
இது சங்கீத சங்கமம்!
மாண்டலின் என்ற இசை வாத்தியத்தின் பெயரைச் சொன்னாலே அடுத்ததாய் நாம் உச்சரிக்கும் பெயர்; வயது இரட்டை இலக்கத்தைத் தொடும் முன்பே முதல் கச்சேரியை நடத்திக்காட்டிய இசைமேதை. மாண்டலின் ஸ்ரீனிவாஸ்! அவர் மறைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 28 அன்று, ஸ்ரீனிவாஸின் நினைவைப் போற்றும்வகையில் இரண்டு இசைக் கலைஞர்களை விருதும், ஒரு லட்ச ரூபாய் வெகுமதியும் கொடுத்து கௌரவிக்கிறார்கள் அவரின் குடும்பத்தினர். இந்த வருடம் அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் மியூசிக் அகாடமியில் இன்னும் சிறப்பாக நடந்தேறியது அந்நிகழ்வு. அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன் உட்பட பலர் அன்றைய விழாவுக்கு வந்து ஸ்ரீனிவாஸுடனான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீனிவாஸின் தம்பியாக இல்லாமல் அவரின் சீடராகவே தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார் மாண்டலின் ராஜேஷ். அன்றும் அப்படியே. பேச்சுக்குப் பேச்சு ‘குரு... குரு’ என்று அண்ணனைக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியை நடத்தும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ்-இன் இயக்குநர் இளங்கோ குமணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸால் தொடங்கப்பட்டு, தற்போது மாண்டலின் ராஜேஷால் நடத்தப்பட்டுவரும் சிவோஹம் (SIOWM) இசைப் பள்ளி மாணவர்களின் மாண்டலின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்பிறகு விருதும், வெகுமதியும் வழங்கப்பட்டன. இந்த வருடம் பாடகர் ஹரிஹரன் மற்றும் கீபோர்டு கலைஞர் லூயி பாங்க்ஸ் ஆகியோர் விருது பெறுவதாக அறிவித்திருந்தார்கள். விஜயா வங்கி தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணனும், பிரபல கடம் வித்வான் ‘விக்கு’ விநாயக் ராமும் விருதையும் வெகுமதியையும் வழங்கினார்கள். கூடுதலாக, தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.வாசு ராவுக்கும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் நினைவுப்பரிசும், ஒரு லட்ச ரூபாய் வெகுமதியும் வழங்கப்பட்டன.
அதற்குப்பிறகு ஹரிஹரனின் கச்சேரி நடைபெற்றது. ஹரிஹரனோடு, மாண்டலின் ராஜேஷ், கஞ்சிரா செல்வ கணேஷ் ஆகியோரும் இணைந்து ஹிந்துஸ்தானி, கஜல் பாடல்கள் இசைத்தனர். சுத் சாரங்கில் அமைந்த `பதா பதா’ பாடலை ஹரிஹரன் பாடும்போது, மாண்டலின் ஸ்ரீனிவாஸோடு பல மேடைகளில் அந்தப் பாடலைப் பாடிய நினைவைப் பகிர்ந்தார் ஹரிஹரன்.

அதன்பிறகு மாண்டலின் ராஜேஷ், ‘கஞ்சிரா’ செல்வகணேஷ் ஆகியோரோடு சிதார் இசைக்கலைஞர் புர்பயன் சட்டர்ஜி, தபேலா கலைஞர் பசல் குரேஷி (Fazal Qureshi), அன்று விருது வாங்கிய கீபோர்டு லூயி பாங்க்ஸ் ஆகியோர் இணைய, அரங்கத்தில் எனர்ஜி இருமடங்கு கூடியது. டிரம்மருடன் இணைந்து பசல் குரேஷி, செல்வகணேஷ் ஆகியோர் நடத்திய ஒரு ஜூகல்பந்தி சிலநிமிடங்களுக்கு அரங்கத்தை ஸ்தம்பிக்கவைத்தது. தொடர்ந்து புர்பயன் சட்டர்ஜியும், மாண்டலின் ராஜேஷும் தங்கள் இசையால் கூட்டத்தை மெய்மறக்கச் செய்தனர். ராஜேஷ், மாண்டலினின் கண்ணிகளைச் சரிசெய்வதுபோல அவற்றை முறுக்கிக்கொண்டே இசைத்த இசைக்கு அப்ளாஸ்களைப் பரிசாய் அள்ளிவழங்கினர் ரசிகர்கள்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஆஞ்சநேய பக்தர். ஸ்ரீனிவாஸின் சீடரான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இந்த 50-வது பிறந்தநாள் நிகழ்வுக்காக ஹனுமான் சாலீசாவை அவரது ஸ்டைலில் பதிவு செய்திருந்தார். சங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் பாட, கடம் விக்கு விநாயக்ராம், டிரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வகணேஷ், மாண்டலின் ராஜேஷ் என்று மேதைகளின் சங்கமமாக அந்தப் பாடல் இருந்தது. பாடல் முடியவும், தேவி ஸ்ரீபிரசாத் மேடைக்கு வந்தார். ``அண்ணாவோட இந்தப் பிறந்தநாளில் எப்படியாவது இந்தப் பாடலை முடித்து, இதோட வீடியோவ இங்க போடணும்னு நானே எடிட் பண்ணிட்டிருந்தேன். அதனால வர லேட் ஆகிடுச்சு” என்று சொன்னவர், விக்கு விநாயக்ராம், சிவமணி உட்பட மேதைகளோடு அந்தப் பாடல் உருவாக்கப்பட்ட விதத்தை சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார். “பாடல் வீடியோ இப்போது ஒளிபரப்பப்படும்” என்று சொல்லி சில நிமிடங்கள் அரங்கு காத்திருந்தது. ஆனால், ஏதோ டெக்னிகல் கோளாறு. ஒரு கட்டத்தில் இளங்கோ குமணன், “நாமெல்லாம் மனது வைத்தாலும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மனது வைக்கவில்லை போலும்” என்று சொல்லி அனைவருக்கும் நன்றி சொல்லி நிகழ்வை முடித்தார்.
பார்வையாளர்கள் எழுந்து நகர ஆரம்பித்ததும், டெக்னிகல் பிரச்னை சரியாகி, திரையில் அந்தப் பாடல் ஒளிபரப்பானது. நகர்ந்த கூட்டம் நின்று ரசிக்க ஆரம்பித்தது. “இப்படியாக இந்நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஸ்ரீனிவாஸ் நம்முடன் இருக்கிறார்” என்று இளங்கோ குமணன் சொன்னதும், மொத்தக்கூட்டமும் கைதட்டி அதை ஆமோதித்தது.
- பரிசல் கிருஷ்ணா, படங்கள்: ப.சரவணகுமார்