
“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை!”
யுவால் நோவா ஹராரி எழுதிய, மனிதகுல வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்த புத்தகமான ‘சேப்பியன்ஸ்’ நூலின் தமிழாக்கம் சென்ற ஆண்டு வெளியாகி, பரவலாக கவனிக்கப்பட்டது. மொழிபெயர்த்திருந்தவர் நாகலட்சுமி சண்முகம். தமிழ் நாடகத்துறையின் முன்னோடிகளான டி.கே.எஸ்.சகோதரர்களில் ஒருவரான முத்துசாமியின் பேத்தியான இவரது சொந்த ஊர் பாளையங்கோட்டை. இப்போது மும்பையில் வசிக்கிறார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப் பாளருக்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றி ருக்கிறார். அப்துல் கலாமின் ‘எனது பயணம்’, சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை யான ‘என் வழி தனி வழி’, ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘அசுரன்’, பாலோ கொய லோவின் ‘ரசவாதி’ உள்ளிட்ட முக்கியமான நூல்களை மொழி பெயர்த்தவருடன் உரையாடியதிலிருந்து...

“எத்தனை வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புத்துறையில் இருக்கிறீர்கள்?”
``நான் தற்செயலாகத்தான் இந்தத் துறைக்குள் வந்தேன். என் கணவர் எழுத்தாளர் குமாரசாமி நல்ல வாசகர். நிறைய புத்தகங்களைப் படித்து மொழிபெயர்த்திருக்கிறார். எனக்கு தமிழ்மீது நிறைய பற்றும் ஆர்வமும் உண்டு. 2010-ல் அவர் மொழிபெயர்த்த `ரகசியம்’ நூலை என்னிடம் திருத்தவும், சீராக்கவும் கொடுத்தார். நான் ஏற்கெனவே அதன் மூல நூலான ‘சீக்ரெட்’டைப் படித்திருக் கிறேன். தமிழில் அதைப் படிக்கப் படிக்க அத்தனை ஆச்சர்யமாகவும் திருப்தி யாகவும் இருந்தது. ஒரு நூலை, நம் தாய்மொழியில் கொண்டு வருவது எவ்வளவு அவசியமானது என்று அதைப் படிக்கும்போது உணர்ந்தேன். அதன்பிறகு ‘The Power of Your Subconscious Mind’ மொழி பெயர்ப்புக்கு வந்தபோது அவர் என்னிடம் ‘இதை நீ மொழிபெயர்க்கிறாயா?’ என்று கேட்டார். அப்படி நான் மொழிபெயர்த்த ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ நூல்தான் என் முதல் மொழிபெயர்ப்பு நூல்.”

அதற்குப் பிறகு இந்த எட்டு வருடங்களில் 85 நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார் இவர். சராசரியாக ஆண்டுக்குப் பத்து நூல்கள்!
“உண்மையைச் சொல்வ தானால் 23 வயதுவரை நான் புத்தகங்கள் வாசித்ததே இல்லை. என் கணவரோ, மும்பைக்கு வரும்போது ஒரு பெட்டியில் ஆடைகளும், ஒரு டெம்போ நிறைய புத்தகங்களோடும் வந்தவர். நான் அப்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். குழந்தைகள் இருவரையும் கவனிக்கவேண்டி, வேலையை விட்டு, பிறகு முழுநேர மொழிபெயர்ப்பாளரான பிறகுதான் வாசிப்பையே ஆரம்பித்தேன்.”

``தகவல் தொழில்நுட்ப வேலையை விட்டுவிட்டு மொழி பெயர்ப்பாளராகியிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?”
“முன்னைவிடவும் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறேன். கணவரும் மொழிபெயர்ப்பாளர் என்பதால் அவர் மொழிபெயர்க்கும் புத்தகங்களை நான் சீர்படுத்திக் கொடுப்பேன். எனக்கு அவர் உதவுவார். சிலசமயம் அவர் எனக்காகச் சில புத்தகங்களை உரக்கப் படிப்பார். முன்னை விட நிறைய மகிழ்ச்சியோடும் மனத்திருப்தியோடும் இந்தப் பணியில் இருக்கிறேன்.”

”மொழிபெயர்ப்பின்போது வரும் ஐயங்களுக்காக மூல எழுத்தாளர் களைத் தொடர்புகொள்வீர்களா... அவர்களில் யாரைச் சந்தித்தி ருக்கிறீர்கள்?”
“பெரும்பாலும் மின்னஞ்சலில் அவர்கள் என் ஐயங்களைத் தீர்ப்பதுண்டு. குறிப்பாக யுவால் நோவா ஹராரி ஒரே நாளில் பதில் அனுப்பிவிடுவார். அவர் மும்பை வந்தபோது நேரிலும் சந்தித்தேன். தமிழில் மொழிபெயர்ப்பது குறித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அந்தச் சந்திப்பில்கூட எனக்கிருந்த மேலும் பல ஐயங்களைக் கேட்டுத் தெளிவுற்றதும் ‘இவ்வளவு சிரத்தையுடன் கலைச்சொற்களைக் கேட்டு அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்’ என்று பாராட்டினார். மூல எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய துறையில் பேராசியர் களாக இருப்பார்கள். ஆகவே முடிந்தவரை மொழி பெயர்ப்பின்போது என்ன பொருளில் அவற்றை மொழிபெயர்த்தி ருக்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டறிந்துகொள்வது அவசியமாகக் கருதுகிறேன். தவிரவும் வாசகர்கள் நம்மைவிடவும் நிறைய படிப்பவர்கள் என அறிவேன். ஆகவே புத்தகங்களைப் படித்துவிட்டு அவர்களது கருத்தையும் கேட்டு, ஏற்கக்கூடியதாக இருப்பின் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தமும் கொண்டு வருவதுண்டு.”

“அதிக நேரம் எடுத்துக்கொண்ட நூல் எது?”
“சேப்பியன்ஸ்தான். அந்த நூலில் வரும் வார்த்தைகளின் உச்சரிப்பு, சில கலைச்சொற்க ளுக்கான பொருள் என்று உள்வாங்கி எழுத, தாமதமானது. ஆனால் அந்த நூல் நிறைய பேரைச் சென்றடைந்திருப்பது மகிழ்ச்சி.”
பரிசல் கிருஷ்ணா