காட்டுக்குள் உயர்ந்து ஓங்கி நின்று ஒய்யாரமாக வலம் வந்த சின்னத்தம்பி இன்றைக்குக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறான். வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி, தெரியாத காட்டில் இறக்கிவிட்டு, அதன் இருப்பிடத்தைத் தேடி அலையவிட்டு, ஜே.சி.பி இயந்திரத்தையும் கும்கி யானைகளையும் விட்டுத் துன்புறுத்தியது என சின்னத்தம்பியின் உடம்பைப் போலவே மனதெங்கும் ஏகப்பட்ட காயங்கள் நிறைந்திருக்கக்கூடும். உடம்பில் உள்ள காயத்தைவிட, ‘தன்னிடம் மனிதர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறார்கள்’ என்று நினைத்தே சின்னத்தம்பி வருந்தியிருப்பான்.
கோவை தடாகம், சின்ன தடாகம், ஆணைக்கட்டி ஆகிய பகுதியில் அட்டகாசம் செய்துவந்ததாகக் கூறி சின்னத்தம்பியை கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி டாப்ஸ்லிப் பகுதிக்கு வனத்துறையினர் இடமாற்றம் செய்தனர். அப்போதே சின்னத்தம்பிக்கு ஆதரவாக ‘உச்’ கொட்டி பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்தனர். டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி 31-ம் தேதி பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலகுறிச்சி கிராமத்துக்குள் இறங்கி ராஜநடை போட்டு ஊருக்குள் வலம் வர, வனத்துறையினர் செய்வதறியாமல் திணறிப்போயினர். அங்கிருந்து பல கிராமங்கள் வழியாகப் பயணித்த சின்னத்தம்பி கடைசியில் உடுமலை அருகேயுள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் முகாமிட்டது. அந்தப் பகுதியில் செழிப்பாக வளர்ந்திருந்த கரும்பு, வாழை ஆகியவற்றைச் சாப்பிட்டு ருசி கண்ட சின்னத்தம்பி, இங்கிருந்து இனி நகர மாட்டேன் என அடம்பிடித்து ஆட்டம் காட்டியது. சின்னத்தம்பியைப் பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. கடைசியில், வனத்துறையினர் காட்டிய பலாப்பழத்தைப் பார்த்து ஏமாந்துதான் சின்னத்தம்பி சிக்கிக்கொண்டான். கிட்டத்தட்ட 15 நாள்களாக வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டிய சின்னத்தம்பி இப்போது டாப்ஸ்லிப் வரகளியாற்றில் உள்ள முகாமில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறது.
கிராமத்துக்குள் புகுத்து அட்டகாசம் செய்த அந்த 15 நாள்களில், சின்னத்தம்பி ஒருவர் மீதும் சிறு கீறலைக்கூட ஏற்படுத்தவில்லை. சுற்றியிருக்கும் மனிதர்களைக் கண்டு ஆக்ரோஷம் அடையவில்லை. நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு எவ்வித சேதங்களையும் ஏற்படுத்தாமல் ஓரமாய் ஒதுங்கிப் போயிருக்கிறான் சின்னத்தம்பி. அதே இடத்தில் வேறொரு காட்டு யானை இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். அப்படியிருக்க சின்னத்தம்பி சாதுவாக இருந்தது ஏன்... ஆபரேஷன் சின்னத்தம்பி எப்படியிருந்தது..? என சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனக் கால்நடை மருத்துவர் அசோகன் அவர்களிடம் பேசினோம். “நான் கோயம்புத்தூர் வ.உ.சி பூங்காவில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்பவே சின்னத்தம்பியையும் விநாயகரையும் எனக்குத் தெரியும். அப்பவே மூங்கில் குச்சிகளை உடைச்சி வாயில வச்சிக்கிட்டு ஸ்டைலா சின்னத்தம்பி ரோட்டை கிராஸ் பண்ணி போவான்” என உற்சாகமாகப் பழைய நினைவுகளோடு பேச ஆரம்பித்தார்.
தொடர்ந்து பேசியவர், “சின்னத்தம்பி ரொம்ப அட்டகாசம் பண்ணுதுன்னு புகார் வந்ததால கடந்த மாதம் கோவையிலிருந்து டாப்ஸிலிப் பகுதிக்கு சின்னத்தம்பியை இடமாற்றம் செஞ்சோம். அப்பவே சின்னத்தம்பியைப் பிடிக்க ரொம்ப சிரமமாக இருந்துச்சு. தாய் மற்றும் குட்டிகிட்ட இருந்து பிரிச்சிட்டா, ஈஸியா சின்னத்தம்பியை வண்டியில ஏத்திடலாம்னு நினைச்சோம். ஆனா, நாங்க போட்ட மயக்க ஊசியோட பவர் அது ஆடுன ஆட்டத்துல இறங்கிடுச்சு. அப்புறம் போராடித்தான் சின்னத்தம்பியை டாப்ஸ்லிப்ல விட்டோம். யானைகளைப் பொறுத்தவரை ஞாபக சக்தி அதிகம். மஹாராஷ்ட்ராவுல இப்படி அட்டகாசம் செஞ்ச ஒரு யானையைப் பிடிச்சிக்கிட்டு போய் 300 கி.மீ தாண்டி விட்டுட்டு வந்தாங்க. அடுத்த ஒரு மாசத்துல மறுபடியும் பழைய இடத்துக்கே அந்த யானை வந்துடுச்சு. அந்தமாதிரி, மனிதர்களுடைய வாசனைப் பழக்கப்பட்ட சின்னத்தம்பி டாப்ஸ்லிப்ல இருந்து ஒரே வாரத்துல கீழ இறங்கி கிராமத்துக்குள்ள புகுந்துடுச்சு. தன்னோட இடத்தைத் தேடி தடுமாறி அலைஞ்ச சின்னத்தம்பி, கண்ணாடிபுத்தூர் பகுதியில் நாலா பக்கமும் விளைந்திருந்த நெல், கரும்பு, வாழையைப் பார்த்ததும் அங்கேயே தங்கிடுச்சு. வெயிலுக்கு முன்னாடி நல்லா சாப்பிட்டு, வெயில் வந்ததும் கரும்புக் காட்டுல படுத்து தூங்குறதுன்னு என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. எந்த ஏரியாவுல எப்படி நடந்துக்கணும்னு சின்னத்தம்பிக்கு நல்ல அறிவு. சின்னத்தம்பி ஒரு கிராமத்து வழியா வர்றப்ப குறுக்க வந்த ஒரு பெண்ணை எதுவுமே பண்ணலை. கேஷூவலாகக் கடந்து போயிடுச்சு. சுத்தி நின்னுக்கிட்டு இருந்த மக்களும் யாரும் எந்தத் தொந்தரவும் கொடுக்காததால, அதுவும் எமோஷனல் ஆகலை. அந்த இடத்துல வேற ஒரு பிரச்னை பண்ற யானை இருந்திருந்தா நிலைமையே சீரியஸாகியிருக்கும். விவசாய நிலத்தை நாசப்படுத்துறது, வீட்டை இடிச்சுத் தள்ளுறதுன்னு ஒரு காட்டு காட்டியிருக்கும். இந்த மாதிரியான அறிவுள்ள ஆண் யானையைக் காட்டுக்குள்ள பாக்குறது கஷ்டம். சின்னத்தம்பி காட்டுக்குள்ள இருந்திருந்தா இனச்சேர்க்கை மூலமாக இந்த மாதிரி நிறைய யானைகளை உருவாக்கியிருக்கும்.
எங்களுக்கு என்ன பயம்னா, இது யானைகளுக்கு மதம் புடிக்கிற டைம். ஜனவரியிலயிருந்து 3 மாசம் வரைக்கும் யானைகளுக்கு மதம் புடிக்கும். ஒருவேளை சின்னத்தம்பிக்கு மதம் பிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு கொஞ்சம் பயத்துலதான் இருந்தோம். அதுமட்டுமல்ல, சின்னத்தம்பி அங்குமிங்கும் அலைஞ்சதால மயக்க ஊசி செலுத்துறதே எங்களுக்குப் பெரிய போராட்டம் ஆகிடுச்சு. அப்படி ஒருவேளை நாங்க மயக்க மருந்து கொடுத்ததுக்கு அப்புறம் அது கரும்பு காட்டுல போய் சேற்றுல விழுந்து சிக்கியிருந்தாலோ, கிணற்றுல விழுந்திருந்தாலோ சிக்கல் ஆகியிருக்கும். அதுனால, சரியான இடத்துக்கு அது வர்ற வரைக்கும் நாங்க காத்திருந்தோம். அதுமட்டுமில்லாமல் 20 அடி தூரத்துல நின்னு அதுக்கு நான் மயக்க ஊசி அடிக்கிறேன். நாங்களும் சேறும் சகதியுமான இடத்துலதான் நின்னோம். மயக்க ஊசி போட்டதுல பயந்துபோய் சின்னத்தம்பி எங்களைத் துரத்தியிருந்தா, நாங்களும் சேத்துல விழுந்து சின்னத்தம்பிகிட்ட மாட்டியிருப்போம். ஒருவழியா எப்படியோ சின்னத்தம்பியைப் போராடி பிடிச்சி கேம்ப்ல அடைச்சிருக்கோம். காட்டுக்குள்ள கம்பீரமாக இருந்த யானையைக் கூண்டுல அடைச்சது மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்கு. கேம்ப்ல இருக்க எல்லா யானைகளோடவும் சின்னத்தம்பி நல்லா பழகுறான். அதுக்கு புடிச்ச ராகி, சோளம்னு நல்லா சாப்பாடு கொடுக்குறாங்க. இப்போதைக்கு சின்னத்தம்பி நல்லா சந்தோஷமாக இருக்கான்” என்றார்.
நல்லா இருடா சின்னத்தம்பி!