
முண்டாசு கட்டி மாப்பிள்ளை கணக்கா நின்னுக்கிட்டிருக்கான் பரிமளம். அவனை எல்லோரும் ‘காத்தவராயன்’னு பேர் சொல்லி அழைக்கிறாக.
அப்பாபட்டர் அந்த நாட்டுக்கே ராஜகுரு. பட்டருக்குக் கல்யாணமாகி பதினைஞ்சு வருசமாச்சு. ராச வைத்தியர் குடுத்த மருந்தையெல்லாம் சாப்பாடு கணக்கா முழுங்கி பாத்துட்டா பொஞ்சாதி அன்னத்துளசி. பலன் கிடைக்கலே. அதனால அவர் தீராத மனக்கவலையில இருந்தாரு.
குரு இப்படி வருத்தப்பட்டு மனசொடிஞ்சு கிடக்குறாரேன்னு ராஜாவுக்குக் கஷ்டமாப் போச்சு. அந்த நாட்டுக்கு வந்த துறவி ஒருத்தர்கிட்ட விஷயத்தைச் சொல்லி, ‘தீர்வு குடுங்க சாமி’னு கேட்டார் ராஜா. அந்தத் துறவி, ஒரு கல்லெடுத்துக் குடுத்து, ‘இதுக்குப் பேரு சாளகிராமம். இதுல மும்மூர்த்திகளும் இருக்காக. உன் குருநாதன்கிட்டக் குடுத்து பூசை செய்யச் சொல்லு. நல்லது நடக்கும்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ராஜா, அப்பாபட்டர்கிட்ட அந்தக் கல்லைக் குடுத்தார். இதுநாள் வரைக்கும் கறையானா மனசை அரிச்சுக்கிட்டிருந்த பிரச்னைக்கு அந்த மும்மூர்த்திகள் கருணையால தீர்வு கிடைச்சுச்சு. அன்னத்துளசி முழுகாம இருந்தா. பத்தாவது மாசம் தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தையைப் பெத்தெடுத்தா. அவதான் ஆரியமாலை.

இது இப்படியிருக்க, நாட்டுக்குத் தெக்குட்டு இருக்கிற வனத்துக்குக் கீழே, ஒதுக்குப்புறமா கொஞ்சம் மக்கள் வாழ்ந்துக்கிட்டிருந்தாக. வேட்டையாடியும் விவசாயம் செஞ்சும் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்த அந்தக் கூட்டத்துல ‘சின்னான்’னு ஒருத்தன் இருந்தான். அவம் பொண்டாட்டி கற்பூர சாம்பவத்தி நிறைமாச கர்ப்பிணி. புருஷனும் பொண்டாட்டியும் ஒருக்கா காட்டுக்குள்ள வேட்டைக்குப்போனப்போ, ஓர் உழுவை பாஞ்சு ரெண்டு பேரையும் சாச்சுருச்சு. சின்னான் அதே இடத்துல உழுவைக்கு இரையாகிட்டான். சாம்பவத்தி ரத்தம் வடிய வடிய ஓடியாந்து ஒரு மரத்தடியில விழுந்தா. தன்னையறியாம குழந்தையைப் பெத்துப் போட்டு அவளும் போய்ச் சேந்துட்டா.
செவப்புடையான்னு ஒரு காவக்காரன். அரண்மனையில முக்கியமான காவல் பொறுப்புல இருக்கிறவன். அன்னிக்கு வனத்துக்குள்ள குதிரையில காவல்சுத்து வந்துக்கிட்டிருந்தான். அழுகுரலைக் கேட்டுக் கிட்டப்போய் பாத்தான். தாயி செத்துக்கிடக்க, குழந்தை அவ சேலையைப் புடிச்சுக்கிட்டு அழுதுகிட்டுக் கிடந்துச்சு. சாங்கியத்தோட அந்தப் பெண்ணை அடக்கம் பண்ணிட்டு, குழந்தையைத் தூக்கிட்டு வந்தான். ‘வாரிசு இல்லாத தங்களுக்கு அந்த ஆண்டவனாப் பாத்துக் குடுத்தப் புள்ளை’னு நினைச்சு செவப்புடையானும் அவன் பொண்டாட்டியும் புள்ளையைத் தங்கமாத் தாங்கி வளர்த்தாக. அவன்தான் பரிமளம்.
சின்ன வயசுலேயே பரிமளம் பய பெருவீரனாயிருந்தான். ஆயுதம் செய்யிறதுலயும் வல்லவனா இருந்தான். வனத்துக்குள்ள புகுந்து நேரம் போறது தெரியாம வேட்டையாடுவான். கின்னரி இசைக்கிறதிலயும் ஆளு பலே கில்லாடி.
ஆரியமாலைக்குப் பதிமூணு வயசாச்சு. அவ ஆசைப்பட்ட நகை நட்டெல்லாம் போட்டு தன் மகள் மாதிரியே பாத்துக்கிட்டாரு ராஜா. இருந்தாலும், ஆரியமாலைக்கு அரண்மனை தோட்டத்துக்குள்ளயே கிடக்கிறது சலிச்சுப்போச்சு. வெளியுலகத்தைப் பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. எவ்லாரும் அசந்த நேரத்துல தோழிகளோட கோட்டையை விட்டு வெளியில வந்தா. காட்டுக்குள்ள நடக்க நடக்க நேரம் போனதே தெரியலே. ஒருகட்டத்துல, தோழிகளுக்கெல்லாம் பயம் வந்திருச்சு. ஆனாலும், “இன்னும் கொஞ்சதூரம்”, “இன்னும் கொஞ்சதூரம்”னு நெடுந்தூரம் போயிட்டா ஆரியமாலை. திடீர்னு எங்கிருந்தோ கின்னரி இசை காத்துல கலந்து வருது. அந்த இசை அவளை ‘வா’, ‘வா’னு கூப்பிடுது. கிழக்குல உதிச்ச சூரியன் மையத்துக்கு வந்து மேப்பக்கம் சாயத் தொடங்கிருச்சு. அந்த இசை வந்த திசை நோக்கி நடந்துக்கிட்டேயிருக்கா. ‘ஆரியமாலைக்குப் பித்துப் பிடிச்சிருச்சோ’னு பயந்த தோழிகள் அவளை விட்டுட்டு வந்த வழியிலேயே திரும்பிட்டாக.
ஆரியமாலை தன் போக்குல போய்க் கிட்டிருக்கா. அழகான சுனையில பளிங்கு மாதிரி தண்ணி, காத்துக்குத் தலையாட்டிக்கிட்டுக் கிடக்கு. கரையில உக்காந்து கின்னரியை வாசிச்சுக்கிட்டிருக்கான் பரிமளம். கின்னரி நாதத்துல மயங்கிப்போய் நிக்குறா ஆரியமாலை. திடீர்னு தேவதை மாதிரி ஒரு பொண்ணு தன்னெதிர்ல நிக்குறதைப் பாத்து மலைச்சுட்டான் பய. வாசிக்கிறதை நிறுத்திட்டு எழுந்தான். ஆரியமலை இயல்பு நிலைக்கு வந்தா. தன்னெதிர்ல வடிவா ஓர் ஆண் நிக்குறதை அப்போதான் உணர்றா. அந்த ஒரு நொடிப் பார்வையில ஆரியமாலையோட மனசுக்குள்ள நுழைஞ்சான் பரிமளம்.

ஆரியமாலைக்கிட்ட ‘யாரு’, ‘என்ன’னு விசாரிச்சான் பரிமளம். பதில் சொல்லாம அவன் முகத்தையே பாத்துக்கிட்டு நின்னா அவ. முகம் வெட்கத்தால சிவந்து போயிருக்கு. அவ உடைகளையும் அணிகலன்களையும் பார்த்தா ராஜா வீட்டுப் பொண்ணு மாதிரி தெரியுது... தான் யாருன்னு சொன்னா ஆரியமாலை. பரிமளத்துக்கு தர்மசங்கடமாப்போச்சு. பட்டரோட மகள்... தன்கிட்ட நின்னு பேசுறதைப் பார்த்தாலே தலையெடுத்துக்கிட்டுப் போயிருவாகன்னு அவனுக்குத் தெரியும். “சரி தாயி... நீங்க கிளம்புங்க”ன்னான்.
ஆரியமாலையோ, “காலம் முழுவதும் உன் பக்கத்திலேயே உக்காந்து கின்னரி நாதத்தைக் கேட்கணும் போலருக்கு”ன்னா. “தாயி... நீங்க பெரிய இடத்துப் பொண்ணு. என் நிழல்லகூட நீங்க நிக்கக் கூடாது. உடனே கிளம்பிருங்க”னான் பரிமளம்.
``உன் தோள்களைப் பாக்குறப்போ நீ பெரிய வீரன்னு தெரியுது. உன் இசையைக் கேக்குறப்போ கருணை உள்ளவன்னு புரியுது. ரெண்டு குணத்தையும் மறைச்சுக்கிட்டு என்னை விரட்டுறியே... உன்னைத் திருமணம் செஞ்சுக்க விரும்புறேன். என்னை ஏத்துக்கோ”ன்னா ஆரியமாலை. அவ கண்கள் அரும்பி நிக்குது.பரிமளம் மனசிரங்கிப் போனான். தன்மேல் வயப்பட்டு நிக்குற இந்தப் பொண்ணைக் கைவிடக் கூடாதுன்னு முடிவு செய்றான். ``எனக்குத் திருமணம்னு ஒண்ணு நடந்தா அது உன்கூடத்தான். உன்னைத் திருமணம் செய்ய கழுமரம்கூட ஏறுவேன்”னு சொல்லி அவ கையைப் பிடிக்கிறான். அந்த வெளியே வெக்கத்தால செவந்துபோச்சு.
அதுக்குப்பிறகு, அப்பப்ப ஆரியமாலை தோட்டத்தைத் தாண்டி வனத்துக்குள்ள வர்றதும், சுனைக்கிட்ட பரிமளம் காத்திருக்கிறதும் ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பொழுதுபோக்குறதும் வாடிக்கையாப் போச்சு.
பரிமளத்தோட இயல்புகள்ல மாற்றம் இருக்கிறதை செவப்புடையானும் அவம் பொண்டாட்டியும் கண்டுபிடிச்சுட்டாக. ‘என்ன’, ‘ஏது’னு விசாரிச்சாக. ஆரியமாலையை சந்திச்சதையும், அவளையே திருமணம் செஞ்சுக்க விரும்புறதையும் சொன்னான் பரிமளம். ‘ராஜா கண்காணிப்புல இருக்கிற புள்ளைய இவன் கல்யாணம் பண்ண நினைக்கிறது தெரிஞ்சாலே கழுத்தை அறுத்துப் போட்டுருவார். இப்படி பித்துப்பிடிச்சுத் திரியுறானே’னு செவப்புடையான் பதறிப்போனான். என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அதெல்லாம் பய காதுல ஏறலே. உடம்பு, மனசு எல்லா இடத்திலயும் ஆரியமாலை உறைஞ்சு போயிட்டா. “அப்பா... முறைப்படி ஆரியமாலையை பட்டர் எனக்குத் திருமணம் செஞ்சு தரமாட்டார். அதனால சிறையெடுக்கப் போறேன். வாழ்ந்தாலும் சரி, செத்தாலும் சரி... என் வாழ்க்கை ஆரியமாலையோடதான். வாழ்த்தி அனுப்புங்க”னான் பரிமளம். ‘இதுக்கு மேல பேசி பயனில்லை’னு விட்டுட்டாக.
அன்னிக்கு நிறைஞ்ச அமாவாசை... அவனுக்கும் ஆரியமாலைக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசிய வழி ஒண்ணு இருக்கு. அதுக்குள்ள நுழைஞ்சு அவளை அழைச்சுக்கிட்டு காட்டுக்குள்ள புகுந்துட்டான் பரிமளம்.
விடிஞ்சுச்சு. ‘ஆரியமாலையைக் காணோம்’னு அரண்மனையே அல்லோலப்படுது. பட்டர், கண்ணீர் வழிய உக்காந்திருக்காரு. வாயிலயும் வவுத்துலயும் அடிச்சுக்கிட்டு அழுவுறா அம்மா அன்னத்துளசி. ‘பரிமளம்தான் சிறையெடுத்துக்கிட்டுப் போயிட்டான்’னு ராஜாவுக்குத் தெரிஞ்சுபோச்சு. கோபத்துல கண்ணெல்லாம் சிவந்து அனலாகிப்போனார் ராஜா. போதாக்குறைக்கு வேதியர் களெல்லாம் ஒண்ணுகூடி, தூண்டி விட்டுக்கிட்டிருக்காக.

ராஜா செவப்புடையானை அழைச்சாரு. “நாளைக்குக் காலைக்குள்ள உம்மவனைப் புடிச்சுக்கொண்டார வேண்டியது உம்பொறுப்பு. நாளைக்குச் சூரியன் மறையுறதுக்குள்ள அந்தப்பயலை ஊருக்கு நடுவுல கழுவுல ஏத்தணும். கழுமரம் கட்டுற வேலை தொடங்கட்டும். இது என் உத்தரவு”னு சொல்லிட்டு விறுவிறுன்னு போயிட்டாரு.
செவப்புடையான் மனசொடைஞ்சு போயிட்டான். ‘என்னடா இது சோதனை... எம் புள்ளையை நானே புடிச்சாஞ்சு கழுவுல ஏத்தணுமாமே... இறைவா... என்ன சோதனை”னு அழுதான். அப்புறம் அவனே மனசைத் தேத்திக்கிட்டு படைவீரர்களைக் கூட்டிக்கிட்டுக் காட்டுக்குள்ள இறங்கிட்டான்.
பரிமளமும் ஆரியமாலையும் அடர்ந்த வனத்துக்குள்ள ஒரு மரப்பொந்துக்குள்ள தங்கியிருந்தாக. பரிமளம் மடியில படுத்து ஆழ்ந்து தூங்கிக்கிட்டிருந்தா ஆரியமாலை. இவன், அவள் தலையை ஆறுதலாகக் கோதிவிட்டுக்கிட்டிருந்தான். செவப்புடையான் படை அவுகளைச்சுத்தி வளைச்சிருச்சு. அவுககூட பரிமளம் எந்தச் சண்டையும் செய்யலே. ஆரியமாலையை எழுப்பிக் கூட்டிக்கிட்டு படைக்கு முன் நடக்க, படை அவன் பின் நடக்குது.
நேரா அரண்மனைக்கு வந்தான் பரிமளம். ராஜா அவனை கூண்டுல நிறுத்துனாரு. “பட்டர் இந்த தேசத்துக்கே குரு. அவரோட மகளை ஒரு காவக்காரன் பிள்ளையான நீ சிறையெடுத்திருக்கே. உன்னை கழுவுல ஏத்த உத்தரவிட்டிருக்கேன்”னான் ராஜா.
பரிமளம் கண்ணெல்லாம் செவந்துபோச்சு. “ராஜா... ஆரியமாலை எனக்குன்னு பிறந்தவ. அவளை முறைப்படி மணம் செஞ்சு கொடுக்க நீங்க சம்மதிக்க மறுப்பீங்கன்னுதான் சிறையெடுத்தேன். அது தப்புன்னு நீங்க சொன்னா, நானே கழுவேறி தண்டனையை ஏத்துக்கறேன்”னு சொல்லி விறுவிறுன்னு கழு மரத்துல ஏறி, தன்னைச் செருகிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா உயிரை விட்டான்.
தன் கண்ணெதிரே தன் காதலன் கழுமரம் ஏறி செத்துப்போனதைப் பாத்தா ஆரியமாலை. “இனிமே வாழ என்ன இருக்கு” - மூச்சடக்கி செத்து விழுந்தா. தம் புள்ளையும் மருமகளும் நிறைவாழ்வு வாழாமப்போக, நாமும் காரணமாகிட்டமேன்னு செவப்புடையான் தன் வாளால தலையை நறுக்கிக்கிட்டு செத்து விழுந்தான்.
ஊரே ரத்தக்காடாகிப் போச்சு. அந்த வெம்மையில காடு கரையெல்லாம் வறண்டு தரிசா மாறிடுச்சு. மன்னர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாயிட்டார். பட்டர் தீரா நோவுக்கு ஆளாயிட்டாரு. குழந்தை குட்டியெல்லாம் தவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காம கொஞ்சம் கொஞ்சமா ஜீவனை விடுதுக.
கேரளத்துப் பெருங்கோட்டு நம்பூதிரி, “எல்லாத்துக்கும் காரணம், பரிமளமும் ஆரியமாலையும் அடங்காமச் சுத்துறதுதான்”னு கண்டுபிடிச்சுச் சொன்னான். உடனே ராஜா, செஞ்ச தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு ரெண்டு பேருக்கும் பீடம் வெச்சு சாமியா கும்பிட ஆரம்பிச்சான். அதுக்கப்புறம்தான் அந்தப் புள்ளைக கோபம் தணிஞ்சுச்சு. வானம் கறுத்து நாலைஞ்சு தண்ணித்துளி விழுந்துச்சு.
திருச்சிக்குப் பக்கத்துல காவிரிக்கரையில வாத்தலைன்னு ஒரு கிராமம் இருக்கு. அங்கே, முண்டாசு கட்டி மாப்பிள்ளை கணக்கா நின்னுக்கிட்டிருக்கான் பரிமளம். அவனை எல்லோரும் ‘காத்தவராயன்’னு பேர் சொல்லி அழைக்கிறாக. ஈட்டி, வாளெல்லாம் வீசிட்டு கையில பூச்செண்டு வச்சுக்கிட்டு நிக்கிறான் பய. பக்கத்துலயே நிக்குறா ஆரியமாலை. அவ கண்ணுல காதல் தளும்புது. அந்த வெளியே காதலால குளிர்ந்துபோய் கிடக்கு!
-வெ.நீலகண்டன்
படம் : சி.வெற்றிவேல்
ஓவியம் : ஸ்யாம்