
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்
“எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரணும். அதற்கு ஒரே வழிதான் இருக்கு... அவங்களுக்கு ஒரு வேளையாவது உணவு தரணும்’’ என்றார் அந்த மனிதர்.
``அது சரி... ஆனா, இது ஆகாத திட்டம். பெருஞ்செலவு பிடிக்கும் காரியம்’’ என்றார்கள் உயர் அதிகாரிகள்.
``பிள்ளைகள் பள்ளிக்கு வரணும்னா, அவங்களுக்கு ஒரு வேளை உணவு தரணும்... அந்த ஒரு வேளை உணவைத் தருவதற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால், அவங்களுக்காக நான் தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கவும் தயார்’’ என்றார் அந்த மனிதர். சொன்னபடி அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். அவர், அன்றைக்குத் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர். கடைக்கோடி கிராமத்தின் ஏழைக் குழந்தைகூடப் பள்ளிக்கு வர, படிக்க, அவரின் மதிய உணவுத் திட்டம் காரணமாக அமைந்தது.
அறிஞர் அரிஸ்டாட்டிலைப் பார்க்க ஒரு பெண்மணி வந்தார்,
``என் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும். அவன், எழுதப் படிக்கப் பழகணும். எப்போ அனுப்பலாம்?’’
``உன் மகனுக்கு என்ன வயது?’’
``மூணு.’’
``ஆஹா! மூணு வருஷத்தை வீணாக்கிட்டியே. உடனே ஓடு. இன்னிக்கே அவனுக்குப் பாடம் கத்துக் கொடுக்குற வேலையைத் தொடங்கு’’ என்றார் அரிஸ்டாட்டில்.
கற்றலில்தான் தொடங்குகிறது வாழ்க்கை. கற்றல், கற்பித்தல் இரண்டுமே வாழ்க்கையில் இன்றியமையாதவை. குழந்தை, கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்கும் பணியைத் தொடங்கிவிடுகிறது.
ஒரு குழந்தை, பலூன் வியாபாரி காற்றில் வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிடுகிற காட்சியைப் பார்த்தது. வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் பலூன்கள் பறந்தன. குதூகலமாகக் கண்டு ரசித்த குழந்தை, பலூன் வியாபாரியின் அருகில் சென்றது.

``என்ன பாப்பா?’’ பலூன் வியாபாரி கேட்டார்.
``கறுப்பு பலூனும் வானத்தில் பறக்குமா?’’
``பலூன் வானத்துல பறக்குறதுக்கு அதோட நிறம் காரணம் இல்லைம்மா. அதுக்குள்ள இருக்கிற காத்துதான் காரணம்.’’
அதைப்போல, மனதுக்குள் மறைந்திருக்கிற எண்ணங்கள்தாம் நம்மை உயரச் செய்கின்றன. சரி, கற்றலும் கற்பித்தலும் எப்படி நடைபெற வேண்டும்?
ஓர் உயிரியல் ஆசிரியர் தன் மாணவர்களுக்குக் கம்பளிப் புழு, வண்ணத்துப்பூச்சியாக மாறும் காட்சியைப் பாடமாக நடத்தினார். அன்றைக்கு ஒரு மாணவனின் கம்பளிப் புழு, வண்ணத்துப்பூச்சியாக மாற முடியாமல் இறந்துவிட்டது.
``என்ன செஞ்சே?’’ என்று கேட்டார் ஆசிரியர்.
``இந்தப் புழு கூட்டை விட்டு வெளியே வர முடியாம ரொம்ப சிரமப்பட்டது. அதுக்கு உதவி செய்யலாம்னு வெளியே எடுத்துவிட்டேன். அவ்வளவுதான்...’’
``நீ அந்தப் புழுவுக்கு உதவி செய்யறதா நினைச்சுக்கிட்டு அதைக் கொன்னுட்டே. புழு, தானே கூட்டை உடைச்சுக்கிட்டு வெளியே வரணும். அப்படி வர்றப்போதான் அதுக்கு பலம் பொருந்திய கால்களும், வலிமையான சிறகுகளும் கிடைக்கும். அவற்றால்தான் வண்ணத்துப்பூச்சியை, இயற்கைச் சூழலில் தகவமைத்து வாழவைக்க முடியும். வலிமையான கால்களையும் சிறகுகளையும் பெற முடியாம, அந்தப் புழு நிலையிலேயே வண்ணத்துப் பூச்சி இறக்குறதுக்கு நீ காரணமாகிட்டே.’’ இதுதான் வாழ்க்கை. துன்பங்களை, துயரங்களை, தடைகளை எதிர்கொள்கிறவர்கள்தாம் வாழ்க்கையில் வலிமையாக வாழ்கிறார்கள்.
அவன் பெயர் ஸ்வதகேது. அவன் தந்தை, அவனை ஒரு குருகுலத்தில் சேர்த்துவிட்டார். கல்விக் காலம் முடிந்தது.
``எல்லாம் கற்றுத் தெளிந்துவிட்டாய். சென்று வா…’’ என்று குருநாதர் ஆசீர்வதித்து அவனை அனுப்பிவைத்தார்.
தான் நிறைய கற்றவன் என்ற உணர்வோடு, கர்வத்தோடு இல்லம் திரும்பினான் ஸ்வதகேது.
``எல்லாவற்றையும் கற்றுவிட்டாயா?’’ தந்தை கேட்டார்.
``குருநாதரிடம் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அவற்றை யாருக்குச் சொல்லித் தர வேண்டுமோ, அதையும் செய்வேன்.’’
``இது, எல்லோரும் செய்கிற சாதாரணமான வேலை. அது உன் இலக்காக இருக்கக் கூடாது. எதைக் கற்றுக்கொடுக்க முடியாதோ, எதைக் கற்றுக்கொண்டால் இந்த உலகத்தின் துன்பம் நீங்குமோ அதைக் கற்றுக்கொண்டு வா...’’
தந்தையின் உத்தரவைக் கேட்டு ஆடிப்போனவன், குருநாதரிடம் போனான். தந்தையின் விருப்பத்தைச் சொன்னான். ``கற்றுத்தர முடியாததை நீங்கள் எப்படிக் கற்றுத்தர முடியும்?’’ என்றும் கேட்டான்.
``உண்மை. அப்படி ஒரு பாடத்திட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு போதிப்போம். ஆனால், நேரடியாகக் கற்றுத் தர முடியாது; உதவி செய்யலாம். நம் ஆசிரமத்தில் ஆடுகள், மாடுகள் என நானூறு விலங்குகள் இருக்கின்றன. அவற்றை ஓட்டிக்கொண்டு காட்டுக்குப் போ. அங்கே தனிமையில் அமர்ந்திரு. மௌனமாக இரு. இந்த நானூறு விலங்குகளும் ஆயிரமாகும்போது திரும்பி வா’’ என்று குருநாதர் சொன்னார்.
ஸ்வதகேது அந்த விலங்குகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்குப் போனான். தனிமையில் அமர்ந்தான். முதலில் அவனுக்குச் சலிப்புத் தட்டியது. பல எண்ணங்கள் திரும்பத் திரும்பச் சுழன்றன. தனிமை அவனைத் தவத்தில் ஆழ்த்தியது. மெள்ள மெள்ள அவனுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது. பறவைகளின், விலங்குகளின் மொழியை அவனால் அறிய முடிந்தது. இயற்கையின் ஒவ்வோர் அசைவையும் உணர முடிந்தது. விலங்குகள் பல்கிப் பெருகி, ஆயிரமாகிவிட்டன. ஆனால் அவனோ, தன்னை மறந்தநிலையில் இருந்தான்.
ஒருநாள் விலங்குகளில் ஒன்று அவனிடம், ``ஆயிரமாக நாங்கள் பெருகியதும் நம்மை ஆசிரமத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார் குருநாதர்’’ என்று நினைவுபடுத்தியது.
ஸ்வதகேது தன்னிலைக்கு வந்தான். விலங்குகளோடு ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டான். தூரத்திலிருந்து குருநாதர், அவனை கவனித்தார். அவன் கண்களில் பொழியும் கருணை வெள்ளத்தை உணர்ந்துகொண்டார். அவன் அருகே வந்ததும், ``எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்துவிட்டாய். இதோ, ஆயிரத்து ஒன்றாவது விலங்கும் வந்துவிட்டது’’ என்று சொல்லி, ஸ்வதகேதுவை அணைத்துக்கொண்டார்.
கற்றுக்கொள்வது என்பது எது? தன்னை உணர்தல்.
கற்றுக்கொள்வதில் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? நான் கற்றுக்கொண்டேன் என்பதைவிட, இன்னும் கற்கவேண்டியவை ஏராளம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அது, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் காலம். ஒரு மாணவன் கல்லூரிக்குப் போனான். வழியில், மழை தொடங்கியது. நனைந்துவிடக் கூடாது என்று வேகமாக ஓடினான். ஆனாலும் நனைந்துவிட்டான். சட்டையைக் கழற்றி உலரப் போட்டுவிட்டு வகுப்பறையில் அமர்ந்தான். அன்றைக்கு, கல்லூரி முதல்வர் பில்டர்ஹெக் (Bilderheck) துரை வகுப்பறையில் பாடம் நடத்த வந்தார். மிகவும் கண்டிப்பானவர்; வகுப்பறையில் அந்த மாணவன் சட்டையில்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
``வகுப்பறைக்கு எப்படி சட்டையில்லாமல் வரலாம்? இது ஒழுங்கீனம். உனக்கு எட்டணா அபராதம்’’ என்றார்.
``ஐயா… எட்டணா இருந்தால், நான் இன்னொரு சட்டை வாங்கியிருப்பேன். அதை வாங்கக் காசில்லாமல்தான், நனைந்த சட்டையைக் காயப்போட்டுவிட்டு வகுப்பறைக்கு வந்தேன்.’’
அந்த மாணவனின் கழிவிரக்கம், அவர் மனதைத் தொட்டது. அன்றைக்கு அவனுக்காக அவரே அபராதத் தொகையைச் செலுத்தினார். அவனுக்கு ஒரு மாற்றுச் சட்டையும் வாங்கிக் கொடுத்தார். காலசக்கரம் உருண்டோடியது.
அந்த மாணவர் நன்றாகப் படித்தார். வாழ்வில் உயர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் ஆனார். பிறகு லண்டன் ப்ரிவீ கவுன்சிலின் (Privy Council of the United Kingdom) உறுப்பினராகவும் உயர்ந்தார். தன் பேராசிரியர் பில்டர்ஹெக் துரை பணி நிறைவு பெற்று லண்டனில் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கப் போனார். அவருக்கு இவரை அடையாளம் தெரியவில்லை. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
தன் மாணவனின் உயர்வு அந்தப் பேராசிரியருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அன்று மாலை ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்துக்கு வந்தவர்களுக்கு மாணவரை அறிமுகப்படுத்தினார். அந்த மாணவர் பேசவேண்டிய கட்டம்...
அவர், தன் கையிலிருந்த பையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து ஒரு பழைய சட்டையை எடுத்தார். ``இது, எனக்கு என் ஆசிரியர் வாங்கிக் கொடுத்த சட்டை... அல்ல, அவர் எனக்கு இட்ட அறிவுப் பிச்சை’’ என்று சட்டையை உயர்த்திப் பிடித்துச் சொன்னார். அவர் `ரைட் ஹானரபிள்’ சீனிவாச சாஸ்திரி.
இதுதான்,
‘உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து’
என்ற குறளுக்கு உதாரணம். வறுமையும் ஏழ்மையும் ஒருபோதும் கற்றலுக்குத் தடையாக இருப்பதில்லை.
நாம் தொடக்கப் பள்ளி பயின்ற காலம். பாலசுப்பிரமணியன் என்ற நம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்டிப்பானவர். தொடக்கக் கல்வி முடிந்து, ஆறாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் மாணவர்கள்பால் அவருக்கிருந்த அதீத அக்கறையை உணர முடிந்தது. உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக, நம் பூர்வாசிரமத் தந்தையோடு சென்றுகொண்டிருந்த நம்மை வழியில் பார்த்தார். ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கலாம் என, தந்தையிடம் ஆலோசனை கூறினார். `அங்கு சேர்ந்தால் மாணவனின் எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்று நம்பிக்கை விதைத்தார். அந்தப் பள்ளியில் சேர விண்ணப்பம் கொடுத்தபோது, நுழைவுத் தேர்வு வைத்தார்கள். நுழைவுத் தேர்வில் நாம் மறுதலிக்கப்பட்டோம். ஆனாலும், அந்தப் பள்ளியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று போராடிச் சேர்ந்தோம். அங்கே ஒன்பதாம் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்புவரை எல்லாப் பேச்சுப் போட்டிகளிலும் கலந்துகொண்டோம். `இங்கு உமக்கு இடமில்லை. நுழைய முடியாது’ என எங்கே தடை விதிக்கப்பட்டதோ, அங்கே ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கரவொலி எழுப்ப, பல பேச்சுப் போட்டிகளில் தங்கப்பதக்கம், வெள்ளிக்கோப்பை பெற்றோம்.
காயங்கள் தழும்புகளாக மாறலாம். ஆனால், தழும்புகள் ஒருபோதும் காயங்களாகிவிடக் கூடாது. இது, மாணவக் கண்மணிகளுக்கு நிகழவே கூடாது என்பதே நம் கோரிக்கை.
- புரிவோம்...
அன்றைக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆயுத பூஜைக் கொண்டாட்டம். பூஜை முடிந்தது; சுண்டல் பிரசாத விநியோகம் ஆரம்பமானது. ஆனால், அது முறையாக நடைபெறவில்லை. ஆசிரியர் ஒருவர் சுண்டலை எடுத்துக் கொடுக்க, பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். `முந்தின கைப் பணியாரம்’ என்பார்களே... அதுபோல முண்டியடித்துக்கொண்டு போய் வாங்கிய மாணவர்களுக்கெல்லாம் சுண்டல் கிடைத்தது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஓர் ஓரமாகக் கையைக் கட்டிக்கொண்டு இதைப் பார்த்துக்கொண்டிருந்தார், அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுவன் காமராஜர். பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அம்மாவுக்கு அன்றைக்குப் பள்ளியில் ஆயுத பூஜைக் கொண்டாட்டம் என்பது தெரியும். ஆனால், காமராஜர் வெறுங்கையோடு வந்திருந்தார்.
``என்னய்யா... பள்ளிக்கூடத்துல பிரசாதம்னு சுண்டல்கூடவா கொடுக்கலை?’’
``கொடுத்தாங்கம்மா. முண்டியடிச்சுப் போய் வாங்கினவங்களுக்கெல்லாம் கிடைச்சுதே...’’
``நீயும் அப்படி வாங்கவேண்டியதுதானே?’’
``நான் ஏன் முண்டியடிச்சுக்கிட்டுப் போய், சண்டை போட்டு வாங்கணும்... எல்லா மாணவர்களுக்கும் சுண்டலை சமமாகப் பங்குபோட்டுக் கொடுக்கவேண்டியது ஆசிரியரோட கடமை இல்லையா?’’ என்று சொன்ன காமராஜரை ஆச்சர்யத்தோடு பார்த்தார் அவரின் அம்மா சிவகாமி அம்மையார்.
தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள், எளியோருக்குக் கிடைக்கவேண்டியதை வலியோர் தட்டிப் பறிப்பதைத் தடுக்க வேண்டும்; எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற சோஷலிச உணர்வு இளம் வயதிலேயே காமராஜரின் ரத்தத்தில் கலந்திருந்தது.