மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 13

இறையுதிர் காடு - 13
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 13

இறையுதிர் காடு - 13

இறையுதிர் காடு - 13

அன்று போகர் பிரான் தண்டபாணிக்கான பின்புலத்தைக் கூறிமுடித்த அவ்வேளையில் ஆதித்த கோளமும் மேற்கில் ஆற்றில் மூழ்கிடும் குடம்போல் மூழ்கி முடிந்து இளவெளிச்சம் வடிகட்டினாற்போல் எஞ்சி நின்றது.  

இறையுதிர் காடு - 13

“சீடப் பிள்ளைகளே! தண்டபாணியைப் பற்றி அறிந்த நிலையில் அவன் குறித்த எண்ணங்களோடு கலைந்திடுங்கள். நாளை இங்கே திரும்பக் கூடிடும் சமயம் வினாக்கள் இது தொடர்பாய் எழும்பினால் கேளுங்கள்...” - என்று அவர்களைக் கலையச் செய்தார்.

அண்மை விருட்சங்களில் பறவைகள் அடங்கத் தொடங்கியிருந்தன... அவற்றின் அலகுகள் உடைக்கும் சப்தங்களில் ஒலிப்பரிமாணம் என்பது எத்தனை இனியது என்பதற்கான சாட்சியங்கள்!

இறையுதிர் காடு - 13சீடப்பிள்ளைகளும் ஔஷதசாலை ஊழியக்காரர்களும் அங்கங்கே பந்தம் கொளுத்தி, மரத்தாங்கிகளில் செருகி, கவ்வப்போகும் இருளில் செயலாற்ற முனைந்திருந்தனர். மருந்துகள் நிமித்தம் காய வைக்கப்பட்டிருந்த ‘மிளகு, எட்டிக்காய், வேப்பங்கொட்டைகள், வெண் கடுக்காய், சிவன் வேம்பு, பொற்சீந்தில், ஜாதிக்காய், ஏரிழிஞ்சி, சுக்கு, வெண்ணொச்சி, நிலவாகை’ போன்ற மூலிகைகளை மரத்தாலான சிப்பங்களிலும், பீங்கான் ஜாடிகளிலும் சேகரித்து அதை இடுப்பிலும் சிரத்தின் மேலும் வைத்துச் சுமந்து சென்றபடி இருந்தனர் சிலர். பீங்கான் ஜாடிகள் போகர் பிரான் தன் சீன விஜயத்தின் போது அங்கிருந்து கொண்டு வந்தவை. போகரின் அக்கொட்டாரத்தில் சில சீன தேச நடைமுறைகள் அங்கும் இங்குமாய் இருந்தன.

மரப்பட்டைகளை அரைத்து மசித்து உடன் வர்ணம் சேர்த்து நீர்க்குழம்பாக்கி அதனை மரச்சிட்டங்கள் இடையே ஊற்றிக் காய வைத்து சச்சதுரமாய் எடுத்திருந்த காகிதங்களில் பட்டம் செய்து பருத்தி நூலால் அவற்றை நான்கு திசைகளிலும் உயரப் பறக்க விட்டுக் காற்றின் போக்கை அறிவது அவர் வழக்கமாய் இருந்தது. அவ்வகைப் பட்டங்கள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தன! காற்றும் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசியபடியிருந்தது.

நடப்புக் காலத்தைப் பொதுவாய் எல்லோரும் அறிந்திட நிழல்தூண்’ எனப்படும் தூண் ஒன்றும் அதைச்சுற்றி நூறடிச் சுற்றளவில் ஒரு வட்டமும் போடப்பட்டிருந்தது. நிழல்தூண் நிழல் வளர்ந்து தேயும் இடங்களில் உருண்டைக் கூழாங்கற்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று எண்ணிக்கையளவில் பார்த்தால் பளிச்செனத் தெரியும் விதத்தில் வைக்கப்பட்டிருந்தன. எந்தக் கற்கூட்டம் மேல் அந்த நிழல்தூண் நிழலின் தலைப்பாகம் விழுகிறதோ அதன் எண்ணிக்கையை வைத்து அப்போதைய நேரம் கணக்கிடப்பட்டது. ஓர் உயரமான குன்றின் மேல் நிலத்தை சமன் செய்து இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது.

அதுபோக மணற்கடிகை, நீர்க்கடிகை என்கிற கடிகைகளும் கடிகை மேடைகளில் இயக்கத்தில் இருந்தன! பொதி சுமக்கும் மட்டக் கழுதைகள் ஒருபுறமும் அவற்றைப் பயன்படுத்தி அருகிலுள்ள மலைக்காய்கறிகளைச் சுமந்து வரும் மலையேறிகள் குளிர் பாகைகள் தரித்தும், அந்தக் கழுதைகளுக்கு வெல்லப் புண்ணாக்கைத் தங்கள் கைகளில் வைத்தே ஊட்டியும் விட்டபடி இருந்தனர்.

குதிரைகள் சிலவும் மேய்ந்துகொண்டிருந்தன. உடன் பசுக்களும் காளைகளும் அசைபோட்டுப் படுத்திருந்தன. சில இடங்களில் மழைக்குருவிகள் கூண்டில் படபடத்துக்கொண்டே இருந்தன. அவை படபடக்காமல் அமைதியாக இருந்தால் மழைவரப்போகிறது என்று பொருள். போகர் கொட்டாரத்தின் வானிலை அறிவிப்பாளர்களாக அந்தக் குருவிகள் மட்டுமல்ல, மயில்கள் சிலவும் விளங்கின.

ஒரு மனிதன் தன் ஆறாம் அறிவின் நிமித்தம் இயற்கையின் போக்கை அறிய என்னவெல்லாம் செய்ய இயலுமோ அவ்வளவும் அங்கு இருப்பது போல் தோன்றிற்று. அவ்வளவையும் கடந்து போகர் தன் யோக கேந்திரத்திற்கு வந்தபோது அங்கொரு பிரம்பு நாற்காலி சாய்மானத்தோடு காட்சி தந்தது. அதன்மேல் காவித்துணி விரித்துப் போர்த்தப்பட்டிருந்தது. யோககேந்திர நுழைவாயில் முகப்பில் சில சக்தி இணைப்பென்றும், செயல்திறன் தத்துவக்குறி என்றும் கருதப்படும் ஒரு வரைகுறி வரையப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.

-அந்த நுழைவாயில் முகப்பில் மூன்று தமிழாளர்கள் எழுத்தாணியோடும் பனை ஏடுகளின் கட்டுகளோடும் காத்திருந்தனர். போகர் அந்த ஆசனத்தில் அமரவும் அவர்களும் வணங்கி அமர்ந்தனர். ஒரு சீடன் மரக்குவளை ஒன்றில் மிளகு தட்டிய, பருகத்தகுந்த சூட்டுடன் வெந்நீர் கொண்டு வந்து தந்தான். அதைப் பருகிய போகர் எழுத்தாணியர்களைப் பார்த்தார். அதில் முதலில் அமர்ந்திருந்தவர் அருணாசலக்கிழார்.

“என்ன கிழாரே... நேற்று நான் இறுதியாகக் கூறியது எது பற்றி?” என்று கேட்டிட, கிழாரும் ``பிரானே, தாங்கள் அண்டபிண்டம் பற்றிக் கூறத் தொடங்கியுள்ளீர்” என்றார்.

“அண்ட பிண்டம் ஒரு அகப்புற சமாச்சாரம்... நான் சொல்லச் சொல்ல நன்கு கர்ணம் (காது) கொடுக்கணும். பின் உதட்டை அசைக்கணும். அதாவது கேள்விகளைக் கேட்க வேண்டும். உத்தேசங்களுக்கே இதில் இடமில்லை. சரியா?”

“உத்தரவு பிரானே...”

“என்றால், அள்ளிக்கொள். அண்டமிது உருண்டை என்பதற்கு சந்திரனும் சூரியருமே முழு முதல் சாட்சிகள். அவர்கள் சதுர செவ்வகர்களாயிருந்தால் பூமியில் சீரான பொழுதுகள் இராது. இதே பொதினி ‘வெயில் நிழல் இரவு’ என்று மூன்று கூறாகக்கூடக் காட்சி தரும்! எப்படி என்று கேள்...”

“எப்படி என்று கூறுங்கள் பிரானே...”

“அதோ வட்ட வடிவில் ஒரு கூடை உள்ளது பார். அதன் முன் ஒரு தீப்பந்தத்தைப் பிடி. கூடைக்கும் தீப்பந்தத்திற்கும் இடையில் ஒரு சதுரப் பலகையை வை. தீப்பந்த வெளிச்சத்தைப் பலகை மறைக்குமா?”

“மறைக்கும் பிரானே...”

“எப்படி மறைக்கும்?”

“அதன் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுக்கு...”

“அது எவ்வளவு?”

“பலகையின் சதுரக் கணக்களவு.”

“கூடையின் சொச்ச பாகம் வெளிச்சம் படுமா?”

“நிச்சயம் படும்.”

“பலகையை சூரியனாய்க் கற்பனை செய்து கொள். இப்போது கூடைமேல் சூரிய வெளிச்சம் எப்படி விழும்?”

“அதன் சதுர அளவிற்கு...”

“கூடையின் மற்ற பாகங்கள்?”

“வெளிச்சம் குறைந்து அரையிருட்டாய் இருக்கும்.”

“இதை ஒரு உதாரணத்திற்கே சொன்னேன். விண்கோள் எல்லாமே பூஜ்ய ரூபமே! பூஜ்ய ரூபத்தாலேயே உருண்டு சுழல ஏலும். ஒரு சதுரச் சட்டத்தைக்கூடத் தரைமேல் உருண்டு ஓடச் செய்தால் அதன் சதுர் முனைகள் மழுங்கி மழுங்கி அவை வட்டமாகிவிடும்.

இதனால் அண்டமெனில் உருண்டதெனக்கொண்டே சிந்திக்க வேண்டும்.”

“அற்புதம் பிரானே!”

“அண்டம் பற்றிக் கூறும்போது ஆகாசம் பற்றியும் கூற வேண்டும்.”

“கூறுங்கள் பிரானே!”

“கிழாரே... இதுவரை சொன்னதை எழுதியாயிற்றா?”

“ஆயிற்று பிரானே...”

“இனி ஆகாசம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஆகாச தத்துவம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“நாமிருந்தாலே ஆகாசம் இருக்க முடியும். நாமில்லா விட்டால் ஆகாசமும் இல்லை. அவ்வளவே ஆகாசதத்துவம்!”

“அது எப்படி பிரானே?”

“ஏதுமில்லாததே ஆகாசம். அந்த இல்லாதை இல்லாத ஒன்றால் எப்படி உணர முடியும்?”

“குழப்பமாய் இருக்கிறது பிரானே...!” 

இறையுதிர் காடு - 13

“குழம்ப இதில் எதுவுமில்லை. நான் சொல்லப்போவதை கவனமாய்க் கேளுங்கள். ஏதுமில்லா வெளியே ஆகாசம் எனப்படுகிறது. அதில் இந்த பூமி முதல் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் ஆங்காங்கே சுழன்றபடி உள்ளன. ஆம்தானே?”

“ஆம் பிரானே.”

“அவை எல்லாம் இருக்கப்போய்தானே ஆகாசம் இருப்பதே தெரிகிறது?”

“ஆம் பிரானே?”

“அப்படியானால் எதுவுமில்லை என்று அறிவது இருக்கின்ற ஒன்றா? இல்லாத ஒன்றா?”

“இருக்கின்ற ஒன்றுதான்...”

“இருக்கின்ற இந்த பூமியோ, இல்லை நீயோ, அதுவுமில்லை நானோ - நாமோ யாருமே இல்லாத நிலையில், இந்த ஆகாசமும் எதுவும் இல்லாதது என்பதை எதை வைத்து உணர முடியும்?”

“நாமிருந்தாலே உணர முடியும். நாமில்லாவிட்டால் ஆகாசம் இருந்தால்தான் என்ன... இல்லாவிட்டால்தான் என்ன?”

இறையுதிர் காடு - 13“ஆம்... இல்லாத ஒன்றை உணர இருக்கின்ற ஒன்று வேண்டும்... புரிகிறதா?”

“புரிகிறது பிரானே...”

“நல்லது... அண்ட பிண்டம் பற்றி இன்றைக்கு இவ்வளவுபோதும்...” என்ற போகர் பிரான் அடுத்து அருணாசலக் கிழாரை ஒட்டி கற்ப முறை பற்றி எழுதக் காத்திருக்கும் கார்மேகக் கிழாரைத்தான் பார்த்தார். அவரும் எழுத்தாணியோடும் ஏட்டுக்கட்டோடும் எழுதத் தயாரானார்!

இன்று துரியானந்தமும், குமரேசனும் பீதி குறையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதோடு காயாம் பூ ஏறிப் பார்த்த சேந்தியையும் ஒரு பார்வை பார்த்தனர்.

“ஆமா நீங்கள் ஏன் இப்படி திருட்டுமுழி முழிக்கிறீங்க?” என்று காயாம்பூவும் கேட்டாள்.

“நைனா... பொட்டிய முதல்ல தூக்கி உட்டுடணும்... இல்ல குடுகுடுப்பக்காரன் சொன்னா மாதிரி அது வந்தாலும் வந்துடும்...” என்றான் குமரேசன். அது என்று கூறும்போது வலக்கையைப் பாம்புப்படம் போல் அசைத்துவேறு காட்டினான்! அதைக் கவனியாமல் ``எதுய்யா?” என்று இடைநறுக்கினாள் காயாம்பூ.

“மதர்... நீ நைனாக்கு மொதல்ல சோத்தப்போடு. நைனா நான் இப்பவே போய் நம்ப ட்ரை சைக்கிளை இட்டாரேன்’’ என்று வேகமாய்க் கிளம்பினான்.

“அவன் என்னா சொல்றான். நீ ஏன் இப்படி பேஸ்துபுட்ச்ச மாதிரி இருக்கே? இன்னாதான்யா இருக்கு அப்படி இந்தப் பொட்டில? ஊடு பூரா ஒரே உபூதி வாசன வேற! இதுக்கு நடுவுல கவுச்சி கொழம்பு வெக்கவே எனக்கு சங்கடமா இருந்துச்சிய்யா...”

- என்று காயாம்பூ சற்று ஆயாசமாக அந்தப் பெட்டி மேலயே அமரப்போனாள்.

“காயா... காயா...” அலறிவிட்டான் துரியானந்தம்.

“இன்னாயா?”

“வேணாம்... நீ கீழ குந்து - அதும்மேல ஓணாம்...”

“என்ன ஓணாம் ஒடக்கான்னுகிட்டு... அப்புடி என்னதான்யா இருக்கு இந்தப் பொட்டில..?”

“தெரிஞ்சா சொல்ல மாட்டேனா... நீ சோத்தப்போடு முதல்ல.”

- அதட்டியது அவன் குரல். அவளும் கெந்தும் கால்களோடு, கரிப்புகை அப்பிக் கிடக்கும் சுவர் கொண்ட சமையற்கட்டுப் பக்கம் செல்லத் தொடங்கினாள்!

டிட்டர் ஜெயராமனின் டேபிள்மேல் அவர் பயன்படுத்தியிருந்த விக்ஸ்டப்பா அவர் சுழலவிட்டதில் சுழன்றபடி இருந்தது. எதிரில் தான் சொல்ல நினைத்த சகலத்தையும் சொல்லி முடித்திருந்தாள் பாரதி.

டேபிள்மேல் வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலை ஒட்டி வரையப்பட்டிருந்த ஒரு கார்ட்டூன் பரிசீலனைக்காகக் காத்திருந்தது. எதிரில் டி.வி-யில் செய்திச் சேனல் ஒன்றில் நான்கு பேர் குஸ்தி போடாத குறை... மியூட்டில் இருந்ததால் மௌனக் காட்சியால் ஓடியபடி இருந்தது.

டீ வந்திருந்தது. பாரதிக்கு அருந்தும் மனநிலை இல்லை. அதன்மேல் ஆடைப்படிமம்!

ஒரு ஆழந்த அமைதிக்குப் பின் ஆசிரியர் ஜெயராமன் அந்த விக்ஸ் டப்பாவைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடியே பேசத் தொடங்கினார்.

“நீ இப்ப சொன்ன அவ்வளவும் நான் என் காலேஜ் டேஸ்ல பார்த்த மர்மதேசம் சீரியல் மாதிரியே இருக்கு...”

“அப்கோர்ஸ்... இந்த தேசமே ஒரு மர்ம தேசம் தானே சார்?”

“நீ துப்பு துலக்க முடிஞ்ச மர்மத்தைத்தானே சொல்றே?”

“முடிஞ்ச, முடியாத எல்லாத்தையும் சேர்த்து தான் சொல்றேன்...”

“எப்பவும் பார்க்கவும் படிக்கவும் சுவாரஸ்யமா இருக்கற விஷயங்கள் நமக்கு நடக்கும்போது பெரிய புதிராதான் இருக்கு...”

இறையுதிர் காடு - 13“சார்... மிஸ்ட்ரி பற்றி எழுத்தாளர் அரவிந்தன் கிட்ட கேட்டப்போ அவர் சொன்னபதில் வித்யாசமா இருந்தது... கிட்ட தட்ட மிஸ்ட்ரியும் நம்ப லைப்ல ஹிஸ்ட்ரி மாதிரி ஒரு விஷயம் தான்னு சொன்னார்...”

“அப்கோர்ஸ்... எழுத்தாளர்கள்ல அரவிந்தன் ஒரு வலதுசாரி. வழிவழியான நம்பிக்கைகளை மதிக்கிறவர். அப்படிதான் சொல்வார்.”

“சார் நீங்க முடிவா என்ன சொல்லப்போறீங்க. என் அப்பா வரைல நடந்துகிட்டிருக்கிற விஷயங்கள்ல அமானுஷ்யம் இருக்கிற மாதிரி தெரியுதா?”

“நல்லாவே தெரியுது... அதே சமயம் கோ இன்சிடென்ஸை அமானுஷ்யமா நாம நினைக்கறோமோன்னும் தோணுது.”

“அப்ப தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடி யலையா?”

“வரமுடியும்... என் அப்பா மூலம் நான் தெரிஞ்சிகிட்ட ஒரு கருத்தை இப்ப சொல்றேன். இந்த மாதிரி இரண்டு பக்கமும் சமபலம் உள்ள விஷயங்களின்போது நாம எதாவது ஒரு பக்கம் உறுதியா நின்னுடணும். எந்தப் பக்கம் நாம உறுதியா நிக்கறோமோ அந்தப் பக்கம்தான் இறுதியில ஜெயிக்கும்.”

“இந்த பதில் எனக்குப் பிடிச்சிருக்கு சார். நானும் எப்பவும் நானா இருக்க விரும்பறேன். என் வரைல எல்லாமே கோ இன்சிடென்ஸ்தான் சார்.”

“அப்ப இந்தக் கருத்துல இருந்து மாறவே மாறாதே, மற்றபடி இந்தக் கருத்துக்கு ஏற்ப எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கோ.”

“தேங்க்யூ சார்... அந்த வேங்கையின் விஷயத்துல கமிஷனரைப் பாக்கலாமா சார்...”

“பாக்கலாம்... நம்ப இதழ் மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் உடையவர்தான் கமிஷனர் கனகசிவம். ஆனா அதனால பெரிய நன்மை உண்டாகும்னு தோணலை.”

“போலீஸ் சப்போர்ட்டோடதானே சார் அவன் போலிப்பத்திரமே தயார் செய்திருக்கான்..?”

“மிஸ்டர் ரவிக்குமார் சப்போர்ட்டோடன்னு சொல்... டிபார்ட்மென்ட் இதுக்குப் பொறுப்பாகாது. எல்லா இடத்துலயும் ஒரு அஞ்சாம் படை நபர் இருக்கிறதில்லையா..? அப்படிதான் இதுவும்...”

“அப்ப என்ன செய்யலாம் சார்?”

“எனக்கென்னமோ உங்கப்பாவால மட்டுமே அவனை வழிக்குக் கொண்டு வர முடியும்னு தோணுது. இதுல அவர்தானே முதல் குற்றவாளி.”

“நிச்சயமா சார்.”

“அப்ப உன் யுத்தத்தை உன் அப்பாகிட்ட ஆரம்பி. தப்பு செய்தவரையே திருத்தத்தையும் செய்ய வை.”

“நல்ல ஐடியா சார்.”

“நீ எப்பவும் ரொம்ப க்யூட்... ஆனா இப்ப உன்கிட்ட நான் கொஞ்சம் பதற்றத்தப் பார்க்கிறேன். இல்லேன்னா உங்கப்பா கிட்ட இருந்துதான் நீ உன் யுத்தத்தை ஆரம்பிச்சி ருப்பே. அந்த வேங்கையனைத் தேடிப்போயிருக்க மாட்டே... அவனை உன்னை வந்து பார்க்க வெச்சிருப்ப...”

ஆசிரியர் ஜெயராமன் சொன்னவிதம் பாரதியை சுரீர் எனத் தைத்தது. அவளுக்குள் ஒரு சிலிர்ப்பும் ஏற்பட்டது.

“பார்க்கவைக்கறேன் சார்...’’ என்றாள் அற்புதமான ஒரு தொனியில். அதில் ஒரு மலையளவுக்கு நம்பிக்கை!

பாரதியின் பங்களா!

புதிய டிரைவர் அந்த டாடா சுமோவை நீல நிற வலைத்துணி கொண்டு கழுவித்துடைத்துக் கொண்டிருந்தான். பின்புறம் டிக்கி திறந்திருந்தது. அதனுள் வேலைக்காரி அடைக்கலமும் அப்பாவின் ஆபீஸ் அசிஸ்டென்டான பானுவும் சூட்கேஸ், வாட்டர் ஜக், ஒரு பெரிய பூக்கூடை என்று ஒவ்வொன்றாய் வைத்தபடி இருக்க பாரதியின் கார் உள் நுழைந்து நின்றது.

இறங்கிய பாரதி சகலத்தையும் பார்த்தபடியே உள் நுழைந்திட பானுவும், அடைக்கலமும் பின்னாலேயே உள் வந்தனர்.

ஹாலில் முத்துலட்சுமி ஒரு ஷாலைப் போர்த்திக்கொண்டு புதிய புடவை, நெற்றியில் பெரிதாய் விபூதிப்பட்டை என்று காத்திருந்தாள். கையில் டேபில்  (Tab) ஒரு வெப் சீரியலின் ஓட்டம்!

பாரதி வரவும் நிமிர்ந்தாள். டேப் அணைக்கப்பட்டது.

“என்ன கிழவி... மேக்கப்லாம் பலமா இருக்கு, எங்க கிளம்பிட்டே?”

“கிழவியா... நான் உன் பாட்டிடி!”

“ஏன் கிழவின்னா கிரேடு குறையுதா?”

“நீ பேசறத பார்த்தா தெம்பா தெரியுதே... போன காரியம் நல்லபடி முடிஞ்சிதா? அந்த ரவுடிப்பையன் வழிக்கு வந்துட்டானா?”

“கிழிச்சான்...” - வெறுப்பாகத் தன் பேக்கை மோடா மேல் வைத்தபடியே நடந்ததைச் சொல்லத் தொடங்கினாள். அப்படியே பாவனையோடு அடைக்கலத்தைப் பார்த்து காபி கேட்டாள் உடல் மொழியில்...

அடைக்கலமும் வேகமாய் சமையல் கட்டு நோக்கி ஓட, பானு கூர்மையாக கவனிக்க ‘எல்லாம் இப்ப உன் மகன் கைலதான் இருக்கு..!’ என்று பாரதி கூறி முடிக்கவும் முத்துலட்சுமியிடம் பலத்த பெருமூச்சு!

“மூச்சு விட்றதால எல்லாம் பிரயோஜனமில்லை. உன் பிள்ளையை நான் விட்றதா இல்லை. நீயும் சொல்லு.”

“வந்து சொல்றேன்... இப்ப நான் புறப்பட்றேன்...”

“எங்க?”

“வேற எங்க, பழநிக்குத்தான்”

“உன் பிள்ளை ஹாஸ்பிடல்ல இல்ல இருக்காரு?”

“விளையாடாதே பாரதி. என் மனசு இப்ப இருக்கிற இருப்பு உனக்குத் தெரியாது. உனக்கும் சேர்த்துதான் அவன்கிட்ட வேண்டிக்கப் போறேன். இந்த விஷயத்துல நான் உன் கட்சி இல்லை. அந்த கணேச பாண்டியோட கட்சி. அவன் சொன்னதுதான் சரி... அந்தப் பெரியவர் ஆத்மா அலைய ஆரம்பிச்சிடிச்சு. அது அமைதியடையல, உன் அப்பனும் ஒழுங்கா வீடுவர முடியாது.”

“பாட்டி பழநிக்குப் போய் உன் முருகன் முன்னால அழறதால ஒரு புண்ணியமும் இல்லை. அதுக்கு என்கூட ஆஸ்பத்திரிக்கு வா. அப்பாகிட்ட பேசு. நானும் பேசறேன். அப்பா அந்த வேங்கையன், சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்னு இரண்டு பேர்கிட்டயும் பேசட்டும். இவங்க ஒதுங்கிட்டாலே போதும். அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு 25 லட்ச ரூபாயை நஷ்ட ஈடா கொண்டு போய்க் கொடுப்போம். அது அந்தப் பொண்ணு படிக்கவும், கல்யாணம் பண்ணவும் உதவியா இருக்கும். ஒருவேளை அந்தக் குமாரசாமி ஆத்மா நீ சொல்ற மாதிரி அலைஞ்சுகிட்டிருந்தா இதெல்லாம் செஞ்சாதான் சரியாகும். தப்பு செய்யறவங்க செத்துப்போறதால யாருக்கு என்ன புண்ணியம்? அவங்க திருந்தி நல்லவங்களா வாழ்ந்தாதானே எல்லாருக்கும் நல்லது?”

“எல்லாம் சரி... உன் அப்பன் இதுக்கு சம்மதிக்கணுமே?”

“சம்மதிக்கணும். சம்மதிச்சாதான் நான் அவர் பொண்ணு. இல்ல வீட்டை விட்டே போயிடுவேன்.”

“அப்படி எல்லாம் சொல்லாதே... உன் விருப்பப்படியே நான் நடக்கறேன். ஆனா ஒண்ணு... என்னை இப்ப பழநிக்குப் போக விடு. சென்னைல இருந்து கார்ல போக எட்டு மணி நேரம், அங்க ஒரு எட்டு மணி நேரம், வர ஒரு எட்டுமணி நேரம். ஆக 24 மணி நேரம். ப்ளீஸ்...”

-முத்துலட்சுமி பேத்தி முன் கெஞ்சிட, பாரதியும் “போய்ட்டு வா... உன் முருகனை நீ எல்லாம் எதுக்கு இருக்கேன்னு நான் கேட்டதா சொல்” என்றாள்.

“நீ கேக்கற விதத்துல ஒரு தர்மாவேசம் இருக்கு. அதை அவன் ரசிப்பான் - கோபிக்க மாட்டான் - வரேன்” என்று, மறக்காமல் முத்துலட்சுமி டேபோடு புறப்பட்டாள். பாரதிக்கு லேசாக சிரிப்பு வந்தது. கைப்பேசியில் அப்போது ஒரு மெயில் வந்த சமிக்ஞை ஒலி.

சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து கைப்பேசியை இயக்கத் தொடங்கினாள். அடைக்கலமும் அப்போது காபியோடு வந்தாள். காபி வாசம் நிமிர்த்தியது. கப்பின் மேல் உஷ்ண ஆவியின் பாலேடான்ஸ்! வாங்கிச் சூப்பவும் கலைந்துபோனது. அப்போதைய உடல் மன அழுத்தத்துக்கு மிக இதமாய் இருந்தது.

“அற்புதம் அடைக்கலம்மா...”

“சந்தோஷம் கண்ணு.”

“ஆமா எப்ப வந்தீங்க... எப்படி இருக்கா உங்க பேத்தி?”

“அதுக்கென்ன... பூச்செண்டா இருக்கா.”

“பொண்ணு?”

“அவ... உம், நல்லா இருக்கா!”

“என்ன சுருதி குறையுது?”

“என்னம்மா பண்ண... பேத்திய கொடுத்துட்டு அவன் கர்த்தர்கிட்ட போய்ட்டான்... என்னையே என்னால சுமக்க முடியல இப்ப இந்த பாரம்வேற...”

-அடைக்கலம் சொன்ன விதத்தில் ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் வாழ்க்கை பாரம் ஒரு மின்னல்போல் தோன்றி மறைந்தது. சிறிது நேரம் பேச்சு வரவில்லை. காபியையும் குடிக்கப் பிடிக்கவில்லை.

“நீ குடி கண்ணு... ஆறுது பார்...”

“இது ஆறினா சுடவெச்சுக்கலாம். ஆனா சுட்ற உங்க மனச்சூடு ஆறணுமே? தலைகீழால்ல இருக்கு.”

“ஆமாம்கண்ணு... வீட்டுக்கு வீடு வாசப்படி. இங்க நம்ப அய்யாக்கும் இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கல.”

“அவருக்கு நல்லது நடந்திருக்கு அடைக்கலம்மா. கொஞ்ச நாளாவது மந்திரி பதவிக்காக அலையாம வீட்டோட இருப்பார் பாருங்க.”

- பாரதியின் அந்தப் பேச்சுக்கு மறு பேச்சுப் பேச அடைக்கலம் முனையவில்லை. தன் எல்லை தெரிந்து நிறுத்திக்கொண்டாள். பானுவும் ஒதுங்கி அறைக்குச் சென்று ராஜாமகேந்திரனுக்கு வந்திருக்கும் கடிதங்களைப் பார்த்து பைல் செய்யத் தொடங்கினாள்.

பாரதி மெயிலைத் திறக்கவும் அரவிந்தன் கதையின் முதல் அத்தியாயம்தான் கண்ணில் பட்டது. ஒத்திகை எனும் தலைப்பின் இருபுறமும் கேரளக் கதகளி ஆடும் இரு கலைஞர்களின் வர்ணம் பூசிய முகம் இடம் பெற்றிருந்தது.வர்ணம் பூசியவரின் உண்மை முகத்தை வர்ணங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. நம் வாழ்விலும் வர்ணம் போல் பல விஷயங்கள் நம் உண்மைகளை மறைத்துக்கொண்டு வேடதாரிகளாகத் தான் நம்மை வைத்திருக்கின்றன. அரவிந்தனின் மேதைமைக்கு அந்த இரு படங்களே போதுமானதாய் இருந்தன. உடனேயே அது அவனுடன் பேசத் தூண்டியது. கைப்பேசி வழியே அழைத்தாள்.

“ஹலோ சார்...”

“யெஸ் பாரதி...”

“ஒத்திகையோட ஐக்கன் (icon) அதாவது அந்தக் கதகளி ஆட்றவங்க படம் சூப்பர்!”

“ஏதோ தோணிச்சு... கூகுளாண்டவர்தான் எதைக் கேட்டாலும் தர்றவராச்சே? அந்தப் படங்களை டெளன்லோடு பண்ணி பிட் பண்ணேன்.”  

இறையுதிர் காடு - 13

“கூகுளையும் கடவுளாக்கிட்டீங்களா... வலது சாரிகள்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயமே இதுதான்...”

“நான் வலது சாரியா... யார் சொன்னது?”

“ஐயோடா.. அப்ப நீங்க யாராம்?”

“நான் ஒரு நியூட்ரல் மேன்... மையம்! உடனே மக்கள் நீதிமையத்துல சேர்த்துடாதீங்க. நான் நடுநிலையைச் சொன்னேன்...”

“ஆனா என்னாலையும் சரி, எடிட்டராலையும் சரி உங்களை ஒரு நியூட்ரல் கேரக்டரா நினைக்க முடியல.”

“ஐயோ... அவரும் தப்பா நினைச்சிக்கிட்டிருக்காரா?”

“தப்பா இல்ல... இதுல தப்பும் இல்லை.”

“இல்ல பாரதி... என்னை இப்படி லெப்ட், ரைட்னு டிசைட் பண்றது நிச்சயம் தப்புதான்.”

“ஓ.கே. விடுங்க. நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்.”

“போகட்டும், என்கிட்ட நிறைய பேசணும்னும் சொன்னீங்களே?”

“ஆமாம்... எடிட்டர் கிட்ட பேசிட்டேன். இப்ப தெளிவா இருக்கேன். உங்ககிட்ட பேசினா அந்தத் தெளிவு உறுதியாயிடும்.”

“அப்படி என்ன விஷயம்?”

“அமானுஷ்யம்.”

“என்ன... அமானுஷ்யமா?”

“யெஸ்... என்னைச் சுத்தி இப்ப ஒரே அமானுஷ்யம் தான்!”

“வெரி இன்ட்ரஸ்ட்டிங்... அப்படி என்ன அந்த அமானுஷ்யங்கள்...”

“என் அப்பா, அப்புறம் ஒரு ரவுடி, ஒரு போலீஸ்காரர் இப்படி மூணு பேரால பாதிக்கப்பட்ட ஒருத்தர் அதனாலயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார். சாகும்போது சும்மா சாகலை. முருகன் படம் முன்னால நின்று இந்த மூணு பேர் மேலயும் சாபம் கொடுத்துட்டுதான் செத்துருக்கார்.

ஒரு ஆச்சர்யம் பாருங்க. கரெக்டா அந்த மூணு பேருமே இப்ப உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுப் போராடிக்கிட்டிருக்காங்க!”

“அட!”

‘`என்ன அட... இதைவிடப் பெரிய அமானுஷ்யம் நான் ஒரு யோகாசன மாஸ்டரைச் சந்திச்சதுதான். அவர் இனி உன் லைப்ல எல்லாமே அமானுஷ்யம்தான். நீ பழநிக்குப் போவேங்கிறார். அதுக்கேத்த மாதிரியே எடிட்டரும் என்ன பழநிக்குப் போகச் சொல்றார். மறுத்துட்டு வீட்டுக்கு வந்தா பாட்டி பழநிக்குப் போகணுங்கிறாங்க.”

“வாவ்...”

இப்ப சொல்லப் போறதுதான் உச்சம். ஒரு பழைய சாமான் கடைல ஒரு பழைய வாள். சுடலைமாடன் சாமி கைல இருக்கற வாளாம் அது. எப்படியோ அது அந்தக் கடைக்கு வந்து அந்த வாளை உறைல இருந்து எடுத்துப் பார்த்த அவ்வளவு பேருக்கும் ரத்தக் காயம். அது வெளிய வந்தா ரத்தம் பார்க்காம திரும்ப உள்ள போகாதாம். ஆனா எனக்கு மட்டும் எதுவும் ஆகல... அது இப்ப என் வீட்ல...”

“தெய்வமே... இது நிஜமா இல்ல எதாவது டிவி சீரியலா?”

-கொஞ்சம் சீரியசாக அரவிந்தன் கேட்க ‘அம்மா...’ என்றொரு சப்தம் அப்போது! தூசி துடைக்கும் வேலைக்காரன் மருதமுத்து டேபிள் மேல் கிடந்த அந்த வாளை வேகமாய் உருவியதில் கடந்து போன - பானுமேல் அது பட்டதில் அவள்தான் கத்தியிருந்தாள். அவள் வயிற்றில் புடவையை மீறிக்கொண்டு ரத்தச் சீற்றம்!

 - தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்