மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

ஷாஜி - ஓவியங்கள் : ரவி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

னது அபிமான திரையரங்கில் நடந்த அந்த அவல இசை நிகழ்ச்சி, எனக்குள்ளிருந்த இறுதித் துளி தன்னம்பிக்கையையும் இல்லாமலாக்கியது. இசையிலும் கலையிலும் வாழ்க்கையிலும் நான் பெருந்தோல்வியுறப் போகிறேன் என்பது எனக்கு உறுதியானது. அந்தக் கச்சேரியே ஒட்டுமொத்தமாகத் தோற்றுப்போனது என்று பின்னர் அறிந்தேன். வெறுமனே சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தவனை இழுத்துக் கொண்டுபோய், தெரியாத பாடலை மனித சாத்தியமற்ற சுருதியில் பாடவைத்து வஞ்சித்தமைக்கு ஜோஸுகுட்டி மாஸ்டர்மேல் எனக்குக் கோபம் நுரைத்துக் கொண்டிருந்தது. ஒரு நண்பனின் வீட்டுத் தொலைபேசியிலிருந்து அவரை அழைத்தேன். எனது குரல் கேட்டதுமே அவருக்குக் கோபம் பொங்கியது. 

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

“நீ ஒருத்தன்தான்டா அந்தக் கச்சேரியக் கேவலப்படுத்தினே. அந்த எலும்பன் பையன் வந்து தமிழ்ப் பாட்டுப் பாடி அசிங்கம் பண்ணதால கச்சேரி அலங்கோலமாச்சுனு எல்லாரும் சொன்னாங்க” அவர் கொந்தளிக்கிறார். “ஒங்க கீபோர்டு ஆர்ட்டிஸ்டு ஸ்ரீபாலன் கஞ்சா அடிச்சுக் கிறங்கிப்போய் சுதியேத்தி வாசிச்சதாலத்தானே எம்பாட்டு நாசமாப் போச்சு? அதிலும், வெறும் அரைப் பாட்டுதானே நான் பாடினேன். அதால மொத்தக் கச்சேரியும் எப்படித் தோத்துப் போச்சு?” என்று நான் கேட்டதும் அவருக்கு வாய் அடைத்தது. பின்னர் தொலைபேசியில் சில முக்கல் முனகல்கள் மட்டுமே. அப்போது நான் “மாஷே... அடுத்து ரிகர்சலுக்கு நான் எப்போ வரணும்?” என்று கேட்டதற்கு, அந்த ஆள் “நீ இனிமே இந்தப் பக்கமே வராதே. இங்கேர்ந்து சில சாமானெல்லாம் திருட்டு போயிருக்கு. ஒம்மேலதான் எல்லாருக்கும் டவுட்டு” என்று சம்பந்தமில்லாமல் வேறு ஒரு பழியையும் என்மேல் போட்டுவிட்டார். இதுக்குமேலே கேட்க என்ன இருக்கிறது! நொறுங்கிப் போனேன்.

மனவலியின், மந்தத்தின், உளச்சோர்வின் அடியாழத்தில் மூழ்கிப்போனேன். பல நாள்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் கழித்தேன். ஒருநாள் காலை பத்து மணி இருக்கும். வீட்டிற்குப் பின்னால் உள்ள நாட்டுப் பாதையில் நின்றுகொண்டிருந்தேன். மிலிட்டரி குஞ்ஞப்பன் எனும் நபர் தள்ளாடி நடந்துவருவதைக் கண்டேன். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். அவர் கையில் சணல் கயிற்றினால் இணைத்துக் கட்டி தக்கையால் மூடிய இரண்டு கண்ணாடிப் புட்டிகள். அவற்றுக்குள் தெளிந்த தண்ணீர் போன்று ஏதோ ஒன்று அலையாடிக்கொண்டிருந்தது.

“குஞ்சப்பன் சேட்டா… என்ன இது புட்டிக்குள்ள?”

“நல்ல ஒண்ணாம் தரம் காய்ச்சுச் சாராயம் மவனே. தொட்டா பத்தி எரியற சரக்கு. ஒனக்குக் கொஞ்சம் வேணுமா? இந்தா எடுத்துக்கோ.”

போதையில் தழுதழுத்துக் கொண்டு அவர் ஒரு புட்டியை என்னிடம் நீட்டினார். அதைக் கையில் வாங்கி, தக்கை மூடியைக் கழற்றாமலே வாயில் ஒழித்துக் குடிப்பதுபோல் நடித்துக்கொண்டு “கொஞ்சம் குடித்துப் பாக்கட்டுமா” என்று விளையாட்டாகக் கேட்டேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

“ஆமா... ஆமா... நீ ரொம்ப குணிப்பே. உலக மகா குடிகாரன் ஓன் அப்பனாலகூட தண்ணி கலக்காம இதுலேர்ந்து ஒரு துளி குடிக்க முடியாது. நெஞ்சாங்கூண்டு வெந்து வெண்ணியாயிரும்... ஒனக்கு தெய்ரியமிருந்தா குடிரா... பாப்போம்...”

எல்லா நம்பிக்கையும் இழந்து, வாழ்வா சாவா என்று வெறித்த மனநிலையோடு திரியும் ஒருவனைப் பார்த்து சாராயம் குடிக்கச் சவால் விடுவதா? ‘தியாகி’ எனும் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு முழுப் புட்டி ‘XXX’ ரம்மின் மூடியைக் கடித்துத் திறந்து ஒரே இழுப்பில் அதைக் குடித்து முடிக்கும் காட்சிதான் அப்போது எனக்குள்ளே ஓடியது. வேறெதுவுமே யோசிக்காமல் அந்தப் புட்டியின் தக்கையைக் கடித்துத் துப்பினேன். சிவாஜியின் மொடாக்குடியை நகலெடுத்து அந்த நெருப்புத் திரவத்தை மடமடவெனக் குடித்து இறக்கினேன். வாய் எரிந்தது; தொண்டை எரிந்தது; வயிற்றுக்குள்வரை வெந்து இறங்கியது. பித்துப் பிடித்தவன்போல் அதை முழுவதும் குடித்து முடித்து, காலிப்புட்டியைப் பக்கத்திலிருந்த பலா மரத்தில் அடித்து உடைத்தேன். மிலிட்டரி குஞ்சப்பன் மாயமாகிவிட்டிருந்தார். நிலை தடுமாறி புதர்கள் அடர்ந்த மரவேலியின் மேலே சாய்ந்து கீழே பள்ளத்திலிருந்த தென்னை மரத்தடியில் சென்று தலைகீழாக விழுந்தேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...உடம்பை அசைப்பதற்குக்கூடத் திராணியில்லாமல் கக்கியும் வாந்தியெடுத்தும் பலமணிநேரம் அங்கேயே கிடந்தேன். தாங்கமுடியாத தாகமும் விஷம் குடித்தவனைப்போன்ற மரண அவஸ்தையும். கத்தி உதவி கேட்பதற்குக்கூடத் தெம்பிருக்கவில்லை. நெடுநேரத்திற்குப் பிறகு, அங்கிருந்து வலிந்து ஊர்ந்து கீழ்த்தட்டிலுள்ள இன்னொரு தென்னை மரத்தடியில் விழுந்தேன். அங்கேயும் பல மணி நேரம் படுத்தேன். பின்னர் அங்குலம் அங்குலமாக வழுக்கியும் ஊர்ந்தும் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் மாமரத்தடியில் சென்று படுத்தேன். அந்தி நேரமானது. அங்கே அடுக்கியிருந்த விறகை எடுக்க வந்த அம்மா என்னைப் பார்த்தார்.

நான் படுத்திருந்த கோலத்தையும் உடம்பெல்லாம் வழிந்த வாந்தியையும் பார்த்த அம்மா, ஏதோ கடுமையான செயலை நான் செய்துவிட்டதாகவே நினைத்தார். ஏராளமானோர் பூச்சிக்கொல்லி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கும் ஊர்கள் எங்களுடையவை. மூக்கைத் துளைக்கும் சாராய நாற்றம் அடித்தபோது அம்மாவுக்கு அது விஷமல்ல என்ற விஷயம் விளங்கியது. பெரிய விறகுத் துண்டால் என்னை அடி அடி என்று அடித்தார். ஆனால், அது மரத்துப்போன யானைக்காலின்மேல் கொசு கடித்தது போலத்தான் எனக்கு இருந்தது. நில்லாமல் திட்டிக்கொண்டே அம்மா என் தலையில் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றினார். பலவந்தமாகத் தயிரைக் குடிக்கவைத்தார். சினிமாக் கொட்டகைகளில் அலைந்து, கலைக்காக என்று சொல்லி பாட்டுச் சத்தம் கேட்குமிடமெல்லாம் திரியும் தனது மகன், இதோ அப்பாவை வெல்லும் ஒரு குடிகாரனாக மாறவும் இறங்கியிருக்கிறான். அம்மா உடைந்துபோனார்.

பார்த்து முடித்த எண்ணற்ற திரைப்படங்க ளல்லாமல் இந்த வாழ்க்கையில் எனக்கு எதுவுமே மீதமில்லை. பாட்டை உயிருக்கும் மேலாகக் காதலித்தேன் என்றாலும் அதுவும் என்னைவிட்டுப் போய்விட்டது. மாயாத கெட்டபெயர்களும் ஓயாத அவமானங்களும். தற்கொலை செய்வது அல்லது ஊரைவிட்டு எங்கேயாவது ஓடிப்போவது. இரண்டைத் தவிர வேறு வழியெதுவும் தெரியவில்லை. செத்திடுவேன் என்று எண்ணலாமே ஒழிய, அதற்கான துணிச்சல் எனக்கில்லை. தற்கொலை செய்வதற்கு அலாதியான மனோபலம் வேண்டும். தற்கொலை செய்தவர்களை என்றுமே கதாநாயகர்களாக எண்ணி வந்தவன் நான். கோழைகளின் வழியைத் தேர்ந்தெடுத்தேன் நான், ஊரைவிட்டு ஓடிப்போவது. அம்மாவும் அதை ஒப்புக்கொண்டார். “இங்கே கெடந்து நாசமாப்போகாம எங்காவது போய் தப்பிச்சுக்கோ.” அகமதாபாத்திலிருக்கும் அம்மாவின் உறவினர்களிடமோ ஐதராபாத்திலிருக்கும் அப்பாவின் உறவினர்களிடமோ செல்லலாம். தனக்கென மீதமிருந்த தங்கத்தின் கடைசித் தூசுத் துரும்புகளை விற்று அம்மா தந்த பணத்தையும் வாங்கிக்கொண்டு என்றைக்குமாக நான் எனது ஊரைவிட்டுக் கிளம்பினேன். 
               
போலிநாடாக்கள்

மதுரை! இங்கே வருவது இது இரண்டாவது முறை. முன்பு வரும்போது பிரியனும் என்னுடன் இருந்தான். அவனது தங்கம் பூசிய கைக்கடிகாரத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன்தான் வந்தோம். தமிழ்த் திரைப்படப் பாடல்களின் ஒலிநாடாக்களை மொத்தமாக வாங்கி, ஊரில் கொண்டுசென்று விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம். குளிர்சாதனப்பெட்டியைப் போன்று குளுகுளுத்த மலைப்பகுதியிலிருந்து இறங்கி வந்த எங்களுக்கு மதுரையின் கடும் வெப்பம் இரும்பிறைக்கி மரம் எரியும் அடுப்பை நினைவுபடுத்தியது. மதுரை நகரில் எங்கு பார்த்தாலும் பலப் பல பிரமாண்ட சினிமா விளம்பரங்கள். ‘மதுரை தங்கத்தில் நூறாவது நாள், கரிமேட்டுக் கருவாயன்’. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு மாநகரத்தின் கடும் வண்ணங்களையும் எண்ணிலடங்கா மனிதக் கூட்டங்களையும் வாய்பிளந்து பார்த்தவண்ணம் சுற்றித் திரிந்தோம். அதுவரைக்கும் பார்த்திராத விளிம்பிப்பழம், காட்டுப்பிளம் பழம், நாட்டு வாழைப்பழம், இலந்தைப் பழம் எல்லாவற்றையும் வாங்கித் தின்றோம். குதிரை வண்டியில் ஏறினோம். சைக்கிள் ரிக்ஷா சவாரி செய்தோம். இறுதியில் ஆற்றுமணல் போல் மனிதர்கள் மொய்க்கும் திருப்பரங் குன்றத்தின் தெருக்கடை களிலிருந்து நிறைய தமிழ்ப்பட ஒலிநாடாக்களை வாங்கிப் பொதிந்து கட்டி ஊர் திரும்பினோம். ஒரு வாரம் தாண்டும்முன் மலைப்பகுதிகளின் மழைக்குளிரில் அந்தப் போலி ஒலிநாடாக்கள் பூஞ்சணம் பிடித்து அழிந்துபோயின.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் மதுரையில் வந்திறங்கும்போதும் நாலா பக்கமும் வானுயர்ந்த சினிமா விளம்பரங்கள். திராவிடன், வெற்றி விழா, ராஜநடை, புதுப் புது அர்த்தங்கள்... ‘மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே...’ என்று பழைய பூவா தலையா படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடல், சமீபத்தில் வந்த எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தின் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ போன்ற மதுரையைப் பற்றிய திரைப்பாடல்கள்தாம் மனதில் ஓடுகின்றன. ஊரைவிட்டு ஓடிவந்த பின்னரும் சினிமாவும் சினிமாப் பாடல்களும் என்னைவிட்டுப்போக மறுக்கின்றனவே! அண்ணா நகர் எனும் குடியிருப்பினுள் ஒரு முகவரி தேடி அலைந்துகொண்டிருந்தேன். 6, அறிஞர் அண்ணா நகர், மதுரை – 20 என்கின்ற அரைகுறை முகவரி மட்டும்தான் கையில் இருக்கிறது. எதிரில் வந்த நபரிடம் கேட்டபோது, “தம்பீ, உனக்கு போகவேண்டியது எந்தத் தெரு? இது அண்ணா நகர் முதல் தெரு” என்றார். அண்ணா நகர் முதல் தெருவா? அதுவும் ஒரு படத்தின் பெயராயிற்றே! காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் எனும் மலையாளப் படத்தைத் தமிழில் எடுத்ததுதான். இன்னும் பார்க்கவில்லை, பார்க்க வேண்டும். ஆனால், இப்போது எப்படியாவது டைட்டஸ் அண்ணனைத் தேடிக் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

சில காலம் முன்பு ‘றாந்நி’ எனும் ஊரிலுள்ள ஒரு கிறிஸ்தவ இசைக்குழுவில் தமிழ், ஹிந்தி பக்திப் பாடல்களைப் பாட நான் சென்றிருந்தேன். அங்குள்ள வடசேரிக்கரை எனும் ஊரில் நிகழ்ந்த விசேஷ பெந்தகோஸ்தே இசை நிகழ்ச்சிகளுக்கு, கீ போர்டு எனும் மின்னிசைக் கருவியை வாசிக்க மதுரையிலிருந்து பிரத்யேகமாக வந்திருந்தவர் டைட்டஸ் அண்ணன். அக்காலத்து இசைக்குழுக்கள் வாசிப்பதற்கு ஏங்கிக்கொண்டிருந்த ‘ரோலண்ட் எம் 50’ எனும் அபூர்வ சிந்தசைஸர் கருவியுடன்தான் வந்திறங்கினார். அனைத்து மலையாளிக் கிறிஸ்தவர்களுக்கும் பரிச்சயமான பல பாடல்களை இயற்றிய ஒரு பாடலாசிரியரின் மகனாகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த டைட்டஸிற்குத் தமிழ்தான் வரும், மலையாளம் வராது. எனக்குத் தமிழ் தெரியும் என்பதாலேயே நாங்கள் நெருங்கினோம். எந்நேரமும் ஒன்றாகத் திரிந்தோம். செலவுக் காசுக்காகப் பாடவந்த என்னையுமே ஒரு ‘கர்த்தரின் பிள்ளை’யாக அந்த பக்திமான் நினைத்துக்கொண்டார். மேற்கத்திய இசையில் நல்ல பிடிப்பும் ஞானமும் இருந்த அவரது கீ போர்டு வாசிப்பு பிரமாதமாக இருந்தது. ஒரு வாரம் நீண்ட நிகழ்ச்சிகள் முடித்து விடைபெறும்போது என்னைக் கட்டி அணைத்து, ‘எந்தவொரு தேவைக்கும் அவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்’ என்று ஆணையிட்டவாறுதான் ஊர் திரும்பினார். அந்த தைரியத்தில்தான் இப்போது மதுரை வந்திருக்கிறேன்.

அகமதாபாத்திலோ ஐதராபாத்திலோ சென்று, அங்கிருக்கும் உறவினர்களை அண்டிப்பிழைக்க எனக்குத் துளியளவும் மனம் வரவில்லை. சொந்தபந்தங்க ளிடமிருந்து இதுநாள்வரை ஒரு நல்ல வார்த்தை கேட்டதில்லை. குற்றங்குறை சொல்வதும் அவமானப்படுத்துவதும் வசைபாடுவதும்தாம் அவர்கள் எனக்களித்த ஊக்குவித்தல்கள். ‘ஒருபோதும் நீ வெளங்க மாட்டே...’ போன்ற எத்தனையோ ஆசிகள்.  ‘எந்தவொரு தேவையிருந்தாலும் வந்து பார்க்கவும்’ என்று என்னிடம் சொல்லியிருந்த இரண்டு பேரும் எனக்கு ரத்தபந்தம் இல்லாதவர்கள். இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சுரேஷைச் சந்தித்தது திரையரங்கில். டைட்டஸ் அண்ணனைச் சந்தித்தது இசைக் கச்சேரியில். சினிமாவும் இசையும் மொழியும் எனக்குக் கொண்டுவந்து சேர்த்த சொந்தங்கள். சுரேஷ், என்போன்ற சினிமா வெறியன்தான் என்றபோதிலும், அவருக்குக் கலையுலகத்துடன் தொடர்பெதுவுமில்லை. ஆனால், டைட்டஸ் முழுநேரமும் இசையில் மூழ்கி வாழ்பவர். சொந்தமாக இசைக்குழுவை வைத்து நடத்துபவர். ஆதலால்தான், அவரைத் தேடிப்பிடிக்கலாம் என்று மதுரைக்குக் கிளம்பினேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...

அண்ணா நகரில் இருந்தது, டைட்டஸ் அண்ணனின் தாற்காலிக முகவரி என்று அறிந்துகொண்டேன். அக்குடும்பம் பொன்மேனி எனும் இடத்தில்தான் இருக்கிறார்களாம். தூரத்திலிருந்த அவ்விடத்தைத் தேடிப்பிடிப்பதற்குள் இரவாகிவிட்டது. எல்லா வசதிகளும் வாய்ந்த அவ்வீட்டிற்கு டைட்டஸ் அண்ணனும் குடும்பமும் என்னை அன்புடன் வரவேற்றனர். இரவு உணவுக்கு முன்பு பல வகையான பாடல்களும் ஜபங்களும். ‘இவ்வளவு தொலைவிலிருந்து சாஜி சகோதரனைக் கொண்டுவந்து சேர்த்தமைக்குக் கர்த்தருக்கு நன்றியும் தோத்திரமும்.’ தூங்குவதற்கான அறையைக் காட்டிய நேரத்தில் என்னுடைய பிரச்னைகளை நான் அண்ணனிடம் சொன்னேன். “ஒண்ணுமே பயப்படாதே. எல்லாத்தயும் கர்த்தர் பாத்துக்குவார்” என்று ஆறுதலளித்தார். நான் மனப்பாடம் பண்ணவேண்டிய பாடல்களை ஒலிநாடாவில் போட்டுத் தரப்போவதாகவும் ஓரிரு நாள்களில் கச்சேரிக்கான ஒத்திகை ஆரம்பிப்பதாகவும் அவர் சொன்னார். தன்னுடைய ‘டிவைன் மெலோடி’ இசைக்குழுவின் ஒரு பாடகனாக என்னையும் அவர் சேர்த்துவிட்டிருந்தார்!

அந்த வீட்டின் மேல்மாடியிலுள்ள ஒற்றை அறையில் என்னைத் தங்கவைத்தார். உணவும் அங்கேயே கிடைக்கும். பாடல் பயிற்சிக்கான அறையைப் பார்த்தபோது மலைத்துப்போனேன். ‘கார்க் எம்1’, ‘யமஹா டி எக்ஸ்7’, ‘என்சோனிக் மிராஜ்’ போன்ற நவீன மின்னிசைக் கருவிகள்! இந்த உலகிலுள்ள எல்லா இசைக்கருவிகளின் நாதங்களும் அவற்றில் இருக்கின்றன. என்சோனிக்கில் மனிதக் குரல் வரைக்கும் இருக்கிறது! புத்தம்புதிய ‘டாமா டிரம் கிட்’ பளபளக்கிறது. ஒலியமைப்புக்கு மிகச்சிறந்த கருவிகள். இவற்றுக்கு நடுவே கிடந்து இறந்துபோனாலும் பரவாயில்லை. எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும். அண்ணனிடமிருந்து மேற்கத்திய இசையையும் கீ போர்டு வாசிப்பையும் பயிலவேண்டும். பல குறைகள் நிறைந்த எனது பாடும் முறையையும் சரிசெய்ய வேண்டும். நிறைய கனவுகள் கண்டேன். ஆனால், அடுத்த நாள் இரவு உணவுக்கு முன்பு அண்ணன் நடத்திய ஜெபம், அந்தக் கனவுகளையெல்லாம் தவிடுபொடியாக்கியது.

“கர்த்தரே... உமது ஊழியத்திற்காகத் தனது ஊரையும் வீட்டையும் விட்டு ஓடிவந்த சாஜி சகோதரனை ஆசீர்வதியுமப்பா... சிறுவயதிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்நாள் முழுவதும் உமக்குச் சேவை செய்யும்படியாக உறுதிகொள்ள... பிரிய சகோதரனை நீர் பலப்படுத்தியமைக்காக உம்மை தோத்திரிக்கிறேன்... அவனது பாடலில் இருக்கும் குறைகள் அனைத்தையும் சரிசெய்து உமது நாம மகத்துவத்திற்காக மட்டுமே பாடும் சிறந்த பாடகனாக அவனை நீர் மாற்றும்… ஆமேன்!” விவிலியத் தமிழில் அரைமணி நேரத்துக்குமேல் நீண்ட அந்த ஜெபத்தின் ரத்தினச் சுருக்கம் இதுவே! அதைக் கேட்டதும் எனக்குத் தலைசுற்றியது. பக்தியும் நம்பிக்கையும் எதுவாகயிருந்தாலும் அன்பான, பாசாங்கற்ற மனிதர். அவரை ஏமாற்றி ஒரு பக்தனின் வேடத்தில் அங்கே தங்குவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இருந்தும், இசையில் மூழ்கி வாழ்வதற்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்காது. என்ன செய்யலாம்? நிற்கவா போகவா? எங்கே போவேன்? ஊரிலிருந்து மதுரை வெகுதூரமில்லை. பேருந்துக் கட்டணத்திற்குப் பணம் இல்லை யென்றாலும், விடியலுக்கு முன் நடையைக் கட்டினால் நள்ளிரவுக்கு முன் ஊர் போய்ச் சேரலாம். எப்படியாவது மதுரையிலேயே தங்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? எப்படி... அப்போதுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களூரில் வைத்து எனக்கு அறிமுகமான பூவராகவன் எனும் மதுரைக்காரத் தமிழர் என் நினைவுக்கு வந்தார்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...கஞ்சா வியாபாரி

எனது குழந்தைப் பருவத்தின் இறுதி நாள்கள். ஒரு கோடை விடுமுறைக் காலம். அறுவடை முடிந்து காய்ந்துகிடந்த காமாட்சி வயலில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். வேலையோ விளையாட்டோ, எப்போதுமே எதாவது ஒன்றைப் பாடிக்கொண்டிருப்பேன். நெடுங்கண்டத்தில் தமிழர்கள் நடத்தும் உணவுக் கடையிலிருந்த ஒலிநாடாக் கருவியில் புத்தம் புதிய தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கும்போது, அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து அந்தப் பாடல்களை மனப்பாடம் பண்ணிக்கொள்வேன். அங்கே கேட்ட ‘ரோஸீ, மை டார்லிங் ரோஸீ நேசி நீ என்னை நேசி’ எனும் பாடலை உரத்த குரலில் பாடிக்கொண்டுதான் விளையாட்டுக்கிடையே ஓடியாடினேன். அப்போது அதோ கடுங்கை குட்டிச் சேட்டனின் நிலம் வழியாகக் கைலியை மடித்துக் கட்டி, கக்கத்தில் சுருட்டிவைத்த கோணிப்பைகளும் கையில் தொங்கும் மஞ்சப்பைகளுமாக நான்கைந்து தமிழர்கள் நடந்து வருகிறார்கள். அவர்கள் கஞ்சா வாங்க வந்தவர்கள்.

இடுக்கி மாவட்டத்தின் குன்றோரங்களிலும் தாழ்வாரங்களிலும் நீலச் சடயன் கஞ்சா தழைத்து வளர்ந்த காலம். மது அருந்துதல், புகைபிடித்தல் என எந்தவொரு கெட்ட பழக்கமுமே இல்லாமல், ஜெபங்களும் பூஜை புனஸ்காரங்களுமாக வாழ்ந்து வந்தவர்கள்கூட கஞ்சாவைப் பயிரிட்டு வளர்த்த நாள்கள் அவை. நெல், வாழை, கப்பக் கிழங்கு போன்றவற்றைப் போல் கஞ்சாவையும் பேணி வளர்த்தனர். காலையிலும் மாலையிலும் தண்ணீர் கொடுத்து, சிறு குழந்தைகளைப்போல் அவற்றை அடைகாத்தனர். அடிக்கடி சாணியும் கடலைப் பிண்ணாக்கும் கரைத்து ஊற்றிக் கஞ்சாச் செடிகளை போஷித்தனர். ஆறு மாதத்தில் விளைந்து முற்றிக் கிளைதொங்கும் அந்தக் கஞ்சாத் தோட்டங்களுக்கிடையே நடந்துபோன குழந்தைகளுக்குக்கூட லேசாக போதை ஏறியது. அடியோடு வெட்டியெடுத்து, கிளையறுத்து, பெரிய இலைகளைப் பிடுங்கிக் களைந்து, சடை பறித்தெடுத்து வெய்யிலில் உலர்த்தி, ராப்பனியில் நனைத்து, மீண்டும் வெய்யிலில் உலர்த்தி, மீண்டும் பனியில் நனைத்துப் பதப்படுத்தி, பெரிய கோணிப்பைகளில் அழுத்தி நிறைத்துத் தைத்துவைத்த அந்த ‘இடுக்கித் தங்கம்’ தேடி தமிழ்நாட்டிலிருந்து கஞ்சா வியாபாரிகள் வந்துகொண்டேயிருந்தனர். அப்படி வந்தவர்கள்தாம் இவர்களுமே.

அவர்களில் ஓர் இளைஞர் என்னையும் எனது பாட்டையும்தாம் கவனிக்கிறார் எனப்பட்டது. அவருக்கு நிலக்கரியின் வண்ணம். நல்ல உயரம். உருட்டுக் கட்டையைப்போன்ற திடகாத்திரம். ஆனால், சிரிப்பும் முகபாவனைகளும் சிறு குழந்தைகளைப் போன்றது. என்னுடன் விளையாடிக்கொண்டிருந்த ‘சாத்தான்’ அவரைப் பார்த்து தமிழ் பேசும் தொனியில் “அண்ணாச்சீ... பாத்துக்களாமா போத்துக்களாமா” என்று வாயில் வந்த எதையோ கேட்டான். தமிழர்களுக்கு முன்னால் தமிழ்ப் பாடலைப் பாடி அசத்திவிடலாம் என்று நான் எனது பாடலை வலுவாக்கினேன். ‘பள்ளிக்கூடப் பையனுக்கும் பல்லுபோன பாட்டனுக்கும் ஏக்கம், உன்னைப் போலச் சின்னப்பொண்ணு ஆடும்போதும் பாடும்போதும் தாக்கம்...’ “அட! இந்தத் தம்பி புதூப்பாட்டு அட்டகாசமா பாடுறானே! என்னப்பா ஓம்பேரு? இந்தப் பாட்டெல்லாம் ஒனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டவாறு அவர் என்னிடம் வந்தார். “இது எந்தப் படத்தோட பாட்டு தெரியுமா? இதோட மூஜிக் யார்ன்னு தெரியுமா?” அவர் கேட்கிறார். அது எதுவுமே எனக்குத் தெரியவில்லை என்பதை மறைக்க நான் அடுத்த பாடலைப் பாடத் தொடங்கினேன். ‘என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை…’

அந்தப் பாடல்கள் ‘சமீபத்தில் வந்த  ‘அபூர்வ சகோதரிகள்’ எனும் படத்தில் இடம்பெற்றவை என்றும் அதன் மூஜிக் டைரக்டர் ‘டிஸ்கோ டான்சர்’ ஹிந்தித் திரைப்படத்தின் பாடல்கள் வழியாக இந்தியாவையே கலக்கிய பப்பி லஹிரி’ என்றும் பூவராகவன் எனும் பெயர்கொண்ட அவர் எனக்குச் சொல்லித்தந்தார். அக்காலத் தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களான ஊர்வசி, ராதா, கார்த்திக், சுரேஷ் போன்றவர்கள்தாம் அப்படத்தில் நடித்திருக்கிறார்களாம். பாடல்கள் பிரமாதம். ஆனால், படம் சரியாக ஓடவில்லை. ஒரு சாதாரண சினிமாவைப் பற்றி இவ்வளவு தகவல்கள்! தமிழர்கள் பெரும்பாலும் சினிமாவெறியர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை. பதப்படுத்தப்பட்ட கஞ்சா குறைந்த விலையில் எங்கே கிடைக்கும் என்று பூவராகவன் என்னிடம் கேட்கிறார். நான் அவருக்குச் சாத்தானைக் கைகாட்டினேன். அவனுக்குத்தானே ஊரின் விவகாரங்கள் அனைத்தும் தெரியும். அவனது வழிகாட்டலில் தரமான ‘இடுக்கித் தங்கம்’ அவர்களுக்குக் கிடைத்தது. அதைப் பொதிந்து கட்டும் சடங்குகளுக்கு இடையேயும் பூவராகவன் என்னை தமிழ் திரைப்பாடல்களைப் பாடவைத்தார்.

பூவராகவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. சினிமாவையும் பாடல்களையும் பெரிய விஷயமாக நினைக்கும் ரசனையுள்ள மனிதர். அவர் ஒரு கஞ்சா வியாபாரி என்பது என்னை அலட்டவேயில்லை. கஞ்சா வளர்ப்பதும் விற்பதும் தவறு என்று எங்களூரில் யாருமே நினைக்கவில்லையே. அப்போது, கஞ்சா வாங்குவது மட்டும் எப்படித் தவறாகும்? தோள்களில் கஞ்சாப் பொதிகளைச் சுமந்து மதுரைக்குப் புறப்பட்ட அந்தத் தமிழர்களுடன் பாடியும் பேசியும் கொஞ்சநேரம் நானும் நடந்தேன். புதிதாக அறிமுகமாகும் அனைவரிடமும் முகவரியைக் கேட்டு வாங்கும் கெட்ட பழக்கம் எனக்கிருந்தது. பூவராகவனிடமும் நான் முகவரியைக் கேட்டேன். அவர் சொல்லித் தந்ததை எழுதியெடுத்தேன். அக்காகிதத்தின் கீழ்ப்பகுதியில் எனது முகவரியை எழுதி, அதை அவரிடம் கொடுக்க நீட்டும்போது, திடீரென்று எங்கிருந்தோ எங்கள் முன்னே வந்து நின்றார் எனது அப்பா.

“யாருடா இவனுங்க?” பூவராகவனையும் குழுவையும் அடிமுடி பார்த்த அப்பா, எனது கையிலிருந்த காகிதத்தைப் பிடுங்கி படித்தார். அதிர்ச்சியாகி அதைத் துகள் துகளாகக் கிழித்து எறிந்தார். “என்ன காரியத்த பண்ணே நீ அறிவுகெட்ட முண்டம்? கஞ்சா வாங்க வந்த கண்ட கண்ட பாண்டிக்காரன் கைல நீ அட்ரஸ் எழுதிக் கொடுப்பியாடா? இவனுங்க  ‘அந்தியறுப்பனோ முந்தியறுப்பனோ’ இல்லன்னு ஒனக்கெப்டிடா தெரியும்?” அப்பா என்னை சரமாரியாக அடித்தார். வலியில் கதறிக்கொண்டு நான் திரும்பிப் பார்ப்பதற்குள் பூவராகவனும் குழுவும் தொப்பி வளைவுக்குப் பின்னால் நடந்து மறைந்திருந்தனர்.

(தொடரும்)