மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO

கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO

கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO

ணேஷ். கோவையைச் சேர்ந்த மாணவன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து பெங்களூரில், பிடித்த கல்லூரியில் இடம் பெற்றுவிட்டான். படிப்பைத் தவிர கணேஷின் மற்ற பொழுதுபோக்கு சமைப்பதுதான். இரவு பகல் பார்க்காமல் படிக்கும் மாணவன் என்பதால் எப்போது வேண்டுமோ அப்போது அவனே காபி முதல் உணவு வரை செய்துகொள்வான். அந்த நேரம்தான் அவனுக்கு `பிரேக்’ என்பதால் பெற்றோர்களும் ஒன்றும் சொல்லவில்லை. கணேஷின் கல்விக்காக அவன் தந்தை முரளி செய்து தந்த வசதிகளும் அவன் வெற்றிக்கு முக்கிய காரணம். முதல் முறையாக வீட்டை விட்டு, வெளியில் தங்கப்போகிறான். கல்லூரி இருக்கும் பெங்களூரில் தெரிந்தவர்கள் யாருமில்லை. விடுதியில் தங்க கணேஷுக்கு விருப்பமில்லை. வாடகைக்கு வீடு எடுத்துத் தரலாம் என்பது முரளியின் திட்டம். கணேஷின் படிப்பு பாதிக்காமல் இருக்க அது உதவும் என நினைத்தார். வாடகைக்கு வீடு கிடைத்துவிடும். ஆனால், மற்றவை? டிவி, ப்ரிட்ஜ், மற்ற பர்னிச்சர்ஸ்? அவற்றையெல்லாம் வாங்க வேண்டுமென்றால் 2-3 லட்சமாவது ஆகும்.

முரளியால் அந்தப் பணத்தைத் திரட்ட முடியும். ஆனால், சில மாதங்கள் கழித்து ஒருவேளை கணேஷுக்கு வீடு பிடிக்காமல் போய்விட்டால்? வாங்கிய பொருள்களை என்ன செய்வது? அப்போதுதான் Furlenco பற்றி அவர்களுக்குத் தெரிய வந்தது. சோபா முதல் கிச்சன் பொருள்கள் வரை எல்லாவற்றையும் வாடகைக்குத் தரும் நிறுவனம் அது. பேஸ்புக்கில் வந்த விளம்பரம் ஒன்றை க்ளிக் செய்து பார்த்த முரளிக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.

கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO

Furlenco? Furniture Lending Company என்பதன் சுருக்கம் எனலாம். இவர்கள் வேலை சோபா, சேர், டைனிங் டேபிள், அலமாரிகள், டி.வி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையானவற்றை வாடகைக்குக் கொடுப்பது. அவர்களே வீட்டுக்குக் கொண்டு வந்து பொருள்களை நாம் பயன்படுத்தும் வகையில் பொருத்தித் தந்து விடுவார்கள். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள்; அதிகபட்சம்? அது நம் இஷ்டம். மாதந்தோறும் வாடகை தந்துவிட்டால் போதும். டெலிவரியும் பிக்கப்பும் அவர்கள் செலவு. ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தினால் அவர்களே வீட்டுக்கு வந்து சுத்தப்படுத்திவிடுவார்கள். நாம் வேறு ஊருக்கு இடம் மாறினால் இங்கே பொருள்களை வாங்கிக்கொண்டு அந்த ஊரில் இலவசமாக டெலிவரி செய்துவிடுவார்கள். இப்படியெல்லாம்கூட சேவைகள் இந்தியாவில் இருக்கிறதா என முரளிக்கு ஆச்சர்யம்.

இதே ஆச்சர்யம் அஜித் கரிம்பனா என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. ஆனால், இப்படியொரு சேவை இந்தியாவில் இல்லையா என்ற ஆச்சர்யம். இந்தக் கதை முரளியைப் பற்றியதல்ல; அஜித் கரிம்பனா பற்றியது.

அஜித் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தவர். ஒன்பதாண்டுக்காலப் பணிக்குப் பின் 2010-ல் இந்தியாவிற்குத் திரும்பலாம் என முடிவெடுத்தார். அதனால் அவரது 50,000 டாலர் மதிப்புள்ள பர்னிச்சர்களை விற்றார்.  அதன்மூலம் அஜித்துக்குக் கிடைத்தது வெறும் 300 டாலர். பெங்களூரு திரும்பியதும் இங்கே ஒரு புதிய வீடு ஒன்றை அமைக்க வேண்டியிருந்தது. அதற்காக பட்ஜெட் போட்டால் அது பல லட்சங்களைத் தாண்டியது. அஜித்தின் இந்தியா வருகை நிரந்தரமா இல்லையா என்பது அப்போது அவருக்குத் தெரியாது. ஒருவேளை ஒரே ஆண்டில் மீண்டும் அமெரிக்கா போக நேர்ந்தால் வாங்கிய பொருள்களை என்ன செய்வது? அமெரிக்காவில் அவருக்கு நடந்ததுதான் இங்கேயும் நடக்கும். சரி, வாடகைக்குப் பொருள்கள் கிடைக்குமா எனத் தேடினார். ம்ஹூம். அவர் எதிர்பார்த்த பர்னிச்சர்களை மாத வாடகையில் கொடுக்க ஆட்களே இல்லை.

ஒரு வாரம் கடைகளைத் தேடினார். அஜித்தின் மனைவிக்கு ஒரே குழப்பம். ஏனெனில், இவ்வளவு நேரத்தை அஜித் ஒரு விஷயத்துக்காகச் செலவிட மாட்டார். பொருள்களை வாங்கிவிட்டு, அந்த நேரத்தில் வேறு எதாவது செய்யப் போய்விடுவார். இந்த முறை “என்னாச்சு” எனக் கேட்க, அஜித் சொன்ன பதில் அவர் மனைவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

``பர்னிச்சர்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட் அப் ஒன்றைத் தொடங்கப் போகிறேன். அதற்கான மார்க்கெட் ரிசர்ச் தான் செய்துகொண்டிருக்கிறேன்.”

அமெரிக்காவிலிருந்து திரும்பும்போது ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டுமென்ற எந்த எண்ணமும் அஜித்துக்குக் கிடையாது. அவர் வேலை செய்தது வேறு துறையில். அவர் குடும்பத்திலும் யாரும் தொழில் செய்தவர்கள் கிடையாது. வந்த இடத்தில் அவர் எதிர்பார்த்த சேவை கிடைக்கவில்லை என்றதும் அதை நான் செய்யப்போகிறேன் என அவர் சொன்னது அஜித்தின் மனைவிக்கு அதிர்ச்சியைத் தந்தது. யாராக இருந்தாலும் அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஸ்டார்ட் அப் அப்படித்தான். எல்லா ஸ்டார்ட் அப் ஆர்வலர்களும் அதற்காகவே சிந்தித்துக்கொண்டிருந்தவர்கள் கிடையாது. இப்படியொரு வாய்ப்பு இருக்கிறதெனத் தெரிய வந்ததும் அதைப் பயன்படுத்திக் கொண்டவர்களும் உண்டு. கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களின் வெற்றிக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. அவை திறமையும் உழைப்பும். ஸ்டார்ட் அப் விஷயத்திலும் இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு. அவை ரிஸ்க் மற்றும் உழைப்பு. சரியான சமயத்தில் எடுக்கப்படும் ரிஸ்க்கும் அதற்கேற்ற உழைப்பும்தான் ஒருவரின் ஐடியாவை வெற்றிகரமான தொழில் சாம்ராஜ்ஜியமாக மாற்றுகிறது. உழைக்க அஜித் எப்போதுமே தயார். இப்போது ஐடியாவும் கிடைத்துவிட்டது. ரிஸ்க் எடுக்கப்போகிறேன் என்றார் அஜித்.

2010-ல் அஜித்தின் ஜீபூம்பா செயல் வடிவம் பெற்றது. அதற்கு Rent ur duniyaa எனப் பெயரிட்டார் அஜித். பின், 2012-ல் Furlenco  ஆனது. முதல் சந்தேகம் யார் தங்கள் வாடிக்கையாளர்கள் என்பதில் தொடங்கியது. எல்லோருமே பர்னிச்சர்களை வாடகைக்கு எடுக்க மாட்டார்கள். குறைந்த காலம் ஓரிடத்தில் தங்குபவர்களுக்குத்தான் இந்தச் சேவை அதிகம் தேவைப்படும். அதுவும் தனியாகத் தங்குபவர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 22-30 வயது இளைஞர்கள்தாம் அவர்களின் இலக்கு. மாணவர்களும் புதிதாக வேலைக்குப் போனவர்களும் இதில் அடங்குவர். இவர்களைச் சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்தான் சரியான கருவி என்பது அஜித்தின் எண்ணம். அதனால், பெரும்பாலான விளம்பரங்கள் சமூக வலைதளங்கள் மூலமே செய்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

கேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO

இந்தியா போன்ற நாட்டில், ஒருவர் பயன்படுத்திய சோபாவையோ படுக்கையையோ இன்னொருவர் பயன்படுத்துவது என்பது வழக்கத்தில் இல்லை. காலம் காலமாக நம்மிடையே இருக்கும் பழக்கத்தை உடைத்து, புதிய பழக்கத்துக்கு நம்மைத் தயார்படுத்துவது ஒரு சவால். அதற்கு என்ன வழி என யோசித்தார் அஜித். Furlenco-வுக்கென பிரத்யேக பர்னிச்சர்கள் தேவை என்பதை உணர்ந்தார். சந்தையில் கிடைக்கும் பொருள்களை வாங்காமல் தங்களுக்கான பொருள்களை அவர்களே உருவாக்கினார்கள். நல்ல மரத்திலான, விரைவில் அசெம்பிள் செய்யக்கூடிய, எளிதில் சுத்தப்படுத்தக்கூடிய பர்னிச்சர்களை உருவாக்கினார்கள். இதனால் வாடகைக்கு எடுப்பவர்களுக்குப் புதிய பர்னிச்சர்கள் கிடைக்கும் உணர்வைத் தர முடிந்தது.

அடுத்து, பர்னிச்சர்கள் உடையும் ஆபத்து. ஒருவேளை, உடைந்தால் யார் பொறுப்பு? இதற்குக் காப்பீடு உதவும் என நம்பினார் அஜித். அதனால்,  குறிப்பிட்ட தொகை வரை காப்பீட்டுப் பணம் கிடைக்கும்படி இன்ஷூரன்ஸ் செய்தார். அதற்கான பணமும் வாடகையிலே சேர்ந்துவிடும் என்பதால் வாடிக்கையாளர்கள் டென்ஷன் இல்லாமல் வாழலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் அஜித்தின் கனவு இதுதான். “யாரும் சொந்தமாக பர்னிச்சர்களை வாங்கக் கூடாது. வாடகைக்கு எடுத்தாலே பணம் மிச்சம் என்ற நிலை வர வேண்டும். அடிக்கடி பர்னிச்சர்களை மாற்றுவதன் மூலம் செலவேயின்றிப் புதிய உலகை எல்லோராலும் படைத்துக்கொள்ள சாத்தியமாக வேண்டும்.”

ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டுமென முடிவெடுத்த ஒரே மாதத்தில் அதைச் சாத்தியப்படுத்தினார் அஜித். குடும்பமும் தொழில் பின்னணி கொண்டதல்ல. ஆரம்பக் காலத்தில் அவர் சந்தித்த சவால்கள் என அஜித்திடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நல்ல டீம் அமைய வேண்டும். திறமைசாலிகள் குறைந்த பணத்தில் கிடைக்க மாட்டார்கள். அதே சமயம், நிறைய சம்பளம் கேட்பவர்கள் திறமைசாலிகள் என்றும் அர்த்தமில்லை. சிலர் நம்மைவிடத் திறமைசாலியாக இருக்கலாம். நம் ஈகோவை விட்டுவிட்டு, அவர்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். நம்ம ஐடியாவை விட நல்ல டீமே ஸ்டார்ட் அப் வெற்றிக்கு முக்கியம்” என்றார் அஜித்.

அஜித் சொல்வது உண்மைதான். அந்த டீம் என்பது இரண்டு பேராக இருக்கலாம். அல்லது பல நூறு ஊழியர்களாக இருக்கலாம். வெறும் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்யுமிடத்தில் வெற்றி தாமதமாகலாம்; அல்லது வராமலே போகலாம். “இது நம்ம புராடக்ட்” என்ற எண்ணத்தோடு வேலை செய்பவர்கள்தாம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு பெறுகிறார்கள். ஸ்டார்ட் அப் தொடங்குபவர் களின் முதல் இலக்கு முதலீட்டாளர்களாக இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள்தாம். அவர்கள் அதிகரித்தால் முதலீட்டாளர்கள் தேடி வருவார்கள். முதலீடு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் தேடி வருவதில்லை. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவது திறமையான டீம்தான். அஜித்துக்கு அப்படியொரு டீம் அமைந்தது.

ஒருவேளை இணையம் இல்லாமல் போயிருந்தால் Furlenco சாத்தியமாகியிருக்குமா? நிச்சயம் ஆகியிருக்கும் என்கிறார் அஜித்.

``Furlenco-வின் வளர்ச்சிக்கு இணையம் உதவியது. ஆனால், அதன் ஆரம்பப்புள்ளியில் இணையம் இல்லவேயில்லை. ஒரே ஒரு லேண்ட்லைன் எண்ணை வைத்து எங்களால் இயங்க முடியும்” என்கிறார் அஜித். இது ஒரு முக்கியமான விஷயம். ஸ்டார்ட் அப் என்பது மொபைலுக்குள் மட்டுமே சுருங்கிவிடும் உலகம் இல்லை.

இன்னமும் முறைப்படுத்தப்படாத தொழிலில் Furlenco இருக்கிறது. ஆனால், பல பில்லியன் மதிப்பிலான வர்த்தகத்தைக் கொண்ட தொழில் இது. சென்ற ஆண்டு Furlenco வருமானம் ஏறத்தாழ 255 கோடி ரூபாய். இவர்களின்  மதிப்பு 1000 கோடியை எப்போதோ தாண்டிவிட்டது. விரைவில் பங்குச்சந்தையிலும் நுழையப் போகிறார்கள். இவ்வளவும் சாத்தியமான அந்தப் புள்ளி நினைவிருக்கிறதா? அஜித் தேடிய ஒரு விஷயம் அவருக்குக் கிடைக்காமற்போனதுதான். எல்லா வெற்றிகளுக்கும் அப்படியொரு புள்ளி இருக்கும். சிறிய புள்ளி. உங்களைப் பெரும்புள்ளி   ஆக்கும் மிகச் சிறிய புள்ளி!

- கார்க்கிபவா