Published:Updated:

செய்தி சொன்ன கானமயில்

செய்தி சொன்ன கானமயில்
பிரீமியம் ஸ்டோரி
News
செய்தி சொன்ன கானமயில்

செய்தி சொன்ன கானமயில்

செய்தி சொன்ன கானமயில்

ரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா. அவள் பாட்டி, அந்தப் பழங்களைக் காயவைத்து ஊறுகாய் செய்துகொடுப்பார்.

ஒட்டகக்குட்டியுடன் எதிரே ஜோகா  வருவதைப் பார்த்து, ‘‘ஜோகா, குட்டிதான் வருது. அம்மா எங்கே?’’ என்று கேட்டாள்.

‘‘பின்னாடி அப்பாவோடு வருது. எங்கே போறே?’’

‘‘கேர் பழங்களைப் பறிக்க. நீயும் வர்றியா? ஜட்டா லாலையும் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கூட்டிட்டுப் போலாம். உன் அப்பாகிட்ட நான் கேட்கறேன். காட்டுக்குள் அந்த அதிசயப் பறவையை இன்னொரு தடவைப் பார்க்கணும்னு போலிருக்கு’’ என்றாள் சல்மா.

செய்தி சொன்ன கானமயில்

ஜோகாவின் வீட்டில் சவாரிக்குப்  பயன்படுத்தும் ஆண் ஒட்டகத்தின் பெயர்தான் ஜட்டா லால். அவர்கள் காடு என்றது, பாலைவனத்தில் அமைந்திருக்கும் புல்வெளி மற்றும் புதர்க்காடு. அங்கே வந்த ஜோகாவின் தந்தையும் ஒப்புக்கொண்டார். தோழி வரவில்லை எனச் சொல்லிவிட்டதால், இருவர் மட்டுமே கிளம்பினர்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை சமவெளியாக இருக்கும் அந்த நிலத்தில், அவர்கள் தேடிவந்த அந்த அதிசயப் பறவை, கானமயில்.

சல்மாவின் பாட்டி, தன் சிறுவயதில் வீடுகளுக்கு அருகில் சாதாரணமாக கானமயில்களைப் பார்த்திருக்கிறார். ஆனால், இன்று 60 கானமயில்களே ராஜஸ்தானில் வாழ்கின்றன.

ஒரு வாரத்துக்கு முன்பு, ஜட்டா லால் மீது சவாரி செய்துகொண்டிருக்கையில், கானமயில் தூரமாக நடந்துசெல்வதை ஜோகா காட்டினான். அதை மீண்டும் பார்க்க சல்மாவின் கண்கள் ஏங்கித் தவித்தன.

‘‘ஜோகா, நீண்ட தூரம் வந்துவிட்டோமா? திரும்பிச் சென்றுவிடலாம்’’ என்றாள் சல்மா.

‘‘பயப்படாதே சல்மா, ஜட்டா லாலுக்குத் தெரியாத வழியா’’ என்றான் ஜோகா.

‘‘அந்தப் பறவை நம்ம உயரத்துக்கு இருக்குமாமே’’ என்று சல்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஓர் ஓசை... சிங்காரா என்ற மான் வகையின் அலறல் சத்தம்.

இருவரும் ஜட்டா லாலை உட்காரவைத்துக் கீழே இறங்கி, வேகமாகச் சென்று பார்த்தார்கள். ஆளுயரம் வளர்ந்திருந்த  புதர்ச் செடிக்குப் பின்னால், கழுத்தில் ரத்தம் கசிய,  ஒரு சிங்காரா மான் கால்களை உதறித் துடித்துக்கொண்டிருந்தது.

நாய் ஒன்று அதன் கழுத்தைக் கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. ஜோகா அந்த நாயைச் சிறிது துரத்துக்கு விரட்டிச் சென்றான். மானின் கழுத்தை சல்மா பரிசோதித்தாள்.

ஜோகா வந்தவுடன், ‘‘நல்லவேளை, காயம் ஆழமில்லை  காப்பாத்திடலாம்’’ என்றாள்.

‘‘உங்க உதவிக்கு நன்றி!’’ என்று பின்னால் குரல் கேட்டது. வியப்புடன் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நின்றிருந்தது கானமயில்.

தாங்கள் காண்பது நிஜமா கனவா? அவ்வளவு அருகில் கானமயில் நின்றிருப்பதை நம்பமுடியவில்லை. 3 அடி உயரமான சல்மாவைவிட ஒரு இன்ச் அதிகம் இருந்தது.

கானமயில் தொடர்ந்து பேசத் தொடங்கியது. ‘‘நாய்கள் வழக்கமாக இப்படி வேட்டையாடுவது கிடையாது. சமீபத்தில்தான் இது அதிகமாக நடக்கிறது. ஒரு நாய், ஓராண்டில் 22 சிங்காராக்களை வேட்டையாடுறது. நீங்கள் வளர்ப்புக்காகப் பயன்படுத்தும் நாய்தான், இன்று இந்த மான்களின் இனத்தையே அழிக்கிறது. இயற்கையான வேட்டைக்கும் ஆபத்தான வேட்டைக்கும் வித்தியாசமுண்டு’’ என்றது.

செய்தி சொன்ன கானமயில்

தன்னைத் திடப்படுத்திக்கொண்ட சல்மா, ‘‘நாய்கள் இப்படி வேட்டையாடும் விலங்கு இல்லையே!’’ என்றாள்.

‘‘யார் சொன்னது? ஆரம்பத்தில் நாய்களும்  வேட்டையாடியும் இறந்தவற்றையும்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அதை அடிமைப்படுத்தி, மனிதர்கள் தங்களுக்காகப் பயன்படுத்தினார்கள். பின்னர், தெருவில் சுற்றவிட்டார்கள். காட்டுப் பகுதியில் சுற்றும் நாய்கள், தம் வேட்டையாடும் பழக்கத்தை மீண்டும் பெறத்தொடங்கிவிட்டன. எங்களுக்கும் இந்த நாய்களால் ஆபத்து உள்ளது’’ என்றது கானமயில்.

‘‘அப்போ, இதுக்கும் மனிதர்கள்தான் காரணமா?” - வருத்தத்துடன் ஜோகா கேட்டான்.

‘‘இல்லைனு சொல்ல முடியுமா? உங்களை யார் அடக்கியாளச் சொன்னது? இப்போ யார் தெருவில் அநாதையா விடச்சொன்னது?’’ என்று கோபத்துடன் கேட்டது கானமயில்.

‘‘மின்கோபுரங்களை அதிகப்படுத்தி எங்க இனத்தையே அழிக்கறீங்க. ரிசார்ட்டுகளை அதிகப்படுத்தி பாலைவனப் பகுதியிலும் வேற  உயிர்கள் வாழமுடியாத சூழலை உருவாக்கறீங்க. இதனால் என்ன சாதிக்கறீங்க?’’ என்று சீறியது கானமயில்.

‘‘எங்களுக்கு 7 வயசுதான் ஆகுது. குழந்தைகள்கிட்ட கேட்டா என்ன சொல்றது?’’ என்றான் ஜோகா.

‘‘உங்களுக்கு முந்தின தலைமுறையின் தவறுகளை நீங்களாவது செய்யாம இருக்கணும்.  இல்லைன்னா, இன்னும் கொஞ்ச வருசத்துல என்னையோ, இந்தச் சிங்காராவையோ பார்க்கவே முடியாமபோயிரும்'' என்றது கானமயில்.

தன் இனத்தை இழந்து தவிக்கும் அதனிடம், மனிதர்கள்மீது வெறுப்பைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். அதை நன்றாகப் புரிந்துகொண்டாள் சல்மா.

‘‘நாங்க எந்த உயிரினத்தையும் எங்களைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ள மாட்டோம். எந்த இடத்தைப் பயன்படுத்தினாலும், அங்கே வாழும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றுக்குப் பிரச்னை இல்லாம  நடந்துப்போம்’’ என்று நம்பிக்கையூட்டினாள்.

‘‘எதிர்காலத்துல உங்க சந்ததிகள் பெருகி சந்தோசமா வாழும். அதுக்குத் தேவையான உதவிகள் செய்வோம். இதுக்கு முன்னாடி கானமயில்கள் வாழ்ந்த தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் என எல்லா மாநிலக் குழந்தைகளும் உங்களுக்குத் தேவையான புல்வெளி, புதர்க்காடுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்துல உங்க சந்ததிகளை வாழவைப்போம்’’ என்று ஜோகா கூறினான்.

‘‘ரொம்ப நல்லது. உங்க மேலே நம்பிக்கை இருக்கு. நான் கிளம்பறேன்’’ என்றது கானமயில்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ராஜஸ்தானின் மாநில மரமான கெஜ்டி மரத்தை மேய்ந்து மேய்ந்து, குடைபோல் செய்திருந்தது ஜட்டா லால். அதை அழைத்துகொண்டு சல்மாவின் அருகே வந்தான் ஜோகா.

கானமயில் செல்வதைப் பார்த்துக்கொண்டே சல்மா கூறினாள், ‘‘ஜோகா, நான் பறவை ஆய்வாளர் ஆகப்போகிறேன். கானமயில் மட்டுமல்லாமல், இதைப்போல இன்னும் எத்தனை பறவைகள் இருக்கும். அனைத்தையும் காப்பாற்ற வேண்டும்!’’

‘‘செய்வோம் சல்மா’’ என்றான் ஜோகா.

-க.சுபகுணம்

ஓவியம்: ரமணன்

கான மயில்

செய்தி சொன்ன கானமயில்

ந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பறவை கானமயில். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடாக, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழ்ந்தன.

இப்போது, அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 160 மட்டுமே என்கிறார்கள் ஆய்வாளர்கள். ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் சுமார் 120 பறவைகள் வாழ்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.

சுமார் 3 அடி உயரம்வரை வளரும் இந்தப் பறவைதான், இந்தியாவின் உயரமான பறவை. 12-15 ஆண்டுகள் வரை வாழும். புல்வெளிக் காடுகளிலும் பாலைவனங்களிலும் வசிப்பவை. பூச்சிகளையும் நிலத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் சிறு சிறு பறவைகளின் முட்டைகளும்தாம் இவற்றின் உணவு.

சிங்காரா

செய்தி சொன்ன கானமயில்

கெசெல் (Gazelle) என்ற மான் வகையைச் சேர்ந்ததுதான் சிங்காரா. இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வாழ்கின்றன. அதிகபட்சம் 2.2 அடி உயரம் வளரும். மென்மையான செம்மை கலந்த முடிகளோடு கூடிய இதன் தோல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். குளிர்காலத்தில் அதன் கழுத்தில் தொடங்கி வயிறு வரை நீளும் வெள்ளை நிறம், மிக அடர்த்தியாகத் தெரியும். 15 இன்ச் நீளத்துக்குக் கொம்புகள் வளரும். வறண்ட புல்வெளிக் காடுகள், பாலைவனம், புதர்க்காடுகள் போன்ற நிலப்பகுதிகளில் வாழ்கின்றன.

சிங்காராக்கள் மிகவும் பயந்த சுபாவம்கொண்டவை. மனிதர்களிடமிருந்து தள்ளியே வாழும். உண்ணும் தாவரங்கள் மற்றும் புற்களிலிருந்தே தேவையான நீர்ச்சத்தை எடுத்துக்கொள்ளும். நீண்ட காலத்துக்குத் தண்ணீர் இல்லாமலே தாக்குப்பிடிக்கும். தற்போது, ஒரு லட்சம் சிங்காராக்கள் இந்தியாவில் உள்ளன. அதில் 80 சதவிகிதம் தார் பாலைவனத்தில் வாழ்கின்றன.

ஏற்கெனவே நீர்ப்பற்றாக்குறை உள்ள பாலைவனப் பகுதியான ராஜஸ்தானில், சுற்றுலாப் பயணிகளை கவர, நீச்சல்குளத்துடன் ரிசார்ட்டுகள் அமைப்பதால், பிற உயிர்களுக்கு நீர் கிடைப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.