Published:Updated:

முதன் முதலாக: சம்பளம்

முதன் முதலாக: சம்பளம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதன் முதலாக: சம்பளம்

நரன்

1988 -ல் எனக்கு ஏழு வயதாக சில நாள்கள் தேவையிருக்கும்போது, என் அப்பா இறந்துபோனார். கிட்டத்தட்ட அந்த நேரத்தில் அவருக்கு அடக்கப்பெட்டி செய்வதற்கும் தேவாலயத்திற்குக் கல்லறைப் பணம் கொடுப்பதற்கும்கூட அம்மாவிடம் பணம் இல்லை. பாட்டி வீட்டிலிருந்து தந்து உதவினார்கள். 33 வயதான அப்பாவை எப்படியாவது நோய்மையிலிருந்து காப்பாற்றிவிட வேண்டுமென அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகக் கையிலிருக்கும் (எண்பதுகளில் கிட்டத்தட்ட சில லட்சங்கள்)  தொகை முழுவதையும் செலவுசெய்தும் அவரைக் காப்பாற்ற ஏலவில்லை. மருத்துவத் தொகைக்காக, விருதுநகரில் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் விற்றுவிட்டோம். போதாக்குறைக்கு வெளியிடங்களில் லட்சத்தைத் தாண்டி கடன் வாங்கியிருந்தோம்.

முதன் முதலாக: சம்பளம்

என் அம்மா வீட்டு பாட்டி வழியினர், 60 ஆண்டுகளாக விருதுநகரில் பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் அமைத்துக் கொடுப்பதும், அது சார்ந்த வணிகத்திலும் இருந்தார்கள். அம்மா அந்தப் பெரிய வீட்டில் பிறந்தவர். பாவம், தனது 27 வயதில் மொத்தச் செல்வங்களும் கைவிட்டு, மூன்று பிள்ளைகளோடு நிர்கதியாய் நின்றார். அம்மாவிற்கு எப்போதும் என்மேல் (அவளின் கணவனை நான் கொன்றுவிட்டதாக) கோபம் உண்டு. நான் பிறந்தபோது, ஜோதிடர் சடாச்சாரம்  அப்படித்தான் கணித்துச் சொல்லி யிருக்கிறார். இப்போதும் பலமுறை சண்டையின்போது, இதைச் சொல்லித்தான் கத்துவார், “நீ பொறந்து என் புருஷன சாகடிச்சிட்ட...” நான் அதைப் பொருட் படுத்துவதில்லை. பாவம், அவர்களின் ஆற்றாமையை அப்படியாவது வெளிக்காட்டிக்கொள்ளட்டும். எவ்வளவு பெரிய இடத்திலிருந்து எவ்வளவு பெரிய வீழ்ச்சியை அடைந்திருந்தார். எவ்வளவு செல்வச் செழிப்பிலிருந்து எவ்வளவு இல்லாமைக்கு ஆளானாள்.

என் பாட்டி வீட்டிலிருந்து, சொற்பக் கடன் தொகையை அடைக்க வழிசெய்தார்கள். கடுமையான பொருளாதார நெருக்கடி. மேற்படி வருமானத்திற்கும் என்ன செய்வதென்று தெரியாமல்  இருக்கையில், என் தாய்மாமா அவர் நடத்திக்கொண்டிருந்த உணவகமும்  தேநீர்க்கடையும் இணைந்தது  மாதிரியான ஒரு கடையை அம்மாவை நடத்திக்கொள்ளச் சொல்லிக் கையளித்தார். 27 வயதான அம்மா, தனது மூன்று பிள்ளைகளின் வாழ்வியலுக் காகவும் கணவனின் மருத்துவக் கடன்களை அடைக்கவும் அந்தத் தொழிலை விருப்பத்துடன் ஏற்று நடத்தினார். காலை5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையான உழைப்பு. நான்கைந்து வருடங்களில் கடன்சுமை குறைந்து ஓரளவு மூச்சுவிட முடிந்தது. நானும் என் அக்காவும் பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் கடை புழக்கத்திற்குத் தேவையான தண்ணீர் பிடித்து நீர்த்தொட்டிகளில் ஊற்றுவதும், அந்தச் சிறிய சைக்கிளில் விறகு எடுத்துவந்து போடுவதும், வீட்டிலிருந்து கடைக்கு சட்டினி, இட்லி மாவு, இலைக்கட்டு என எடுத்துவருவதுமாகவும் இருந்தோம்.

அக்கா பெரிய மனுசி ஆனதும், அவளைக் கடையில் இருக்க அம்மா அனுமதிக்கவில்லை.  வீட்டிலிருக்கும் தங்கையைக் கவனித்துக்கொள்ள எப்போதும் யாராவது அருகிலிருக்க வேண்டும். தங்கை, மூளைவளர்ச்சி குறைவான குழந்தை. போட்ட இடத்தில் போட்டபடி ஒரு துணிப் பொட்டலம்போல் கிடப்பாள். எப்போதாவது எழுந்து, சுவரைப் பிடித்தபடி நடப்பாள். அவ்வளவு மெலிதான நடை, தரையில் பாதத்தை இறுக்கமாய் ஊன்றாமல் காற்றில் நடப்பதுபோல் நடப்பாள். அதனால் பலமுறை கீழே விழவும் எழவுமாக  இருப்பாள். நல்ல இளம்மஞ்சள் நிறம், தொண்ணூறின் தொடக்கத்தில் தெருவில் அவளை ‘அஞ்சலி பாப்பா’ என அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

முதன் முதலாக: சம்பளம்இந்த இடத்திலிருந்து கட்டுரையை எனது முதல் வேலையையும் முதல் சம்பளத் தொகையையும் நோக்கித் திருப்பிக் கொள்கிறேன். கட்டுரையின் நோக்கம் அதுதான்.

எனது முதல் வேலை என்பது, எங்கள்  ஹோட்டலில் வேலைசெய்ததுதான். ஒன்பது வயதிலிருந்து இருபத்தியோரு வயது வரை அந்தக் கடையில் எல்லா வேலைகளையும் செய்திருக்கிறேன். ஈடு ஈடாக இட்லி அவித்துக் கொட்டுவதிலிருந்து வடை போடுவது, டீ ஆற்றுவது, தெருக் குழாய்களில் நீர் அடித்து ஹோட்டல் தொட்டியில் தண்ணீர் நிறைப்பது, கடைக்கு சாமான்கள் வாங்கிப்போடுவது, கல்லாவில் காசு வாங்கிப் போடுவது (எனக்கு மிகவும் பிடித்தமான வேலை) என நிறைய வேலைகள் செய்தேன். இந்த வேலைகளுக்காக எனது கடையில் நான் நேரடிச் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், திருட்டுச் சம்பளம் வாங்கிக்கொண்டேன். அது வாங்கிக் கொள்வது அல்ல. எடுத்துக்கொள்வது!

ஆறாவது ஏழாவது படிக்கையில்,  பெரும்பாலும் கல்லாவில் உட்காரும்  நாள்களில், ஒரு முழு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துவிடுவேன். கல்லாவின் அருகில் வர வாய்ப்பில்லாத நாள்களில், வாழையிலைக் கட்டு வாங்கச் செல்லும்போது வாழையிலைக் கட்டுத் தொகையில் இரண்டு ரூபாயை உயர்த்திச் சொல்லி அந்தத் தொகையை எடுத்துக்கொள்வேன். இந்தப் பழக்கம் பத்தாவது படிக்கையில் பத்து அல்லது இருபது ரூபாயில் வந்துநின்றது.  பதினொன்று படிக்கையில் என் அக்காவின் திருமணச் செலவும் திருமணக் கடனும்  வந்தபோது, அந்தக் கல்லாவில் பணம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் தானே என்னைவிட்டு விலகிச்சென்றது.

சொந்தக் கடையில் வேலைசெய்தது போக, மற்ற இடங்களிலும் நிறைய வேலை செய்திருக்கிறேன். அந்தக் காலகட்டங்களில், நான் வறுமையில் வாழவில்லை என்றாலும் எங்களுக்கான பணத்தேவை மிகுதியாய் இருந்தது. அட்டை பேக்ட்ரி, இதயம் நல்லெண்ணெய், டின் பேக்ட்ரி, லாட்டரி டிக்கெட் விற்பனை, சிட் பண்ட், வீடு வீடாக  பேப்பர்  போடுவது என. ‘சிட் பண்ட்’ வேலையில் மட்டும் ஐந்து வருடங்கள் இருந்தேன். பதினொன்றாவது படிக்கும்போதிலிருந்து  கல்லூரி முடிக்கும் வரை, தினமும் மாலையில் வேலைக்குச் சென்றுவிட  வேண்டும். அதுபோல எல்லா விடுமுறை நாள்களிலும் முழுநேரம் வேலைக்கு வந்துவிட வேண்டும். அதே நிறுவனத்தில் என்னோடு கவிஞர் செல்வ சங்கரனின் (கனிவின் சைஸ் - மணல்வீடு) அப்பா தனசேகரனும் வேலைபார்த்தார். செல்வசங்கரனும் நானும் ஒரே வயதுடையவர்களாக இருந்தோம். எப்போதாவது அவரின் அப்பாவைப் பார்க்க அங்கு வருவார். மற்ற நேரங்களில் பள்ளி வகுப்பறைகளில் பார்த்துக் கொள்வோம். 13 வயதிற்கு மேல் எனது சொந்த வருமானத்திலிருந்துதான் படித்தேன். இதில் எனக்கு எந்தக் கஷ்டமும் வருத்தமும் இல்லை. உலகின் எல்லா நாடுகளிலும் பதின் வயதடைந்த  மாணவர்கள் (ஆண்-பெண்), பெரும்பாலும் தங்களின் படிப்புச் செலவுகளை பெட்ரோல் பங்குகளிலும் உணவு விடுதிகளிலும் வேலை செய்த தொகையைக் கொண்டுதான் செலவு செய்துகொள்கிறார்கள். இந்தியா மாதிரியான நாடுகளில்தான் ஓர் ஆணுக்குத் தனது சொந்த அறையை, தனது சொந்த உடையைச் சுத்தம் செய்யக்கூட எதோ ஓர் அக்காவோ அம்மாவோ மனைவியோ என்று ஒரு பெண் கடைசி வரை தேவைப் படுகிறாள்.

முதன் முதலாக: சம்பளம்வெளியிடங்களில் எனது  முதல் வேலை என்பது, அட்டை பேக்ட்ரி வேலைதான். 1994-ல் 13 வயதில், பள்ளிக் கோடை விடுமுறைக்கு அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டு மாதம் மட்டும் வேலைக்கு வருவதாகக் கேட்டுக் கொண்டேன். பள்ளிக்குப் புத்தகத் தொகைக்காக அல்லது இரண்டு செட் யூனிபார்ம் வாங்கும் செலவுக்காக மட்டும் ஒரு தொகை தேவையாயிருந்தது.

அந்த பேக்டரி முழுக்க, காக்கி நிறத்தில்  திக்கான காகித ஷீட்டுகள் உருளை உருளையாக நிறைந்துகிடக்கும். வேறொரு பகுதியில் அலை அலையான காக்கி நிறத்தில் மிகவும் திக்கான காகித ஷீட்டுகளின் உருளைகள் கிடக்கும். இந்த அலை அலையான பகுதி நடுவில் இருக்கும் படியாக வைத்து, அதன் மேலும் கீழும் திக்கான காகிதத்தை மெஷின்கள் ஓட்டும். பெட்டிகளாகத் தயாரிக்கப்படும் முன், அதைப் பெட்டி தயாரிக்கும் அளவுக்கு ஏற்றவாறு வெட்டும் கட்டிங் பகுதிகளில் உட்கார்ந்திருப்பேன். உருளையிலிருந்து வெளியேறும் ஷீட்டுகளை மெஷின்கள்  கத்தரித்துக் கத்தரித்து வெளித்தள்ளும். அதைச் சரியாக அடுக்கிவைத்து, தூக்க முடிந்த அளவு எடுத்துப்போய் வேறோர் இடத்தில் அடுக்குவதுதான் எனது வேலை. சில நேரங்களில் முழு அட்டைப் பெட்டியாய் ஆனபின்பு, அதை இருபது இருபதாய் அடுக்கி, பண்டல்போடும் இடத்தில் வேலைசெய்வேன். நாளொன்றுக்கு எனக்கு 27 ரூபாய் ஊதியமாகக் கிடைத்தது. வார ஊதியம், ஒரு வாரத்திற்கு 162 ரூபாய். கிட்டத்தட்ட மூன்று வாரம் வேலை செய்தேன். அவ்வளவுதான். முதலாளி இல்லாத ஒரு நாளில், அட்டைகளைக் கட்டிங் செய்யும் மெஷினை நானே விளையாட்டாக ஆன்-ஆப், ஆன்-ஆப், செய்து விளையாடி ரிப்பேராக்கிவிட்டேன்.  அடுத்த இரண்டு நாள்களாக அந்த மெஷினின் உடலைப் பிரித்துப்போட்டு அதைச் சரிசெய்தார்கள். நான் பயந்துகொண்டு அடுத்த நாளிலிருந்து  வேலைக்குப் போகவில்லை. இறுதி வாரத்தின் சம்பளத் தொகையையும் வாங்கச் செல்லவில்லை. அந்த நிறுவனத்தின் முதலாளி, ஆள்விட்டு தொகையை எங்கள்  கடைக்குக் கொடுத்தனுப்பிவிட்டார். அதில், சம்பளத் தொகையோடு புத்தகச்செலவுக்கான தொகையும், இரண்டு செட் யூனிபார்ம்  வாங்கும் தொகையும் இருந்தது. 

முதன் முதலாக: சம்பளம்

அதன் பிறகு, அந்த முதலாளியோடும் உடன் வேலை பார்த்தவர்களோடும் சகஜமாகிவிட்டேன். எப்போதாவது அந்த பேக்டரிக்கு உரிமையோடு போவேன். புத்தக அட்டை போட நல்ல திக்கான காகிதங்கள் அங்கு இருந்ததும், கறுப்பு நிற ஜெல் பேனாவால்  வரைவதற்கான அழகான காக்கி நிற காகிதங்கள் அங்கு இருந்ததும்தான் அதற்கான முக்கியக் காரணம்.

விருதுநகரில் இப்போதும் உரிமையோடு செல்ல, நிறைய மில்களும் பேக்ட்ரிகளும் இருக்கின்றன. அங்கிருந்தும், எனது டீக்கடையின் மர பெஞ்சுகளிலிருந்தும்தான் எனது கதைகளும் கதைமாந்தர்களும் கிடைத்தார்கள். அவை அதி அற்புதமான நினைவுகள்!