
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
‘சூடான சம்சேய்... சூடான சம்சேய்...’’ என்று மூக்குக்கும் வாய்க்கும் மத்திமத்தில் ஒரு குரல் வருகிறது. ``சாயே... சாயே...’’ என்றொருவர் தேநீரோடு நம்மைக் கடந்து போகிறார். மற்றொருவர் நம் முன்னால் ``வறுத்த கடலே... வறுத்த கடலே...’’ என்கிறார்.

``எவ்வளவு?’’ என்று கேட்டால், இயல்பான மொழியில் ``பத்து ரூபா சார்’’ என்கிறார்கள். ``பொருள்களை விற்கும்போது வரும் குரல் மட்டும் விடிவி கணேஷையும் வினு சக்ரவர்த்தியையும் உரலில் போட்டு இடித்தாற்போல ஏன் இருக்கிறது?’’ எனக் கேட்டதற்கு, ``தெரியல சார்... ஆனா, டீக்கேனைத் தூக்கினாலே அந்தக் குரல் வந்துடுது சார்” என்றார். சொன்னவர் ``சாயே... சாயே...’’ என்று மூக்கில் குரல்கொடுத்தார்.
குரல் என்பது, வெறுமனே பேசுவது மட்டுமல்ல... ஒரு சமூகத்தையே கட்டிப்போடும் அளவுக்கு வலிமைகொண்டது. `என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே...’ என்ற குரலில் எத்தனை பேர் உணர்வெழுச்சி கொண்டிருந்தார்கள்! `உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’, `மக்களால் நான்... மக்களுக்காகவே நான்’, `என் இனிய தமிழ் மக்களே’, `என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே’ என்பதெல்லாம் வெறும் குரல்கள் அல்ல. அதை அவர்களின் குரலில் சொல்லும்போது தன்னை மறந்து கைகளைத் தட்டி மகிழ்வதுதான் அந்தக் குரலின் ஈர்ப்பு. `நான் எதிர்க்கட்சியைப் பார்த்துக் கேட்கிறேன்...’ என்று சொல்வதை, பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் சொன்னால் என்னவாகும் என யோசித்துப்பாருங்கள். தலைவர்களின் குரல்கள் என்றாலே, நமக்கெல்லாம் உணர்வெழுச்சியின் குரலாகவே இருக்கவேண்டும்.
`பரலோகத்திலிருக்கும் பரமபிதாவே... தேவனாகிய இயேசு கிறிஸ்துவே... உங்களின் வாதைகளை அவர் குணப்படுத்துகிறார்’ என்று போதகர் தன்னிலை மறந்து பேசும் குரலுக்கு உணர்வெழுச்சியோடு `ஆமென்’ சொல்ல எத்தனை பேர் இருக்கிறார்கள்! `உங்கள் சன் டிவி-யில் காணத் தவறாதீர்கள்’ என்று அந்த மனிதரின் வெண்கலக் குரல்தான் நம்மைத் திரும்பிப் பார்க்கவும்வைக்கிறது.
`உனக்கு சுத்தமா அறிவில்ல’ என்று திட்டும் காதலியின் குரல் நமக்கு எப்போதும் சந்தோஷத்தைத்தான் தருகிறது. `அம்மா தாயே... பிச்ச போடுங்கம்மா...’ என்று சொல்கிறவர்களைப் பாருங்கள், எல்லோரும் ஒரே பாவனையில் ஒரே மாதிரியாகத்தான் சொல்வார்கள்.
`பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறோம்... மறந்தும் இருந்துவிடாதீர்... இருந்தும் மறந்து விடாதீர்...’ என்று மைக்கில் பேசுபவர்களையும் பாருங்கள், ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இவர்களுக்கெல்லாம் இப்படித்தான் பேச வேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?
எல்லோருக்கும் பிடித்தமான ஒரு குரல் வாய்த்துவிட்டால்போதும். பிறகு, உங்கள் பின்னால் உங்கள் குரலுக்காக ஒரு ஜனத்திரள் காத்திருக்கும். ``தலைவரு வாய்ஸு கொடுத்துட்டாருல்ல... இனி என்ன நடக்கப்போவுதுன்னு மட்டும் பாரு” என்று ஒருவர் தேநீர்க் கடையில் பேப்பரை மடித்தபடி பேசுகிறார். ``அவரு சொன்னா கரெக்டாதான் இருக்கும். ஆகவேண்டிய காரியத்த பாருங்க” - குடும்பத்தின் பஞ்சாயத்துகளில் பணக்காரச் சொந்தக்காரர் ஒருவரின் குரல் அத்தனை வலிமையானதாக இருக்கும். என்ன ஒன்று என்றால், சாரீரம் அவ்வளவு சுத்தமாக இருந்தாலும் ஏழைகளின் குரல் அம்பலத்தில் ஏறுவதேயில்லை என்பதுதான் எனக்கு இதுவரை புரியாத ஒன்று. அதுவும் ஓர் எளிய மனிதனின் குரல் காற்றோடு கரைந்துபோகவேண்டியதுதான். அப்படிக் காற்றோடு இன்னமும் கரைந்துகொண்டிருக்கிற குரல்தான் மாரியப்பன் என்கிற டி.எம்.எஸ்.
நாற்பதுக்குள்தான் வயது என்றாலும் டி.எம்.செளந்தரராஜனை அவன் பாட டி.எம்.எஸ் கேட்க வேண்டும் என்கிற அளவுக்கு டி.எம்.எஸ்-ஸாகவே உருகித்தள்ளுவான். மதுபான விடுதியில் உற்சாக மிகுதியில் ``மாரி... கற்பனைய அவுத்து வுடு மாரி” என்பார்கள். `கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே உனை மறவேன்’ என்று மாரி பாட ஆரம்பித்தானென்றால், சரக்கை மறந்து `அரோகரா’ என்றுதான் சொல்ல வேண்டும்.
மேன்ஷன் அறையில் வெறுமை புழங்காத அறை என்றால், அது மாரியின் அறைதான். குள்ளமாகக் கறுத்துப்போயிருப்பான். சிறுவயது விளையாட்டில் முகத்தில் கீறிய சுள்ளியின் கோடு இப்போதும் இருக்கிறது. எப்படியாவது சினிமாவில் பாடிவிடுவதையே தனது லட்சியமாகக்கொண்டிருந்தான். பாடுகளைக் கடத்துவதற்காக அவ்வப்போது ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவான். அப்படிக் கச்சேரி அமையும்போது எங்களுக்குக் கொண்டாட்டம்தான். மேன்ஷன் மாடியில் கச்சேரி விருந்து களைகட்டும்.
``சங்கீதத் தேன்மழையில் இப்போது, `இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ...’ பாட நமது அபிமான பாடகர் டி.எம்.எஸ் மாரி அவர்கள் வருகிறார்” என்று ஆர்கனைஸர் சொல்லும்போது, மேடை ஏறுவான் மாரி. `இவன்லாம் பாடுவானா!’ என்பதுபோல்தான் எல்லோரும் பார்ப்பார்கள். பொதுவாகவே இசை என்பது வெள்ளையாகத்தானிருந்தது. கறுப்பானவர்கள் இசைஞர்கள் என்பதை அநேகர் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. இப்படியான உருவத்தைப் பார்த்துக் கிண்டலடித்தவர்கள் எல்லோரும், மேடையில் மாரி பாட ஆரம்பித்தவுடன் லயித்துப்போய்விடுவார்கள். அப்படியொரு குரல் மாரிக்கு வாய்த்திருக்கிறது.
``எண்ணப் பறவை சிறகடித்து... விண்ணில் பறக்கின்றதா... உன் விழிகளிலே உறக்கம் வர... கண்கள் மறுக்கின்றதா...” முதல் போத்தலில் மாரி பாட ஆரம்பித்தான். மேன்ஷன் மாடியின் ஆன்டனாவில் இருந்து ஒரு மாடப்புறா பறந்து சென்றது. அது எதிர்வீட்டின் ஜன்னலில் இருக்கும் தன் காதலியைப் பார்க்கப் போயிருந்தது. வட்டமேஜை மாநாடுபோல கச்சேரி விருந்துக்கு வந்துவிடுவார்கள். பாதிப்பேர், நாளைய இயக்குநருக்கான கனவில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். சினிமாவையும் இலக்கியத்தையும் பேசிப் பேசித் தீர்த்த மாடி என்பதால், சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர்களுக்குக் கூட உலக சினிமாவின் போக்கைப் பற்றித் தெரிந்திருக்கும்.

``மாப்ள நாளைக்கு அந்த மியூஸிக் கண்டக்டர் வரச்சொல்லியிருக்காரு மாப்ள... மேனேஜர் ரவிதான் ரெக்கமண்ட் பண்ணியிருக்காரு. அவரு மியூசிக்ல மட்டும் ஒரு பாட்டு பாடக் கெடச்சா போதும். அப்புறம், வேற லெவல்தான் மாப்ள!” அவித்த முட்டையில் பாதியைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டான் மாரி. அவன் குடிக்க மாட்டான். ஆனால், சந்தோஷமாக வாங்கித் தருவான் என்பதால், அவனைக் குடிகார ஆபத்பாந்தவனாகவே நாங்கள் கருதினோம்.
``மாப்ள, உன் வாய்ஸுக்கு... எவன்டா வாய்ப்பு கொடுக்க மாட்டான்? நீதான்டா எங்களுக்குத் தெரிஞ்ச டி.எம்.எஸ்ஸு...” என்று நெஞ்சை நக்கினார் இயக்குநர் திலகம் இமயவன். குளிர்ந்துபோன மாரி, பாதி முட்டையை சால்னாவில் தோய்த்தெடுத்து இமயவனுக்கு ஊட்டிவிட்டான். அவர் சாப்பிட்டுக் கொண்டே ``ஏய் மாப்ள... இந்த முட்டைக்காகச் சொல்லலடா... நிஜமாவே நீ ஒரு கலைஞன்டா... என் படத்துல புல் சாங்... நீதான் பாடுற” என்று இயக்குநர் எமோஷனல் ஆனார்.
``நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...” உற்சாகத்தில் மாரி பாட, இயக்குநர் அதற்கேற்றாற்போல் தலைவரின் ரியாக்ஷனை வெளிப்படுத்தினார். எதிர் வீட்டிலிருந்து மீண்டும் மேன்ஷன் மாடிக்கு வந்த புறா, இயக்குநரின் நடனத்தைப் பார்த்துப் பம்மிப் பயந்து ஒடுங்கியது.
பிரசாத் லேப் எதிரில் தேநீரைக் குடித்துக்கொண்டிருந்த மாரி, வெயிலால் களைத்துப்போன தன் முகத்தை, வாட்டர் பாக்கெட்டில் சிறு துளையிட்டு, கண்களுக்கு அடித்துக்கொண்டான். சில்லென்றிருந்தது. முகத்தை நன்கு துடைத்துக்கொண்டு லேபுக்குள் நுழைந்தான். பரபரப்பாக இருந்த ரிக்கார்டிங் அறைக்கு வெளியே நின்றிருந்த ஒருவரிடம் ``சார், கண்டக்டர் லூர்து சார பார்க்கணும். வரச்சொல்லியிருந்தாரு” என்றான் பவ்யத்துடன்.
அவர் மேலும் கீழும் பார்த்தது எனக்கு என்னவோபோல் இருந்தது. ``என்ன விஷயமா வரச்சொன்னாரு?” அவர் கேட்ட தொனி, இயல்பாக இல்லை.
``நான் சிங்கர் சார்... பாடுற வாய்ப்புக்காகப் பார்க்க வந்திருக்கேன் சார்” மிகுந்த நம்பிக்கையோடு சொன்னான்.
அவர் இன்னமும் வேறு மாதிரியாகப் பார்த்தார். ``வெயிட் பண்ணுங்க... சார் ரிக்கார்டிங்ல இருக்காரு... இப்போ சொல்ல முடியாது” என்று வரவேற்பறைக்குச் சென்றார். ``இவன்லாம் சிங்கர்னா... அப்போ உள்ளே பாடுறது யாரு... ஆளும் சைஸும்!” என்று எங்கள் காது படவே முனகிக்கொண்டு நடந்தார்.
உள்ளே ஓர் ஆலமரத்தின் அடியில் இருவரும் உட்கார்ந்துகொண்டோம். என் முகக்குறிப்பை அறிந்துகொண்ட மாரி ``மாப்ள இதவிட நிறைய கேவலத்தயெல்லாம் பார்த்துட்டேன்... இப்போ நம்மள கேலிசெஞ்சிட்டுப் போறான்ல, அவன்லாம் ஜெயிக்கலங்கிற வெறுப்புல நம்மள திட்டுறான். அவன் பாவம் மாப்ள...” மாரியால் இப்படித்தான் பேச முடியும். யாரையும் நொந்துகொள்ளாத ஒரு ஜீவனாகத்தான் அவனை நான் பார்த்திருக்கிறேன். ``ஆனா மாப்ள... கறுப்பா குட்டயா பொறந்தவன்லாம் பாடவெலாம் கூடாதா... பன்னிதான் மேய்க்கணுமா? யாரப் பார்த்தாலும் `நீங்க சிங்கரா?’ன்னுதான் மாப்ள கேக்குறான். இசைக்கு ஏதுடா கறுப்பு செவப்பு... ஞானசூனியங்கடா நம்மாளுங்க...” மாரிக்கு இப்படியான ஒரு சாரீரத்தைக் கொடுத்த கடவுள், சரீரத்தை இப்படிக் கொடுத்துவிட்டானே என ஒருபோதும் அவன் கவலைப்பட்டதில்லை. ஆனால், கொஞ்சகாலமாக சுற்றிலும் இருக்கும் சில மனிதர்கள் அவனை நோகடிக்கத்தான் செய்கிறார்கள்.
அப்போது விலையுயர்ந்த கார் ஒன்று உள்ளே நுழைந்தது. இறங்கியவர் எனக்குப் பிடித்த நடிகர். ``இவுரு ஏன் மாப்ள... ரிக்கார்டிங் ரூமுக்குப் போறாரு..?” அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டேதான் மாரியிடம் கேட்டேன்.
``அத ஏன் மாப்ள கேக்குற... இப்பல்லாம் நடிகர்களும் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என் தொழிலுக்குத்தான் ஹெவி காம்ப்படிஷன் மாப்ள... உன்னோட டைரக்ஷன் தொழிலுக்கு பெரிய காம்படிஷன்லாம் கிடையாது. நீ பொழச்சுப்படா மாப்ள...” என்று சிரித்தான். நானும் சிரித்துக்கொண்டேன்.
கண்டக்டர் லூர்து சார் வெளியே வந்தார். மாரி எழுந்து ஓடிப்போய் வணக்கம் வைத்தான். ``ஹல்லோ மாரி... எப்படியிருக்க... எப்போ வந்தே?” அந்த நபர் நாங்கள் வந்ததைச் சொல்லவேயில்லை என்பது புரிந்தது.
``இப்பதான் சார் வந்தோம்... வரச்சொல்லியி ருந்தீங்க...” என்னையும் அறிமுகப்படுத்தினான்.
``ஓ... வெரிகுட்... சீக்கிரம் டைரக்டர் ஆகுங்க” என்று உற்சாகப்படுத்தினார். ஆலமரத்தினடிக்கு நடந்தார். நாங்களும் பாதுகாப்பு வீரர்களென அவரோடு நடந்தோம். சிகரெட்டை எடுத்து ``டு யூ ஸ்மோக்?” என்று கேட்டார். பழக்கமே இல்லை என்பதுபோல் தலையாட்டி `வேண்டாம்’ என்றோம். விலையுயர்ந்த சிகரெட்டை காதலோடு மாரி பார்த்ததை நானும் பார்த்துவிட்டேன்.
``சார், நீங்க கேட்ட சிடி... நீங்களும் கேட்டுட்டு... மியூசிக் டைரக்டரும் கேட்டுட்டார்னா நல்லா இருக்கும் சார்...” சிடி-யை வாங்கிக்கொண்ட லூர்து, சிடி-யின் முகப்பு அட்டையைப் பார்த்தார். மைக்கைப் பிடித்துக்கொண்டு உச்சஸ்தாயியில் அவரோகணம் செய்துகொண்டிருந்தான் மாரி. கொஞ்சமாய்ச் சிரித்தவர், ``என்னய்யா போஸ்லாம் மிரட்டுது!” என்றதும் மாரி வெட்கத்தில் குனிந்து குழைந்து சிரித்தான்.
``நாளைக்கு இதே டைமுக்கு வா மாரி... ஒரு கேப்ல சாருக்கு உன் வாய்ஸைப் போட்டுக் காட்டிர்றேன். நல்லது நடக்கும்... பெஸ்ட் ஆப் லக்” என்று லூர்து ரிக்கார்டிங் அறைக்குள் சென்றார்.
அன்றிரவு மாரிக்குத் தூக்கம் வராமல், அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைந்து கொண்டிருந்தான். ``மாப்ள தூங்குடா... நடக்கறது நடக்கும்” என்றேன்.
``இல்ல மாப்ள... அவரு மட்டும் என் வாய்ஸைக் கேட்டுட்டார்னா... அடுத்த டி.எம்.எஸ் நான்தான்டா” என்று திரும்பினான். வழக்கம்போல எதிர்வீட்டில் ஜோடியைப் பார்த்துவிட்டு வந்த களைப்பில் உர்ரென்றது புறா.
அதே ஆலமரத்தினடியில் நகத்தைக் கடிக்கிறேன் எனத் தோலையும் சேர்த்துக் கடித்துக்கொண்டிருந்தான் மாரி. வழக்கமான அந்த நபர் ஏதோ கடன்காரர்களைப் பார்த்துவிட்டதுபோலத் திரும்பிக்கொண்டார். லூர்து, ரிக்கார்டிங் ரூமிலிருந்து வெளியே வந்தார். அதே உற்சாக வணக்கம். அதே குசலம் விசாரித்தல் என்று விஷயத்துக்கு வந்தார் லூர்து.

``மாரி உன்னோட வாய்ஸைக் கேட்டேன்... டி.எம்.எஸ் வாய்ஸ்தான் இருக்கு. பட், உன்னோட வாய்ஸ் இருந்தாத்தானே நான் மியூசிக் டைரக்டர்கிட்ட போட்டுக்காட்ட முடியும்?’’ என்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டார். இந்த முறை `வேண்டுமா?’ எனக் கேட்கவில்லை.
``அதான் சார் என்னோட வாய்ஸ்” என்றான் மாரி பதற்றமாக.
``அது உன் வாய்ஸ் இல்ல மாரி... அது டி.எம்.எஸ்ஸோட வாய்ஸ். நான் கேட்கிறது இமிடேட் இல்லாத உன்னோட ஒரிஜினல் வாய்ஸ்” என்று விளக்கமாகச் சொன்னார்.
``இல்ல சார்... பாடணும்னு வாயத் தொறந்தாலே... எனக்கு டி.எம்.எஸ் வாய்ஸ்தான் சார் வருது. என்னோட குரல் இதுதான்னு நம்பிட்டிருந்தேன். திடீர்னு என்னோட ஒரிஜினல் குரலை நான் எங்க போயி சார் தேடுவேன்?” என்றான் பரிதாபமாக. ``சார், எஸ்.பி.பி இருக்கும்போது மனோ வரலையா... அந்த மாதிரி ஏதாவது பாடவைக்கலாம்ல சார்...” என்று நான் கேட்டதற்கு, அவர் நிதானமாக ஓர் இழு இழுத்துவிட்டு ``புரியாமப் பேசாதீங்க தம்பி... இப்போ டி.எம்.எஸ்ஸுக்கே வாய்ப்பு இல்லை. காலம் மாறிட்டே இருக்குற மாதிரி... குரலும் மாறிக்கிட்டே இருக்கும். நீங்க டி.எம்.எஸ்ஸா பாடினாக்கூட நீங்க டி.எம்.எஸ் இல்ல... உங்க குரலைத் தேடுங்க. அந்தக் குரல்ல பாடுங்க... அப்பதான் நீங்க சிங்கர். இப்போ இமிடேட் சிங்கர்...” என்று கையில் சிடி-யைத் தந்தார்.
மாரி எதுவும் பேசவில்லை. ``உங்களுக்கு சாரீரம் ரொம்ப நல்லாருக்கு... ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆர் தன்னை மறுபிறவின்னு சொல்லிக்கிட்டுச் சுத்திக்கிட்டிருப்பாங்க. ஆனா, அவங்க எம்.ஜி.ஆர் இல்ல... அந்த மாதிரிதான் இது. ஆனா ஒண்ணு, டி.எம்.எஸ் கேட்டா அசந்துபோயிடுவார். அப்படியே இருக்கு. இதுதான் உங்க பிரச்னையும்... உங்க வாய்ஸோடு வாங்க மாரி. நிச்சயமா நான் வாய்ப்பு வாங்கித் தர்றேன்...” என்று உள்ளே போனார் லூர்து.
தெருவில் நடந்துகொண்டிருந்தோம். ஒரு தேநீர்க் கடையைக் கடக்கும்போது `ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’ காற்றில் தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. நான் மாரியைப் பார்த்தேன். அவன் ``சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு... தெய்வத்தின் கட்டளை ஆறு...” என்று டி.எம்.எஸ்ஸாகவே முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.
திடீரென நின்றவன், ``இதுதான் மாப்ள என்னோட குரல். இதை ஏன் நான் மாத்திக்கணும்? எத்தன கம்பெனிக்கு வாய்ப்புக்காக நிக்கும்போதெல்லாம், `விநோதமா குட்டையா கறுப்பா இருக்கிற உனக்கு இசைய பத்தி என்ன தெரியும்?’னு எவ்ளோ பேரு கேலி பண்ணான். ஆனா, மேடையில ஏறி மக்கள்கிட்ட பாடும்போது அடிக்கிற கிளாப்ஸுல... நானும் டி.எம்.எஸ்தான் மாப்ள. அதுபோதும் மக்களோடு பாடி டி.எம்.எஸ்ஸாவே இருந்துடுறேன் மாப்ள...” என்று நடந்தான்.
அவனது நடை அவ்வளவு பக்குவத்துடன் `ஆறு மனமே ஆறு...’ பாடலில் கடைசியில் கடலையை ஊதி ஊதிக் கொறித்தபடி சிவாஜி நடப்பாரே அப்படி இருந்தது மாரி எனும் டி.எம்.எஸ்ஸின் நடை.
- மனிதர்கள் வருவார்கள்...