
இறையுதிர் காடு - 17

அன்று போகர் காட்டிய ரசமணியை, கிழார்கள் மட்டுமல்ல, அந்த எண் திசைச் சீடர்களும் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே உற்றுப்பார்த்தனர்.
போகரோ அருகில் இருந்த தண்ணீர்ப் பானையை, சீடன் ஒருவனை அழைத்து அருகே எடுத்து வரச் செய்து, அந்தப் பானைக்குள் அந்த ரசமணியைப் போட்டார்.
``போகர் பிரான் அதை எங்கள் கரங்களில் தந்து பார்க்கச் சொல்வீர்கள் என எண்ணினோம்” என்றார் அருணாசலக்கிழார்.
``இது எனக்குப் பயன்படுவது. என் பிறந்த நட்சத்திரம் தசாபுக்திக்கு ஏற்ப இதைக் கொங்கணர் எனக்குச் செய்து தந்தார். இந்த ரசமணி, எப்போதும் இயங்கும் தன்மையுடையது. இது விசைப்பாட்டுக்கு அதாவது புவியீர்ப்பு விசைப்பாட்டுக்கு எதிரானது. என்னுடன் இருக்கும்போது இது எதிர்வினை புரியாது. உங்களிடம் நான் இதைத் தரும்பட்சத்தில் எதிர்வினை புரியலாம். அதனால் உங்கள் உடல்வெப்பத்தில் மாற்றமும், ரத்த ஓட்டத்தில் அழுத்தமும் உருவாகி, அது மாரடைப்பு வரை உங்களைச் செலுத்தலாம். அதனால்தான் நான் இதைக் காட்டினேன். தரவில்லை” - என்னும் போகரின் பதில், அனைவரையும் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
``போகர் பிரானே... ஓர் உலோக உருண்டை இப்படியெல்லாம்கூடவா செய்யும்?” என்று கேட்டார் வேல்மணிக்கிழார்.
``உலோகம் போன்ற உருண்டை என்று கூறுங்கள். உலோகம் என்பது, இந்த மண் சார்ந்தது; புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டது. இதுவோ அதற்கு எதிரானது.”
``எந்த வகையில்... எப்படி?” என்று கிழார் கேட்கும்போதே போகர் பிரான் ரசமணியைப் போட்ட அந்த பானை மெள்ள பறப்பதுபோல் மேல் எழும்பி அந்தரத்தில் நிற்கத் தொடங்கியது. அதைக் கண்ட அவ்வளவு பேரும் வியப்பில் விடைத்தனர்.
``இது என்ன, குறளி வித்தைபோல் இருக்கிறதே?” என்றார் கார்மேகக்கிழார்.
``குறளி வித்தையல்ல... இது ஒரு வகை விண் ஞானம்.”
``அதை விளக்குவீர்களா?”
``முதலில் அந்தப் பானையைக் கீழே இறக்கி வைத்துக் கயிற்றோடு கட்டுங்கள். ரசமணி அதனுள்ளேயே இருக்கட்டும். இந்த நீரை நாளை எல்லோரும் பருகுங்கள். காயகற்பம் தரும் பயனை இந்த நீரும் தந்திடும்! குடல் சுத்தம், சிறுநீரகச் சுத்தம் பித்தகேந்திரச் சுத்தம், மலப்பை சுத்தம் எனும் நால் வகைச் சுத்தம் இதனால் உண்டாகும். பொதுவில் சிறுநீரில் மண்ணில் தாவரங்கள் விளையாது. ஆனால் இந்தத் தண்ணீரின் சிறுநீரில் புற்கள் தழைக்கும். மண்ணில் உப்பு படியாது. இந்த ரசமணி, தண்ணீரில் தன் வேதிச்செயலை நிகழ்த்தியபடியே இருக்கும்” என்று விளக்கமளித்த போகர், ``ரசமணிகுறித்துப் படிக்க நேரும் தருணத்தில் விவரமாய்க் கூறுகிறேன். இப்போது காலத்துளி எவ்வளவு?” என்று போகர் கேட்டிட, அங்கு ஒரு மேடைமேல் வைக்கப்பட்டிருந்த நீர்க்கடிகையை உற்றுப்பார்த்த புலிப்பாணி,
``குருபிரானே... சூரிய அஸ்தமனமாகி இரண்டரை நாழிகை கழிந்துள்ளது. இன்றைய உதயப்படி முப்பத்திரண்டரை நாழிகை கழிந்துள்ளது. விடிவதற்கு இருபத்தேழரை நாழிகை உள்ளது” என்றான்.

``நல்லது. இன்றைய பாடகாலம் இதோடு நிறைவுபெறட்டும். ஒரு நாழிகை கால அளவுக்குள் இரவுப் பசியாறி உறங்கச் செல்லுங்கள். நாளைய பொழுது நல்ல பொழுதாய் விடியட்டும்” என்று கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் போகர்.
கிழார்கள் கையை ஊன்றி எழுந்தனர். ஆனால் சீடர்கள், ஊன்றாமல் நொடிப்பொழுதில் எழுந்து நின்றனர். போகரின் சித்த கொட்டாரத்தில் ஆங்காங்கே எரிந்தபடி இருக்கும் தீப்பந்தத் தீ நாக்குகள் ஊடே ஈசலும் உமி வண்டுகளும் கொட்டமடித்துக்கொண்டிருந்தன. மற்றபடி பம்மெனக் காதை அழுத்தும் இரவு, கரிக்கட்டியால் எல்லாப்புறமும் சூழ்ந்துகிடந்தது. காற்றிடம் ஓர் அறிஞனுக்கு உண்டான நிதானம். பெரிய வீச்சு இல்லை, அதற்காய் தழுவல் இல்லாமலும் இல்லை.
சீடர்கள், போகர் முன் வந்து குனிந்து, அவர் காலைத் தொட்டு வணங்கிவிட்டுப் பிரிந்தனர். கிழார்கள் தங்கள் ஏடுகளைப் புரிக்கயிற்றால் கட்டி அதனுள் எழுத்தாணியைப் படுக்கைவாக்கில் செருகி, பிறகு அந்த ஏட்டுக்கட்டை இரு கைகள் நடுவே வைத்தபடி போகரைக் கும்பிட்டு வணங்கியவர்களாய்ப் பிரியத் தொடங்கினர்.
போகரும் எழுந்து நின்றவராய், மேற்கு நோக்கி நின்று ஆழ்ந்து மூச்சுக்காற்றை இழுத்து நெஞ்சை நான்கு அங்குலம் முன்பக்கம் தூக்கி, அதே நிலையில் இரு கைகளை ஆகாயம் நோக்கி வேண்டுபவர்போல் தூக்கியவர், சில நொடியில் மூச்சுக்காற்றை விடுவித்து காற்றையும் சீரான வேகத்தில் வெளிவிட்டார்.
கச்சிதமாய் கம்பண்ணன் என்னும் அவரது அக உதவியாளன், கொள்ளு ரசமும் ஈச்சம் பழக் கூழும் அவருக்கான உணவாய் செய்து, இரு கலயங்களில் வைத்து எடுத்து வந்திருந்தான். `வைத்துவிட்டுச் செல்’ என்று பார்வையாலேயே கூறியவர், அவருக்கான சயன பாகத்தில் நுழையாமல் ஒரு கோலுடன் புறம் கிளம்பினார்.
மையிருளுக்குள்ளும் ஊடுருவ முடிந்த பார்வை வளம், கழிப்புக்காகச் செல்லும் அவருக்கு வழி காட்டியது.
இது ஒருபுறம் - இதெல்லாமே அன்றாடங்கள்!
கொட்டாரத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றிடும் நோயாளிகளுக்கு வெல்லப் பணியாரமுடன் கடுக்காய் அன்ன உருண்டைகளும், முசுமுசுக்கை ரசமும் உணவாகத் தயாராகிக்கொண்டிருந்தன. சீடர்களுக்கும் வெல்லப் பணியாரமுடன் வரகுக்களி, புளி-மிளகுச் சாற்றுடன் காத்திருந்தது. சீடர்கள் அதைத் தங்களுக்கான பீங்கான் ஏனங்களில் பிடித்தும் பிசைந்தும் தீப்பந்த ஒளிக்கு நடுவே வட்டமாய் அமர்ந்தும் ருசித்துச் சாப்பிட்டனர். சிலர் வரகுக்களியைத் தயிரில் கரைத்து உண்ண விரும்பினர். ஆனால், ஆகாரச் சிப்பந்திகள் தயிர் தர மறுத்தனர்.

இரவுநேரத்தில் கீரைக்கும் தயிர் வகை உணவுக்கும் கொட்டாரத்தில் தடையுண்டு. அது மந்தநிலையைத் தோற்றுவிக்கும். புத்தி கூராக இருக்க விடாது. காற்றில் புறத்தில் அழுத்தக் குறைபாடு ஏற்படும் தருணங்களில் தூக்கம் வரவழைக்கும். ஆனால், காலையில் எதையும் எவ்வளவும் உண்ணலாம். இருப்பினும் பொதினி மலைக்குன்றை நான்கு முறை வலம் வந்திருக்க வேண்டும். இரு தோள்களிலும் வியர்வைப் பாம்புகள் சீற வேண்டும். இதெல்லாமே `கொட்டாரக் கட்டுப்பாடுகள்’ எனப்படும் விதிமுறைகள்!
பெரும்பாலும் எந்தச் சீடனும் இந்தக் கட்டுப்பாடுகளை மீறியதில்லை. உணவு உண்டு முடித்த நிலையில் படுக்கச் செல்வர். அருகிலேயே சமணர் படுக்கைபோல கல்மேடையாகச் செதுக்கப்பட்டிருக்கும் பாறைமேல் சிலர் தங்கள் பருத்தி ஆடையை விரித்து அதன்மேல் படுப்பர். தலை, தரையோடு சமதையாக இருக்க வேண்டும். தலையணையாகத் தலையின் பின் முடிதான் திகழ வேண்டும். ஒரு பலகையைக்கூட வைத்துக்கொள்ளக் கூடாது. கொட்டாரத்தில் சேர்ந்த புதிதில் மிகவே கஷ்டப்பட்டனர்.
`போகிக்கே தலையணை; ரோகிக்கும் யோகிக்கும் அது ஆகாது’ என்பார் போகர். எனவே, பாறைத் தளத்தில் துணி விரித்தோ, இல்லை, பாய் விரித்தோ படுப்பார்கள் சீடர்கள். கோரைப் பாயை, போகர் மிக விரும்புவார். அவர் அதையே பயன்படுத்துகிறார். கோரைக்கு மருத்துவக் குணம் உண்டு. உடம்பின் உஷ்ணம் அதன் மேல்படும்போது அது வேக்காட்டுக்கு உட்பட்டு தன்னுள் இருக்கும் ரசத்தை ஆவியாக்கும். அதை சுவாசிப்பது நல்லது. அந்த ரசம் மயிர்க்கண்களில் தங்கி வியர்வை நாளங்களை நன்கு தூண்டிவிடும். இதனால் தாகம் நன்கு எடுத்து உடம்பின் தண்ணீர்த் தேவை பூர்த்தியாகும்.
சீதள உடம்புடையோருக்கு செம்மறி ஆட்டுக் கம்பளியை சிபாரிசுசெய்வார். இதைப் போர்த்தி உறங்கிட வெப்பம் மிகுந்து சீதளம் கட்டுப்படும். உறங்குவதில்கூட ஆரோக்கிய ரகசியம் மிகுதியாய் உள்ளது என்பார்.

அன்றைய இரவுப்பொழுதும் போகரின் கொட்டாரத்தில் வழக்கமான ஒரு நாளாகக் கழிந்து முடிந்த நிலையில், சீடர்களில் அஞ்சுகனும் புலிப்பாணியும் உறக்கம் வராதவர்களாய் பாறை ஒன்றின்மேல் மல்லாந்திருந்தனர்.
விண்ணில் நட்சத்திரங்களின் ஜாஜ்வல்ய ஒளி! பிறைச்சந்திரன் ஒரு மூலையில் யாரோ தூக்கி எறிந்துவிட்டதுபோல் கிடந்தான்.
அவனொரு முள் இல்லாத கடிகாரம்!
அவன் வளர்நிலையில் ஒளிதான் அளவு - தேய் நிலையில் இருள்தான் அளவு. பிறையைப் பார்த்த புலிப்பாணி, மல்லாந்த நிலையிலிருந்து எழுந்து அமர்ந்தவனாய் கைவிரல்களை விரித்தும் மடக்கியும் ஏதோ கணக்கு போடத் தொடங்கினான்.
அதைக் கவனித்த அஞ்சுகன் அருகில் வந்து அமர்ந்தவனாய் ``என்ன புலி... இரவிலும் கணக்கோடு குலாவலா?” என்று வேடிக்கையாகக் கேட்டான்.
``ஆம் அஞ்சுகா... இன்று வானம் மேகப் புகையின்றி, துலக்கிய பாத்திரம்போல் பளிச்சென இருக்கிறது. நட்சத்திரங்களை நாலாபுறமும் காண முடிகிறது. குறிப்பாக, மான்கொம்புபோல் தோற்றம்தரும் மிருகசீரிஷ நட்சத்திரக் கூட்டம் புலப்படுவது அரிது. இன்று நன்றாகப் புலப்படுகிறது.
பிறைநிலவிடமும் ஐந்தாம் நாளான பஞ்சமியின் ஒளிப்புனல்! வளர்பிறை காலகட்டம் இது! அடுத்த பௌர்ணமி சித்திரைப் பௌர்ணமி. பூமிக்கும் நிலவுக்குமான தூரம் மிகவே குறைவுபடும் நாள். சந்திர வாரிதியும் பூமி மேல் ஏராளமாய்ப் பட்டுத் தெறிக்கும். இந்நாளில் நம் போகர்பிரான் வாலைக்குமரி பூசை செய்வார். அதோடு குரு மருந்தும் செய்வார். குரு மருந்துக்கான உப்புகளில் ஒரு உப்பு இந்தச் சித்திரைப் பௌர்ணமி நாளில் கரிசல்காட்டு நிலப்பரப்பையொத்த மலை அடிவாரங்களில் புல்கூட விளையாத பொட்டல்வெளியில் குழி தோண்டிட கீழே அகப்படும். அந்தக் குழியை எப்போது தோண்டவேண்டும் என்று ஒரு கணக்கு உள்ளது. ஏனெனில், சந்திரவாரிதி நேர்க்கோடாய் குழியில்பட வேண்டும். அப்போது வெண்மணலாய் உள்ள உப்பும் ரசாயனத்தன்மை அடையும். அந்த நேரத்தை நான் இப்போதே கணக்கிடத் தொடங்கிவிட்டேன்.”
``அந்த உப்பு என்ன செய்யும்?”
``ஒரு மருந்தின் வீரியத்தை அந்த உப்பு பல மடங்கு பெருக்கி அளித்துவிடும். குறிப்பாக, யவ்வன காந்தி எனப்படும் இளமைக்கு மிகமிக உதவிடும்.”
``யவ்வன காந்தியா - இது என்ன விநோதமான பெயராக இருக்கிறது?”
``கிழவியைக் குமரியாக்கும் மூலிகை மருந்து அது. ஒரு மண்டலம் உண்டிட, சதம் கண்ட கிழவனும் தன் வயதில் சரிபாதியை இழந்து ஐம்பது வயதை அடைந்திடுவான். எனில், மத்திம வயதையொத்தவர்கள் உண்டால் என்னாகும் என எண்ணிப்பார்.”
``நம் குருவிடம் யவ்வன காந்தி உள்ளதா?”
``அவரிடம் இல்லாததே இல்லை. பல ரகசியங்கள் அவர் மனதுக்குள்ளேயே உள்ளன” - குருவான போகர்குறித்து புலிப்பாணி விளக்கிச் சொன்னபோது, குருவான போகரோ எதிர் திசையில் தன்னந்தனியே பொதினி மலை உச்சி நோக்கி கறுப்பு உருவமாய் ஏறியபடியிருந்தார்.
இன்று அந்தப் பாம்பைப் பார்த்த மாத்திரத்தில், அரவிந்தனுக்குள் அட்ரீனலின் சுரப்பால் பயம்தான் முதலில் ஏற்பட்டது. பாரதிக்குள்ளும் அந்தச் சுரப்பிகள் தாறுமாறாய்ப் பொங்கி உடம்பில் ஓடும் குருதிக்குள் அமிலம் பரவியதில் ஒரு வகை ஸ்தம்பித்த நிலை.
அந்த `ஸ்ஸ்ஸ்ஸ்’ சத்தம் கேட்டு அவர்கள் இருவர் மட்டுமே வந்திருந்தனர். அடைக்கலம்மாவோ, மணியோ மற்ற யாரும் எதனாலோ வரவில்லை. பாம்போ நிமிர்ந்து படம் விரித்திருந்தது. அதன் கருகுமணி போன்ற சிறிய கண்கள் இரண்டும் பாரதியையும் அரவிந்தனையும் வெறிப்பதை நன்றாக உணர முடிந்தது.
மேலே முருகனின் படம்.
கீழே பெட்டி... நிமிர்ந்து சீறிய பாம்பு, பிறகு மெள்ளத் தழைந்து இறங்கி பெட்டியை வளைத்துக்கொண்டு தன் மொத்த உடலின் கட்டுக்குள் பெட்டியைக் கொண்டுவந்த நிலையில் படம் விரித்து பெட்டியின் ஒருபுறமாய்த் தலையை உயர்த்தி மீண்டும் படம் விரித்தது. அது `இது என் சொத்து’ என்று கூறுவதுபோல் இருந்தது.
இதுபோன்ற காட்சிகள் அந்த நாளில் புனைகதைகளில் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நாளில் திரைகளில் கிராபிக்ஸ் விஞ்ஞானம் அந்தப் புனைவைக் காட்சியாக்கியுள்ளது. ஆனால், இப்போது புனைவெல்லாம் இல்லை - கிராபிக்ஸும் இல்லை. கண்ணெதிரில் ஒரு நிஜம்!

எல்லாம் சில நொடிகளே..!
தன் பிடியை விடுவித்த அந்த நாகம், அப்படியே பக்கவாட்டில் திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு ரப்பர் குழாய் ஊர்வதுபோல் அரவிந்தனை எண்ணச் செய்த நிலையில் வெளியேறவும் செய்தது. அது அங்கிருந்து நீங்கவும்தான் இருவருக்கும் சுயநினைவே திரும்பியது. அப்போதுதான் பாரதியும் அரவிந்தனை நெருக்கமாகத் தோளைப் பிடித்துக்கொண்டு நிற்பதை உணர்ந்தாள். அரவிந்தனும் அவளது ஸ்பரிசத்தை உணர்ந்தவனாக வாலிபக் கிளர்ச்சி அடைந்து, பிறகு அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு பாரதியைப் பார்த்தான். பிறகே இருவரும் மெள்ள விலகினர்.
பாரதியின் பார்வை `இந்தச் சம்பவத்தை நீ எப்படி மொழிபெயர்க்கப்போகிறாய்?’ என்பதுபோல் பார்த்தது. இடையே அந்த வற்றாத விபூதி வாசம்.
`இங்கே யாருமில்லை என்று நினைக்க வேண்டாம் - நான் இருக்கிறேன்’ என்பதுபோல் சுவரில் கண்ணாடிச் சட்டத்துக்குள் முருகன்.
கச்சிதமாய் மணியும் ``அடப்போய்யா... அது எங்கயோ போய் பூந்துக்கிச்சிய்யா! நீ பார்த்த நிமிசத்துல அதை அடிச்சிருக்கணும். நீ ஒரு வெட்டிப்பய...” என்ற பேச்சோடு மருதமுத்துவுடன் உள் நுழைந்துகொண்டிருந்தான்.
``ஆமா, நீ பெரிய பீட்டர்... மூடிக்கிட்டு வாய்யா...” என்று மருதமுத்து, மணியைக் கீறினான்.
இருவரும், பாரதி, அரவிந்தனை முழுமையாகக் கலைத்தனர்
பாரதி ஏறிட்டாள்.
``அம்மா அது எங்கியோ பூட்சிம்மா... எனக்குத் தெரிஞ்சு அது இந்த ஏரியாவுலயே இருக்க சான்ஸ் இல்லை. பக்கத்தால அண்டர் கிரவுண்டுல கேபிள் சானல் போவுதும்மா - அதுல நுழைஞ்சிருக்கும். இனி அது வராதும்மா - வந்தா நான் பாத்துக்கிறேம்மா” என்றான் மணி.
``பயர் சர்வீஸுக்கு போன் பண்லியா?”
``எங்கம்மா... அது இருக்கிற இடம் தெரிஞ்சால்ல..?”
``பரவால்ல... அப்படியே தெரிஞ்சாலும் எங்கேயும் யாருக்கும் போன் பண்ண வேண்டாம். நீங்க உங்க வேலைய பாருங்க. அது யாரையும் எதுவும் செய்யாது” - அரவிந்தன் இப்படி ஒரு பதிலைச் சொல்லவும் மணி, மருதமுத்துவைவிட பாரதி அதிகம் ஆச்சர்யப்பட்டாள். அவர்களும் அந்த ஆச்சர்யம் கலையாமல் விலகிட, அரவிந்தன் மெள்ள நிதானமாய் நடந்து வந்து ஹாலில் சோபாவில் அமர்ந்தான்.
அந்த பங்களாவுக்குள் ஓர் அசாத்திய அமைதி! எப்போதும் ஒருவரின் நடமாட்டம் இருந்தபடியே இருக்கும் பரபரப்பான ஓர் அரசியல்வாதியின் பங்களா அது. சொல்லிவைத்த மாதிரி அப்போது, குறிப்பாக அந்த நாகம் பெட்டிமேல் காட்சிதந்தபோது பாரதி, அரவிந்தனைத் தவிர ஒருவரும் இல்லை.
அங்கு நிலவிய மௌனத்தை யார் உடைப்பது என்பதிலும் ஒரு தயக்கம். இருந்தும் அரவிந்தனே உடைத்தான்.
``பாரதி, இங்க இப்ப நடந்த எதுவும் தற்செயலில்ல... சம்திங் மிஸ்டீரியஸ்!” என்றான்.
பாரதியின் கண்களில் அதிகபட்ச விரிவு.

``அந்தப் பெட்டியக்கூட பின்னால குடோன் ரூம்ல தூக்கிப்போட வேண்டாம். அது இங்கேயே இருக்கட்டும். அந்தப் பெட்டிக்கும் பாம்புக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.”
``...”
``ஆமாம்... அந்தப் பெட்டியிலயும் ஏதோ இருக்கு..!”
``...”
``என்ன பாரதி... நான் இப்படிப் பேசறது ஆச்சர்யமா இருக்கா?”
``...”
``எனக்கே இந்தச் சம்பவம் நம்ப முடியாத ஒரு அதிசயம்தான். எப்பவும் அமானுஷ்யம்கிறது ரெண்டு விதம். ஒண்ணு, கேள்விப்படுவது... அடுத்து, நமக்கே அந்த அனுபவம் ஏற்படுவது! கேள்விப்படும்போது நமக்கு ஒரு சாய்ஸ் இருக்கு. அதைப் பொய்னு நாம அப்ப தாராளமா நினைக்கலாம். நினைச்சாதான் அதற்கேற்ப செயல்பட முடியும். ஆனா, நாமே அந்த அனுபவத்துக்கு ஆட்படும்போது நமக்கு சான்ஸே இல்லை. நாம அதை நம்பித்தான் தீரணும்.”
``இப்பவும் நம்ப மறுத்தா?” - பாரதி மெள்ள இதழ் விரித்தாள். பதிலுக்கு, இப்போது அவளை அரவிந்தன் வெறித்தான்.
``என்ன அர்விந்த்... என் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலியா?”
``ஆமாம்... எனக்குத் தெரியல! ஆனா, இப்ப இங்க நடந்த சம்பவம் நிச்சயமா மிஸ்ட்ரிதான்.”
``அந்தக் கண்றாவி எதுக்கு இங்க நடக்கணும்?” - அவள் குரல் ஓங்கலாய் ஒலித்துக் கேட்டது.
``தெரியல... ஒருவேளை இனி தெரியவரலாம்.”
``மண்ணாங்கட்டி... நான் திரும்பவும் சொல்றேன். இது எல்லாமே தற்செயல்தான்... ரொம்ப ரொம்ப தற்செயல்!’’
``சரி பாரதி... டென்ஷனாகாதே! நிதானமா யோசிப்போம்.”
``யோசிக்க என்ன இருக்கு அர்விந்த்? ஒரு பாம்பு, எங்கையாவது மனுஷன் மாதிரி புத்தியோட பிஹேவ் பண்ணுமா? பண்ண அதனால முடியுமா? அதுக்குக் கால் கிடையாது, காது கிடையாது, கை கிடையாது! அது உணர்வால மட்டுமே இயங்குகிற ஒரு உயிரினம். அது பால் குடிக்கிறதும், மகுடி வாசிக்கிறதும் வீணாப்போன இந்தத் தமிழ் சினிமாவுலயும் டி.வி சீரியல்லயும் மட்டும்தான்... அங்கல்லாம் பொய் சொன்னாதான் த்ரில் வரும். த்ரில்தான் இப்ப ஜனங்களுக்கும் பார்க்கப் பிடிச்சிருக்கு. ஆனா, அது அவ்வளவும் பொய்! கதைன்னாலே பொய்தானே?” - பாரதி ஏதோ மேடையில் பட்டிமன்றத்தில் பொய் என்று நிரூபிக்கும் அணிப் பேச்சாளர்போல் பேசினாள். அவள் குரல், சமையல்கட்டில் இருந்த அடைக்கலம்மாவை எட்டிப்பார்க்கச் செய்தது. அவள் பார்க்கவும் பாரதியும் அருகில் அழைத்தாள்.
``அம்மா, கொஞ்சம் வாங்க இங்க...”
``என்ன கண்ணு?”
``நீங்க இவ்வளவு நேரம் உள்ளேயா இருந்தீங்க?”
``ஆமாம் கண்ணு.”
``இப்ப ஒரு அஞ்சு நிமிஷம் முந்தி இங்க நடந்த எதையும் நீங்க பார்க்கலையா?”
``உள்ளே இருக்கும்போது எப்படிப் பாக்க முடியும் கண்ணு?”
``பெரிய பாம்பு ஒண்ணு வந்து அந்த விபூதிப் பெட்டிய சுத்திக்கிட்டு படம் விரிச்சு நின்னுச்சின்னா நம்புவீங்களா?”
``நீ சொன்னா, நான் நம்புவேன் கண்ணு.”
``நான் சொன்னான்னுல்லாம் சொல்லக் கூடாது. ஏன், நான் பொய் சொல்ல மாட்டேனா?”
``எனக்குத் தெரிஞ்சு நீ சொல்ல மாட்டே கண்ணு. இந்த ஜென்மத்துல உன்னால பொய் சொல்ல முடியாது” - அடைக்கலம்மா சொன்னவிதத்தில் ஓர் அலாதி அழுத்தம். பாரதி எழுந்து போய் அம்மாவைக் கட்டிக்கொண்டாள். அரவிந்தன் அதை ரசித்தான். பிறகு விலகியவள் ``அம்மா... நான் சொன்னது உண்மை. இப்ப இங்க நடந்தது. இப்ப சொல்லுங்க - நீங்க நம்புறீங்களா?”
``நம்புறேன் கண்ணு...”
``அடைக்கலம்மா... நீங்க ஒரு கிறிஸ்துவப் பெண்மணி! ஞாயிற்றுக்கிழமை தவறாம சர்ச்சுக்கும் போறீங்க. எப்படி உங்களால இதை நம்ப முடியுது?”
``அதிசயங்கள் எல்லா மதத்துலயும் இருக்கு கண்ணு. ஜீசஸ் நிகழ்த்தாத அற்புதங்களா... இல்ல அந்த வேளாங்கண்ணி மாதா நிகழ்த்தாததா? இது பொய்னா எங்க ஜீசஸ் செத்துப் பிழைச்சவர்ங்கிறதுமில்லியா பொய்யாயிடும்?”
``அப்ப அதுக்காகத்தான் இதை நம்புறதா சொல்றீங்களா?”
``ஏன் இப்படி எதிர்வாதம் பண்றே? ஒரு அனுபவத்துக்கு ஆட்பட்ட பிறகும் நாம அதை சந்தேகப்பட்டா, சைத்தான் நம்மை ஆட்டிவைக்கிறதா அர்த்தம்!” - அடைக்கலம்மா அப்படி ஒரு பதில் கூறுவாள் என்று பாரதி எதிர்பார்க்கவேயில்லை. விக்கிப்போடு பார்த்தாள்.
``நான் வர்றேன் கண்ணு. அடுப்புல வஞ்சிரம் வெந்துகிட்டிருக்குது” - என்று அடைக்கலம்மா நழுவினாள். மீண்டும் இருவர் மட்டும்... அரவிந்தன் முகத்தில் ஒரு குறுநகை உருவாகியிருந்தது. அவன், அடுத்து பாரதி என்ன சொல்லப்போகிறாள் என்பதுபோல் பார்த்தபடியே இருந்தான். அவளோ எதுவும் பேசாமல் போய் சோபாவில் அமர்ந்தாள்.
அரவிந்தன் பெட்டியை நோக்கி நடந்தான்.
அதன் முன் மண்டியிட்டான். நிமிர்ந்தான்.
முருகன் படத்தில் பார்த்தபடி..!
திரும்பக் குனிந்து பெட்டியை ஊடுருவினான். `திருப்புளிச்சங்கரம்’ எனும் செதுக்கிய எழுத்துகள் மேல் விரலால் வருடினான்.
பிறகு அதன் கீழ் உள்ள துவாரங்களில் விரலை விட முயன்றான். சுண்டுவிரல் மட்டும் ஓரளவு நுழைந்தது. அதுவும் ஓர் அளவோடு நின்று உள்ளே ஒரு ஸ்க்ரூவைத் தொட்டு நின்றது. நிச்சயம் மெக்கானிக்கலான ஒரு விஷயம்தான்!
இதுபோன்ற பெட்டிகள் - அதன் லாக்கிங் சிஸ்டம் போன்றவை ஜமீன்தார்கள் சம்பந்தப்பட்டவை. அவர்கள்தான் ஊர் சுற்றுபவர்கள். குறிப்பாக, வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள். அப்படிப் பயணிக்கும்போது அதிசயமாகக் கண்ணில் படுவதை வாங்கவும் செய்பவர்கள். இந்தப் பெட்டி அப்படி வாங்கப்பட்டதுபோல் தெரியவில்லை. பெட்டி மேல் காணப்படும் `திருப்புளிச்சங்கரம்’ என்னும் எழுத்துகளுக்குள்தான் ஏதோ பெட்டியைத் திறக்க முடிந்த ரகசியம் ஒளிந்திருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. தன் கைப்பேசியை எடுத்து பல கோணங்களில் பெட்டியைப் படம்பிடித்துக்கொண்டே சுற்றி வந்தான். பிறகு, திரும்பி பாரதி எதிரே வந்து நின்றான். அவள் தீவிரமாகச் சிந்தித்தபடியே இருந்தாள்.
``பாரதி..”
``...”
``பாரதி, உன்னைத்தான்...”
``சொல்லுங்க அர்விந்த்...”
``நான் கிளம்புறேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.”
``என்ன... கிளம்புறீங்களா?”
``ஆமாம். பெட்டியைத் திறக்க என்ன வழின்னு கண்டுபிடிச்சிட்டு திரும்ப வர்றேன்.”
``அதைத் திறக்கத்தான்வேணுமா?”
``வேண்டாம்கிறியா?”
``எனக்கு இது எதுவுமே பிடிக்கலை அர்விந்த். இந்த வாள், பெட்டி இதெல்லாம் வெறும் கலைப்பொருள். ஜஸ்ட் ஆன்டிக்ஸ்... தட்ஸ் ஆல்.”
``சரி... என்ன சொல்ல வர்றே?”
``இது வந்ததுல இருந்துதான் எல்லாக் குழப்பமுமே... பேசாம திருப்பிக் கொடுத்துட்டா - இல்லை, தூக்கிப்போட்டுட்டா?”
``பயப்படுறியா?”
``சத்தியமா இல்லை... ஏனோ எனக்கு இதெல்லாம் இப்ப கொஞ்சமும் பிடிக்கலை.”
``எனக்குப் புரியுது. நடக்கிற எதுவும் விஞ்ஞானபூர்வமா இல்லை... மர்மமா இருக்கு. அது உனக்கு எரிச்சலைத் தருது.”
``அப்படியும் சொல்லலாம்.”
``ஏன் எரிச்சல் வருது... விஞ்ஞானபூர்வமா இருந்தே தீரணும்னு நீ எதிர்பார்க்கிறதாலதானே?”
``மே பி... நீங்க சொல்ற மாதிரிகூட இருக்கலாம்.”
``இருக்கலாம் இல்லை... அதுதான் உண்மை.”

``சரி அதுல தப்பில்லையே?”
``எல்லா விஷயத்தையும் தப்பு சரின்னு பார்க்கிறதே முதல்ல தப்பு பாரதி. உண்மையில தப்புன்னு ஒண்ணு கிடையாது. சரின்னும் ஒண்ணும் கிடையாது. நாம பார்க்கிற கோணமும் நமக்கு இருக்கிற நாலெட்ஜும் படுத்துற பாடு இது. ஒரு புழுப் பூச்சியை நாம கொன்னா, அது கொலை! - பாவம்... அதை ஒரு பாம்பு விழுங்கினா அதுதான் அதுக்கு உணவு! நமக்குக் கொலை - அதுக்கோ அதுதான் அடிப்படை! இந்த மாதிரி என்னால நிறைய முரண்களைக் காட்ட முடியும்.”
``இது விதண்டாவாதம். இப்படி உங்களால கோர்ட்ல பேச முடியுமா?”
``அது விஷயத்தைப் பொறுத்தது. மனுஷனோட பெரிய பலம், பலவீனம் ரெண்டுமே `நான்’கிற ஈகோதான். உன்கிட்டயும் இப்ப அதுதான் பிரச்னை! நான் சம்பந்தமில்லாம பேசறதா நினைக்காதே, சம்பந்தத்தோடுதான் பேசறேன். இந்தப் பெட்டி, வாள் - உங்க அப்பாவைச் சுற்றி நடக்கிற சம்பவங்கள் எல்லாமே எதையோ நமக்குச் சொல்ல வருது. இது நமக்கு நம்ப வாழ்க்கையில கிடைச்சிருக்கிற அபூர்வமான ஒரு வாய்ப்பு, அப்படித்தான் நான் நினைக்கிறேன். நீ இதுல இருந்து விலக முயற்சி செய்தாலும் முடியாதுன்னுதான் எனக்குத் தோணுது” - அரவிந்தன் தெளிவாக எடுத்துக் கூறும்போது பாரதியின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு. பாட்டி முத்துலட்சுமிதான் பேசினாள்.
``பாரதி... கார் பிரேக் டவுன் ஆயிடிச்சிடா. நீ உடனே டென்ஷன் ஆகாதே... அந்த முருகன் என்னைக் கைவிடலை. ரோடு ஓரமா நான் நிக்கிறதைப் பார்த்துட்டு ஒருத்தர் லிப்ட் கொடுத்தார். ஒரு ஆச்சர்யம் தெரியுமா? அவரும் பழநிதான் போறாரு. அவருக்கு உன்னை நல்லா தெரிஞ்சிருக்கு. நீகூட அவரை பேட்டியெல்லாம் எடுத்தியாமே?”
``யார் பாட்டி அவர்?”
``அதாம்மா... அந்த யோகா மாஸ்டர். சார், உங்க பேர் என்ன சொன்னீங்க?”
``திவ்ய ப்ரகாஷ்!”
``ஆங்... திவ்ய ப்ரகாஷ், திவ்ய ப்ரகாஷ்..!” - முத்துலட்சுமி பேச்சுவாக்கில் அவரிடமே கேட்டுச் சொல்லவும், பாரதியிடம் விதிர்ப்பு. இப்போதுதான் அரவிந்தன் சொன்னான்... `நீ இதுல இருந்து விலக முற்பட்டாலும் முடியாது’ என்று! அது எவ்வளவு பெரிய உண்மை! பாரதி விதிர்ப்போடும், மலைப்போடும் அரவிந்தனைத்தான் பார்த்தாள்!
- தொடரும்.
- இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: ஸ்யாம்