
சேவை - 18ஓவியம்: பாலகிருஷ்ணன்
பெரு... தென் அமெரிக்க நாடு. அமேசான் காடுகளின் வளமும், மச்சு பிச்சு போன்ற அழகிய பிரதேசங்களும்கொண்ட நாடு. `லுகேமியா’ என்னும் ரத்தப்புற்றுநோயும் செழித்துக் காணப்படுவதுதான் தேசத்தின் சோகம். அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெருவின் குழந்தைகள்தாம். டாக்டர் ரிகார்டோ புன்-சாங்... பாதி தென் அமெரிக்கர், பாதி ஆசியர். 1977-ம் ஆண்டு பெருவின் தலைநகரமான லிமாவில் பிறந்தவர். சிறு வயதுமுதல் சமூக சேவையில் அவருக்கு ஆர்வமிருந்தது. 20 வயதில் அவர் தந்தையை இழந்தார். கொஞ்ச காலத்திலேயே அவரின் தாய் புற்றுநோய்க்கு பலியானார். பின்னர் தன்முனைப்புடன் மெக்சிகோவின் குவாடலஹாரா (Guadalajara) பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த ரிகார்டோ, லிமாவில் தன் மருத்துவச் சேவையைத் தொடங்கினார். அப்போது ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. நோயிலிருந்து மீள வேண்டுமென்றால், அவர்கள் சில மாதங்களாவது தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஒவ்வோர் இரவிலும், மருத்துவமனை வளாகத்தில் ரிகார்டோ கண்ட காட்சி அவருக்குப் பெரும் மனவருத்தத்தைக் கொடுத்தது. குழந்தைகளும் பெற்றோர்களுமாக மருத்துவமனை வராண்டாக்களில் கிடைத்த இடங்களில் தூக்கமின்றி முடங்கிக்கிடந்தனர்.

காரணம், அவர்களில் பெரும்பாலானோர் பெருவின் ஏதோ ஒரு மலைக் கிராமத்திலிருந்து தங்கள் குழந்தைகளை லிமாவுக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள். அவர்களின் கிராமங்களுக்குச் சரியான போக்குவரத்து வசதி கிடையாது. பல இடங்களில் சாலை வசதிகூட கிடையாது. மலைப்பாதையில் நடக்க வேண்டும். கரடு முரடான பாதைகளில் பேருந்து அல்லது வேறு வாகனங்களில் பயணம் செய்து லிமாவுக்கு வந்துசேர வேண்டும். இது போன்ற கடினமான பயணத்தால் குழந்தைகளின் உடல்நிலை மேலும் மோசமானது.

சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் படுக்கைகளோ, அறைகளோ ஒதுக்கித் தரும் அளவுக்கு மருத்துவமனையில் வசதிகள் கிடையாது. மிகவும் எளிய மனிதர்களான அவர்கள் ஹோட்டலில் அறை எடுப்பதற்கோ, வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கவோ பண வசதி கிடையாது. தினசரி உணவுக்குக்கூட அவர்களிடம் பணம் கிடையாது. குழந்தைகளின் சிகிச்சைக்காக, ஊரிலிருக்கும் தங்கள் சொத்துகளைக்கூட விற்றுவிட்டு வந்து லிமாவில் நிராதரவாக நிற்கும் குடும்பங்களும் உண்டு.
டாக்டர் ரிகார்டோ அந்த எளிய மக்களுக்கும், வலியால் அவதியுறும் அந்தக் குழந்தைகளுக்கும் உதவி செய்யத் திட்டமிட்டார். 2008-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் `இன்ஸ்பிரா’ (Inspira) அமைப்பு பிறந்தது.

பெருவின் தொலைதூர ஊர்களிலிருந்து சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தங்குமிடமும், அவர்கள் தங்கியிருக்கும் காலம்வரை உணவும் தேவை. இதற்காகவே நிதி திரட்டி, `இன்ஸ்பிரா’ அமைப்பின் தங்கும் விடுதி ஒன்றை டாக்டர் ரிகார்டோ உருவாக்கினார். லிமாவிலிருக்கும் `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியோபிளாஸ்டிக் டிசீசஸ்’ (National Institute of Neoplastic Diseases - INEN)-ல் சிகிச்சைக்காக வருபவர்களும், சான் போர்ஜா நகரில் இயங்கும் `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைல்டு ஹெல்த்’ (National Institute of Child Health)-க்கு வருபவர்களும் இந்த விடுதியில் தங்கிக்கொள்ளலாம். தங்கும் காலம் முழுவதும் குழந்தைகளுக்கு இலவச, ஆரோக்கிய உணவும் உண்டு.
`இன்ஸ்பிரா’ விடுதியின் சூழல் அவ்வளவு சுத்தமானது; சுகாதாரமானது; குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. `நோயிலிருந்து மீண்டு தாங்களும் இந்த உலகில் நலமுடன் வாழலாம்’ என்ற நம்பிக்கையைத் தரக்கூடியது. குறிப்பாக, குழந்தைகளுக்கு எந்தவிதத்திலும் அவர்கள் நோயாளிகள் என்ற எண்ணம் வரக் கூடாது என்பதில் ரிகார்டோ கவனமாக இருக்கிறார். மருத்துவமனையில் பணியாற்றிய நேரம்போக, தினமும் `இன்ஸ்பிரா’ விடுதிக்காகவும் நேரம் ஒதுக்குகிறார் ரிகார்டோ. அங்கே அவர் கையில் ஸ்டெத் உடன் வருவதில்லை. ஸ்பைடர்மேன் முகமூடி அணிந்தோ, கோமாளிக் குல்லாவுடனோ அல்லது பலூன்களுடனோ, கிரையான்ஸ்களுடனோதான் நுழைகிறார். ஒரு குழந்தையாகவே மாறி அந்தக் குழந்தைகளுடன் விளையாடுகிறார்; கதைகள் சொல்கிறார்; பாடல்கள் பாடுகிறார். வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். முக்கியமாக, குழந்தைகளைக் கலகலவெனச் சிரிக்க வைக்கிறார். ஆம், அவர்களது புன்னகையும் நம்பிக்கையுமே அவர்களை நோயிலிருந்து மீட்டெடுக்கிறது.
`நாங்கள் அமைத்துள்ள இந்தக் கூட்டில் ‘நாம் தனியாக இல்லை. நமக்குத் துணையாக, நம் மீது அன்பு செலுத்த இந்த உலகில் ஏராளமானோர் இருக்கிறார்கள்’ என்ற எண்ணத்தை அனைவரது மனத்திலும் ஆழமாக விதைக்கிறோம்’ என்று சொல்லி புன்னகை செய்யும் டாக்டர் ரிகார்டோவுக்கு `சிஎன்என் ஹீரோ ஆஃப் த இயர் 2018’ (CNN Hero of the Year 2018) விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பரிசுத் தொகையாக 1,00,000 டாலரும் கிடைத்தது. அப்போது மேடையிலேயே டாக்டர் ரிகார்டோ உற்சாகமாகச் சொன்ன நன்றியுரை இதுதான். ‘இந்தத் தொகையால் எங்கள் விடுதியை நாங்கள் இன்னும் விரிவுபடுத்த முடியும். இன்னும் மும்மடங்கு சேவையை எங்களால் அளிக்க முடியும், நன்றி.’
சேவை தொடரும்...

உளவியல் உண்மைகள்!
இரவில் படுக்கைக்குப் போகும்போது, நல்ல விஷயங்களை மனதில் அசைபோடப் பழக்கப்படுத்திக்கொண்டால், அடுத்த நாள் காலை, மிகவும் புத்துணா்வாக இருக்கும், கெட்ட கனவு வராது; தூக்கம் கெடாது. பொதுவாக, `நான் என்னை மிகவும் நேசிக்கிறேன்’ எனப் பல முறை சொல்லிக்கொண்டே உறங்கலாம்.