Published:Updated:

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

தொடர் - 3 - சர்வீஸ் அனுபவம்விமல்நாத் - ஓவியங்கள் ராஜன்

‘‘ஆயில் மாத்தியாச்சா?’’

‘‘ஏ.சி சரி பண்ணவே இல்லை; கொஞ்சம் என்னானு பாருங்க!’’

‘‘கிளட்ச் மக்கர் பண்ணுது... சரி பண்ணிடுங்க!’’  

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

- இப்படித்தான் என் சர்வீஸ் சென்டர்களில் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அன்றைக்குத் திடீரென ஒரு கூக்குரல். கூக்குரல் என்று சொல்வதைவிட, கொலைப் பழி என்று சொல்லலாம்.

‘‘குடும்பத்தோட என்னைக் கொல்லப் பார்த்தீங்கள்ல... உங்களைச் சும்மா விடமாட்டேன்! கேஸ் போட்டு உங்களை உண்டு இல்லைனு ஆக்குறேன்!’’ என்று பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல் சாபம் விட்டபடி வந்தார் ஒரு வாடிக்கையாளர். மெக்கானிக்குகள் அனைவரும் மிரண்டபடி இருந்தனர்.

அவரைப் பொறுமையாக உள்ளே அழைத்துச் சென்று விசாரிக்க, அதாவது திட்டுவதற்கு வசதியாக என் அறைக்குள் அழைத்துச் சென்றேன். ‘இப்போ திட்டுங்க’ என்பதாக இருந்த என் பார்வையைப் புரிந்து கொண்டு பேச... கத்த ஆரம்பித்தார்.

‘‘ஹலோ, என் குடும்பத்தையே தீ வெச்சுக் கொளுத்தப் பார்த்தீங்களே! இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?’’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் காட்டுக் கத்து கத்தியதை என் பாணியில் பாந்தமாகச் சொல்கிறேன். விஷயம் இதுதான்.

ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாமக்கல் வரை தனது குடும்பத்துடன் ஒரு பெட்ரோல் காரில் இரவு நேரத்தில் பயணித்திருக்கிறார் அவர். திடீரென அதிகாலை 3 மணிவாக்கில், காருக்குள்ளே வினோதமான ஒரு வாடை. நேரம் ஆக ஆக அந்த வாடை கார் முழுவதும் பரவிக் கொண்டே இருந்திருக்கிறது. அப்புறம்தான் தெரிந்தது - அது பெட்ரோல் வாசம். காருக்குள் தெரியாமல் ஒரு லைட்டர் பற்ற வைத்தாலோ, எலெக்ட்ரிக்கல் பிரச்னை ஏற்பட்டாலே வெடிக்கக் கூடிய தருணம் அது.  

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

பதற்றத்துடன் தடாலென குடும்பத்தினரை இறக்கிவிட்டு, எரிபொருள் டேங்க்கில் சோதனை செய்து பார்த்தபோது, பெட்ரோல் ஒழுகிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்புறம் பக்கத்தில் உள்ள டீலர்ஷிப்புக்கு போன் செய்து, காரை ரெக்கவர் செய்து பார்த்தபோதுதான் உண்மை தெரிந்திருக்கிறது. எரிபொருள் டேங்க்கின் பக்கவாட்டில் வரும் பில்லர் நெக்கையும் டேங்க்கையும் இணைக்கும் ஹோஸ் க்ளிப் சரியாக டைட் செய்யப்படவில்லை. அதாவது, கார்களில் டேங்க்கை மாட்டும்போது இந்த க்ளிப்பைச் சரியாக டைட் செய்ய வேண்டும். ஆனால், அந்த காரில் க்ளிப் பொருத்தப்பட்டிருந்ததே தவிர, சரியான அளவில் டைட் செய்யப்படாததால்தான் இந்தப் பிரச்னை. நாள் ஆக ஆக, கார் ஓடும்போது ஏற்படும் அதிர்வுகளில் சரியாக டைட் செய்யப்படாத அந்த கிளிப் தளர்ந்து போய், பெட்ரோல் கசிவு ஏற்படக் காரணமாக அமைந்து விட்டிருக்கிறது.

அவரின் கோபம் இதுதான். ‘‘உங்ககிட்டதான் நான் எப்பவுமே சர்வீஸ் பண்ணுவேன். வேற எந்த சர்வீஸ் சென்டர்லேயும் நான் காரை விட்டதில்லை. கடைசியா போன மாசம் நீங்க சர்வீஸ் பண்ணிட்டுத் தரும்போது, டேங்க்கை சரியா லாக் பண்ணாமக் கொடுத்திருக்கீங்க. அதான் இந்தப் பிரச்னை. கொஞ்ச நேரத்துல எங்க குடும்பத்தையே காலி பண்ணியிருப்பீங்க!’’ என்று கோபப்பட்டார்.

அவர் சொன்னது உண்மைதான். காரை தொடர்ந்து எங்களிடம் மட்டும்தான் சர்வீஸ் விட்டிருக்கிறார். பொதுவாக, சர்வீஸ் சென்டர்களில் நீங்கள் பெட்ரோல் டேங்க் பற்றி ஏதும் புகார் செய்தாலோ, அல்லது பெட்ரோல் வாசம் எங்கள் ஊழியர்களுக்கு அடித்தாலோ மட்டும்தான் டேங்க் ஹோஸில் கை வைப்பார்கள். எனவே, இதை அவரிடம் விளக்கினாலும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. பிறகு விசாரணையின்போது, வேறு யாரேனும் தனியார் மெக்கானிக்கிடம் எதற்காகவேனும் காரைக் காட்டினாரா என்ற கோணத்தில் விசாரித்தபோதுதான் அந்த உண்மை தெரிய வந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் பக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பி இருக்கிறார். இவரின் கார் பெட்ரோல் மாடல். பெட்ரோலுக்குப் பதிலாக டீசலை நிரப்பிவிட்டார் பங்க் ஊழியர். நல்லவேளையாக, அது உடனேயே கண்டுபிடிக்கப்பட்டு, பக்கத்தில் உள்ள மெக்கானிக் ஆபத்பாந்தவான வந்து டீசலை வெளியேற்றி இருக்கிறார்.

விஷயம் துலங்கிவிட்டது. சட்டென காரை அண்டர்லிஃப்ட் செய்து மேலேற்றி, அவரை காருக்கு அடியில் கூட்டிச் சென்று, அந்த டீசல் ஹோஸ் இணைப்பு இருக்கும் இடத்தைக் காண்பித்தேன். அது அமைந்திருப்பது மிகவும் சிக்கலான இடம் என்பதைப் புரிந்து கொண்டார். அதன் பின்பு நடந்ததை நான் விளக்கினேன்.

பெட்ரோல் காரில் டீசல் நிரப்பப்பட்ட பிறகு, அதை வெளியேற்றியபிறகு டேங்க்கைச் சுத்தம் செய்வதற்காக, அந்த ஹோஸைக் கழற்றிய விழுப்புரம் மெக்கானிக்கிடம் சரியான டூல்ஸ் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். பொதுவாக, கார்களில் க்ளிப்பை எந்த அளவு டைட் செய்ய வேண்டும் என்கிற தெளிவு அவரிடம் இருந்திருக்கவில்லை. அதனால், அந்த ஹோஸ் க்ளிப்பைp பொருத்திவிட்டு சரியான அளவு டைட் செய்யாமல் விட்டுவிட்டார். அது வெளியே இருந்து பார்க்கும்போது, பக்காவாக லாக் ஆனதுபோல்தான் இருக்கும். கார் ஓட ஓட, அந்த கிளிப் லூஸ் ஆகி பெட்ரோல் லீக் ஆகியிருக்கிறது.

இது அவருக்கு மட்டுமில்லை; சில ஆபத்தான நேரங்களில் தெய்வங்களாக வரும் லோக்கல் மெக்கானிக்குகளிடம் காண்பிப்பது ஓகேதான். அதற்குப் பிறகு எப்போதுமே ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டர்களில் ஒருமுறை காரைக் காண்பிப்பதுதான் எப்போதுமே நமக்கும் காருக்கும் பாதுகாப்பு. 

(சர்வீஸ் சுவாரஸ்யம் தொடரும்)

தொகுப்பு: தமிழ்

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

இதைக் கவனிங்க!

* முடிந்தவரை எப்போதுமே பெட்ரோல் போடும்போது, ஒரே பங்க்கில் போடுவதுதான் சாலச்சிறந்தது.

* பெட்ரோல் நிரப்பும்போது, காரை ஐடிலிங்கில் விடாதீர்கள். சில நேரங்களில் இது ஆபத்தாகிவிடும். கீழே இறங்கி, நீங்களே செக் செய்து டேங்க் மூடி நன்றாக லாக் ஆவதை உறுதி செய்யுங்கள்.

* டேங்க் லிட்டை மூடும்போது 2 அல்லது 3 தடவை ‘க்க்ர்ர்ரிட்’ சத்தம் கேட்டவுடன், நிறுத்தி விடுதல் நலம். சிலர் ‘க்க்க்ர்ர்ரிட்’ சத்தத்தை நான்-ஸ்டாப்பாக திருகிக் கொண்டே இருப்பார்கள். இது தவறு.

* டேங்க்கில் பெட்ரோல்/டீசல் என்கிற ஸ்டிக்கர் இருப்பது நலம். மாற்றிப் போட்டால், நேரமும் பணமும் காலி!

* பெட்ரோல் டேங்க் லிட் வெளியே திறந்திருந்தால் அது மிகவும் ஆபத்து. சில விஷமிகள் டேங்க்கினுள் மண்ணையோ, சர்க்கரையையோ போட்டுப் பழிவாங்கிவிட வாய்ப்புண்டு.

* மைலேஜ் கிடைக்கும் என்பதற்காக தேவையில்லாமல் அடிட்டீவ்ஸ் சேர்ப்பது தவறு.

* மிகவும் முக்கியமானது - கட்டுரையின் கடைசி பாராவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.