Published:Updated:

களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை

களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை

28.02.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

டல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்கு, ஒரு பெண் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர வேற வழியே இல்லையா, என்னடா அராஜகம்?’ அந்த ஃபேஸ்புக் பதிவு, அப்படித்தான் ஒரு நேரடி கேள்வியோடு இருந்தது. இப்படி ஒரு கேள்வி கேட்ட அந்தப் பெண்ணின் முகத்தை, அவளுடைய முகப்புத்தகத்தின் அடையாளப் படத்தில் பார்த்தேன். அழகிய இளம் பெண்.    

களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை
களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை

பொதுவாக ஃபேக் ஐடி-காரர்கள் ஏதோ நடிகை, மாடல், விளையாட்டு வீராங்கனையின் படத்தைப் போட்டு, செல்மா, ஷில்பா எனப் பெயர் வைத்து, போக்குக்காட்டுவார்கள். அப்படியான ஒன்றாகத்தான் அதை முதலில் நினைத்தேன். 

அந்தப் பெண் சங்கீதா. அவளைப் பற்றிய தகவல்களும் இருந்தன. பெயர், படிப்பு, வேலை எல்லாவற்றையும் வேலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாள். குளியல் அறை தவிர்த்து எல்லா இடங்களிலும் அவள் புழங்கும் படங்கள். அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டை இடுப்பிலிருந்து மேல் நோக்கிக் கழற்றத் தொடங்கும் ஒரு படத்தைப் போட்டு, கண்ணடிக்கும் புகைப்படம் சுண்டுவதாக இருந்தது. `பெண்ணே, பூட்டிய சிறையை விட்டு வெளியே வா!’ என்றெல்லாம் நானும் கதைகள் எழுதியிருந்தாலும், வெளியே வருகிற வழி சரிதானா என்ற மன இடர் கொக்கிகள் இருந்தன.

என் வயது காரணமாக, `இப்படியெல்லாம்கூட வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்’ என்ற அளவில் சுமாராக மனதைத் தேற்றிக்கொண்டு, அடுத்த பதிவுகளைப் பார்வையிட்டேன். முகப்புத்தகம், பெரும்பாலும் நொடிப்பித்துக் குவியல்; கொட்டித் தீர்ப்பதற்கான குப்பைத்தொட்டி; அதிர்ச்சி, மகிழ்ச்சி, புகழ்ச்சி, இகழ்ச்சி என எல்லா `ச்சி’களும் உண்டு. இறந்தவருக்குக் கண்ணீர், தேர்வானவருக்கு தம்ஸ்அப். பிறந்த நாள்காரருக்கு ஹாட்டின்... என ஆயத்த எமோஜிகளை வழங்குவது ஓர் `உள்ளேன் ஐயா’ வேலை. காலையில் அதைச் செய்துவிட்டு அலுவலக வேலையில் கவனமானேன்.

மாலை முகப்புத்தகத்தைத் திறந்ததும் மறுபடியும் அந்த போஸ்ட், மாயாஜாலம்போல முதலில் வந்து நின்றது. இந்த ஃபேஸ்புக்காரன், எத்தனை குடும்பங்களில் விளையாடுவான் எனத் தெரியவில்லை. கணவன், குழந்தையையெல்லாம் கொன்றுவிட்டுக் காதலனுடன் ஓடும் பெண், பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு உதவுவதாக நினைத்து, அவளுடைய கணவனைக் கொன்றுவிட்டு உல்லாசமாக இருந்த கல்லூரி இளைஞர்கள்... இப்படியாக முகப்புத்தகக் குற்றங்களுக்கு வசீகரம் இருந்தது. சங்கீதாவின் போஸ்ட் அப்படியான பயத்தைத்தான் முதலில் ஏற்படுத்தியது.

அவள் போட்டிருந்த போஸ்டுக்கு ஏகப்பட்ட பதில்கள். `காபி சாப்பிட வேண்டுமென்றால், ஹோட்டலையே வாங்க வேண்டுமா?’ என்று ஒருவன் கேட்டிருந்தான். `செல்லம் நான் ரெடி’ என்று ஒருவன். சில கொச்சை கமென்ட்டுகளும் இருந்தன. சில பெண்களும் `வாரே வா... யூ ஆர் கிரேட் சங்கீதா’ என்றெல்லாம் வாழ்த்து மடல் வாசித்திருந்தார்கள். அக்கறையான சில யோசனைகளும் பொழியப்பட்டிருந்தன. தங்களைத் தாங்களே நீதிபதிகளாகப் பட்டம் சூட்டிக்கொண்ட சில பேர், `கலி முத்திடுச்சு’ டைப்பில் வறுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவன் அப்பாவியாக, `தேவைப்படும் ஒரு பெண், வேறு என்னதான் செய்ய வேண்டும்..? தேவைப்படும் ஓர் ஆண் சார்பிலும்தான் கேட்கிறேன்’ என்று கேட்டிருந்தான்.

களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை
களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை

அதற்கு சங்கீதா போட்டிருந்த பதில், சற்றே வில்லங்கமாக இருந்தது. `சிம்பிள். தேவைப்படும் இருவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இன்பாக்ஸுக்கு வரவும்.’ இது வம்பை விலை கொடுத்து வாங்குவதாக இருந்தது.

இரண்டாவது நாளும் அது முக்கியமான விவகாரமாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.  `ழகரத்தை ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாதவர்கள், பெண்களை உச்சத்துக்குக் கொண்டுபோக முடியாதவர்களாக இருப்பார்கள்’ என்று பிரேம் எழுதிய ஒரு புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பு, சமூக வலைதளத்தில் காரசாரமாக ஓட, சங்கீதா அதில் கருத்து சொல்லியிருந்தாள். `அவன், `எங்க ஊர்ல நேத்து நல்ல மலை’ என்றுதான் சொல்வான்... அவ்வளவு ஒன்றும் மோசமில்லை.’

அடுத்த நாள் `ஆண்கள் சலித்துவிட்டது’ என போஸ்ட் போட்டு, கலவரம் ஏற்படுத்தினாள்.

அவளுடைய வயதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன், 28.

பெற்றோர் இருக்கிறார்களா, உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்களா, தனியாக இருக்கிறாளா என அவளுடைய விவரக் குறிப்புகளை ஆராய்ந்தேன். அவள், தனி ஆள்; சுதந்திரமானவள். ஏனோ அவள்மீது இனம்புரியாத கவலை உருவானது. அவளுக்கு லைக் போடும் ஒரு கோஷ்டியைப் பார்த்தபோது, அவளுடைய தோழிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது புரிந்த, இனம்புரிந்த கவலையாகி, முதல் நாள் அவள் போட்ட பதிவுக்கு, என் பங்குக்கு நானும் ஒரு கமென்ட் பதிந்தேன்.

எழுத்தாள அக்கறை பொதிந்த பதிவு. `நீ சொல்வது ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்துதான். ஆனால், பொதுவெளியில் அதைச் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.’

அவள் இன்பாக்ஸில் பதில் சொன்னாள். `சார், இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகச் சொல்வது. சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பையன்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு என்னைப் போன்றோர் வைக்கும் டெஸ்ட் சார்.’

மதித்து பதில் சொன்ன மாதிரி இருந்தது. `இல்லம்மா... இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா சிலர் மிஸ்பிகேவ் பண்ணுவாங்க. பிரச்னை ஆகும். கோர்ட் கேஸ், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் இதனாலதான் வருது... அதான், சொல்லணும் தோணுச்சு’ பதிலிட்டேன்.

நீண்ட பதிவைப் பதிலாகப் போட்டிருந்தாள். `சார், பெண்கள் போகப்பொருளா? ஆண்கள் விரும்பும்போதெல்லாம் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு வஸ்துவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காதல், அதில் கிடைக்கிற ஓர் இன்பம், நேசம், அதில் கிடைக்கும் சுகம், சூடு... இவைதானே நியாயமாக இருக்க முடியும்? அது கல்யாணத்துல முடியும்போது அதனுடைய புனிதத்தை இழந்துவிடுகிறது. காதல், பந்தமற்றது. அது உறவுமல்ல... நட்புமல்ல. பாலினம் சார்ந்த ஓர் ஈர்ப்பைச் சொல்ற ஒரு பிரியம். அதை உணர்ந்துதான் காதலும் காமமும் போதும் என்கிறேன்.

கல்யாணக் காமம் ரொம்ப கஷ்டம் சார். என்னுடைய பிணைப்பு, என்னுடைய பெட்டர் ஹாப், இனிய பாதி... என நான் நினைப்பது எல்லாமே காதலுடன் நின்றுவிட வேண்டும். தமிழ் இலக்கியம் சொல்லும் களவுக்காதல் என வைத்துக்கொள்ளுங்கள். திருமணமும் சடங்கும் அதைத் தொடர்ந்து சமூகமும் தருகிற கட்டுப்பாடுகளும் ஏனோ எனக்கு அறவே பிடிக்கவில்லை, முழுதாய் வெறுக்கிறேன். வாழ்க்கை காதலோடு நிற்கட்டும் என நினைக்கிறேன்... இது தவறா சார்? திருமணம் என்பது, சம்பிரதாயங்களால் ஆனது; மிகவும் போலித்தனமானது என நினைக்கிறேன். அதில் உண்மையே இல்லை என்பது என்னுடைய கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சார்?’  

களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை
களவு மெய்ப்பட வேண்டும் : சிறுகதை

சாட்டிங்... விவாதமாக மாறுவது தெரிந்தது.

`நீ சொல்வது எல்லாமே தர்க்கரீதியா சரிதான். ஆனா, உடனடியா பின்பற்றக்கூடியதாக இல்லையே!’

`எத்தனை நாள் கழித்துப் பின்பற்றலாம்?’ அடுத்த நொடி கேள்வி.

`எத்தனை நாளா..?’ சிரிப்பு சிம்பள் போட்டுவிட்டு சும்மா இருந்தேன்.

`சார், பெரியார் என்ன சொன்னார்? வாழ்க்கை ஒப்பந்தம் போதும்னு சொன்னார்; பெண், நகை மாட்டும் ஸ்டாண்டு அல்ல என்றார்; குழந்தை பெறும் மெஷின் அல்ல என்றார். அதைத்தான் சார் நானும் சொல்றேன். பெரியார் சொல்லும்போது கைதட்றீங்க. அதை ஒரு பெண் பின்பற்றும்போது எதிர்ப்பது என்ன சார் நியாயம்?’’ என்றாள்.

`அறிவு தயாராகிட்டாலும் மனசு தயாராகணுமில்ல...? கொஞ்சம் டயம் எடுக்கும். குடும்பத்துல முதல் காலடி எடுத்து வைக்கிறவங்க, நிறைய எதிர்ப்பு சம்பாதிக்கவேண்டியிருக்கும். அந்தத் தயக்கம்தான் எல்லாருக்கும்.’

`நான் எடுத்து வைக்கிறேன்.’ அதன் பிறகு அவள் விவாதத்தில் ஈடுபடவில்லை.

மீண்டும் ஒருநாள் அவளாக திடீரென இன்பாக்ஸுக்கு வந்தாள்.

`சார், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?’

நான் எதிர்பார்த்த ஏதோ வில்லங்கம். `என்ன?’

`என் வீட்டுக்கு வர முடியுமா... கொஞ்சம் பேசணும்!’

`என்ன விஷயம் என்பதைச் சொன்னால் நன்றாக இருக்கும்.’

`ஒருத்தன் எங்கிட்ட தகராறு பண்றான்.’

நினைத்தேன். `தகராறா... நான் என்ன பண்ண முடியும்?’

`ஆலோசனை சொன்னா போதும்.’

நான் எதையோ எழுதி... மறுபடி அழித்து... மீண்டும் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, `இவ்வளவு நேரமா என்ன சார் டைப் பண்றீங்க?’ என்றாள் பொறுமையில்லாமல்.

எல்லாவற்றையும் அழித்துவிட்டு கடைசியாக, `சரி’ என்றேன் இரண்டு எழுத்துகளில்.

முகவரி கேட்டேன்... தொலைபேசி எண் கேட்டேன். தயக்கமே இல்லை. கேட்ட நொடியில் கொடுத்தாள். வருகிற நேரம் கேட்டாள்... சொன்னேன். தம்ஸ்அப் போட்டு, சாட்-ஐ முடித்துக்கொண்டாள். எதிலும் இரண்டு சிந்தனைகளே இருக்காதா? விளம்பரப் படம்போல துண்டுத்துண்டாக வாழ்கிறார்கள்... ட்விட்டர்போல 280 எழுத்துகளில் முடிவுசெய்கிறார்கள்.

`அடுத்து நான் செய்யவேண்டியது என்ன?’ என, எனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டேன். என்னுடைய வக்கீல் நண்பனிடம் மொத்த சாட் பரிபாஷைகளையும் அனுப்பி, எனக்கு ஏதாவது வம்பு வராமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

அவளுடைய வீடு, அழகான ஒரு சிங்கிள் ரூம் அப்பார்ட்மென்ட். காவல்காரர், வாசலில் இருந்த இன்டர்காமில் அவளை அழைத்து அனுமதி கேட்டுவிட்டுத்தான் உள்ளே அனுப்பினார். ஜி 3 என மூன்றாம் மாடிக்கு வழிகாட்டி, லிப்ட் கதவைத் திறந்துவிட்டார். லிப்டுக்குப் பக்கத்திலேயே ஜி 3. அழைப்பு மணிக்கான பொத்தானை அழுத்துவதற்குள் அவள் கதவைத் திறந்தாள். டீ-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தாள். டீ-ஷர்ட்டில் ஏதோ ஆங்கில வாக்கியம். அதை ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்கவேண்டியிருந்தது.

என்ன அர்த்தம் எனத் தமிழில் புரிந்துகொள்வதற்குள், ``என்னைப் பத்தி ரொம்பத் தப்பா நினைச்சிருப்பீங்க. நான் அவ்ளோ தப்பெல்லாம் பண்ணலை சார்’’ என வரவேற்றாள். மாடங்களில் டிவிடி-கள், புத்தகங்கள், புத்தர், சதா நேரமும் குடத்திலிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருக்கும் பெண் சிலை என, எல்லா இடங்களிலும் ஒரு நேர்த்தி இருந்தது. சோபாவில் அமரும் வரை புன்சிரிப்போடு காத்திருந்தாள்.

``என்ன சாப்பிடுறீங்க?’’ எனக் கேட்கப்போவதை அறிந்து, உட்காரச்சொல்லி சைகை காட்டிப் பேச ஆரம்பித்தேன்.

``சரி, தப்பு எல்லாம் சட்டத்துக்குத்தான். மனிதர்களுக்கு அவரவர் தேவை மட்டும்தான்’’ என்று சொன்னேன்.

``என் தேவை என்னன்னு தெரியுதா?’’

``ஓரளவுக்குத் தெரியுது. சுருக்கமா சொல்லணும்னா, காதல்... நிபந்தனையற்ற காதல்.’’

``ஆனா, அப்படி ஒண்ணு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல. `ஒருத்தன் தகராறு பண்றான்’னு சொன்னியே?’’

``இதுதான் சார் தகராறு... நான் லவ் பண்ண மாதிரியே, என்னை அவன் லவ் பண்ணலை. இதுதான் பிரச்னை.’’

``உன்னை மாதிரியே லவ் பண்ணச் சொல்றது அராஜகம் இல்லையா?’’ அவளுடைய போஸ்ட்போலவே கேட்டேன்.

``நான் எப்படி லவ் பண்றேன்னு சொல்லிடுறேன் சார்!’’

``சொல்லு.’’

``கட்டுப்பாடு இருக்கக் கூடாது. பரஸ்பரம்னு சொல்வாங்களே அதுகூட இருக்கக் கூடாது. நான் விரும்பியபடி அவனை லவ் பண்ணுவேன்... அவன் விரும்பியபடி என்னை லவ் பண்ணணும்.’’

``சுத்தமா புரியலை. நீ விரும்பியபடி பண்ணணுமா, அவன் விரும்பியபடி பண்ணணுமா?’’

``அவன் விரும்பியபடி பண்ணினா போதும்.’’

``அதுதான் உனக்குப் பிடிக்கலையே!’’

``அவன் விரும்பியபடி அவனுக்குப் பண்ணத் தெரியலை சார்.’’

அவள் சொல்லவருவதைக் கிரகிப்பது எனக்கும் சிரமமாக இருந்தது. ``அவன் விரும்புறது என்னன்னு அவனுக்கே தெரியலையா?’’

``கிட்டத்தட்ட ஆமா சார். உயிருக்கு உயிரான்னு... டயலாக் பேசறான் சார். அது நேச்சரா இல்லை.’’

``ஏம்மா, அது ஒரு தப்பா?’’

``எனக்கு எப்ப வேணுமானாலும் பிரிஞ்சு போகிற ஒரு கம்பெனிதான் தேவை. உயிர்லாம் தேவையில்ல. காலம் புல்லா கட்டி அழ முடியாது. கூட கடைக்கு வரணும், ஹோட்டலுக்கு வரணும், சினிமாவுக்கு வரணும். படுக்கைக்கு வர்றதும் அப்படித்தான். தேவையானபோது என்கூட இருந்தா போதும். மத்தபடி நான் என் வேலையைப் பார்ப்பேன்... அவன் வேலையை அவன் பார்க்கணும். அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு நச்சரிக்கக் கூடாது. நெஞ்சை நக்குற வேலையெல்லாம் எனக்குப் பிடிக்காது. எனக்கு இதுதான் நல்லதுன்னுலாம் சொல்றான். இதான் சார் பிரச்னை.’’

``இதெல்லாம் ஒரு பிரச்னையா? கல்யாணம் பண்ணிக்கிட்ட பல பேர் என்ன பாடுபடுறான் தெரியுமா? புருஷன் சொல்றதுக்கு நேரெதிரா இருப்பா பொண்டாட்டி. இவன் கிழக்குன்னா அவ மேற்கு. இந்தியா முழுக்க இருக்கிற 90 பர்சென்ட் குடும்பத்துல இதுதான் நடக்குது. பிள்ளைய இவ இந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்னு சொன்னா, அவன் அந்த ஸ்கூல்தான் சரிம்பான்... இவன் காபின்னா அவ டீ. இப்படித்தான் ஓடிட்டு இருக்கு வாழ்க்கை.

கல்யாணம் ஆனதிலிருந்து சுடுகாட்டுக்குப் போற வரைக்கும் ரெண்டு பேருக்குமே நடக்கிற `நீயா நானா’ போட்டிதான் வாழ்க்கையே. அதை என்ஜாய் பண்ணத் தொடங்கிட்டா முடிஞ்சிடுச்சு. அதுக்குப் பேருதான் விட்டுக்கொடுத்து வாழறது... விட்டுப்பிடிச்சு வாழறதுன்னு கதையிலயும் சினிமாவுலயும் சீரியல்லயும் சொல்லிக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா இதை ஒரு பிரச்னைனு சொல்ற. இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா?’’

``இந்த உலகத்துல பறவை, பட்டாம்பூச்சி, எறும்பு, சிங்கம்... எந்த ஜீவராசியாவது உடல் சுகத்தைக் காரணம்காட்டி இப்படிப் பண்ணுமா சார்? கண்றாவி. அதான் சார்... எனக்கு செட் ஆகாதுன்னு முடிவுபண்ணிட்டேன். அவன் அதைப் புரிஞ்சுக்காம `சூசைட் பண்ணிக்குவேன்...’, `நீ இல்லாம வாழ முடியாது’ன்னு தொல்லை பண்றான். அவன என்ன பண்ணலாம் சார்? இந்த லெவல்லயே அவனைக் கழட்டிவிட்டுட்டா, யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நலங்கு, சீமந்தம்னு சரியாயிடுவான்.’’

``இந்த மாதிரி பஞ்சாயத்து எல்லாம் எனக்கு விநோதமா இருக்கு.’’

``நான் ரொம்ப ஓவரா எதிர்பார்க்கிறேனா... அவன் ரொம்ப ஓவரா எதிர்பார்க்கிறானா? அதைச் சொல்லுங்க.’’

``காதல் பண்றான். அது ஒரு குற்றமா? அவனை இவ்வளவு கஷ்டப்படுத்தணுமா?’’

``அவன், கல்யாணத்தை நோக்கி இழுக்கிறது தெரியலையா? அது எங்க போய் முடியும்னு தெரியுதில்ல! விட்டுக்கொடுத்து வாழறது...

எதுக்கு எனக்கு அந்தத் தலைவலி? நான் விட்டுக்கொடுக்காம வாழறதை விரும்புறேன். அவனும் விட்டுக்கொடுக்காம வாழ்ந்துட்டுப் போகவேண்டியதுதானே!’’

சிரித்தேன். எனக்கு ஏனோ காற்றாடி நினைவுக்கு வந்தது. வடசென்னைப் பகுதியில் காற்றாடி விடுபவர்கள் எதிராளியின் காற்றாடியை வீழ்த்தக் காத்திருப்பார்கள். இரண்டு காற்றாடிகளின் நூலும் தொட்டுக்கொண்ட நொடியில் இரண்டு தரப்பினரும் பரபரப்பாக நூலை வேகமாக விடுவார்கள். யார் அதிகமாக நூல் விடுகிறார்களோ அவர்கள் காற்றாடி தப்பிக்கும். சற்றே சுணங்கினால் நூல் அறுந்துவிடும். ``டீல், மேல போயிடுச்சி’’ என அறுந்த நூலோடு நிற்பார்கள். இது காதல் டீல்!

``எல்லா நேரத்திலும் நீ சொல்றது சரியா இருக்குமா?’’

``சரியா இல்லாதவனோடயே வாழ்ந்து தொலைக்கிறது கல்யாணம். சரியானவனைத் தேடிக் கண்டடையுறது காதல்.’’

``எனக்கென்னமோ நீ சொல்றவன் சரியா வருவான்னுதான் தெரியுது. நீ நினைக்கிற மாதிரி ஒருத்தனை பட்டறையில குடுத்துச் செஞ்சாதான் உண்டு. இன்னும் பொறக்கல.’’

``இல்ல சார். எங்கியோ இருக்கான். அவனைத்தான் தேடுறேன்.’’

``டிரையல் ரூம்ல சுடிதாரைப் போட்டுப் பார்க்கிற மாதிரி சொல்றியே?’’

நான் சொன்னது, அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். ``ஏன் சார் கவுன்ட் பண்றீங்க? நாலு பேரை லவ் பண்ணியிருக்கேன். ஒத்துவரலைன்னதும் பிரிஞ்சுபோயிட்டாங்க. இவன் இப்படிப் பண்ணுவான்னு நினைக்கல.’’   

`` `காதல் ஒருவனைக் கைப்பிடித்தே... அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே’ன்னு பாரதி சொல்லியிருக்கிறார். அது பொய்யா?’’

``நீங்க சொல்றது கற்புக்காதல். நான் சொல்றது களவுக்காதல். இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம்னுலாம் எழுதுவீங்க. தத்துவார்த்தம்னு வந்தா இதயம் ஒரு கோயில்னு பாட்டுல இருந்து கருத்து சொல்றீங்க’’ அவள் கோபமாவது தெரிந்தது.

``இன்னும் தயாராகாத உலகத்துக்கு ஆசைப்பட்டுச் சிரமப்படப்போறேங்கிற துக்காகத்தான் இவ்வளவும் சொல்றேன். நான் அவன்கிட்ட பேசிப்பார்த்துட்டுச் சொல்லட்டுமா?’’ என்று கோரிக்கை வைத்தேன்.

``பேசி, பிரயோஜனம் இல்லை சார். அவனை எப்படி அவாய்ட் பண்ணலாம்னு மட்டும் சொல்லுங்க.’’

``இப்ப என்ன... `நீ இல்லாம உயிரோடு இருக்க முடியாது’ன்னு சொல்றானா?’’

``ஆமா சார் அதுதான். அதுக்குப் பேர் காதல்னு சொல்றதுதான் வயித்தெரிச்சல். அவனுக்குத் தேவை, சுலபமாகக் கிடைக்கும் நான். கல்யாண லைசென்ஸ் வாங்கிட்டா இன்னும் வசதியா இருக்கும்னு நினைக்கிறான். அது தெரிஞ்ச பிறகுதான் கஷ்டமாயிடுச்சு.’’

``அப்ப போலீஸ்கிட்ட போ. `கமிஷனர் ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் குடுப்பேன்’னு சொல்லு. ஓடிப்போயிடுவான். அட்வகேட் கிட்ட பேசு.’’

சங்கீதா, அமைதியாக இருந்தாள். வெகுநேரம் அமைதியாக இருந்தாள். எவ்வளவு நேரம் எதிரில் உட்கார்ந்திருப்பது எனத் தெரியவில்லை. ``நான் கிளம்பட்டுமா?’’ என்றேன்.

என்னை ஏமாற்றத்துடன் பார்த்தாள். என்னிடமிருந்து அவளுக்குத் தேவையான தீர்வு கிடைக்கவில்லை. ``எப்படி கல்யாணத்துமேல நம்பிக்கை இல்லையோ... அதே மாதிரி போலீஸ், கோர்ட்மேலயும் நம்பிக்கை இல்லை சார். நான் சொல்றது அந்தச் சிவப்புக் கட்டடங்களுக்குப் புரியாது. நானே அவனை டீல் பண்ணிக்கிறேன்’’ என்றாள்.

வெளியேறும் நோக்கத்தோடு கதவைத் திறந்து, ``எப்படி?’’ என்றேன். அவள் முகம் ஏனோ மாறுவது தெரிந்தது. ``ஏன், என்ன ஆச்சு?’’ என்றேன்.

``சார், நான் உங்களை ஹக் பண்ணிக்கலாமா?’’

என் வாழ்நாளில் யாரும் இப்படிக் கேட்டதில்லை. ஓர் எழுத்தாளனிடம் வாசகியின் வேண்டுகோள் என எடுத்துக்கொள்ளலாமா என முடிவெடுப்பதற்குள் அவள் நெருங்கி வந்தாள். பெருந்தன்மையோடு அவள் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத அளவுக்கு நெருங்கி வந்தாள். அணைத்தாள். மௌன அஞ்சலிக்காக எழுந்து நின்ற தருணம்போல் எவ்வளவு விநாடிகள் ஆயின எனத் தெரியவில்லை. நிமிடங்கள் கடந்தனபோல இருந்தது. ``தேங்க் யூ சார்!’’ என விடுவித்தாள்.

புன்னகையுடன் நான் என் காலணியை அணிந்தபோது, அங்கே ஓர் இளைஞன் கோபமாக நிற்பதைப் பார்த்தேன். அது அவனா எனத் தெரியவில்லை. சங்கீதாவின் முகத்தைப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

``வா... கோபி. சார் தெரியும்ல?’’

அவன் விருப்பம் இல்லாமல் என்னைப் பார்த்தான்.

``இவர்தானா?’’ என்றபடி அவனுக்குக் கைகுலுக்க எத்தனித்தேன். அவன் கையை நீட்டவில்லை. சந்தேகமும் கோபமும் அவன் முகத்தில் அதிகரித்திருந்தன. சங்கீதா டீலை முடித்துவிட்டதுபோலத்தான் இருந்தது.

- தமிழ்மகன்

ஓவியங்கள்: ஸ்யாம் 

(28.02.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)