மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 15

இறையுதிர் காடு - 15
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 15

இறையுதிர் காடு - 15

இறையுதிர் காடு - 15

அன்று போகர் பிரான் புன்னகை பூத்தாரேயன்றி `ஆம்’ என்றோ, `இல்லை’ என்றோ கார்மேகக் கோனாரின் கேள்விக்கு ஒரு மறுப்பைச் சொல்லவில்லை. மாறாக, தான் சொல்லிவந்த காயகற்பம் தொடர்பான விஷயங்களைத் தொடர்ந்தார்.

``கிழாரே, பேச்சுவழக்கில் நான் சொல்லும் அவ்வளவையும் முதலில் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு அதைப் பாடலாக்கலாம். இதுகாறும் நான் கூறியதை சுருக்கமாய்த் தொட்டுக்காட்டுங்கள் பார்க்கலாம்’’ என்றார். கிழாரும் அதற்குத் தயாரானார்.

``போகர் பிரானே, காயகற்பம் ஒரு கவசம். இதை உடம்பின் தன்மை அறிந்து தயாரித்து வழங்கவேண்டும். தன்மை அறிய, நாடி உதவிடும். நாடியோடுகூட புருவம், பற்கள், கட்கம், விரல் நகங்கள், இரு கைகளை வைத்திருக்கும் விதம் என்னும் உடல்மொழியோடு காலகதி அறிந்து செயல்படுவதும் சிறந்தது. அனைத்துக்கும் மேலாக சுவாச கதியும் முக்கியம். கற்பம் வேண்டுபவர், சுவாசிப்பதில் யோகியா போகியா என்பதையும் அறிதல் வேண்டும். சுவாசத்தை அடக்கியாள முடிந்தவர் எனில், இவருக்கு அட்டமா சித்துவும்கூட வசப்பட்டுவிடும்! இதுவே தாங்கள் கற்ப ரகசியம் உரைக்கும் முன் கூறிய கருத்துகளாம்’’ என்றார் கார்மேகக் கிழார்.

``சரியாக கிரகித்திருக்கிறீர் கிழாரே! உமக்குக் கற்பூரபுத்தி. வாழ்க நீர். இதுவரை நான் கூறியவை முன்னோட்டமே. இனி நான் கூறப்போவதில்தான் நுட்பங்கள் உள்ளன. எனவே, கவனமாய்க் கேளும்...’’ என்ற பீடிகையோடு அவர் அடுத்து கூறப்போவதைக் கேட்க, அங்கே அப்போது அஞ்சுகனும் வந்திருந்தான். அவனோடு புலிப்பாணி. அதுபோக இன்னும் ஏழு பேர் அங்கு திரண்டிருந்தனர்.

இறையுதிர் காடு - 15

பரிதி, மல்லி, அகப்பை முத்து, நாரண பாண்டி, சிவமணி, சடையான், சங்கன் - இந்த ஏழு பேரும் நெற்றியில் விபூதியுடன் ருத்திராட்ச மாலை தரித்து அங்கு வந்திருந்தனர். அவர்களை ஏறிட்ட போகர், தன் பார்வையாலேயே சமிக்ஞை செய்திட, அவர்கள் அவரைச் சுற்றி ஒரு சதுரத்தைக் கற்பனைசெய்து அந்தச் சதுரத்தின் எட்டுத்திக்கில் சதுரம் மேல் அமர்ந்தனர். புலிப்பாணி, போகரோடு அருகில் நின்றுகொண்டான். அந்த எட்டுப் பேரும் பத்மாசனமிட்டு அமர்ந்ததை, கார்மேகக்கிழாரும் அருணாசலக்கிழாரும் கூர்ந்து பார்த்தனர்.

``என்ன கிழார்ப் பெருமக்களே... இந்த நவமர் உங்களுக்குப் புதிராய் உள்ளனரா?’’

``ஆம் பிரானே. இவர்கள் உங்கள் சீடர்கள். திசைக்கு ஒருவராய் எட்டுப் பேர் அமர்ந்திட, பெரும் காலஞானியான புலிப்பாணி உங்களோடு நிற்பது எதற்கென்று தெரியவில்லை.’’

``போகப்போகத் தெரியும். இவர்கள் திசைச் சக்திகளின் பிரதிநிதிகள். இவர்களை நான் ஒரு நற்காரியம் பொருட்டுத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளேன்.’’

``அந்த நற்காரியம் எதுவென்று நாங்கள் அறியலாமா?’’

``தாராளமாக... இவர்கள் என் பாஷாண கர்த்தர்கள்!’’

``பாஷாண கர்த்தர்களா?’’

``ஆம்... கர்த்தன் என்பவன் வினைபுரிபவன். இதுநாள் வரையில் காரியகர்த்தன், காரணகர்த்தன் என்கிற இரு கர்த்தர்களையே அறிவீர்கள். பாஷாண கர்த்தர்கள் எனும் இந்தச் சொல்லே புதியது! அல்லவா?’’

``ஆம் பிரானே... பாஷாண கர்த்தர்கள் என்னும் இவர்கள் புரியப்போகும் வினை?’’

``நவ பாஷாணங்களைக் கண்டறிந்து சேமிப்பது.’’

``அந்த நவ பாஷாணங்கள் எதற்கு?’’

``தண்டபாணித் தெய்வத்துக்குத்தான்... வேறு எதற்கு?’’

``போகர் பிரானே... பழநியெம்பெருமானான ஆவினன்குடியனை பாஷாணப் பதியாக்குவதா?’’

இறையுதிர் காடு - 15

-அருணாசலக்கிழார் அதிர்வைக் காட்டினார்.

``அவன் அழகன் - அமுதனும்கூட. அவன் எப்படி பாஷாணனாய்..?’’ - சுருதி கூட்டினார் கார்மேகக்கிழார். போகர், புன்னகை பூத்தார். அந்தப் புன்னகைக்கு, `பொறுத்திருந்து பாருங்கள்’ என்ற ஒரு பொருளும் உண்டு. அவர்களுக்கும் அது புரிந்தது. அந்த நவமரும்கூட அதைக் கேட்டு எந்தச் சலனமுமின்றி போகர் பிரானைப் பார்த்தவண்ணம் இருந்தனர்.

அமர்ந்த நிலையில் பதினொரு முறை பிராணாயாமமும் செய்து முடித்திருந்தனர். போகர் தனது காயகற்பப் பாடச் சிந்தனையைத் தொடரத் தொடங்கினார்.

``கிழாரே, பொதுவில் கற்பங்கள் யோகியர்க்கே கிட்டும். ஒருவேளை போகியர் அபகரித்து உண்ணும்பட்சத்தில் அது பெரும் எதிர்வினை புரிந்துவிடும். இதை ஒரு முக்கியக் குறிப்பாய் எழுதிக்கொள்க’’ என்றவர், ``கிழாரே, கற்பத்தை உண்ணும் விதிப்பாடுடையவர் எவரோ அவர்கள் முதலில் முப்பைக் கண்டு பிறகே மூப்பை வெல்லுதல் வேண்டும். இது மிக முக்கியம்’’ என்றார். முப்பு எனும் அந்தச் சொல் அங்கு உள்ளோர் அவ்வளவு பேரையும் கூர்ந்து பார்க்கச் செய்தது.

``மூப்பு தெரியும் - முதுமையைக் குறிக்கும் சொல். இது என்ன முப்பு?’’ - எல்லோரிடமும் முகத்தில் ரேகைகளாகி ஓடிற்று இந்தக் கேள்வி.

``முப்பு என்றால் என்னவென்று தெரியவில்லையா? மூன்று வகை உப்புதான், முப்பு. உலகில் கல்லுக்கும் மண்ணுக்கும் பிறகு அதிகம் இருப்பது இதுதான். இதுதான் கடலையே வற்ற முடியாததாக்கிப் பாதுகாக்கிறது. இதனாலேயே கடல் மேல் வெப்பம் படவும் வேதிவினை ஏற்பட்டு ஆவியாதல் என்பது நிகழ்கிறது. மழைப்பொழிவுக்கும் பல காரணிகளில் ஒரு காரணியாகத் திகழ்கிறது’’ என்று உப்பைத் தொட்டு விளக்கமளித்த போகர், ``உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்று சொன்னது ஏன் தெரியுமா?’’ என்று கேட்டு நிறுத்தினார்.

எல்லோரும் விழிக்கத் தொடங்கினர். ``அன்னமிட்டவனை நினைக்கச் சொல்லவில்லை... அறுசுவை தந்தவனைக்கூட நினைக்கச் சொல்லவில்லை... அவ்வளவு ஏன், தங்கம், வைரம், முத்து, மாணிக்கம் என ஒளிவாங்கி பதிலுக்கு உமிழ்ந்திடும் அந்த அபூர்வமானவற்றைக்கூட தானம் செய்பவர் உண்டு. இவர்களைக்கூட நன்றி மறக்காமல் நினைக்கச் சொல்லவில்லை. ஆனால் உப்புக்கு மட்டும் சொன்னான் நம் தமிழன். ஏன் சொன்னான்?’’ என்று கேள்வியையே விரிவாக்கிக் கேட்டார் போகர்.

எல்லோரும் விழிக்கவே செய்தனர். போகர் ஒரு நுணுக்கர் என்பது தெரியும். இத்தனை நுணுக்கரா என்று வியப்போடும் பார்த்தனர்.

இறையுதிர் காடு - 15

போகரே தொடர்ந்தார்.

``சுரோணிதம் சுக்கிலம் எனும் இரு சொட்டாலே அகத்துக்குள் உருவானதே நம் உடம்பு என்னும் தேகம். இதனுள் பஞ்சபூதங்கள் பிணைந்து கிடக்கின்றன. இதில் ஆறாவதாய் உருவானதே அறிவு. இது தன்னை ஏழாகிய சப்தத்தால்தான் வெளிப்படுத்திக்கொள்கிறது. சப்தங்களின் கூட்டணியே மனம். மனமுடைய மனதனே மனிதன் என்றானான். மனம் வந்தாலே காலம் வரும்! மனமற்ற ஏனைய உயிர்களுக்கு, கால நேரம் என்றே ஒன்று கிடையாது. இரவுபகல் எனும் இரண்டைக்கூட உணரத் தேவையின்றி உடம்பின் உணர்வாலே உயிர் வாழ்பவை அவை. மனம்கொண்ட மனிதனே காலத்தை உணர்ந்து அதில் `நேற்று இன்று நாளை’ என்னும் நிலைப்பாடும் கொள்கிறான். இதற்கு அவனுக்குப் பயன்படுவது கணிதம். இதுவே கால அளவைச் சொல்வதாக உள்ளது. கணிதத்துக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. நியாயம் என்றும் அதைக் கூறுவர்.

ஆம்... கணிதம் இல்லாவிட்டால், அதாவது எண்கள் இல்லாவிட்டால் நியாயம் என்ற ஒன்றே இந்த உலகில் இருக்காமல் போய்விடும். நியாயம் மட்டுமல்ல, சரியான செயல்பாடும் இல்லாமல்போய்விடும்.

ஒரு மனிதன், இவ்வளவுதான் உண்ணலாம்... இவ்வளவு நேரம்தான் தூங்கலாம். அவன் விடும் மூச்சு ஒரு நாளைக்கு இத்தனை முறை, அவன் உயரம் இத்தனை அங்குலம் எனக் கணிதத்தாலேயே அவன் தன்னைக் கட்டுக்குள் வைத்துத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறான். இதனாலேயே எண்ணை முதலில் வைத்து எழுத்தைப் பின்னால் வைத்து `எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்று நம் உடல் உறுப்பில் கண்ணுக்கு இணையாகக் கூறிச் சென்றனர். இந்த எண்ணும் எழுத்தும் ஒரு பஞ்சபூத உடம்புக்குள் ஆறாம் ஏழாம் அறிவால் தோன்றியவை. இதைக்கொண்டு எட்டவேண்டியதே ஒன்பதாகிய இறைநிலை! ஆறு அறிவு - ஏழு பேச்சு - எட்டு செயல்பாடு - ஒன்பது அந்தச் செயலின் முடிந்த நிலை! எண்களில் ஒன்பதுக்கு விசேஷத்தன்மை உண்டு. இதைக் கூட்டினாலும், கழித்தாலும், வகுத்தாலும் தன்னிலை மாறாது. ஒன்பதை ஐந்தால் பெருக்கிட நாற்பத்து ஐந்து வரும். அதைக் கூட்ட ஒன்பதே வரும். இப்படிப் பெருக்கினாலும் கூட்டினாலும் கழித்தாலும் வகுத்தாலும் தன்னிலை மாறவே மாறாது.

இந்தத் தன்னிலை மாறாத்தன்மை, தெய்வத்துக்குச் சமமானது. எனவே, பஞ்சபூதங்களால் ஆன மனிதன், தன் ஆறாம் அறிவால் அதன் வெளிப்பாடாகிய பேச்சால், பிறகு செயலால் இறைநிலை அடைய வேண்டும். இதையே 1 முதல் 9 வரை உள்ள எண்கள் உணர்த்துகின்றன. உப்பில் தொடங்கிய நான் 6, 7, 8, 9 என எங்கெங்கோ போய்விட்டதாகக் கருதாதீர்கள். ஆறாம் அறிவும் அதன் வெளிப்பாடாகிய பேச்சும் உடைய மனிதன், எண்ணங்களால்தான் வாழ்கிறான். மனம் தெளிவானால் அமைதி - கலைந்தால் உளைச்சல்! மொத்தத்தில் ஒரு மனிதன்வரையில் அவன் வாழ்வுக்கே அடிநாதமாய் விளங்குவது மனம்... மனம்... மனம்!

மனம் என்கிற எண்ணக் கூட்டம், உடல் மயங்கும்போது கலைந்துபோகிறது. இந்த எண்ணக் கூட்டம் உடல் நோயுறும்போதும் வருந்திக் கவலைகொள்கிறது. இந்த எண்ணக் கூட்டம் மறதி எனும் நோய்க்கு ஆளாகும்போது ஒரு மனிதன் தன்னையே அறியாதவனாய் இருந்தும் இல்லாதுபோகிறான். உடலில் உப்புச்சத்து குறையும்போதுதான் மனம்சார்ந்த நோய்கள் மிகுதியாகின்றன. இந்த உப்புச்சத்தானது மிகுந்தாலும் தவறு, குறைந்தாலும் தவறாகி விடுகிறது. இது ஒன்றே ஒருவரை உயிர்ப்போடு வைக்கிறது. ஏனைய சத்துக்கள், உப்போடு கூடி வினையாற்றி மனித உடலின் ஆரோக்கியத்துக்கும் காரணமாகின்றன. பசியாற்றியதோடு ஆரோக்கியத்துக்கும் துணைபுரிந்த உப்பை அளித்தவனை மறக்காதே என்று அதனாலேயே கூறினர்’’ என்று ஒரு நெடிய விளக்கத்தை போகர் அளித்திட, எல்லோரிடமும் பிரமிப்பு.

``உப்புக்கு, எதிர்மறைக் கதிர்களை முறிக்கும் ஆற்றலும் உண்டு. எனவே, திருஷ்டிக் கழிப்பில் பிரதானப் பங்கை இதுவே வகிக்கிறது. எட்டுத்திக்குகளிலும் இதை ஒரு பாத்திரத்தில் இட்டு வைத்திட, அங்கு எதிர்மறைக் கதிர்கள் இருந்தால் அவை முறிக்கப்பட்டுவிடுகின்றன. வாழ்ந்து முடித்த நிலையில் மண்ணில் சமாதியாகும்போதும் உப்பே உடம்பை புழுப்பூச்சி எனும் மண்ணுயிர் ஆக்காமல் மண்ணாக்குகிறது. அப்படிப்பட்ட உப்பு, உலகின் பெரும்பூதமான கடலின் பரிசு. கல், மண் எனும் இரண்டுக்குப் பிறகு அதிகம் உள்ள ஒன்று. இதில் மூவகை இருக்கிறது. அந்த மூன்று வகை கலந்ததே முப்பு என்றாகிறது. காயகற்பம் உண்பவர்க்கு இந்த முப்பு முதல் மருந்து!’’ - போகர் முப்பை காயகற்பத்தோடு வந்து முடித்தார்.

இன்று
நடுங்கத் தொடங்கிவிட்ட உடலோடு ``ஓ... நோ சந்து... உன் பாடிலாங்வேஜே தப்பா இருக்கு’’ என்று கத்தினாள் சாருபாலா.

``யூ ஆர் ரைட்! பெரிய தப்பெல்லாம் இனி நடக்கக் கூடாதுன்னா சில சின்னத் தப்பைப் பண்ணத்தான் வேணும்’’ என்று ஒரு பிரீப்கேஸை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானான் சாந்த ப்ரகாஷ்.

``எங்க கிளம்பிட்டே?’’

``அங்கதான் வர்றேன்.’’

``அதுக்கு எதுக்கு கையில கிளவுஸ்?’’

``வந்து, அப்படியே கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுறேன். டிரக் அடிக்ட் ஆகி சூசைட் பண்ணிக்கிட்டான்னு மீடியாவுல சொல்வோம்’’ - அதுவரைதான் சாந்த ப்ரகாஷ் பேசியது காதில் விழுந்தது. டிவி பேனலில் அவன் உருவம் கட்டானது. அதற்குமேல் கேமரா வியூ பாயின்ட் அங்கே இல்லை. சாருபாலா, வியர்க்கத் தொடங்கினாள். மிக வேகமாய் ஆகாஷ் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காகச் சென்றாள்.

இறையுதிர் காடு - 15அவன் அறைக்கதவைத் திறக்கவும் பலத்த டிரம்ஸ் சத்தம் ஊபரோடு கலந்து காதில் பாய்ந்திட, நியூ ஆர்லியன்ஸின் அப்போதைய பிரபல ராக் பாடல் ஒன்று குழறலான ஆங்கிலத்தோடு ஒலித்துக்கொண்டிருந்தது. பாத்ரூமில் ஒரு வகை க்ரீம் கொண்டு முழங்கையில் வளர்ந்திருந்த முடியையெல்லாம் மழித்துக்கொண்டிருந்தான் ஆகாஷ். சாருபாலா வந்து நிற்கவும், மிக அதிகபட்சம் திடுக்கிட்டான். அங்கே பிரைவசிக்கு முன்னால் கடவுளுக்குக்கூட இடம் கிடையாது.

``வாட் த ஹெல் யூ ஆர் டூயிங்... இங்கே எதுக்கு வந்தே? கெட் லாஸ்ட்...’’ என்றும் அலறினா(ன்)ள்!

பனியனுக்குப் பதிலாக அவன் அணிந்திருந்த பிரேசியரும் அது பொருந்தியிருந்த அவன் மார்பும் அதில் ஆண்களுக்கே உண்டான பொசுபொசுவென்ற முடியே துளியும் இல்லாதபடி அந்தப் பாகம் சதைக்கோளம்போல் கண்ணில் படவும் சாருபாலா தீப்பற்றிக் கொண்டவள்போல் ஆனாள்.

அவனோ ஒரு டவலை எடுத்துப் போர்த்திக்கொண்டு அம்மா என்றும் பாராமல் அவள் தோளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டுபோய் அறைக்கதவுக்கு அப்பால் தள்ளி, கதவையும் மூடித் தாழிட முனைந்தான்.
அவன் தள்ளத் தள்ள அவள் பேசினாள்.

இறையுதிர் காடு - 15

``ஆகாஷ்... நீ இப்படி டிரான்ஸ்ஜெண்டரா பிஹேவ் பண்றதை உன் அப்பாவால ஜீரணிக்க முடியலை. உன்னைக் கொலைபண்ற முடிவோடு அவரோட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல இருந்து வந்துகிட்டிருக்காரு. நீ அவர் கண்ல படாதபடி எங்கேயாவது ஓடிடு. நான் அவரைச் சமாளிச்சுக்கிறேன். ஆகீ... லிசன் டு யுவர் மதர்ஸ் வாய்ஸ். ப்ளீஸ்ஸ்!” - அவள் உடைந்துபோய் அழத் தொடங்கவும், அவனிடமும் ஒரு தேக்கம். அங்கே குவித்ததுபோல் ஒரு நிசப்தம். சப்தமில்லாத அந்த வேளையில் மேலே டவலோடு உடம்பெங்கும் பிங்க் நிறத் திட்டுகளோடு, திருத்தப்பட்ட புருவம், ஒரு காதில் மட்டும் வளையம், கையில் பேண்ட், புஜத்தில் குத்தப்பட்ட டிராகன் பச்சை சகிதம், அவனை ஒரு விநோத ஜந்துவாக சாருபாலா உணரவும், அவள் கண்ணீரோடு விசும்பவும் செய்தாள்.

அப்பா தன்னைக் கொல்ல முடிவெடுத்துவிட்டார் என்பதில் அவ(னி)ளிடமும் ஓர் அதிர்ச்சி கலந்த குழப்பம். அது அவன் சாருபாலாவை வெறிப்பதில் தெரிந்தது.

``புறப்படு... அப்பா வந்துடப்போறார். கமான் ஆகி...’’

``வரட்டும்... எப்படிக் கொல்றார்னு பார்க்கிறேன். இது, U.S... இண்டியா இல்லை.’’

``நோ... உனக்கு அப்பாவைப் பத்தித் தெரியாது. அவர் வரையில இப்ப நீ சன் இல்லை... சின்!’’

``இட்ஸ் வெரி க்ரூயல்..!’’

``நீ இப்படி உருவம் மாறி ஊர் சுத்துறதுக்கு மட்டும் என்னடா பேர்?’’

``இதுக்கு நான் காரணம் இல்ல மாம்! இந்த இன்டர்சேஞ்சை இங்க யாரும் உங்கள மாதிரி பீல் பண்றதும் இல்லை. இட்ஸ் ஒன் கைண்ட் ஆப் நேச்சர் (its one kind of nature) இட்ஸ் எ பிசிக்கல் டிமாண்ட்’’ - ஆகாஷ் டிமாண்ட் என்று சொல்லி முடிக்கும்போது அவன் நெளிந்தவிதத்தில் அப்பட்டமான பெண்மை. நடுவே நழுவிய டவலை வெட்கத்தோடு போர்த்திக்கொள்ளவும் அது சாருபாலாவின் கண்களைக் கரிக்கவிட்டது.

தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த பிள்ளை. அவன் உடம்பில் அவள் ஸ்பரிசம் படாத பாகமே இல்லை. ஆனால், இந்தப் புதிய மாற்றம் அவளை ஓர் அந்நியன்போல் ஆக்கப்பார்ப்பதில் உடன்பாடில்லாதவள்போல் ஆனவள்.

``ஆகி, நான் உன் அம்மாடா... என்கிட்டயே நீ இப்படி பிஹேவ் பண்றியே... எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தியா..!’’ என்று உருகினாள். அது அவனையும் சற்று உருக்கிவிட்டது.

``ஸாரி மாம்... நான் உன்கூட ஆர்க்யூ பண்ண விரும்பலை. இப்ப என்ன... நான் வீட்டை விட்டுப் போகணும் அவ்வளவுதானே? வித்தின் டென் மினிட்ஸ்...’’ என்று திரும்பியவன், சொன்னதுபோல் பத்து நிமிடத்தில் ஒரு பிங்க்கியாக வெளிப்பட்டான்.

வெளியே சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த `ஸ்வீட் கம்’ மரம் தன் பழுத்துச் சிவந்திருந்த இலைகளையெல்லாம் அங்கு நின்றபடி இருந்த செவ்ரால்ட் இம்பாலா எனும் காரின் மேல் உதிர்த்துத் தள்ளியிருந்தது.

அது ஆகாஷின் செல்ல கார்! அவன் அதில் ஏறிக்கொண்டு ஸ்டார்ட் செய்யவும் அவ்வளவு இலைகளும் நாலாபுறமும் சிந்திச் சிதறின. சொல்லிவைத்தாற்போல் அந்த ஸ்வீட் கம் மர நிழலில் சாந்த ப்ரகாஷின் க்ரிஸ்லர் வந்து தேங்கி நின்றது.

கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபடி இருந்தாள் சாருபாலா. ஆவேசமாய் இறங்கி வந்துகொண்டிருந்தான் சாந்த ப்ரகாஷ்!

முன்பு காலிங்பெல் இடத்தில் இப்போது இருக்கும் சென்சார், கண்ணாடிக் கதவை, அவன் பிம்பம் விழுந்த மாத்திரத்தில் திறக்கச் செய்தது.

உள் நுழைந்தவன் பிரீப்கேஸை சோபா மேல் போட்டவனாய் கை கிளவுஸைக் கழற்றியபடியே ``என்ன சாரு... அவன் ஜஸ்ட் இப்பதான் போறான்போலிருக்கு?’’ என்று ஆரம்பித்தான். அவளிடம் கலங்கிய மௌனம்.

``நீ அவனை அனுப்பிடுவேன்னு தெரியும். நானும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.’’

``கொலை செய்ற அளவுங்கிறது கொஞ்சமா?’’ அவள் நறுக்கலாய்த் திருப்பிக் கேட்டாள்.

பதிலுக்கு ஒரு விநோத வெறிப்பு. பிறகு விரக்தி கலந்த ஒரு சிரிப்பு அப்படியே ``பெக்யூலியர்... வெரி பெக்யூலியர்’’ என்கிற முணுமுணுப்பு.

``எது?’’

``நம்ப பிரச்னைதான்... வேற எது?’’

``ஆனா, ஆகாஷ் அதை நேச்சரோட டிமாண்டுன்னு சாதாரணமா சொல்றான்.’’

``அப்படியா..?’’ சிறிது இடைவெளி... பிறகு ``இது யு.எஸ். இங்க சொல்லலாம். இண்டியாவுல..?’’

``சந்து... இந்த சொஸைட்டி பயம் நமக்குத்தான். அவனுக்கு இல்லை. அப்படி ஒரு சொஸைட்டியும் இங்கே இல்லை.’’

``வாட் யூ ஸே..? இந்த லைப்ல அவனால கடைசி வரை சந்தோஷமா இருக்க முடியுமாமா?’’

``இங்க மொமன்ட்தான் லைப். ப்யூச்சரைப் பத்தி எதுக்கு அநாவசியமா பேசணும்; கவலையும் படணும்?’’

``என்ன சாரு... நீதான் பேசறியா - இல்ல உன்னையும் இந்த ஊர் கெடுத்துடுச்சா?’’

``அவன் சார்பா பேசிப் பார்க்கிறேன். தட்ஸ் ஆல்! என் மனசு என்ன பாடு படுதுன்னு உனக்குத் தெரியாது சந்து.’’

``ஐ நோ... ஐ நோ... நீ ஒரு ஆர்தடாக்ஸ். இருந்தும் பையன் பாசம் பேசவைக்குது.’’

``போதும்... இனி இதப் பத்திப் பேசறதால ஆகப்போறது ஒண்ணுமில்ல. ஆகாஷை அவன் போக்குக்கு விட்ருவோம். வேற வழியுமில்லை நாம இண்டியா கிளம்புவோம்.’’

``கிளம்பி..?’’

``நம்ப பிரச்னைக்கு மருந்து இங்கே இல்லை சந்து. ஆனா, அங்கே இருக்கு!’’

``மருந்தா... வாட் டு யூ மீன்?’’

“நான் பல்லாவரம் பங்களா வாட்ச்மேன் தாத்தாகிட்ட பேசினேன். ஸாரி... அவர் பேசினார். அங்கே இப்ப எந்த ஒர்க்கும் நடக்கலை... எல்லாம் அப்படியே நின்னுடிச்சாம்! அங்கே இருக்கிற நம்ப குலதெய்வமான உங்க கொள்ளுத்தாத்தா சமாதியை இடிக்க முயற்சி செய்தப்போ, பல மிராக்கிள் நடந்திருக்கு.’’

“மிராக்கிள்ஸ்..?’’

``யெஸ்... அந்த பங்களாவை நாம வித்ததை உங்க கொள்ளுத்தாத்தா விரும்பலை. அதனால அங்கே கட்டடத்தை இடிக்க வந்தவங்கள்ல இதுவரை ஏழெட்டுப் பேர் வரை செத்துட்டாங்களாம். அதனால மிஸ்டர் மிஸ்ரா, ஒர்க்க ஸ்டாப் பண்ணிட்டாராம்.’’

சாரு, நீ என்ன சொல்றே? 1932-ல செத்துப் போன என் கொள்ளுத்தாத்தா இந்த 2019-ல எங்க வந்தார்? இட்ஸ் ஹிலேரியஸ்!’’

``இட்ஸ் மிஸ்ட்டீரியஸ் - நாட் ஹிலேரியஸ்!’’

``சரி, நீ விஷயத்துக்கு வா... அந்தக் கிழவன் இன்னும் என்னவெல்லாம் உளறினான்?’’

``இப்படிக் கிண்டலா கேட்டா நான் எதையும் சொல்ல மாட்டேன்.’’

``வேற எப்படிக் கேட்க... நீயும் படிச்சவதானே? செத்துப்போன தாத்தாவுக்குப் பிடிக்கலைன்னு என்னமோ அவர் நேர்ல வந்து சொன்ன மாதிரி சொன்னா என்ன அர்த்தம்?’’

``லுக்... அந்த வாட்ச்மேன் தாத்தாவை விடு. உன் தாத்தா என் கனவுல வந்து `என்னம்மா, என்னை இப்படி மறந்துட்டே?’ன்னு கேட்டா, அதை என்னன்னு சொல்றது?’’

``ஓ... உன் கனவுல வந்தாரா... சபாஷ்! ஆமா உன் பக்கத்துலதானே படுத்துத் தூங்குறேன். ஏன் என் கனவுல மட்டும் அவர் வரலை?’’

``இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசினா எப்படி சந்து?’’

``லுக்... மார்ஸ் பிளானட்ல ஒன் வீக் டூருக்கு அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியிருக்கு. ஸ்பேஸ்ல ஒரு சோலார் சிடிக்கு பிளான் ரெடியாயிருக்கு. இந்த பேடன்ரூறைவிட பெரிய ஒரு டவுன் டவுனை ஆர்ட்டிபிஷியலா செட் பண்ணி நிரந்தரமா அங்க வசிக்க ஏற்பாடு செய்யப்போறாங்க. ராக்கெட்டைக் கண்டுபிடிச்ச சைன்ஸ், அந்த ராக்கெட்டைவிட வேகமா வளர்ந்துகிட்டிருக்கிற காலம் இந்தக் காலம்.’’

``அப்கோர்ஸ்... அப்ப யாரும் சர்ச்சுக்குப் போகாம இருக்காங்களா? கடவுள் நம்பிக்கையே இல்லாமப்போகலையே? எதுக்கு ஹாலிவுட்ல இத்தன கோஸ்ட் மூவீஸ்? யு நோ... கோஸ்ட் டிடெக்டர்னு கேமரா வந்தாச்சு! ஆப் வந்தாச்சு! அதை வெச்சு எவ்வளவு வீடியோஸ்..!’’

``யூ இடியட்... ஆல் ஆர் ஹம்பக்ஸ். அது உண்மைன்னா நீ உன் செத்துப்போன அம்மா அப்பாவோட பேசிக்கிட்டிருப்பே!’’

இறையுதிர் காடு - 15

``யெஸ்... எனக்கு இப்ப நம்பிக்கை வந்திருக்கு...’’ - சளைக்காமல் சாருபாலா சொன்ன பதில், சாந்த ப்ரகாஷை அதற்குமேல் பேசவிடாமல் செய்தது. எரிச்சலோடு பாத்ரூம் நோக்கிச் சென்றான். உள்ளே ப்ரெஷ்ஷப் செய்துகொண்டு பருத்த டவலால் முகத்தை ஒற்றிக்கொண்டே வந்தவன்

``வெரி சிம்பிள் சாரு... நமக்குள்ள ஆர்கியுமென்ட்டே வேண்டாம். உன் கனவுல வந்த என் கொள்ளுத்தாத்தா என் கனவுலயும் வந்து சொல்லட்டும். அப்புறம் நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் கட்டுப்படுறேன்’’ என்றான்.

சாருபாலா, அதற்கு எதுவும் சொல்லவில்லை!

கூரியர்க்காரர், ஒரு பெரிய பையோடு வந்திருந்தார். மொத்தமாய் 74 கூரியர் தபால்! முக்காலுக்குமேல் கோயில் பிரசாதங்கள். பி.ஓ.டி-யில் சைன் செய்வதற்குள் பானுவுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. பிறகு அவ்வளவையும் ஆபீஸ் ரூமுக்குத் தூக்கிச் செல்லும்போது பாரதி எதிர்ப்பட்டாள். நெற்றிப் புருவமே கேள்வியைச் சுருக்கத்தில் கேட்டு முடித்தது.

``சார் குணமாகணும்னு கட்சிக்காரங்க அர்ச்சனை பண்ணி அனுப்பின பிரசாதம் மேடம்.’’

``இவ்வளவா?’’

``நேத்து இதைவிட அதிகம். சிலர் அபிஷேகம் பண்ணி அதை வீடியோ எடுத்து சி.டி-யில அனுப்பியிருந்தாங்க.’’

``அப்பாவுக்கு இப்படிக்கூட அன்பர்களா?’’

``அவ்வளவு பேரும் கான்ட்ராக்ட் புரோக்கர்ஸ்மா. சாருக்கு பார்லிமென்ட் ஒதுக்கப்போற அஞ்சு கோடிக்காகக் காத்துக்கிட்டு இருக்கிறவங்க’’ - பானு சொன்னவிதத்தில் ஒரு சன்ன கேலி. பாரதிக்கும் புரிந்தபோது ``வரலாமா?’’ என்றொரு குரல். ஹெல்மெட்டை இடுப்புக் குழந்தைபோல் வைத்தபடி எதிரில் அரவிந்தன்!

அப்போது ``பாம்பு... பாம்பு..!’’ என்றும் ஓர் அலறல் சத்தம். வேலைக்காரன் மருதமுத்துதான் தோட்டத்திலிருந்து கத்தியபடி வந்து கொண்டிருந்தான்!

- தொடரும்.

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: ஸ்யாம்