
வித்யாசாகர் ராவை வம்பிழுக்கும் புரோஹித்
‘பன்வாரிலால் புரோஹித் சிக்கன நடவடிக்கையின் எதிரொலி... ஆளுநர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்தது’ - இப்படியான செய்தி ஒன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது (தமிழக வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம்) கவர்னர் மாளிகையிலிருந்து வெளியானது. உண்மையில் செலவு குறைந்திருக்கிறதா?
பார்க்கலாம்.
இப்படி ஒரு கணக்கு சொல்லியிருப்பதன் மூலம் இதற்கு முன்பு இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள். ‘பன்வாரிலால் புரோஹித் கவர்னர் ஆவதற்கு முந்தைய ஆண்டில்... அதாவது, 2016 அக்டோபர் 6 முதல் 2017 அக்டோபர் 5-ம் தேதி வரை உணவு, விருந்தோம்பல், சுற்றுலா, எரிபொருள், வீடு, அலுவலகங்கள், தோட்டப் பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றுக்கு 3,18,50,982 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பன்வாரிலால் பொறுப்பேற்ற பிறகு 2017 அக்டோபர் 6 முதல் 2018 அக்டோபர் 5-ம் தேதி வரையில், 1,31,47,462 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. தேவை இல்லாத செலவுகளை புரோஹித் பெருமளவு குறைத்ததால், முந்தைய ஆண்டு செலவைவிட மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது’ என பன்வாரிலால் புகழ் பாடுகிறது ராஜ்பவன் செய்திக்குறிப்பு.

புரோஹித் வருவதற்கு முன்பு பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்தான். மகாராஷ்டிரத்தில் இருந்து தேவை ஏற்படும்போது மட்டும் தமிழகம் வந்து போனார். அதாவது அவர் தமிழகத்தில் தங்கிய நாள்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொற்ப காலமே கவர்னர் மாளிகையில் வாசம் செய்த வித்யாசாகர் ராவ் 3.18 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் எனச் சொல்வதன் மூலம் வித்யாசாகர் ராவ்மீது மறைமுக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் புரோஹித்.
கவர்னர் மாளிகை செலவு தொடர்பாகக் கோட்டையில் உள்ள பொதுத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘கவர்னரின் முதன்மைச் செயலாளரான ராஜகோபாலின் தாய், தந்தை, தம்பி ஆகியோர் கவர்னர் மாளிகையில் வி.வி.ஐ.பி-கள் தங்கும் ஜி7, ஜி8, ஜி9, ஜி10 அறைகளில் தங்கி 18 மாதங்கள் ஆகின்றன. அவர்களுக்கான செலவுகளையும் ராஜ்பவன்தான் செய்கிறது. ராஜகோபாலின் தாய் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைக் கவனித்துக்கொள்வதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு டாக்டர்களை ராஜ்பவனில் டூட்டி போட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் ஜி9 அறையை ஐ.சி.யூ வார்டாக மாற்றி, இன்றுவரை அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர் சிவராம கண்ணன் தலைமை யில் டாக்டர்கள், நர்ஸுகள், வார்டு பாய்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவரின் குடும்பத்தினருக்கும் மருத்துவத்துக்கும் செய்யப்படும் செலவுகள் எந்தக் கணக்கில் வரும் எனத் தெரியவில்லை’’ என்றார்கள்.

‘ராஜ்பவன் வளாகத்திலேயே இயற்கை விவசாய முறையில் பயிர்கள் பயிரிடப்படுவதால், சந்தையில் காய்கறிகள் வாங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது’ என்று சொல்கிறது கவர்னர் மாளிகை. இப்படிச் சொல்கிறவர்கள்தான், சைதாப்பேட்டை செளந்தரேஸ்வரர் கோயில் தெருவில் உள்ள ‘கண்ணன் பழமுதிர் சோலை’யில் தினமும் கொள்முதல் செய்கிறார்கள். இது உண்மையா... என்பதைக் கண்டறிவதற்காக அந்த பழமுதிர் சோலைக்குப் போனோம். கவர்னர் மாளிகைக்குச் சொந்தமான TN07 C 5555 என்ற பதிவெண் கொண்ட மாருதி வேனில் தினமும் காலையில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த வேனை பின்தொடர்ந்து போன போது, அது கடைசியில் கவர்னர் மாளிகைக்குள் நுழைந்தது.

‘தமிழகம் முழுவதும் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணிகளோடு, பயணியாகவே பயணம் செய்தார். இதனால் கடந்த ஆண்டு 96.92 லட்சம் ரூபாயாக இருந்த பயண செலவு, 20.13 லட்சமாகக் குறைந்தது’ என்று கணக்கு சொல்கிறது ராஜ்பவன். ‘‘ரயிலில் முதல் வகுப்பில்தான் கவர்னர் பயணிக்க முடியும். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் ரயில்வே துறையைச் சேர்ந்த பராமரிப்பு குழுவும் பயணிக்கும். கவர்னர் எங்கிருந்து புறப்படுகிறாரோ அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் போலீஸ் படையும் அதில் பயணிக்கும். அவர்கள் சென்னை வந்து திரும்பி செல்லும் பயணப்படி, உணவு செலவுகள் எல்லாம் காவல் துறை கணக்கில்தான் வரும். கவர்னர் செல்லும் ரயில் பாதைகளில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் துப்பாக்கியுடன் போலீஸாருக்கு டூட்டி போட்டிருப்பார்கள். இவை எல்லாம் கவர்னர் மாளிகை கணக்கில் வராது. செலவைக் குறைத்துவிட்டதாகச் சொல்லும் கவர்னர் மாளிகை பிற துறையினருக்கு ஏகப்பட்ட செலவுகளை வைத்திருக்கிறது’’ என்கிறார்கள் தலைமைச் செயலக நிதித்துறையினர்.
ராஜகோபாலின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். பதில் கிடைக்கவில்லை. சொல்லும் பட்சத்தில் அதையும் பிரசுரிக்கிறோம்.
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: தி.குமரகுருபரன்