
கேம் சேஞ்சர்ஸ் - 29 - Raw Pressery
சென்ற வாரம் Furlenco ஸ்டார்ட் அப் பற்றி வாசித்தவர்களில் பலர் தங்கள் ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஸ்டார்ட் அப் நிறுவனர் அது பற்றிச் சொல்லும்போது “Furlenco-ல இந்தி நடிகர் ஆமீர் கான் முதலீடு செய்திருக்கிறார். அதையும் எழுதியிருக்கலாம். பிரபலங்கள் செய்யும் இது போன்ற விஷயங்கள் பொதுமக்களுக்கு ஸ்டார்ட் அப்கள் மீதிருக்கும் அச்சத்தைப் போக்கும்” என்றார். ஆமீர் கான் மட்டுமல்ல; பாலிவுட்டின் ஹ்ரிதிக் ரோஷனில் தொடங்கி ஹாலிவுட்டின் லியானார்டோ டி காப்ரியோ வரை பலர் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்திருக்கின்றனர்.
பேசும்போது அவர் “மக்களுக்கு இன்னும் ஸ்டார்ட் அப் மீதான அச்சம் இருக்கிறதா?” என்றொரு ஐயத்தை எழுப்பினார். நிச்சயம் இல்லை அல்லது வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரபலங்களைத் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தியதும் ஒரு காரணம். பிக் பாஸ்கெட் மற்றும் பைஜூக்கு ஷாரூக் கான், ஊபருக்கு விராட் கோலி என நிறைய உதாரணங்கள் உண்டு.
‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தந்தை’ எனச் சொல்வார்கள். பல ஸ்டார்ட் அப்களின் தொடக்கமும் அப்படி இருந்திருப்பதை இத்தொடரில் நாம் பார்த்தோம். சில சமயம் தொழில் ஆர்வம் இல்லாத, முதலீட்டையே தொழிலாகக் கொள்ளாத பலரும் சில சேவைகளையோ, பொருள்களையோ பயன்படுத்திவிட்டு அது தந்த திருப்தி காரணமாக அந்த ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வதுண்டு. இதில் மேலே சொன்ன சினிமா பிரபலங்களும் அடக்கம். அதிலொருவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

ஜாக்குலின் தன் உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நிறைய பழச்சாறுகளைக் குடிப்பவர். ஆனால், கடைகளில் கிடைக்கும் டெட்ரா பாக்கெட் ஜூஸ்கள் எல்லாமே பதப்படுத்த வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கும். சுவைக்காகச் சர்க்கரையும் செயற்கைப் பொருள்களும்கூடச் சேர்க்கப்பட்டிருக்கும். சுத்தமான, இயற்கையான பழச்சாறுகள் வேண்டுமெனில் நாமேதான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜாக்குலினுக்கு அவர் நண்பரொருவர் Raw pressery என்ற ஜூஸ் ஒன்றை அறிமுகப்படுத்தினார். எந்தச் செயற்கைப் பொருள்களும் சேர்க்கப்படாத, பதப்படுத்தப்படாத பழச்சாறு. இதன் ஆயுள் 21 நாள்கள் மட்டுமே. அதைப் பருகிய ஜாக்குலினுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்த வகைப் பழச்சாறு இந்தியாவிற்குத் தேவை என நினைத்தார். அதனால் அந்த நிறுவனம் வேகமாக வளரும் எனக் கருதி அதில் 2017-ம் ஆண்டில் 3.5 கோடி ரூபாய் முதலீடு செய்தார். ஜாக்குலினுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோயர்ஸ் உண்டு. அவர்களிடத்தில் இந்த பிராண்டைக் கொண்டு சேர்க்க ஜாக்குலினால் முடியும்.
Raw Pessery-யின் நிறுவனர் அனுஜ் ராக்யன், இந்த ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்த கதை சுவாரஸ்யமானது. வைரம் தயாரிக்கும் நிறுவனமொன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அனுஜ். சேல்ஸ்தான் அவர் ஏரியா. அதனால் அதிகம் ஊர் சுற்றுபவர். ஒரு கட்டத்தில் அனுஜுக்கு உடல்ரீதியாகப் பிரச்னைகள் அதிகரித்தன. மருத்துவர்கள், அவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதைவிட என்னவெல்லாம் சாப்பிடக்கூடாதென ஒரு பட்டியலிட்டார்கள். இனியும் ரிஸ்க் எடுக்க முடியாத அளவுக்கு அனுஜின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு நிறைய பழச்சாறு தேவை. ஆனால், கடைகளில் அவை கிடைக்கவில்லை. அதிகாலை 4 மணிக்கே எழுந்து பழ மார்க்கெட்டுக்குப் போவார். பழங்களை வாங்கி வந்து தந்தால் அனுஜின் அம்மா பழச்சாறு செய்து தருவார்.
பழச்சாறு செய்ய Norwalk Cold press juicer என்ற கருவியொன்றை வாங்கியிருந்தார் அனுஜ். அது என்ன Cold press? மிகக் குறைந்த ஆண்டுகளில், பல நூறு கோடி மதிப்புள்ள ஸ்டார்ட் அப் ஒன்றை வளர்த்த கதைக்கு இந்த `கோல்டு பிரஸ்’ மிக முக்கியமானது என்பதால் முதலில் அதைப் பார்த்துவிடலாம்.
வழக்கமாக, பழச்சாறு எப்படித் தயாரிக்கிறார்கள்? சுழலும் பகுதி ஒன்றிருக்கும். அதில் பழத்தின் மையப்பகுதியையோ அல்லது துண்டுகளையோ போட்டால் அது சாறு பிழிந்து கொடுக்கும். இந்தச் சுழற்சியில் நிறைய வெப்பம் உருவாகும். இந்த வெப்பம் பழங்களிலிருக்கும் சத்துகளை அழித்து விடக்கூடும் என்கிறார்கள் உலக மருத்துவர்கள். இதற்கு மாற்றாக வந்தவைதாம் Cold press juicers. இவை பழங்களை நசுக்கி அதிலிருந்து சாறு எடுக்கும். அதனால், அவை சத்துகளை இழக்காது. இந்த வகைச் சாறுகளைத்தான் அனுஜின் அம்மா செய்து கொடுத்தார்.
ஆரோக்கியத்துக்காகக் குடிக்க வேண்டிய பழச்சாற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி இந்தியாவிலிருந்தது. எல்லாவற்றிலும் சர்க்கரை சேர்த்து விடுகிறோம். நீண்டகாலம் தாங்கும்வகையில் பதப்பொருள்களும் செயற்கை நிறமூட்டிகளும் சேர்த்துவிடுகிறோம். அது பழச்சாற்றின் நன்மைகளைப் போக்கிவிடுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் cold press juices வகைகளைத் தேடினார் அனுஜ். அவை கிடைக்காததால்தான் தினமும் காலை 4 மணிக்கு மார்க்கெட்டுக்கு அலைய வேண்டியிருந்தது.
ஒரு வருடம் ஆனது. தினமும் அதிகாலை எழுந்து போவது சிரமமாக இருந்தது. நாமே ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி, காலை 4 மணிக்கு எழுந்து உழைத்தால் ஜெயித்து விடலாம் என நினைத்தார் அனுஜ். முதலில் அவருக்குத் தெரிந்த சில பேருக்கு வீட்டிலே கோல்டு பிரஸ் ஜூஸ் செய்து விற்பனை செய்தார். விலை அதிகமென்றாலும் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. அனுஜ் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்ததும் இன்வெஸ்ட் மென்ட் பேங்கராக வேலை செய்தார். அதனால் சம்பாதித்ததையெல்லாம் சரியாக முதலீடு செய்திருந்தார். அவையெல்லாம் சேர்ந்து அப்போது அவர் கைவசமிருந்தது 80 லட்சம். நண்பர்கள் சிலர் உதவ, அது ஒன்றரைக் கோடி ஆனது. அதை ஸ்டார்ட் அப் தொடங்க முதலீடு செய்தார். .

ஸ்டார்ட் அப்புக்கு ஒன்றரைக் கோடி தேவையா? இணையம் சார்ந்த ஸ்டார்ட் அப் என்றால் தேவையில்லை தான். ஆனால், அனுஜின் ஜீபூம்பா இணையம் இல்லை. பல்லாயிரம் லிட்டர் Cold pressed juice தயாரிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய மெஷின் வேண்டும். கோல்டு பிரஸ் ஜூஸே இந்தியாவில் இல்லையென்னும் போது அதைத் தயாரிக்கும் மெஷின் மட்டும் இருக்குமா? இறக்குமதி செய்ய வேண்டும். விற்பனைக்கு ஒரு சப்ளை செயின் உருவாக்க வேண்டும். அதற்குத்தான் இந்தப் பணம்.
அனுஜுக்கு அனுபவம் அதிகம். எந்த ஒரு பொருளையும் சந்தைக்குக் கொண்டு சென்று எப்படி விற்க வேண்டும் என்பது தெரிந்த கில்லாடி அவர். என்ன தயாரிக்கப் போகிறோம், என்ன என்ன பழச்சாறுகளை விற்கப் போகிறோம் என முடிவு செய்யும் முன்பே அவற்றை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோமென அனுஜ் திட்டமிட்டார். அந்த வேலைகளை முதலில் தொடங்கினார்.
மும்பையில் டப்பா வாலாக்கள் பிரபலமானவர் கள். வீட்டிலிருந்து மதிய உணவு பாக்ஸை வாங்கிக்கொண்டு, அலுவலகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன் அனுஜ் கைகோத்தார். அவர்கள் அனுஜின் பழச் சாற்றை வீடுகளுக்கே டெலிவரி செய்தார்கள். முக்கியமான சூப்பர் மார்க்கெட்டுகளை அணுகி, தன் தயாரிப்புகளை வைக்க ஒப்பந்தம் போட்டார். இப்படி, சப்ளை செயினை முழுவதுமாகத் தயார் செய்த பின்பே தயாரிப்பைத் தொடங்கினார். டெக்னாலஜி ஸ்டார்ட் அப்புக்கும் மற்ற ஸ்டார்ட் அப்புக்குமான வித்தியாசம் இதுதான். இணையம் மூலம் மட்டுமே வியாபாரத்தை இதில் நடத்திவிட முடியாது.
அனுஜின் நிறுவனத்துக்கு Rakyan beverages எனப் பெயரிடப்பட்டது. தயாரிக்க மெஷின் தயார்; விற்பதற்கு சப்ளை செயின் தயார். Raw pressery என்ற பெயரில் அழகான வடிவமைப்பு கொண்ட டெட்ரா பேக்குகளில் பல வகைப் பழச்சாறுகள் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தன. அழகிய வடிவம் விற்பனையை அதிகரித்தது. வாங்கிச் சுவைத்தவர்கள் Cold press பற்றி அறிந்து கொண்டார்கள். வாடிக்கையாளர்களே இதைப் பிரபலப்படுத்தத் தொடங்கினார்கள். சினிமாவில் கல்ட் படங்கள் என்பார்களே... அதுபோல இந்தப் பழச்சாற்றுக்கு கல்ட் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜாக்குலின்.
3.5 கோடி ரூபாயை நம்பி முதலீடு செய்தார்.
வருடமெல்லாம் இல்லை. சில மாதங்களிலே Raw pressery பழச்சாற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பநிலை பிரச்னைகள் என அனுஜுக்கு எதுவுமே இல்லை. அவருக்கு இருந்த பிரச்னையெல்லாம் இந்தப் பழச்சாற்றின் ஆயுள் 21 நாள் கள் மட்டுமே என்பதுதான். அதற்குள் விற்காவிட்டால் அந்தப் பணம் காலி. அதற்கொரு ஐடியா செய்தார். கடைகள் மூலம் விற்பதோடு மட்டுமன்றி, நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்தமாக ஆர்டர் எடுத்து டெலிவரியும் செய்தார் அனுஜ். 15 நாள்களுக்குள் கடைகளில் விற்காத பேக்குகளைத் திரும்ப வாங்கி, நிகழ்ச்சிகளில் கொடுத்துவிடுவார். இதனால் 19 நாள்களுக்குள்ளே அவை பயன்படுத்தப்படும். வீணாகும் அளவு இதனால் மிகவும் குறைந்தது.

1.5 கோடியுடன் 2014-ல் ஆரம்பிக்கப்பட்ட Raykan beverages நிறுவனத்தின் மதிப்பு அதன் பொருள்கள் கடைக்கு வரத் தொடங்கியபோது 5 கோடி ஆனது. 2017-ல் அதன் மதிப்பு 250 கோடி ஆனது. இப்போது 500 கோடியைத் தாண்டி அதை மதிப்பிட்டிருக்கிறார்கள். 2020-க்குள் இன்னும் பெரிதாகிவிடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அனுஜ். இப்போது அமேசான் மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்கிறார்கள். இதனால், விற்பனை பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. 26 வகைப் பழச் சாற்றோடு சூப் வகைகளையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எல்லாமே கோல்டு பிரஸ் முறையில் தயாரிக்கப்படுபவை.
இப்போது ஸ்டார் பக்ஸ், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கோல்டு பிரஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது இன்னும் வேகமாகப் பரவும். இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இந்த முறைக்கு மாறி வருகிறார்கள். ஆனால் விதை... அனுஜ் போட்டது. ஸ்டார்ட் அப்பில் அது ரொம்ப முக்கியம். 4 மணிக்கே எழுந்து மார்க்கெட்டுக்குப் போனதுபோல, இந்தச் சந்தைக்கும் முதலில் வந்துவிட்டார் அனுஜ். அது அவரின் வெற்றியை எளிதாக்கியது.
- கார்க்கிபவா