
எட்டு வருஷங்கள்ல 120-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் சினிமா கரியர்ல, வெற்றிகளைத்தான் அதிகம் பார்த்தேன்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில் கெளதமி.
நடிப்பாலும் நளினத்தாலும் மக்களை மகிழ்வித்தவர், வாழ்க்கையில் எதிர்கொண்ட வலிகள் மிக அதிகம். அவற்றையெல்லாம் தாண்டி, சினிமாவிலும் நிஜத்திலும் வென்றுகாட்டியவர். புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளிலும் சமூக ஆர்வலராகப் பயணிக்கும் நடிகை கெளதமி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
16 வயதில் சினிமா!
என் பெற்றோர் மருத்துவர்கள். அவங்க பணிச்சூழல் காரணமா இந்தியாவின் பல மாநிலங்களிலும் வளர்ந்திருக்கேன். நான் இந்தியாவின் குடிமகள். அதனால, `இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள்’னு சொல்ல எனக்கு விருப்பமில்லை. பாசமான பெற்றோர், அண்ணன், நாலு நாய்க்குட்டிகளைத் தாண்டி, படிப்புதான் என் உலகமா இருந்தது. உலக நிகழ்ச்சிகளைத் தெரிஞ்சுக்க நிறைய புத்தகங்கள் படிப்பேன். வெளியூர் பயணங்கள் அதிகம் போவேன். ஒரு பெண்ணுக்கான நியாயமான உரிமைகளுடன் வளர்ந்தேன். நல்லா படிப்பேன். எம்.பி.ஏ படிக்கணும்னு ஆசைப்பட்டு முதல்கட்டமா, இன்ஜினீயரிங் படிப்பை சந்தோஷமா தொடங்கினேன். அப்போ நான் வருஷத்துக்கு ரெண்டு திரைப்படங்களுக்கு மேல பார்த்தால் பெரிய விஷயம். அந்த 16 வயசுல, `தயாமாயிடு’ங்கிற தெலுங்குப் படத்துல ஒரு கேரக்டர் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, சினிமா பயணம் தொடரும்னு நினைக்கலை.

அடுத்து, `காந்திநகர் ரெண்டாவா வீதி’ங்கிற தெலுங்குப் படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஆனா, ‘என்னைப் படிக்க விடுங்க’னு வீட்டில் சொன்னேன். ‘நீ எப்போ வேணும்னாலும் படிக்கலாம். ஆனா, நாம நினைக்கிறப்போ சினிமாவில் புகழ் பெற முடியாது. உனக்கு விருப்பம் இருந்தால், சினிமாவில் நடி. இல்லைனா, படிப்பைத் தொடரலாம்’னு பெற்றோர் விளக்கமா சொன்னாங்க. `சரி, சினிமா உலகம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்’னு முடிவெடுத்தேன். என் வாழ்க்கையே புதுசா மாறியது. எந்த வேலையா இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்யும் நான், நடிப்பு வேலைக்கும் என் அர்ப்பணிப்பைக் கொடுத்தேன். `ஸ்ரீநிவாச கல்யாணம்’கிற தெலுங்குப் படம் பெரிய ஹிட்டாகி, ஒரு நடிகையா எனக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. இந்த நிலையில `குரு சிஷ்யன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். முதல் படத்திலேயே ரஜினிக்கு ஜோடி. அந்தப் படம் ஹிட்டாகி, என் சினிமா கிராப் உயர தொடங்கியது.
எட்டு வருடங்கள்... 120 படங்கள்!
எனக்கு நடனம் தெரியாது. ஆனா, ஷூட்டிங்கில் ஆன் தி ஸ்பாட்டில் ஸ்டெப்ஸ் கத்துக்கிட்டு சிறப்பா ஆடிடுவேன். ஐந்து மொழிகளில் நடிப்பு வாய்ப்புகள் வந்தன. டயலாக்கின் அர்த்தம் தெரிஞ்சுதான் நடிப்பேன் என்பதால, அதற்காகவே தமிழ் உட்பட பல மொழிகளையும் கத்துக்கிட்டேன். என் படங்களை நானேதான் தேர்வு செய்வேன் என்றாலும், ஒருநாளும் பெற்றோர், அண்ணன்னு துணையில்லாமல் தனியா ஷூட்டிங் போனதில்லை. அவங்க அரண்போல என்னைப் பார்த்துகிட்டாங்க. தமிழ் சினிமாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். டூப் இல்லாம சண்டைக் காட்சிகளில் நடிச்சேன். என்னால இதெல்லாம் முடியுமா என்ற ஆச்சர்யத்துடனே, அடுத்தடுத்த புது முயற்சிகளில் கவனம் செலுத்தினேன். திரைத்துறை என் திறமைக்கான அங்கீகாரத்தைக் கொடுத்தது. குறிப்பா, `எங்க ஊரு காவல்காரன்’, `நீ பாதி நான் பாதி’, `தர்மதுரை’, `அவசர போலீஸ் 100’னு நிறைய நல்ல படங்கள்ல நடிச்சேன். `நம்ம ஊரு பூவாத்தா’ படம் ரிலீஸான பிறகு, எங்கே போனாலும் `பூவாத்தா நடிகை’னு மக்கள் என்னைக் கூப்பிடும்போது மகிழ்ச்சியா இருக்கும். சராசரியா ஒருநாளைக்கு மூணு ஷிஃப்ட் நடிப்பேன். எட்டு வருஷங்கள்ல 120-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் சினிமா கரியர்ல, வெற்றிகளைத்தான் அதிகம் பார்த்தேன்.

திருமண வாழ்க்கை... சிங்கிள் பேரன்ட்...
இடைவிடாத நடிப்பு மற்றும் நிறைய புகழைப் பார்த்த நிலையில, கல்யாணம், குழந்தைனு எனக்கான தனிப்பட்ட வாழ்க்கையை வாழணும்னு ஆசைப்பட்டேன். அதனால படிப்படியா நடிப்பைக் குறைச்சுகிட்டு, 1995-ம் ஆண்டு, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தேன். என் மகள் பிறந்ததும், அவதான் என் வாழ்க்கையின் முதல் அங்கம் என்பதில் உறுதியாயிருந்தேன். என் திருமண வாழ்க்கை முறிவு பற்றி எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும்போல நானும் முழு அர்ப்பணிப்புடன் மண வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனா, அதில் பிடிக்காத மற்றும் சரிவராத சில சம்பவங்கள் நடந்தன. அதனால திருமண பந்தத்திலிருந்து பிரிஞ்சோம்; வெறுப்பு, துவேஷம் இல்லாம நண்பர்களாகவே விலகிட்டோம். என் மணவாழ்க்கை சரியா அமையலையே தவிர, எனக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கையுண்டு; அது மிகச் சிறப்பானது.
புற்றுநோயிலிருந்து போராடி வென்றேன்!
வாழ்க்கைப் போராட்டத்துல சிலநேரம் நம் உடல்நலத்தில் சரியா கவனம் செலுத்தாம இருந்திடுவோம். அதனாலோ, வேறு ஏதேனும் காரணத்தாலோ நமக்கு ஏதாவதோர் உடல்நலப் பிரச்னை ஏற்படலாம். அது பத்தி நமக்கு ஓரளவுக்குப் புரிஞ்சுட்டா, பிரச்னையை எதிர்கொள்ளத் தயாராகிடு வோம். அப்படித்தான் என் உடல்ல ஏற்பட்ட சில மாற்றங்களைவெச்சு, `இது புற்றுநோய்க்கான அறிகுறியா இருக்கலாம்’னு உணர்ந்தேன். அப்போ என் மகளுக்கு நாலு வயசு. என்னைத் தவிர, என் குழந்தையை யாராலும் சிறப்பா பார்த்துக்க முடியாது. எனக்காக இல்லைனாலும், என் பொண்ணுக்காகவாவது நான் வாழ்ந்தாகணும். அதனால் உடனடியா மருத்துவரைப் பார்த்தேன். நான் சந்தேகப்பட்டதுபோல எனக்கு கேன்சர் இருப்பது உறுதியாச்சு. அதுக்காகக் கலங்கி உட்கார்ந்தால், எல்லாம் சரியாகிடுமா? குணமாவது மட்டுமே ஒரே வழி. அதனால, இது என்ன மாதிரியான கேன்சர், சிகிச்சை என்ன, நான் சந்திக்கவேண்டிய மருத்துவர்கள் யார், சிகிச்சைக்கு எப்படித் தயாராகணும், முடிவு எப்படி இருக்கணும்னு அதுக்கான விடைகளைத் தேடிப் போனேன். என் மனசு தெளிவாயிருந்ததால, ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன். எந்தச் சூழலிலும் நான் பயப்படலை.
கீமோதெரபி சிகிச்சையின் வேதனைகள் அனுபவிச்ச வங்களுக்குத்தான் தெரியும். அந்த சிகிச்சை முடிஞ்சு மூணு நாள்கள் மூச்சுப்பேச்சில்லாம இருந்தேன். படிப்படியாக இயல்புநிலைக்கு வந்தேன். சிகிச்சையால் உண்டாகிற வலிகளை எனக்குள்ள அடக்கிக்கிட்டு, மகளுக்கு எந்தக் கஷ்டமும் தெரியாம வளர்த்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்த என் அம்மாவும் இறந்துட்டாங்க. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்றதுக்குள்ள, ஒரு வருஷத்துக்குள் என் அப்பாவும் இறந்துட்டார். இழப்புங்கிறது எல்லாரோட வாழ்க்கையிலயும் ஓர் அங்கம். அது எப்போ, எப்படி நிகழும் என்பது முக்கியமானது. என் மகளுக்கு நான், எனக்கு என் மகள் என்கிற நிலை உண்டாச்சு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு மிக முக்கியமானதா ஆனது. பெற்றோர் இழப்பு, புற்றுநோய் சிகிச்சை, சிங்கிள் பேரன்ட்னு ஒரே நேரத்தில் பலமுனைச் சவால்கள். அப்போ நான் அழுதால், அது என் மகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திடும்னு அவ்வளவு கஷ்டத்திலும் நான் அழவேயில்லை. அதுக்கு நேரமுமில்லை. குழந்தையை ஸ்கூலில் பிக்அப், டிராப் பண்றது, கடைக்குப் போறதுனு அன்றாட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன்.

கண்ணீர் சிந்திய அந்த நாள்...
ஒருநாள் காரை ஓட்டிக்கிட்டு, ரொம்பத் தூரமா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குப் போனேன். காருக்குள் இருந்தபடி அமெரிக்காவில் இருந்த என் அண்ணனுக்குப் போன் பண்ணி மனம்விட்டுப் பேசினேன். அப்போ பல வருஷங்களா எனக்குள் இருந்த ஒட்டுமொத்த பாரமும் வெடிச்சுக் கண்ணீரா பெருக்கெடுத்துச்சு. எனக்கு ஆறுதல் சொன்ன என் அண்ணனும் அழுதார். அந்த நீண்ட நேர உரையாடலால், என் மனம் லேசாச்சு. பிறகும் தனிப்பட்ட வாழ்க்கையில பல பிரச்னைகளை எதிர்கொண் டேன்; எதிர்கொள்கிறேன். கண்ணீரின் வாயிலாக என் வலியை அப்பப்போ தனிமையில் இறக்கிவைக்கிறேன். இப்போகூட அழுறேன் பாருங்க. கேன்சரால், உடலளவில் நான் அனுபவிச்ச வலிகளை விவரிக்கவே முடியாது. அதை மனவலிமையால் தாங்கிக் கிட்டேன். ஒருகட்டத் தில் கேன்சருக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று, என் மொத்த வலிமையையும் உணர்ந்தேன். இந்தப் பாதிப்பு எனக்கு வந்ததுக்கும் ஓர் அர்த்தம் இருக்குனு நினைச்சுக்கிட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு உதவ, `லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷ’னைத் தொடங்கினேன்.
எங்க ஃபவுண்டேஷன் மூலமாக கேன்சர் எதனால் வருது, வந்த பின் செய்ய வேண்டியவை, வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள்னு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கறோம். `இது மறைக்க வேண்டிய விஷயமில்லை; எதிர்த்துப் போராட வேண்டிய விஷயம். அதைத்தான் நான் செஞ்சேன்’னு நான் சொல்ல, பலருக்கும் நம்பிக்கை பிறந்தது. என்னைப்போல பலரும் கேன்சரை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்று சந்தோஷமா வாழறாங்க. இதுதான் என் உண்மையான வெற்றி.
கமலும் நானும்
நடிகர் கமல்ஹாசனுடனான பந்தம் என் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இருவருமே ஒருவரின் வளர்ச்சியில் மற்றவர் பங்கு வகிச்சோம். இந்த நிலையில அந்த பந்தத்தில் விரிசல் உண்டாச்சு. இனி இணைந்து வாழ்வது சரியா வராதுனு முடிவெடுத்துதான், பிரிஞ்சு வந்தேன். அதுக்கான காரணம் பத்தியெல்லாம் பேசி எதுவும் ஆகப்போறதில்லை. இனி வாழப்போற வாழ்க்கையைப் பத்திதான் யோசிக்கணும். அத னாலதான் என் ஃபவுண்டேஷன் வேலைகள்ல மட்டுமே கவனம் செலுத்துறேன். அதுக்காகத் தமிழகத்துல நிறைய கிராமங்களை நோக்கிப் போயிட்டிருக்கேன்.
என் வாழ்க்கைக்கு எது சிறப்பானதுன்னு என்னைவிட வேறு யாரால் முடிவெடுக்க முடியும்? கல்யாணத்துக்குப் பிறகு சீரியல் நடிப்பு மற்றும் சினிமா காஸ்ட்யூம் டிசைனர் வேலைகளில் கவனம் செலுத்தினேன். இரண்டாவது இன்னிங்ஸ்ல `பாபநாசம்’ உட்பட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். சினிமாவைவிட்டு எப்போதும் நான் விலகலை. சினிமாவில் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. தொடர்ந்து நடிக்க ஆசைப்படறேன். இயக்குநராகும் எண்ணமும் இருக்கு.
சினிமா பிரபலங்கள் கேமரா முன்னாடி கொடுக்குற சின்ன எக்ஸ்பிரஷன்களும் தியேட்டர்ல 70 எம்.எம் ஸ்கிரீன்ல பெரிசா தெரியுது. அதுபோல, எங்க நிஜ வாழ்க்கையில நடக்கிற எல்லா விஷயங்களும் பெரிதாக்கப்பட்டு விவாதப் பொருளாக மாறும். இது இயல்புதான்.
அதனால என் வாழ்க்கையில் நடக்கிற எந்த விஷயத்தையும் மக்களுக்குத் தெரியாம மறைச்சதில்லை. இருக்கிற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாகணும். இல்லை, வீழ்ந்தாகணும். நான் வாழ முடிவெடுத்தேன்... என் மகளுக்காகவும், என்னைப்போல பலரும் கேன்சரை வெல்வதற்காகவும்.
கேன்சரின் தாக்கத்தால் இப்போவரை எனக்குள் வலி இருக்குது. இப்படி, பல வலிகளால்தான் நான் வாழ்க்கையை உணர்ந்தேன். நம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்துல போராடிக்கிட்டிருக்கேன்... சந்தோஷமாக! இத்தனை பிரச்னைகளை கடந்துவந்த எனக்கு, இனி வரக்கூடிய பிரச்னைகளை எதிர்கொள்வது கஷ்டமா என்ன? இனியும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாகப் போராடுவேன்.
இதுதான் கெளதமி!
- நாயகிகள் பேசுவார்கள்!
-கு.ஆனந்தராஜ்
படங்கள்: பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்
ஸ்லிம் சீக்ரெட்!
நான் ஸ்லிம்மா இருப்பதற்கு மரபணுதான் முதல் காரணம். ஒருகட்டத்துல எதிர்பாராத பிரச்னை களால், என் உடல்நிலையைச் சரியா கவனிக்க முடியலை. அதனால பருமன் ஏற்பட்டது. பிறகு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, என்னைப் பழைய நிலைக்கு மாத்திக்கிட்டேன். தொடர்ந்து இப்போவரை உடலைக் கட்டுக்கோப்பா வெச்சுக்க தினந்தோறும் உடற்பயிற்சி, சரியான நேரத்துக்குச் சரியான உணவு, தூக்கம், நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுன்னு இருக்கேன். இதனால என் உடல்நிலை என் கன்ட்ரோலில் இருக்கு.
நான் ரொம்ப சென்சிட்டிவ்!
வாழ்க்கையில, சவாலான தருணங் களை நிறையவே எதிர் கொண்டிருக்கேன். நான் மிகவும் நேசிச்ச பலரையும் இழந்திருக்கேன். அப்போதெல்லாம் ரொம்பவே வருந்தியிருக்கேன். என்ன பண்றது? நாம சாகிற கடைசி நொடி சுவாசம் வரைக்கும் போராடித்தான் ஆகணும். இதுதான் வாழ்க்கை! அதை உணர்ந்துள்ளதால்தான், என் எதிர்காலம் எப்படி இருந்தாலும், அதை ரசிச்சு வாழவும், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தயாரா இருக்கேன். நான் ரொம்ப சென்சிட்டிவ். சின்னச் சின்ன எமோஷனலான விஷயங்களுக்கும் கலங்கிடுவேன். அதே நேரம், `never ever give up’ என்பதுதான் என் பலம். என் மகள் சுப்புலட்சுமியை நல்ல முறையில் வளர்த்திருக்கேன். அவ பெரியவளா வளர்ந்துட்டா. நல்லது, கெட்டது பற்றி சிந்திச்சு முடிவெடுக்கும் பக்குவமும் அவளுக்கு இருக்கு. அவளுடைய எதிர்கால கரியர் பத்தி அவ எந்த முடிவெடுத்தாலும் நான் பக்க பலமா இருப்பேன்.