத்மனும் அப்படித் தவறிய ஒருவனே! அவனது புத்திசாலித்தனமான வரசித்தியே ஒரு பிரம்மகுமாரர் அக்னியில் கலந்து கார்த்திகைச்சுடராய் கார்த்திகேயன் என்கிற அழகு முருகன் பிறக்கவும் காரணமானது. நெருப்பு, பிறப்பைத் தந்தது. அதுவரை ஒதுங்கியிருந்த பார்வதியோ, தன் சக்தியைத் திரட்டி அந்த உடலுக்குத் தந்தாள். பிறகு அதன் வடிவாக வேலினைத் தந்தாள்!
பிரம்மா, விஷ்ணுவின் நாபியில் தோன்றியவர். பிரம்மாவிடம் தோன்றியவர் சனத்குமாரர். சனத்குமாரரே பிறகு ஈசனார் நெற்றிக்கண் வழி விசேஷமாய்த் தோன்றினார். சக்தியும் தன் சக்தியையெல்லாம் அளித்தாள். இப்படி நால்வர் கலப்பில் உலகம் முருகனைப் பெற்றது. முருகனும் சூரபத்மனை அழித்து, பிறகு ஆட்கொள்ளவும் செய்தான். முன்னதாக, முற்பிறவி அப்பனிடம் வேதப்பொருள் கேட்பதுபோல் கேட்டு நாடகமாடினான். இப்பிறவி அப்பனுக்கோ பிரணவத்துக்கே பொருள் சொல்லி குருநாதன் ஆனான்.
மொத்தத்தில் செருக்குள்ள ஒரு புத்திசாலி அசுரனால் உலகம் ஒரு பிரம்மஞானியை, அக்னிசொரூபனை, சக்திசாரனை அடைந்தது. இப்படிப்பட்டவனோ ஒரு ஞானப்பழம் பொருட்டு தன்னை தண்டபாணியாக ஆக்கிக்கொண்டு பொதினியைப் பழநியாக்கினான். அந்த தண்டபாணி சொரூபமே ஒரு செய்தி!
`அகந்தை கொள்ளாதே...
பேராசை கொள்ளாதே...
ஞானமே அழியாச் செல்வம்!’ - இதுவே அந்தச் செய்தி!’’ - போகர் தண்டபாணிக்கான சகலத்தையும் கூறி முடித்தார். சீடர்களுக்குள் ஒரு பிரகாசம்.
இன்று காரை நெருங்கிவிட்ட பாரதி, திரும்பி கணேசபாண்டியனைப் பார்த்தாள். அவன் ஸ்தம்பித்து நிற்பதுபோல் தெரிந்தது.

``அண்ணே...’’ என்றாள். ஆனால், அவனிடம் பதிலில்லை. ``அண்ணே உங்களத்தான்... என்னாச்சு?’’ என்று உரத்த குரலில் பேசி அவனைக் கலைத்தாள்.
அவனும் அவளை மலங்க மலங்கப் பார்த்தான்.
``என்னண்ணே..?’’
``நான் பயந்த மாதிரியே எல்லாம் நடக்குது பாப்பா.’’
``புரியற மாதிரி சொல்லுங்க.’’
``அந்த எஸ்.ஐ ரவிக்குமாருக்கும் ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சாம் பாப்பா.’’
``வாட்?’’
``ஆமாம் பாப்பா... ஆஸ்பத்திரியில நம்ப அய்யாவைப் பார்த்துட்டுத் திரும்பிப் போகும்போது, தண்ணி லாரி மேல மோதி அவரும் இப்ப ஆஸ்பத்திரியில...’’
``ரியலி?’’
``இப்பதான் தகவல் வந்துச்சு... ரியலியான்னா நான் என்னத்த சொல்ல? அதுல ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா?’’
``என்ன?’’
``அந்தத் தண்ணி லாரி பேரு வேல்முருகன் வாட்டர் சப்ளையாம்!’’ - பாரதியால் அதன் பிறகு கணேசபாண்டியனிடம் எதையுமே பேச முடியவில்லை. மௌனமாக காரில் ஏறி அமர்ந்தாள். ஒருபுறம் வேங்கையனின் அலட்சியம். மறுபுறம் எஸ்.ஐ ரவிக்குமாரின் விபத்து. இரண்டும் அவளுக்குள் இனம்புரியாத குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. கணேசபாண்டியனும் ஏறிக்கொள்ள, கார் புறப்பட்டது.
சிறிது தூரம் சென்ற நிலையில் கணேசபாண்டியன் திரும்பி பாரதியைப் பார்த்தார். அவள் தன் கைப்பேசியில் ஆசிரியர் ஜெயராமனைத் தொடர்புகொள்ள முனைந்திருந்தாள்.
``பாப்பா...’’ - கணேசபாண்டியன் குரல் அவளை நிமிர்த்தியது. மௌனமாய் வெறித்தாள்.
``எனக்கென்னவோ அந்தக் குமாரசாமி ஆத்மாதான் எல்லாம் பண்ற மாதிரி தெரியுது பாப்பா. இதுல இந்த வேங்கைய்யன் நிச்சயமா உசுரோட இருக்கப்போறதில்லன்னும் தோணுது.’’
``கொஞ்சம் பேசாம வாங்கண்ணே!’’
``என் மனசுல பட்டதைச் சொன்னேன் பாப்பா.’’
``செத்துட்ட எல்லாரும் இப்படி ஆவியா வந்து பழிவாங்க முடியும்னா கோர்ட், போலீஸ்னு எதுவுமே தேவையில்லண்ணே! இந்தக் குமாரசாமியைவிட கோரமா கற்பழிக்கப்பட்டுல்லாம் பல பெண்கள் கொல்லப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் தங்களுக்காக இல்லாட்டியும் சமூக நல்லதுக்காக ஆவியா வந்து அந்தக் காம வெறியன்களை அழிச்சு ஒழிக்கலாம். நீங்க சொல்றது சாத்தியம்னா இதெல்லாமும் நடந்திருக்கும். ஆனா, அப்படியெல்லாம் நடந்திருக்கா? எனக்குத் தெரிஞ்சி, எத்தனை கிரிமினல்கள் உல்லாசமா வாழ்ந்துகிட்டிருக்காங்க தெரியுமா? இனிமே இந்த ஆத்மா உப்மான்னு என்கிட்ட பேசினீங்க... நடக்கிறதே வேற!’’ - கணேசபாண்டியனைத் தெளிவாகக் கண்டித்தவள், கைப்பேசி வழியே ஆசிரியர் ஜெயராமனைப் பிடித்தாள்.
``யெஸ் பாரதி.’’
``சார், உங்கள கொஞ்சம் பார்த்துப் பேசணும் சார்.’’
``இதுக்கு எதுக்கும்மா போன்லாம் . நேரா வரவேண்டியதுதானே?’’
``நாட்ல பரபரப்பா பல விஷயங்கள்... பார்லிமென்ட் எலெக்ஷன் வேற வரப்போகுது. அதனால் ப்ரீ ஆக்குபைடு ஆகியிருப்பீங்கன்னுதான் போன் பண்ணினேன் சார்.’’
``சமுத்திரம்னா எப்பவும் அலை இருக்கிற மாதிரி ஒரு விஷயம். நம்ப விஷயம். நீ நேர்ல வா பேசுவோம்.’’
அந்தப் பதிலோடு கைப்பேசியை அவள் முடக்கவும் ``பாப்பா, நான் ஆஸ்பத்திரியில இறங்கிக்கட்டுமா?’’ என்று கேட்டார் கணேசபாண்டியன்.
``உம்..’’

``சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பாப்பா. உங்க கேள்வி வாஸ்தவம்தான். ஆனா, அதுக்காக ஆத்மால்லாம் பொய்ங்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். என் குடும்பத்துல ஒருத்தர் உண்டிக்குழி சாவியை ரகசியமா வெச்சிருந்தார். எதிர்பாராம அவர் செத்துடவும், சாவி இருக்கிற இடம் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். கடைசியில சாமக்கோடாங்கிகிட்ட போய் குறி கேட்கவும், செத்தவரே அவர் மேல வந்து சாவி இருக்கிற இடத்தைச் சொன்னார். போய்ப் பார்த்தா சாவியும் அங்கன இருந்துச்சு. இது நான் கண்ணாரக் கண்ட விஷயம்’’ - கணேசபாண்டியனின் பதில் அழுத்தம் பாரதியை சலிப்போடு பார்க்கச் செய்தது.
``பாப்பா... நான் காரணமில்லாம இதைச் சொல்லல. அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கு எவ்வளவு சீக்கிரம் நல்லது செய்றோமோ அவ்வளவு சீக்கிரம் செய்துடுறது நல்லது. இல்லாட்டி, எல்லாம் கைமீறிடும்’’ - கணேசபாண்டியன் `கைமீறிடும்’ என்று ராஜாமகேந்திரனையும் உட்படுத்திச் சொல்லவும், பாரதிக்கு சுரீர் என்றது. கார், ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றபடி இருந்தது.
``கைமீறிடும்னா, என்னண்ணே அர்த்தம்? எனக்குப் புரியலை’’ - பாரதி எரிச்சலோடு கேட்டாள்.
``இல்ல பாப்பா, அந்த வேங்கையன் செத்துவெச்சால்லாம்கூட நம்ப பிரச்னை தீராது. அவனுக்கு மூணு பொண்டாட்டி! அவளுங்க அது `எங்க இடம்’னு சொந்தம் கொண்டாடுறதோடு, இவனை மாதிரியே `பணம் கொடுத்தா, பத்திரத்தைத் தர்றோம்’னு சொல்லுவாளுங்க. சரியான குந்தானிங்க! பிரச்னை நீண்டுகிட்டுதான் போகும்.’’
``அதுக்கு என்ன செய்யணும்கிறீங்க?’’
``அவன் கேட்ட அந்தப் பாதி விலையைக் கொடுத்திடலாம் பாப்பா.’’
``அதுக்கு நம்ப செருப்பால நாமளே நம்மள அடிச்சுக்கலாம்.’’
``இல்ல பாப்பா... உங்க பத்திரிகையில எழுதுறதாலெல்லாம் எதுவுமே நடக்காது. அவன் மறத்துப்போனவன்.’’
``நான் எப்ப எழுதப்போறேன்னேன்?’’
``இல்ல... அப்படி ஒரு எண்ணம் இருந்தா, அது வேலைக்கு ஆகாதுன்னேன்.’’
``கொஞ்சம் பேசாம வாங்க... என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்க’’ - அவள் அதட்டவும் அடங்கிப்போவதைத் தவிர, கணேசபாண்டியனுக்கும் வேறு வழி தெரியவில்லை.
துரியானந்தத்தின் வீடு!
அந்தப் பெட்டியோடு உருண்டுபுரண்டுகொண்டிருந்தான் குமரேசன். முண்டா பனியனும் லுங்கியுமாய் கையில் ஒரு திருப்புளியுடன் அதையே வெறிக்க பார்த்தபடி நின்றிருந்தான். கழுத்து, மார்பெல்லாம் கசகசவென வியர்வை! அப்போது மொபட்டின் தினுசான சத்தம் கேட்கவும் திரும்பினான். துரியானந்தம்தான் வந்திருந்தான். மொபட் முகப்பில் இரட்டை இலைச் சின்னத்தின் வரைவு. ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டில் `இதயக்கனி’ எம்.ஜி.ஆரின் பெரிய கூலிங்கிளாஸ் அணிந்த முகம்.
``இன்னாடா... இன்னுமா இத்த நீ தொறக்கல?’’ என்ற கேள்வியோடு மொபட்டை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்த துரியானந்தத்தை, குமரேசன் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. மாறாக, பெட்டியின் முகப்பில் மேல் முகட்டில் இருந்த அந்த வரிசையான ஒரு விரல் நுழையும்படியான துவாரங்கள், அவனை ஒரு விஞ்ஞானியைப்போல ஆக்கிவிட்டிருந்தன. நெற்றியில் பூரான் கணக்காய் நெளிசல். அந்தப் பெட்டியிடம் விபூதிவாசம் மட்டும் அடங்கவேயில்லை.
``என்னா பொட்டிடா இது... விநோதமா இருக்குது! துண்ணூறு வாசனை இன்னும் இன்னாமா அடிக்குது பார்த்தியா?’’ என்றபடியே சட்டையைக் கழற்றி சுவரின் ஆணிக் காதில் மாட்டினான் துரியானந்தம்.
``நைனா... இத்த நான் உட்றதா இல்ல நைனா! உள்ளார ஸ்க்ரூ இருக்குது நைனா. ஆனா, சுத்திக்கினே இருக்குது. வெளிய வர மாட்டேங்குது. டாப்பையும் தொறக்க முடியல.’’
``நம்ப பூட்டு ரிப்பேர் அக்பர் பாயைக் கூட்டிக்கிட்டு வந்து காட்டிப் பாரு.’’
``ஐயோ நைனா... அந்தாள் திறந்துட்டான்னே வை... அத்தொட்டு ஒப்பன் பண்ணி உள்ளே என்னா இருக்குதுன்னு பார்க்காம உடுவானா? `நீயெல்லாம் பார்க்கக் கூடாது’ன்னா, டவுட்டாவான். ரப்ச்சர் நைனா!’’
``அதுவும் சரிதான்... உள்ளார அப்படி என்னதான்டா இருக்கும்?’’
``சித்தர் சாமி பொட்டி... வேரு, மூலிகைன்னு கண்டதெல்லாம் இருக்குமோ?’’
``அந்தக் கருமத்தையெல்லாம் இன்னாத்துக்கு இப்படி ஒரு பொட்டில வெச்சுப் பூட்டணும்?’’
``ஆமால்ல... நீ சொல்றதும் சரிதான்’’ - இருவரும் பெட்டி குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது குடுகுடுப்பைக்காரன் ஒருவன் வாசற்புறம் வந்து நின்று, தன் குடுகுடுப்பையைக் குலுக்க ஆரம்பித்தான். நேராக வாசலில் நின்று உள்ளே பெட்டியைப் பார்த்தவன் அப்படியே குடுகுடுப்பை குலுக்குவதை மெள்ள நிறுத்தி, மிகக் கூர்மையாகப் பார்த்தான்.
``இன்னா நைனா, இவன் ஆட்டுறத நிறுத்திட்டு குறுகுறுன்னு பார்க்கறான்’’ என்று குமரேசன் கேட்க.
``பொறுடா, என்னா சொல்றான்னு பாப்போம்...’’ என்று துரியானந்தம் பேச, ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் குடுகுடுப்பைக்காரன் எதுவும் சொல்லவில்லை. மாறாக, ``போயிடுறேன் சாமி... போயிடுறேன். இந்தத் தெரு பக்கமே நான் வரலை’’ என்று கை எடுத்துக் கும்பிட்டவனாய் தனக்குத்தானே பேசிக்கொண்டு திரும்பி வேகமாய் நடக்கத் தொடங்கினான்.
துரியானந்தத்தை, அவன் செய்கை வெலவெலக்க வைத்துவிட்டது. குமரேசனும் பாதிக் காற்று போய் மீதிக் காற்றில் குழைந்துபோய்விட்ட பிளாஸ்டிக் பந்தைப்போல் ஆகிவிட்டிருந்தான்.
``குமரு... ஏதோ கோளாறுடா!’’
``கோளாறோ குத்தலோ... இப்ப இன்னா நைனா பண்ண?’’
``வண்டிய எடுத்துட்டு வேகமாய்ப் போய் அந்தக் குடுகுடுப்பக்காரன வளைச்சுப் புடி. இன்னா மேட்டர்னு கேளு... போ முதல்ல...’’ - துரியானந்தம் சொன்ன மறுநொடி லுங்கியைச் சுருட்டிக் கட்டிக்கொண்டு, `இதயக்கனி’ மொபட்டை வளைத்துத் திருப்பி, பெடல் செய்து ஸ்டார்ட் செய்யாமல் வேகமாய் ஓடி ஸ்டார்ட் செய்து, அப்படியே ஸ்டைலாய் ஏறி அமர்ந்தவன், கொடூர சத்தமிட்ட அந்த வாகனத்தோடு தெருவில் பல வளைவுகளோடு பயணித்து, தெருவின் மையத்தைக் கடந்துகொண்டிருந்த குடுகுடுப்பைக்காரன் முன் வண்டியை நிறுத்தினான். அப்படியே கூர்மையாக ஓர் ஏறிடல்! குடுகுடுப்பைக்காரனிடமோ, ஹெல்மெட் போடாமல் வந்து போலீஸிடம் மாட்டிக்கொண்டதுபோல் ஒரு மறுகல்!
``இன்னா... ஜக்கம்மா அதைச் சொன்னா இதைச் சொன்னான்னு கதையா உடுவே. இன்னிக்கு அந்தப் பெட்டிய பார்த்துட்டு, பேய பார்த்த மாதிரி ஓடுறே?’’
``ஆமா.. ஓடுறேன்... ஓடுறேன்...’’
``அதான் கேக்கறேன், ஏன் ஓடி வந்தே?’’

``அத நான் சொல்லக் கூடாது சாமி. சர்பம் காவல்காத்த பொட்டி அது! அத களவாண்டிருந்தா எடுத்த இடத்துல வெச்சுடு. இல்ல... அந்தச் சர்பம் விடாது. தேடி வரும்... இதுக்கு மேல என்ன எதுவும் கேக்காதே...’’ - குடுகுடுப்பைக்காரன் `சர்பம்’ என்று பாம்பைக் குறிப்பிடவும், அந்த பிரமாண்டம் ஜமீன் பங்களாவும் அங்கே கண்ட பாம்பும் நினைவில் புரள ஆரம்பித்ததால், குமரேசனிடம் ஒரு வகை ஸ்தம்பிப்பே ஏற்பட்டுவிட்டது. அதற்குள் தெருவிலும் தாறுமாறான டிராஃபிக்கில் ``ஏ சாவுகிராக்கி... ஓரமா போய் நில்லுய்யா...’’ என்கிற குரல்கள்! குமரேசனும் ஸ்தம்பிப்பில் இருந்து விடுபட்டு நகர்ந்தான். குடுகுடுப்பைக்காரனோ, அந்தப் பகுதியிலேயே இல்லை! கடந்துபோன டவுன்பஸ் ஒன்றில் ஏறி மறைந்துவிட்டிருந்தான்.
வீடு திரும்பி மொபட்டை சைடு ஸ்டாண்டு போட்டு சரித்து நிறுத்திவிட்டு, லுங்கியை அவிழ்த்து ஓர் உதறு உதறிக் கட்டிக்கொண்டே உள்ளே வந்தவன் எதிரில் துரியானந்தம் காலுக்குக் கட்டு போட்டபடி இருந்தான்.
``இன்னாச்சு நைனா?’’
``அடப்போடா... நீ பாட்டும் திருப்புளியைப் போட்டுட்டு ஓடிட்டே. அது கிடக்கிறது தெரியாம காலை வெச்சுக் குத்திருச்சிடா! இத்த உடு... அந்தக் குடுகுடுப்பக்காரன பாத்தியா? என்னா சொன்னான்?’’
``நைனா... எப்பவும் ரீல்தானே சுத்துவான்? இன்னிக்கு பொட்டிய களவாண்டதுல இருந்து, நாம பாம்பப் பார்த்தது வரை அப்படியே பிரிச்சுமேஞ்சுட்டான் நைனா! `பொட்டிய எடுத்த இடத்துல கொண்டுபோய் வெச்சிடு. அது சர்ப்பக்காவல் பொட்டி. அந்தச் சர்பம், அதான் பாம்பு... சும்மா உடாது உங்களை... அது தேடி வரும்’னு ஒரு கலக்குக் கலக்கிட்டான் நைனா.’’
``மெய்யாலுமாடா?’’
``நம்ப பாடிகாட் முனிமேல் சத்தியமா நைனா.’’
``குமரு... அப்ப அந்தக் குடுகுடுப்பக்காரன் ஒரிஜினல் மாதிரில்ல தெரியுது.’’
``ஆமாம் நைனா... பேசாம திரும்பக் கொண்டுபோய் வெச்சிட்டு வந்துடலாமா நைனா?’’
``ஐயோடா... அந்தப் பங்களா பக்கம் மட்டும் போக வேணாம். அங்க டெய்லி ரெண்டு பேர் செத்துக்கிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். இப்ப ஒரு வேலையும் நடக்கலயாம். கேட்டை இழுத்துப் பூட்டிட்டாங்களாம்.’’
``அப்ப இந்தப் பொட்டிய இன்னதான் பண்ண?’’
``ஆங்... ஒரு வழி இருக்குது... நம்ப கடைக்கு வழக்கமா ஒரு பொண்ணு கார்ல வருமே... கண்டுக்கிட்டிருக்கியா நீ?’’
``யார் நைனா... நூறு பொண்ணுங்க உனக்கு கஷ்டமரு... இதுல ஒரு பொண்ணுன்னா யார் நைனா?’’
``அதான்டா இப்பகூட ஒரு எம்.பி-க்கு ஆக்ஸிடென்டாகி ஆஸ்பத்திரியில இருக்காரே?’’
``அவருக்கென்ன?’’
``அவர் மகதான் அந்தப் பொண்ணு! தமிழ்வாணி பத்திரிகையில வேல பாக்குது.’’
``சரி... இப்ப அதுக்கென்ன?’’
``அது பழைய ஜாமான் எதுன்னாலும் வாங்கிடும். அது ஒரு ஆன்டிக் கிராக்குடா.’’
``அப்ப இத்த அதுகிட்ட தள்ளி உட்டுட்லாம்ங்கிறியா?’’
``ஆமா... கொடுக்கிற காச கொடுக்கட்டும். இன்னான்றே?’’
``சரி நைனா... நான் இப்பவே இத்த, அப்புறம் அந்த முக்காலி, ஹார்மோனியப் பொட்டின்னு எல்லாத்தையும் நம்ப டிரைசைக்கிள்ள போட்டு, கடைக்கு எடுத்துட்டு வந்துடுறேன். நீ சோறு துன்னத்தானே இப்ப வந்தே?’’
``ஆமாடா. அது சரி, உங்க அம்மா எங்கடா பூட்டா?’’
``இப்ப கேளு... அது...’’ என்று அவன் வாயைத் திறக்கும்போதே குமரேசனின் தாயான காயாம்பூ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் பிரசாதத்துடன் சற்றே கெந்திக் கெந்தி வந்தபடி இருந்தாள்.
``அடியே, இன்னாடி கெந்துறே?’’
``அடப்போய்யா... எல்லாம் இந்தப் பொட்டியால வந்த வினை. இத்த இழுத்துப்போட்டு இது மேல ஏறி மேல சேந்தில இருந்த முறத்தை எடுக்கப் போனேன். ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம் கேட்கவும் பயந்து உழுந்துட்டேன். கால்ல நல்ல அடி!’’
``ஸ்ஸ்ஸ்னு சத்தமா?’’ - விதிர்ப்பு துரியானந்தத்திடம்.
``ஆமாய்யா... எங்கிருந்து வந்துச்சுன்னே தெரியல. அப்பால, பக்கத்து ஊட்டுல குக்கர் சத்தம் கேக்கவும், அதுவாத்தான் இருக்கும்னு நினைச்சேன்’’ - காயாம்பூ சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால், இருவர் முகத்திலும் பீதிப்புயல்!
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்