மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 23

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''சார்லாம் ஒண்ணும் வேணாம்... சுத்திச் சுத்திப் பாத்தா, நான் ஒனக்கு மாமன் மொறதான். மாமான்னே கூப்பிடு''

சம்பவம்-1

நேற்று ஓர் அலைபேசி அழைப்பு, 'எழுத்தாளர் இருக்காப்லயா...’ என்றது!

''சொல்லுங்க சார்...''

''சார்லாம் ஒண்ணும் வேணாம்... சுத்திச் சுத்திப் பாத்தா, நான் ஒனக்கு மாமன் மொறதான். மாமான்னே கூப்பிடு'' எனச் செல்லமாக அதட்டிய எதிர்முனைக்கு ''சரிங்க...'' என்றேன். அதன் பிறகு நடந்த உரையாடல் இது...  

''நமக்கு மன்னார்குடிதான் மாப்ள... நீ நம்ம ஊரப் பத்தில்லாம் விகடன்ல எழுதினதைப் படிச்சுட்டு கண்ணுல தண்ணி வந்துருச்சு... உணர்ச்சிகளப் பொத்துவுட்டுட்டியே மாப்ள... அதான் ஒடனே ஒன் நம்பரப் புடிச்சுப் பேசுறேன்...''

''ரொம்பத் தேங்ஸுங்க...''

''அப்புறம்... ஒரு டீட்டெயிலு வேணும் மாப்ள. இந்தம்மா, சின்னம்மா குடும்பத்த மொத்தமா வெரட்டிவுட்ருச்சே... அது என்னா மேட்ரு? இங்க வேற மாரிப் பேசிக்கிறானுவோ... அம்மாவும் சின்னம்மாவும் தெனமும் சேட்டிலைட் போன்ல பேசிக்கிறாகளாம்ல. எல்லாமே சும்மா டிராமா. சீக்கிரமே ஒண்ணு சேர்ந்துருவாக. ஒண்ணும் பிரச்ன கெடையாதுங்கறானுவோ... நீ மீடியா தொடர்புல இருக்கியே, ஒனக்கு டீட்டெயில் தெரிஞ்சிருக்குமேனுதான் கேக்குறேன்...''

''ஏன்... உங்களுக்கு அதுல என்ன பிரச்னை? நீங்க கட்சிக்காரரா..?''

வட்டியும் முதலும் - 23

''கட்சிய விடு மாப்ள... இங்க சுத்துப்பட்டுல ஆத்துல மணல் அள்றது பாதி நாமதான் பண்ணிட்டு இருக்கோம். எல்லாம் நமக்கு வேண்டப்பட்ட தொடர்புல வந்ததுதான். இப்ப வரைக் கும் பிரச்னை இல்ல. இந்த அரசியல் கரைச்சல்ல நாளப்பின்ன நம்மளப் புடிச்சு சந்தியில இழுத்துவுட்ருவானுவளோனு பயமா இருக்கு மாப்ள. இதுலதான நமக்குத் தொழில் ஓடுது...'' என அவர் கேஷ§வலாகச் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

''ஏங்க... ஊரப் பத்திப் படிச்சுட்டு அழறீங்க. அப்புறம் எப்பிடிங்க இப்பிடி ஆத்துல மணல் அள்றீங்க?'' என்றால், சிரித்தார்.

''அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மாப்ள... நீங்க இந்த சின்னம்மா மேட்ர கொஞ்சம் டீட்டெயிலா விசாரிச்சுட்டு ஒரு போன் அடிங்களேன். இல்ல, ரவைக்கு நானே பேசுறேன்...''

திரும்பவும் அவர் ராத்திரி போன் பண்ணும்போது சொன்னேன்...

''விசாரிச்சேங்க... உங்க பேர் வரைக்கும் இன்டெலி ஜென்ஸ் ஹிட் லிஸ்ட்ல இருக்காம். ஸ்பெஷல் ஸ்குவாட் போட்டாச்சாம். பார்த்து இருந்துக்கங்க... லாடம் கட்டிருவாங்க!''

சம்பவம்-2

டிரஸ்ட்புரத்தில் வழக்கமாகப் போகிற குஞ்சாகோபன் டீக்கடை கொஞ்ச நாட்களாகப் பூட்டிக்கிடந்தது.

அந்த நாயர் அப்படியே மலையாள ஹீரோ குஞ்சாகோபன் மினியேச்சர் என்பதால், கடைக்கு இந்தப் பெயர். முல்லைப் பெரியாறு பிரச்னையின் பீக் ஹவர்ஸில், யாரோ ஒரு பையன் நாயரிடம் கோல்டு ஃபில்டர் கேட்டிருக்கிறான். இவர் காதில் வாங்காமல் வேறு வேலை பார்க்க, பையன் எகிறியிருக்கிறான். இவரும் எகிற, பதிலுக்குப் பையன் கேட்டது ரத்தினச் சுருக்கமான ரத்தச் சரித்திர வசனம்... ''யோவ்... நீ மலையாளிதானே?''

உடனடியாக கோல்டு ஃபில்டரைக் குனிந்து எடுத்துக் கொடுத்த குஞ்சாகோபன், அன்றைக்குச் சாயங்காலமே கடையைப் பூட்டிவிட்டு எஸ்கேப்.

போன வாரம் பார்த்தால், நாயர் ரிட்டர்ன். பகவதி அம்மன் போட்டோவுக்கு புதுச் சந்தனம் தெளித்து, எஃப்.எம்மில் 'தமிழ்நாட்டுக் காப்புதான், தரணியெல்லாம் டாப்புதான்’ அலற... டீ ஆத்திக்கொண்டு இருந்தார்.

''என்ன குஞ்சாகோபன் எப்போ வந்தீங்க?''

''நேத்துதான் வந்துச்சு. சோத்துக்கு ஜீவனம் நடக்கணுமில்லே பிரதர்...''

''உங்க ஊர்ல என்ன பேசிக்கிறாங்க?''

''எல்லாம் பொலிட்டீஷியன்ஸ் ப்ளே பண்றதுதான் பிரதர்... எங்களுக்கு கரன்ட், ஃபுட் எல்லாம் நீங்க தர்றதுதானே... பின்னே... மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் வந்துதானே ஆகணும்.''

''சரி... பயந்துக்கிட்டுதானே போனீங்க. இப்போ வந்து கடையத் தொறந்துட்டீங்க?''

''அதான் முல்லைப் பெரியாறு பிரச்னை முடிஞ்சுதே...''

''பிரச்னை முடிஞ்சுருச்சா? எப்ப... யார் சொன்னது?''

''என்ன பிரதர் நீங்க... மம்முட்டியன்டே புது மலையாளப் பட போஸ்டர்ஸ் ரோடு எங்கிலும் ஒட்டியிருக்கு பாக்கலியா நீங்க... பிரச்னை முடிஞ்சதுக்கான அடையாளம் தானே அது. இப்போ நம்ம தமிழ் மக்களுக் கான பிரச்னை சசிகலாவை வாக்-அவுட் பண்ணதுதானே'' - கேஷ§வலாகச் சொன்னபடி டீ நீட்டிய நாயருக்குப் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்!

சம்பவம் - 3

ர் உலக சினிமா டி.வி.டி-யை லவட்டிக்கொண்டு போன நண்பரைக் கண்டிப்பதற்காக அலைபேசியில் அழைத்தேன். அவர் போனை எடுத்து ஹஸ்கி வாய்ஸில், ''உண்ணாவிரதத்துல இருக்கேன் பாஸ்... கூப்பிடுறேன்'' என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'இந்த ஆளு உண்ணாவிரதத்துல எல்லாம் போய் சிக்குற ஆள் இல்லையே...’ என மண்டை குடைந்தது.

வட்டியும் முதலும் - 23

கொஞ்ச நேரத்தில் அவரே ரூமுக்கு வந்தார், ''அண்ணா ஹஜாரே உன்ணாவிரதம் பாஸ்... ராகவேந்திரா மண்டபத்துல இருந்தேன். சொல்லுங்க...'' என்றார். பக்கத்தில் இருந்த இன்னொரு நண்பனுக்குச் சட்டென்று கோபம் வந்தது, ''யோவ்... மூணு பேர் தூக்குக்கு எதிரா எத்தனை போராட்டம் நடந்துச்சு. எதுலயாவது கலந்துக்கிட்டியா நீ..? கூப்பிட்டப்ப எல்லாம் வேலை இருக்குனு ஓடிட்ட... இப்போ அண்ணா உண்ணாவிரதத்துல போய் உக்காந்திருக்க..?'' என்றதும் பெரிதாகச் சிரித்தார்.

''பாஸ்... நாங்கல்லாம் தேசியவாதி. தமிழ்... தமிழன்னு எதுக்கு உங்களைச் சுருக்குறீங்க? பி இந்தியன் பாஸ். ரஜினி மூணு பேர் தூக்கை எதிர்த்து நடந்த உண்ணாவிரதத்துக்கு இடம் கொடுத்தாரா? அண்ணாஜி உண்ணா விரதத்துக்குக் கொடுத்துருக்கார்ல... அதான் தேசியம். சரி... மூணு பேர் தூக்கை நிறுத்தச் சொல்லி போராட்டமா நடந்துச்சே... அதெல்லாம் இப்போ என்னாச்சு? பிரச்னை முடிஞ்சா போச்சு? அடுத்ததா, கூடங் கொளம்னு கௌம்புனீங்க... அந்தப் பிரச்னை முடிஞ்சாபோச்சு. அப்துல் கலாமே வந்து பிரச்னை இல்லைனு சொல்லிட்டார்ல. பாஸ்... உங்களால எந்தப் பிரச்னையும் முடிச்சுர முடியாது பாஸ்... வேணும்னா, புதுசா ஒரு பிரச்னை வந்து பழசை மறக் கடிச்சுரும். ஆனா, அண்ணாஜி போராட்டத்தை யாராலயும் மறைக்க முடியாது. ஏன்னா, நாங்க தேசியவாதிகள். ஒண்ணு ஊழல் ஒழியுற வரைக்கும் தொடரும். இல்லைன்னா, அண்ணா அடுத்த ஜனாதிபதியாகிற வரைக்கும் தொடரும்'' என அவர் பேசப் பேச... எனக்குத் தலை கிறு கிறுத்தது.

''யோவ்... காதடைக்குதுய்யா நீ கௌம்பு.''

''பாஸ்... பாஸ்... இந்த மேட்டரைக் கேட்ருங்க. காலைல ஒரு ட்விட்டர் லைன் தோணுச்சு. இப்போ தட்டப்போறேன்... கேளுங்களேன்...''

''சொல்லித் தொல...''

''வர வர விஷாலைப் பார்க்கும்போது எல்லாம் அருண்பாண்டியனின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை’ - இது ஒண்ணு பாஸ்... அப்புறம் 'ஸ்ருதிஹாசனைப் பார்க்கும்போது மட்டும், கமல் ஓர் உலக நாயகன் என்பதை ஒப்புக்கொள்கிறது மனம்’ - இது ஒண்ணு பாஸ்... எப்பிடி?''

''யோவ்... உண்ணாவிரதத்துல உக்கார்ந்துக்கிட்டு யோசிக்கிற விஷயமாய்யா இது. சரி, திருப்பி நீ உண்ணாவிரதத்துக்குப் போகலையா?''

''சச்சின் 70 ரன்னை க்ராஸ் பண்ணிட்டாருன்னாங்க... அதான் செஞ்சுரி மொமென்ட்டைப் பார்த்துட்டுப் போயிரலாம்னு வந்தேன்.''

''போடா... போயி சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கணும்னு உன் தலைமையில நாளைக்கு உண்ணாவிரதம் உக்காரு போ!''

சம்பவம் - 4

கடலூரில் இருந்து நண்பர் குணசேகரன் பேசியது, நிலைகுலையவைத்துவிட்டது. குணசேகரன் அற்புதமான நண்பர். விவசாயி. புத்தகப் பிரியர். சமூக ஆர்வலர். 'தானே’ புயலின் பேயாட்டத்தில் அவரது 20 ஏக்கர் முந்திரித் தோப்பு முற்றாக அழிந்துவிட்டது. தோப்புக்கு அருகில் இருந்த அவரது வீடும் இப்போது இல்லை. பெரும் போருக்குப் பிறகான மண்ணில் இருந்து கதறும் ஓர் உயிரின் கதறலாகவே இருந்தது அவரது குரல். ''அடிச்சுக்கெடக்கறதப் பார்த்தா, நாங்க எந்திரிக் கறதுக்கு பத்துப் பதினஞ்சி வருஷம் ஆகும் போல தம்பி. முந்திரி, பலாவெல்லாம் வெச்சு, வர்றது பத்து வருஷ உழைப்பு.

எங்க வேர்வையையும் ரத்தத்தையும் போட்டு வளத்ததை எல்லாம் புயல் வந்து தின்னுட்டுப் போயிருச்சு. ஏற்கெனவே விவசாயிகள் வாழ்க்கை பெரும் போராட்டம். இதுல இந்தப் புயல் வந்து எங்க எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிட்டுப் போயிருச்சு. வுழுந்துகெடக்குற ஒவ்வொரு மரத்தைப் பார்க்கும்போதும் உசுரு நடுங்குது தம்பி... ஒரு மரம்கிறது நூறு மனுஷன் தம்பி. இங்க ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணிகூட இல்ல... வெறுமனே நாங்களும் நிவாரணப் பணிகள் பண்றோம்னு இல்லாம முழுமூச்சா இந்த அரசாங்கம் இறங்கி ஏதாச்சும் பண்ணாத்தான் கொஞ்சமாவது மீள முடியும் தம்பி...'' எனச் சொன்னபோது குழந்தை மாதிரி அழுதார்.  குண சேகரன் சொன்னதில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானதாக இருந்தது எனக்கு.

வட்டியும் முதலும் - 23

''எல்லாத்தையும் வெளியில் இருந்து பார்த்துட்டு, கடந்துபோறது நம்மளோட இயல்பாயிருச்சு தம்பி. ஒரு பார்வையாளனாவே இருந்து செத்துப்போறவங்கதானே இங்கே பெரும் விழுக்காடு. 'இதுவும் கடந்துபோகும்’னு தினம் தினம் சின்னக் குற்றவுணர்ச்சியோட நம்ம வேலையைப் பார்க்கறோம். யாருக்கு என்ன பிரச்னைன்னாலும் மந்தைங்க மாதிரி டி.வி-ல என்ன போட்டாலும் பார்க்கறோம்... அணு உலை பாதிப்பு நமக்கும் வரும்... புயல் அடிச்சு நாம இருக்கற இடமும் ஒரு நாள் இல்லாமப்போகும்... எவனோ ஒருத்தன் நம்ம குழந்தையோட எதிர்காலத்தையும் தப்பாக்குவான்னு புத்தியில ஒரு ஒறைப்பு வேணாமா?'' என்றவர் அடுத்துச் சொன்னார்,

''மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்துவதுதான் நமது கடமை’னு சொல்வாங்க. அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் எவ்வளவு பேர் உருப்படியா எதை எதை நினைவுபடுத்துனான்? மக்களாலதான் மக்களை உண்மையா காப்பாத்த முடியும். இப்போ கூடங்குளம், முல்லைப் பெரியாறு பிரச்னை எல்லாம் இந்த அளவு நடக்கறதுக்குக் காரணமே, அந்தந்த மண்ணின் மக்களோட உண்மையான ஈடுபாட்டாலதானே... இவ்வளவு நாள் இங்கே இப்படி நடந்தது இல்லையப்பா... இன்னும் நிறைய இப்படி நடக்கணும். புயலடிச்ச எங்க பூமியையும் இந்த மக்கள்தான் மீட்டெடுத்து வரணும். இந்த மக்கள்னா, புயல் பாதிச்ச மண்ணோட மக்களை மட்டும் சொல்லலை... உங்களை மாதிரி ஒவ்வொரு தமிழ் மக்களையும்தான் சொல்றேன். எல்லாரும்தான் நிக்கணும்.கெடைக் கிற கைகளைப் பத்திக்கிட்டு எந்தி ரிச்சு, இந்த மக்கள்தான் தெடமா வரணும்... போராட்டத்துலேயும் நெருக்கடிகள்லயும் ஒவ்வொருத்தனும் அரசாங்கமா மாறிரணுமப்பா...''

பேசி முடித்த அந்த இரவு, வழியும் பானைகளும் கரும்புமாக ஒரு பொங்கல் வாழ்த்துக் குறுந்தகவல் வந்திருந்தது... அதே குணசேகரனிடம் இருந்து!

(போட்டு வாங்குவோம்...)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan