Published:Updated:

மெய்ப்பொருள் காண் - காய்

மெய்ப்பொருள் காண் - காய்
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண் - காய்

ச.விசயலட்சுமி

நிலத்திற்கு அடியில் இருந்துகொண்டு செடி, கொடி, மரம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது வேர். அது பூமிக்கு வெளியே தலைநீட்டும்போது, தண்டாகவும் மரமாகவும் கிளையாகவும் பூவாகவும் பிஞ்சாகவும் கடைசியில் ‘காய்’ என்ற பெயருடன் பழமாகி மீண்டும் விதையாக மாறி, பூமியில் விழுந்து வேர் பிடிக்கிறது.

இதில் ‘காய்’, தான் சேமித்துக் கொணர்ந்த துவர்ப்பு, புளிப்பு, கசப்பு முதலான சுவைகளை மாற்றி, இனிப்புச்

மெய்ப்பொருள் காண் - காய்

சுவையாகப் பழங்களுக்குத் தருவதோடு, தனது நிறத்தையும் மாற அனுமதிக்கிறது. செடி, கொடி, மரங்களில் பழத்திற்கு முந்தைய நிலையில் இருப்பதை ‘காய்’ என்கிறோம்.

பிஞ்சாகவும் பழமாகவும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பது காய். இந்த இடைப்பட்ட ஓர் அபூர்வ நிலையைத்தான் செங்காய் அல்லது ஒதப்பழம் என்று அழைக்கும் வழக்கமுள்ளது. ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமான வார்த்தை இல்லாததால், ‘பழுக்காத பழம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

மகாகவி பாரதி, தன் கவிதை ஒன்றில், பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்.  ‘கனியே’ என்று குழந்தையைச் சுட்டும்போது,  ‘காய்’ எது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

மெய்ப்பொருள் காண் - காய்

கிராமங்களில் இப்போதுபோல அன்று கருத்தடை வசதிகள் கிடையாது. ஆனால் ரகசியமாக நாட்டு வைத்தியம் பார்ப்பவர்களிடம் சென்று, கருக்கலைப்பு செய்துவிட்டு வந்தவர்களைக்  ‘காய்விழுதாட்டு’ செய்ததாகச் சொல்வார்கள். தற்போது,  அபார்ஷன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘கருச்சிதைவு’ எனத் தமிழில் பயன்படுத்துகிறோம். இன்று, இச்சொல் பரவலாகிவிட்டது. இதற்கு முன், கருச்சிதைவுக்கு ‘காய் விழுந்துவிட்டது’,  காய்விழுதாட்டுதல்’ என்று பயன்படுத்தியுள்ளனர். விழுதாட்டுதல் என்பது, கொப்புகளை உலுக்கிப் பழங்களை விழ வைத்தல். இவ்விடத்தில், பாரதியார் பிள்ளைக் ‘கனி’யமுதே என விளிப்பதைக் கவனிக்க வேண்டும்.

கிராமங்களில் மாடுகளைச் ‘சினை’ பிடிப்பதற்காகக் காளையிடம் கொண்டு செல்வதை, ‘பழத்திற்குப் போட கொண்டு போகிறேன்’ என்று சொல்வார்கள்.  “காலாகாலத்துல பழத்துக்குப் போடலன்னா, காய் விழுந்து சினை நிக்காமப் போயிடும்பா” என்று பேசிக்கொள்வார்கள்.

ஆண் பாலினத்தில், ஆடு மாடு முதலான விலங்கினங்களுக்கு ‘காயடிப்பு’ செய்யப்படுகிறது. ஆண் விலங்குகளின் விதைப்பையை நசுக்கி, ஆண்மை நீக்கம் செய்யும் செயல்பாடு அது. ஆட்டிற்குக் காயடிப்பதால், உடல் எடை விரைவாக அதிகரிக்கும். ஆட்டுத்தோலின் தரம் உயர்மதிப்பு கொண்டதாக இருக்கும். இனப்பெருக்க உந்துதல் இல்லாமல் அமைதியாக இருப்பதால், வளர்ப்பதில் அதிக சிரமம் இல்லை. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும் என்றெல்லாம் பல காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன.

மனிதர்களிலும் தண்டனை முறையாக, அடிமையாகப் பயன்படுத்த, காயடித்தல் இருந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்து அரசன் மகா ஆல்ப்ரடால், பெண்களை வன்புணர்வு செய்தவர்களைக்  ‘காயடித்தல்’ தண்டனைக்கு உட்படுத்திச் சட்டம் கொணர்ந்ததாகச் செய்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், யோஹான் எல்.புர்க்ஹார்ட் தெற்கு எகிப்துக்குப் பயணம் செய்தபோது, அவர் பார்த்ததை குறிப்புகளாக எழுதிவைத்துள்ளார். அதில், 8-லிருந்து 12 வயதுக்கு இடையில் இருந்த சிறுவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்து அடிமைகளாக விற்கப்பட்ட குறிப்பு உள்ளது.

அடுத்தும் ஒரு முக்கிய காரியத்திற்குச் சென்றவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி என்ன, “போன காரியம் காயா? பழமா?” அவ்விடத்தில், தோல்வியைக் குறிக்கும் சொல்லாகக் காய் என்ற சொல் தொழிற்படுகிறது. விளையாட்டிலும்கூட காய்விழுந்துவிட்டதா? என்றும் தாயம், சொக்கட்டான் போன்ற விளையாட்டில் காயை வெட்டு எனத் தோற்கும் புள்ளிக்காகச் சொல்வதும் வழக்கத்தில் உள்ளது.

பதினெட்டு நாள்கள் நடந்ததாகச் சொல்லப்படும் மகாபாரதப் போருக்குக் காரணமே காய்கள்தான் என்றால் நம்புவீர்களா? சகுனியின் சூழ்ச்சியில் உருண்ட தாயக்கட்டைக் காய்கள், மாபெரும் குருஷேத்திரப் போரைத் தீர்மானித்திருக்கின்றன. அப்படியானால் வெற்றி ‘பழமா’?

சிறுவர்கள் கோபத்தில் ‘காய்’ விடுவதும், கோபம் தணிந்த பின் ‘பழம்’ விடுவதும் நாம் அறிந்ததுதான். ‘காய்’ என்ற சொல், பல்வேறு ஒட்டுகளைப் பெற்று வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. சுரம் கண்டவர்களைக் குறிப்பிடும்போது,  ‘அவருக்குக் காய்ச்சல் அடிக்கிறது” என்கிறோம். அதுபோலவே, பால் காய்ச்சுதல், ‘வெயில் என்ன இப்படி சுரீள்னு காயுது?’, ‘துவைத்த துணியைக் காயவைத்தல்’, ‘மழை இல்லாமல் நிலம் காய்ந்து கிடக்கிறது’ என்கிற இடங்களில் சூடு, சூடு படுத்துதல், உலர்தல், உலர்த்துதல், வறட்சி என அர்த்தப்படுகிறது. காய் என்பது காய்ச்சல், காய்ச்சுதல், காய்தல் என்பனவாகின்றன. பொறாமைப் படுபவரை, கோபக்காரரை ‘காய்ச்சல்காரர்’ என்பதுண்டு. ‘வயிற்றைக் காயப்போட்டு வேலை பார்க்காதே’ என்கிற இடத்தில், பசியை, உணவு உண்ணாததைச் சுட்டுகிறது. உலைக்களத்தில் இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சுகின்றனர். காய்தல் என்ற சொல் சுடுதல், வருந்துதல், எரித்தல், வெறுத்தல், கடிந்து கூறுதல், அழித்தல், முதலான பல பொருள்களில் வருகிறது.

மெய்ப்பொருள் காண் - காய்மொழி இலக்கணத்தில் ‘காய்ச்சீர்’,  ‘கனிச்சீர்’ எனப் பயன்படுத்தப்படுகிறது. சீர் பிரிக்கும் இடத்தில், மூவசைச் சீரின் இறுதியில், நேரில் முடிவன ‘காய்ச்சீர்’ என்றும் நிரையில் முடிவன ‘கனிச்சீர்’ என்றும் வகைதொகைப்படுத்துவதில்கூட முதலில் ‘காய்’ பிறகு ‘கனி’ என்றே சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

‘காய்’ என்பதே வேர்ச்சொல்போலத் தெரியலாம். ஆனால், ‘காய்’ என்பதன் வேர்ச்சொல்லை அறிந்தால் ஆச்சர்யம் ஏற்படும். ‘கல் என்ற சொல் ‘கால்’ என்றாகிறது. கல், கால் என்பன கருமை, வெப்பம் என்ற பொருள்களைத் தருகின்றன. கால் என்பதில் ‘ல்’ என்பது ‘ய்’ ஆக மாறி,  ‘காய்’ என மாறுகிறது. மால்–மாய்- மாயோன் என மாறுவதைப்போல கல்-கால்-காய் என்றாகிறது. அடர் பச்சையும் கருமையும் உறவுள்ள நிறங்கள்.

கால்- கறுப்பு. காலன்- சனி கிரகம், எமன் ஆலகாலம் என்பதில் நஞ்சு கருப்பாக இருக்கும் என்பதால், இப்படிச் சொல்லப்ப டுகிறது. ‘காயா’ மரத்திலிருந்து கிடைக்கும் காயாம்பூ கருமை நிறம்கொண்டது. திருமாலுக்கு காயாம்பூவை ஒப்பிடுவர். கால்-காள் என்பதிலிருந்து காளி (கருமை நிறமுடையவள்).

கையில் ரத்தம் கட்டி, காய்ப்பு காய்த்த இடம் கருமையாக இருக்கும். அதனால், அது ‘காய்ப்பு’ எனப்படுகிறது. காயம் - காயல் - கறுத்த உப்பங்கழி எனப் பொருள் தருகிறது. காயல்பட்டினம் என்ற ஊர்ப்பெயரையும் கவனித்துப் பாருங்கள்.

காலின் இன்னொரு பொருள் வெப்பம். காய்சினம். ‘சிலப்பதிகார’ மதுரைக் காண்டத்தில், ஊர்சூழ் வரியில் ‘காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்’ என்பாள் கண்ணகி.

அணில்வரிக் கொடுங்காய், நெல்லிக்காய், பாகற்காய் போன்றவை சங்ககால உணவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘முளிந்த ஓமை முதையல் அம் காட்டுப் பளிங்கத்தன்ன பல்காய் நெல்லி’ (அகம் 5-9). பட்டுப்போன ஓமை மரங்களுக்கு இடையே கொத்துக் கொத்தாய் கண்ணாடிக் கோலிக்குண்டு போலக் காய்த்திருக்கும் நெல்லிக்காயின் அழகை, பாலை பாடிய பெருங்கடுங்கோ அகநானூற்றில் ஒரு பாடலில் இப்படிப் படம்பிடிக்கிறார்.

‘கருங்கண் உழுவை அடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறூஉம் தூங்கும்’  (குறுஞ்சிக்கலி 43)

புலியின் பாதங்களைப்போல வாழையின் வளைந்த காய்கள் குலைதோறும் தொங்குகின்றன.

‘செங்காய் உதிர்ந்த பைங்கலை ஈந்தின்’
(அகநானூறு 21)

‘பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்’
(குறுந்தொகை -68)

‘புண்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்’ (பெரும்பாணாற்றுப்படை 221)

‘பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்’
(பெரும் -268)

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’
(குறள் 100)

ஆக, இரண்டே எழுத்துள்ள ‘காய்’ என்கிற சொல், பல இடங்களில் பல்வேறு பொருள்களில் வழங்கப்படக்கூடிய சொல்லாக இருக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பே இதுதான். இலக்கிய மொழியான தமிழில், ஒரே ஒரு சொல், சூழலுக்குத் தக்க பல பொருள்களைக் கொடுக்கும்; பல சொற்களுக்கு ஒற்றைப் பொருளும் கொடுக்கும். தமிழ் செம்மொழியல்லவா?