
மெய்ப்பொருள் காண் - சங்கம்
சங்க இலக்கியம் தொட்டு, இன்று வரை தொடர்கிறது ‘சங்க’ மரபு. ‘சங்கம்’ என்ற சொல், சங்கு என்பதோடு தொடர்புடையது. பெருங்கடலோடிகளான தமிழர்களுக்கு சங்குடனான தொடர்பு என்பது நீண்ட வரலாற்றையுடையது. சங்கு, தமிழோடும் தமிழ் மக்களோடும் மிகுந்த தொடர்புடைய ஒரு பொருள். பிறந்ததும் சங்கில் பால் புகட்டுவது முதல், இறப்பில் சங்கு ஊதி சடங்குகள் நிறைவேற்றுவது வரை அது தொடரும். ‘அமுதபருவம் வலம்புரியாய் அமைந்ததொரு சங்கு’ என்பார் கவிஞர் யூமா வாசுகி. பால் புகட்டும் முலையே சங்காகத்தான் தெரிகிறது கவிஞருக்கு.

‘திருவிளையாடல்’ படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். ‘‘சங்கறுப்பதெங்கள் குலம்... சங்கரனார்க்கேது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம்... நும்போல் இரந்துண்டு வாழ்வதில்லை’’ எனச் சங்கரனையே எள்ளிப் பேசுவார், சங்கப் புலவர் நக்கீரர். சங்கை அறுத்துத் தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர், புலவர் நக்கீரர் என்பது வசனத்தில் தெளிவாகும் தகவல். சங்கப் புலவர் ‘சங்குப்’ புலவராகவும் இருந்திருக்கிறார்.
போரைச் சங்கு ஊதித் தொடங்கி வைப்பார்கள்... சங்கு ஊதி முடித்து வைப்பார்கள். தொடக்கமும் முடிவும் சங்கோடு ஆனது நம் பண்பாடு. பிற்காலங்களில், தொழிற்சாலைகள் உருவானபோது ‘ஆலைச் சங்கு முழங்கியது’ என்றனர் தமிழர். ஆலைகள் தொழிற்சங்கத்தோடு தொடர்புடையவை. நான்கு பேர் கூடும் இடம் சங்கம். ‘ஜனநாயக வாலிபர் சங்கம்’, ‘மகளிர் சங்கம்’ முதல் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வரை தமிழர்கள் சங்கங்களால் ஆனவர்கள்.சங்கும் சங்கமும் மக்கள் சங்கமிக்கும் அதாவது, மக்கள் கூடுமிடம் குறித்து நிற்பவை. கடல் சங்கமிக்கிற இடங்களிலேயே சங்கு உயிர் வாழ்கிறது. சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவையே சங்கமாகிறது. தென் மதுரையிலும், கபாடபுரத்திலும் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் கடல் எல்லையிலேயே அமைந்திருந்தன. இரண்டையும் கடல் கொண்டதனால், இன்றைய மதுரையிலே மூன்றாவது தமிழ்ச் சங்கம் அமைந்ததாக இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. புலவர்கள் தலைமையில் அமைந்த குழுவை, சங்க இலக்கியங்களில் ‘புணர்கூட்டு’ எனும் பெயரால் அறிகிறோம். அக்காலத்திய இலக்கியத்தை, ‘சங்க இலக்கியம்’ எனப் பெயரிட்டு அழைத்தது பிற்காலத்தில்தான். ‘சங்க இலக்கியத்தில், சங்கம் என்ற சொல் இல்லை’ என்பார் உண்டு. சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பல்வேறு புலவர்களாலும் ஆய்வாளர்களாலும் தொகுக்கப்பட்டவை அவை. அந்தப் பாடல்களில் ‘சங்கம்’ என்ற வார்த்தை இல்லை என்பது சரியான வாதம் இல்லை.
‘பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி, நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன்’ என்றும் ‘நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் புலவர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான்’ எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் மொழி வளர ஒன்றுகூடிய புலவர்களுக்குச் சோழன் கரிகாற் பெருவளத்தான் சோறு வழங்கிய செய்தி பாராட்டப்படுகிறது. இறையனாரின் ‘களவியல் உரை’யில் சங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன. நான்காம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்பார் நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்தியது குறித்த செய்திகளைக் காணமுடிகிறது.

அப்பர், திருப்பத்தூர் சிவனை வழிபடும்போது, ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண்’ என்கிறார். அப்பர் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், தனது ‘திருப்பாவை’யில் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்’ எனப் பாடுகிறார். ‘அவையில் இருப்பவர் போல’ என்ற அர்த்தத்தில் சங்கம் இருப்பார் போல என்ற பிரயோகம் உள்ளது.
‘சகரம் தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் சொல்கிறது. அப்படியானால், தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இருக்க வாய்ப்பில்லையே. முச்சங்கம் எல்லாம் கற்பனை’ எனத் தமிழுக்கு சங்கு ஊத நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பாவாணர் முதலான அறிஞர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளனர். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் பாவாணர் பெரும் பட்டியலைத் தந்திருக்கிறார். சரி, சமையல், சட்டி, சருகு, சவடி, சளிசகடு, சட்டை, சண்டை, சப்பு, சவளி, சல்லடை, சலங்கை, சரடு, சத்து, சதங்கை, சழக்காதி எனச் சகரம் முதலாவதாக இடம் பெறும் பழம் தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை வேர்ச் சொல் ஆதாரங்களோடு தந்திருக்கிறார். ஆகவே, ச-வில் தொடங்கும் அத்தனை சொற்களையும் பிறமொழிச் சொற்கள் என ஒதுக்குவது ‘ச’ரித்திரப் பிழையாக மாறிவிடும்.
பௌத்தர்கள் அதிகம் பயன்படுத்திய சங்கம் எனும் சொல்லும் பௌத்தர்களின் சொல்லாகவே மாறிவிட்டது. ‘சங் பரிவார்’, ‘சத் சங்’ எனச் சங்கத்தை வடமொழி சத்தத்தோடு இப்போது உச்சரிப்பதினால் அது வடமொழிச்சொல் ஆகிவிடாது.
‘வால்மீகி ராமாயணத்தில், சீதையைத் தேடச் சென்ற வானரரை நோக்கிச் சுக்கிரீவன், ‘பொதிகை மலையில் அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் உள்ளது; அதனைக் காண்பீர்’ என்று கூறுகிறார். பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான ‘மகாவம்சம்’, ‘ராஜாவளி’, ‘ராஜரத்னாகிரி’ போன்ற நூல்களும் சங்கம் இருந்ததைச் சொல்கின்றன.
இன்று ‘சங்க’ப் புழக்கம் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பல நூறு சங்கங்களைத் தொடந்து, ‘மது அருந்துவோர் சங்கம்’ வரை நீட்சிகொள்கிறது நம் ‘சங்க’ மரபு!
தமிழ்மகன் - படம் : கே.ராஜசேகரன்