மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 23

இறையுதிர் காடு - 23
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 23

இறையுதிர் காடு - 23

இறையுதிர் காடு - 23

அன்று உதகநீரின் கொடும் தன்மை அறிந்து அதிர்ந்த கிழார்கள் ``காட்டு மிருகங்கள் இந்த நீரைத் தெரியாமல் குடித்துவிட்டால், அவற்றின் வயிறும் கல்லாகிவிடுமா?’’ என்று கேட்டனர். 

இறையுதிர் காடு - 23

``நிச்சயமாக... எங்கேயாவது ஒரு மிருகம் சுருண்டு விழுந்து இறந்து கிடக்கிறது. அதன் வயிற்றுப் பாகமும் கல்போல் உள்ளது என்றால், பக்கத்திலேயே உதகநீர் இருக்கிறது என்று பொருள். இதைவைத்தும் உதகநீரைக் கண்டறியலாம்.’’

``பிரானே, இந்த நீரால் மருத்துவப் பயன் ஏதும் உண்டா?’’

``இல்லை... இந்த நீரைக்கொண்டு கல்லையும் மண்ணையும் குழைத்துச் சுவர் எழுப்பினால், அந்தச் சுவர் மிக உறுதியாக இருக்கும்.  அதேபோல் சிலைகள் எழுப்பலாம். அவையும் உறுதியாக இருக்கும்.’’

``இங்கே நமக்கு அது தேவைப்படக் காரணம்?’’

``அநேகக் காரணங்கள் உள்ளன. ஆயிரம் அள்ளுக்கையளவு அந்த நீர் நமக்குத் தேவை. அந்த நீரை, சுண்ணக்காரைத் தொட்டிகளிலும் பாறைத் தொட்டிகளிலும் மட்டுமே சேமிக்க இயலும். மண்பானைகளிலும் சேமிக்கலாம். அளவில் அதிகமாய் இருக்கும்பட்சத்தில், பாறைத் தொட்டிகளே இதற்குத் தோது.’’

``அப்படியானால், மரக்கோளங்களைக் கோவேறு கழுதைகள் மேல் ஏற்றிச் சென்று ஒரு கழுதைக்கு இரு மரக்கோளம் எனப் பன்னிரண்டு கழுதைகளில் கொண்டு வர வேண்டும்’’ என்றான் புலிப்பாணி.

``எப்படிச் செய்தாலும் சரி, எனக்கு உதகநீர் பெருமளவு தேவை. அதை கவனமாய்க் கொண்டு சேர்க்க வேண்டும். தவறிப்போயும் அதை யாரும் பருகிவிடக் கூடாது. மரப்பலகைகளால் மூடி வைக்க வேண்டும்’’ என்ற போகர், ``இன்று இவ்வளவு போதும். மீதம் நாளை தொடர்வோம்’’ என்றார். கிழார்களும் ஏட்டுக்கட்டை நன்கு கட்டிக்கொண்டு எழுந்தனர். அவர்கள் விலகவும் சங்கனும் புலிப்பாணியும் விலக முற்பட்டார்கள்.

``நில் புலி... நில் சங்கா!’’

நின்றார்கள்.

``எங்கே அஞ்சுகன்?’’

``கொட்டாரத்துள் எங்கேயாவது இருப்பான் எனக் கருதுகிறேன்.’’

``போய் அழைத்து வா...’’

``உத்தரவு குருவே.’’

இறையுதிர் காடு - 23

புலிப்பாணி, சொன்னதுபோலவே அஞ்சுகனைத் தேடி அழைத்து வந்து போகர் முன் நிறுத்தினான்.

``உங்கள் இருவருக்கும் ஒரு கட்டளை...’’

``உத்தரவிடுங்கள் குருபிரானே...’’

``இனி எக்காரணம்கொண்டும் மலை உச்சிக்கு எனக்குத் தெரியாமல் நீங்கள் செல்லக் கூடாது.’’

``அப்படியே ஆகட்டும் குருவே...’’

``பிறர் சென்று வரவும் அனுமதிக்கக் கூடாது.’’

``உத்தரவு பிரான் அவர்களே!’’

``உச்சியில் தண்டக்கோல் நிற்கும் பாகத்தில்தான் கோயில் எழும்பிடவுள்ளது. அங்கே நிலத்தின் குற்றமில்லாத்தன்மை மிக முக்கியம்.’’

``நிலத்திலும் குற்றங்கள் உள்ளனவா?’’

``ஆம்... உள்ளன! பிணங்கள் புதைந்த பகுதிகள், பேய் நடமாட்டம் உடைய பகுதிகள், புதையல் புதைந்து கிடக்கும் பகுதிகள், அறுகு (அறுகம்புல்) வளரா பகுதிகள், எட்டிமரம் வளர்ந்து நிற்கும் பகுதிகள், வடகிழக்கு மேடான பகுதிகள், தென்மேற்கின் தாழ்ந்த பகுதிகள், தென்மேற்கின் நீண்ட பகுதிகள், சூரியக்கதிர் பட முடியாதபடி இருண்டு கிடக்கும் பகுதிகள் என மனிதன் வாழவோ அருளைப் பேணவோ முடியாத நிலங்களை அதன் குற்றமாகத்தான் கொள்ள வேண்டும்.’’

``நீங்கள் சொன்ன எதுவும் உச்சி பாகத்தில் இல்லைதானே குருபிரானே?’’

``ஆம்... மேலான ஒரு சிறப்பும் அந்த உச்சி பாகத்தில் உள்ளது.’’

``அது என்ன குருபிரானே?’’

``செவ்வாய்க்கோளின் வருடாந்தரப் போக்கை, இதன் உச்சியிலிருந்து தடையின்றிக் காண முடியும். அதன் கதிர்வீச்சை இங்கிருந்தே கவர்ந்திழுத்துக் கட்டுப்படுத்தவும் இயலும்.’’

``ஏன் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்?’’

``மனிதர்களை வழிநடத்தும் ஏழு கோள்களில் செவ்வாய் எனும் கோள், சற்று விசித்திரமானது. இரும்பு வாள் ஒன்று இருக்கிறது எனக் கொண்டால், இதில் இரும்பு உலோகம் சனி என்னும் கிரகத்தின் தன்மையுடையது. ஆனால், இந்த இரும்பு வாளாக மாறிக் கூர்மையாகத் திகழ்வது என்பது செவ்வாய் எனும் கோளின் ஆதிபத்தியத்தால்தான். இதனால் வாளோ, கத்தியோ, கட்டாரியோ இவை எல்லாமே செவ்வாய்-சனி சேர்க்கை... இந்தச் சேர்க்கை மிக மிக ஆபத்தானது. இதை கவனமாகக் கையாள வேண்டும்.

மனித உடலில் ஆறாம் அறிவால் அமைந்த மனதின் உறுதித்தன்மை சந்திரனால் மட்டுமின்றி செவ்வாயாலேயே ஏற்படும். இந்த உறுதியே யுத்தம் புரிய உதவி செய்யும். அதனால் யுத்தக்காரர்கள் குறுதிக்காரகன் என்றும் இந்தக் கோளைச் சொல்லலாம். இந்தக் கோளோடு சேரும் கோள்களைப் பொறுத்து வினைப்பாடுகள் பலவாய் மாறிடும். பெண்கள் வரையில் இவன் தோஷத்துக்கு ரியவனாகிவிட்டால் அவர்கள் இல்வாழ்வே கெட்டுவிடும்.

ஒருவர் ஜாதகத்தில் குருவானவர் கெட்டால், பொன் பொருள்தான் குறையும். சந்திரன் கெட்டால் சஞ்சலம், புதன் கெட்டால் கல்விக் கேடு, சுக்கிரன் கெட்டால் சுகக்கேடு, சனி கெட்டால் தொழில் கேடு, சூரியன் கெட்டால் புகழ் கேடு என்று சுருக்கமாய்க் கூறலாம். இந்தக் கேடுகள் சில சமயங்களில் பிற கோள்களின் நடமாட்டங்களால் கூடிக் குறையும். ஆனால், செவ்வாய் கெட்டால் விபத்து, ஊனம், உயிரே போய்விடும் நிலை எல்லாமும் ஏற்பட்டுவிடும். மிக முக்கியமாக, ராசிக் கட்டத்தில் முதல் வீடு எனப்படுவது உயிராகும். எட்டாம் வீடு எனப்படுவது மரணமாகும். இதில் முதல் வீடு மேஷம் - எட்டாம் வீடு விருச்சிகம். இந்த இரண்டும் செவ்வாயின் வீடுகள். எனவே, ஒவ்வோர் உயிரின் பின்னும் இவன் பங்கு அசாத்தியமானது. என்ன புலி... நான் சரியாகச் சொல்கிறேனா?’’

போகர், போகிறபோக்கில் புலிப்பாணியைப் பார்த்து இப்படி வேடிக்கையாகக் கேட்கவும், புலி கை குவித்தவனாக ``பிரானே... தாங்களே என் வித்தையின் வீரியம். தங்கள் ஆசிகளே என்னையும் சோதிடக்கலையில் வளர்த்து வருகிறது. அப்படியிருக்க தாங்களா இப்படி என்னைக் கேட்பது?’’ - என்று கேட்டு நெளிந்தான்.

``இப்படிக் கேட்டதால் அல்லவா நீயும் இப்படி உன் தன்னடக்கத்தைக் காட்ட முடிகிறது!’’

‘`குருவே நீங்கள் பொதினிக்குன்றின் செவ்வாய்த் தொடர்பை முழுமையாய்க் கூறிவிடுங்கள். நான் நுட்பமான பல செய்தி களை உங்கள் மூலம் அறிந்துவருகிறேன். வேறு பேச்சே இடையில் வேண்டாம்.’’

``நல்லது... தொடர்ந்து கேள்! ஏன் செவ்வாய்க்கோளை பூமிதனில் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டாய். ஒரு கோளின் வினைப்பாட்டை பூ உலகில் பிறந்து மானுடர் எவராலும் கட்டுப்படுத்த இயலாது. பிரம்ம சிருஷ்டியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணமும் தன்மையும் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதில் நீருக்கு ஒரு தன்மை, நெருப்புக்கு ஒரு தன்மை, பூமிக்கு ஒரு தன்மை இருப்பது போல்தான் கோள்களின் தன்மையும். அதில் செவ்வாயே மனிதர்களுக்கு தைரியமும் வீரமும் அளிப்பவன். இந்தத் தைரியமும் வீரமும் பேராசைக்காரனிடம் இருக்கும்போது அவன் திருடனாய், கொள்ளையனாய் மாறிவிடுகிறான். ஒரு நாட்டு அரசனிடம் இருக்கும்போது அவன் பிற நாடுகளைத் தன் வீரத்தால் கவர்ந்து அடிமைகொள்ள நினைக்கிறான். தவறான குணமுடையோர் கலவரங்களை உருவாக்கிவிடுகின்றனர். மொத்தத்தில் ஒரு நாட்டின் அமைதியும் வளமும் நல்ல மழைவளத்தால் மட்டுமல்ல... எதிரிகள் தொல்லை இல்லாததிலும் உள்ளது.’’

``புரிகிறது... வரப்போகும் காலங்களில் அதுபோல் ஓர் ஆபத்து இந்த மண்ணில் நிகழவுள்ளதா?’’

``ஆம்... இனிவரும் காலத்தில் இந்தப் பூ உலகம் யுத்த பயமின்றி, அமைதியாகத் திகழ்ந்திட வேண்டியே செவ்வாயின் தெய்வமான முருகனை - அதிலும் அவனது ஆண்டிக்கோலத்தை உபாசிக்கும் ஆலயத்தை, பொதினிக்குன்றில் அமைக்க விரும்புகிறேன்.’’

இறையுதிர் காடு - 23``இதனால் யுத்தமில்லாத பூமி உருவாகிடுமா?’’

``முதலில், பிரளயப் பேரழிவு தடுக்கப்படும். அடுத்து, நிச்சயம் செவ்வாய்க்கோள் மண்மேல் விழுந்து உக்கிரமுடன் தெறித்துப் பரவும் அலைப்பாடு கட்டுப்படுத்தப்படும்.’’

``அது எப்படி?’’

``அது அப்படித்தான்... ஒரு நாளில் ஒரு பொழுதில் எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறிவிட முடியாது. கூறினாலும் உங்களுக்குப் புரியாது. மிகச் சுருக்கமாய் இப்போது கூறுகிறேன். மழை, வெயிலுக்கு எப்படி ஒரு குடை நம்மைக் காக்கிறதோ... அதுபோல் பேரழிவிலிருந்து முருகனின் பேரருள் ஒரு குடைபோல் நம்மையெல்லாம் காத்திடும்!’’ என்ற போகர், அவர்கள் மூவரையும் அருகில் அழைத்து ``கவலைப்படாதீர்கள். உங்கள் காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றியைப் பெறட்டும்’’ என்று தனித்தனியே மூவரையும் கட்டியணைத்து உச்சியில் ஊதி நெற்றியிலும் முத்தமிட்டு உற்றுப்பார்த்துச் சிரித்தார்.

அப்படிச் செய்தால், ஸ்பரிச தீட்சையை முழுமையாக வழங்கிவிட்டதாய் பொருள்!

மறுநாள்!

நாகணவாய்ப் பட்சிகளின் கூக்குரலோடு பொழுது விடிந்தது. புலிப்பாணி, மலை உச்சிக்குப் புறப்படத் தயாராகிவிட்டவன் போல் தோளில் தாவரக்கொடிகளால் ஆன கயிற்றுடன் ஐந்தாறு சுரைக் குடுக்கைகள், இடுப்பில் பிச்சுவாக்கத்தி மற்றும் ஒரு பச்சை மூங்கில் கம்புடன் கொட்டாரம் விட்டுப் புறப்பட்டான். புறப்படும் முன், சூரிய வணக்கத்துடன் பொதினிக்குன்றையும் வணங்கினான். அவனைப்போலவே குடுக்கைகள், கோல், வெட்டுக்கத்தி இவற்றுடன் அஞ்சுகனும் வந்தான். அவனைக் காணவும் புலிப்பாணியிடம் ஓர் உற்சாகம்.

``அஞ்சுகா, நீ எங்கே?’’

``உனக்குத் துணையாகத்தான்...’’

``ஆசான் அனுமதிப்பாரா?’’

``அவர் அனுமதி பெற்றே வருகிறேன்.’’

``அருமை... வா, வெற்றிகரமாய்ப் போய் வருவோம்’’ என்று கூறிய சமயம், ஒரு துணி மூட்டையோடு வந்தான் அடுமனைச் சேவகன் கொம்பேரி மணியன்.

``என்ன இது மூட்டை?’’

``அவல், வெல்லத் தேங்காயும் பேயன் வாழைப்பழங்களும் இதில் உள்ளன. மலைப்பயணம் செய்பவர் பசிக்கு இதுவே இடர்ப்பாடில்லாத உணவு என்று சொல்லிக் கொடுக்கச்சொன்னார் குருபிரான்.’’

அவன் கூறிட, புலியும் நிமிர்ந்து ஏறிட போகர் பிரானும் குடில் வாயிலில் வந்து நின்று அவர்களைப் பார்த்துக் கை அசைத்தார். பதிலுக்கு இருவரும் கை அசைத்தவர்களாய் துளித்த விழிகளோடு கொட்டாரத்தை விட்டுப் புறப்பட்டனர். நடக்க நடக்க, பலப்பல காட்சிகள்!

இடையீடாக ஓடைகள், வரப்புகள், ஆவாரம்புதர் வழிப்பாதைகள்! இதனூடே விருட்டெனக் கடக்கும் சாரைகள், தென்னை உடம்பைத் தொற்றிக்கொண்டு முன் இரண்டு கால்களைத் தூக்கிப் பார்க்கும் ஓணான்கள், விசுக்கெனப் பறக்கும் கொக்குகள், மிரண்டு நோக்கிடும் மிளாமான்கள் என்று அந்த மலையகத்தின் அடிப்பரப்பில் அநேகக் காட்சிகள். பொதினிக்கு மிகச் சரியான மேற்கில் உள்ள ஆனைமலை மேல்தான் முதல் நாள் இடி விழுந்து மின்னல் பூச்சியும் நெளிந்திருந்தது. எனவே, அந்த ஆனைமலை மேல் பார்த்துப் பார்த்து புலியும் அஞ்சுகனும் ஏறினர். அஞ்சுகனிடம் போகர் அளித்திருந்த ரசமணி இருந்தது. அதை இடுப்பில் கட்டியிருந்தான். புலிப்பாணியும்தான். அதன் மகத்துவத்தை, மேலே ஏறிட ஏறிட நன்றாகவே உணர முடிந்தது. கரடி ஒன்று, வேர்ப்பலாவைப் பிளந்து சுளைகளைக் கொத்தாக அள்ளித் தின்றுகொண்டிருந்தது. அது அஞ்சுகனையும் புலிப்பாணியையும் காணவும் செருமலோடு வந்து அவர்களைத் துரத்தாமல் எழுந்து வேறு பக்கம் போயிற்று!

இறையுதிர் காடு - 23

இன்று   திகைத்த பாரதி, கூர்மை யாக அரவிந்தனைப் பார்த்தாள்.

``என்ன பாரதி... நான் இப்படிக் கேட்பேன்னு நீ எதிர்பார்க்கல இல்ல?’’

``ஆமாம் அரவிந்தன்... இது கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்காத ஒரு கோணம். அப்ப அந்தப் பெட்டியதான் நீங்களும் சொல்றீங்களா?’’

``ஆமாம்... நீ வேண்டாம்னு தூக்கி எறிஞ்ச பிறகும் திரும்பி வந்து நிக்கிற பெட்டி... அதோட அடங்காத விபூதி வாசனை. அப்புறம் அதையே சுற்றி வர்ற பாம்பு... அப்ப அதுக்குள்ள நிச்சயம் பெருசா ஏதோ இருக்குன்னுதானே அர்த்தம்?’’

``லாஜிக்கலா உங்க யூகம் சரியாதான் இருக்கு. அதுக்காக, அதுக்குள்ள மருந்து இருக்குன்னு எப்படிச் சொல்ல முடியும்?’’

``உன் வீட்ல உள்ளே என்ன இருக்குன்னு தெரியாத ஒரே விஷயம் இப்ப அந்தப் பெட்டிதான். அப்ப அந்த ஜோசியர் சொன்னதுபோல பெட்டிக்குள்ளதானே மருந்து இருக்கணும்?’’

``நீங்க அப்ப அந்த ஜோசியரை நம்புறீங்களா?’’

``நான், நீ நம்புறது இப்ப விஷயமில்ல... உன் அப்பா நம்புறார்!’’

``அப்பாவுக்கு இந்தப் பெட்டி பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது!’’

``தப்பு... பானு சொல்லியிருக்கலாம் இல்லையா?’’ - அரவிந்தனின் இந்தக் கேள்வி முன்பும் பாரதி சற்று விக்கித்துதான்போனாள்.

``என்ன பாரதி... என் கேள்வி ரொம்பக் குருட்டாம்போக்கா இருக்கா... இல்ல சரியான இன்வெஸ்டிகேஷன்தானா?’’

``அர்விந்த்... நீங்க பல கோணங்கள்ல பார்க்கிற ஒரு ரைட்டர்ங்கிறதை புரூஃப் பண்றீங்க. இப்படியெல்லாம் கேட்டுக்கிட்டாதான் நமக்கும் விடை கிடைக்கும். யூ ஆர் கரெக்ட்!’’

``அப்படின்னா, உன் பாட்டியோடு பழநியிலேருந்து திரும்பிய உடனேயே, அந்தப் பெட்டிய திறந்து பார்த்துட்டுதான் மறுவேலை.’’

``உடைச்சுவேணா பார்க்கலாம்... திறந்து பார்க்க முடியும்னு தோணல. அப்படி முடியும்னா அந்தத் துரியானந்தம் எப்பவோ திறந்து பார்த்திருப்பானே?’’

``உடைக்கிறதும் ஒண்ணும் சாதாரண விஷயமில்லை. திறந்து பார்க்கிறதுதான் சரியான அணுகுமுறை.’’

``ஒரே துவாரமா இருக்கு... எந்த டைப் மெக்கானிசம்னே தெரியலியே!’’

``நிச்சயம் திறக்க முடியும் பாரதி. அதுக்கு முந்தி, அந்தப் பெட்டியை நாம ஒரு பிராப்பர்ட்டியா பார்க்காம மதிப்புக்குரியதா பார்க்கணும். அப்படிப் பார்த்தா நிச்சயம் வழி கிடைக்கும்.’’

``பிராப்பர்ட்டின்னாலே மதிப்புக்குரியதுன்னு தானே அர்த்தம்?’’

``உண்மைதான்... நான் சொல்ற மதிப்பு, பொருள் மதிப்பில்லை... அருள் மதிப்பு!’’

``அருள் மதிப்புன்னா?’’

``அதை சாமியாவே நினைக்கணும். அந்தக் குடுகுடுப்பைக்காரன் நினைச்ச மாதிரி...’’

``இதெல்லாம்தான் அரவிந்தன், எனக்குக் கோபத்தை உருவாக்குது. அது ஒரு ஜடப்பொருள்! ஜடப்பொருளை எப்படி சாமியா நினைக்க முடியும்?’’

``உன்னால முடியாது... நீ நினைக்காதே... நான் நினைக்கிறேன்.’’

``அது சரி... கோயில்ல கல்லத்தானே சாமியா நினைக்கிறீங்க. கல்லையே நினைக்கும்போது மரத்தை தாராளமா நினைக்கலாம். நினைங்க...’’ - பாரதியின் குரலில் கிண்டல் லேசாக இழையோடிற்று. அதற்கொரு பதிலை அரவிந்தன் சொல்லவில்லை. வெளியே பார்த்தான். முன்பெல்லாம் கார்ப் பயணத்தில் குடை விரித்த மரங்களும், அதன் உருண்டு பிரளும் நிழல்களுமே கண்ணில் படும். இப்போது நான்கு வழிச்சாலை எனும் பெயரில் அவற்றை அழித்ததில், அனலடிக்கும் பொட்டலே கண்ணில்பட்டது.

காரிடம் நல்ல வேகம். அங்கங்கே டோல் கேட்டில் வரிவசூல்! டோல்கேட்டைப் பார்க்கும் போதெல்லாம் அரவிந்தன் கண்களுக்கு, சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் நினைவுதான் வரும். அவர்கள் குதிரைகளில் வந்து கொள்ளையடித்துச் செல்வார்கள். இவர்கள் உட்கார்ந்த இடத்தில் அடிப்பதாக நினைத்துக் கொள்வான். கற்பனையாக அவர்களுக்கு ஒரு முகமூடி மாட்டி, கையில் துப்பாக்கியைக் கொடுத்து அவர்கள் அவன் நெற்றிப் பொட்டருகே துப்பாக்கி முனையை வைத்து ``உம் எடு வரிய...’’ என்று கேட்பதுபோல் கற்பனை செய்வான்!

அப்போதும் நினைத்துக் கசந்தான்.

எதற்கு என்பதுபோல பாரதியும் பார்த்தாள்.

``இந்த டோல்வரி, உனக்கு ஒரு பகல்கொள்ளையா படலையா பாரதி?’’ என்று ஆரம்பித்தான்.

``வரி போடாம எப்படி அரவிந்தன் ரோடு போட்டு, அதைப் பராமரிக்க முடியும்?’’

``அப்ப கார் வாங்கும்போதே கட்ற ரோடு டேக்ஸுக்கு என்ன அர்த்தம்?’’

``அது லோக்கல்ல இருக்கிற ரோடுங்களுக்கு...’’ - கிண்டலாய்ச் சொன்னாள் பாரதி.

``சரி... இந்த நான்கு வழிச்சாலைக்கும் அதே மாதிரி ஒன் டைம் டேக்ஸ் போடலாமே?’’

``போடலாம்தான்... ஆனா, எத்தனை பேருக்கு இப்படிக் கேட்கத் தோணுது?’’

``எல்லாரும் கேட்டா மட்டும், நடந்துடுமா?’’

``லுக்... நாம கொடுத்துப் பழக்கிட்டோம். லட்சம், கோடின்னு அவங்களும் ருசி கண்டுட்டாங்க. எந்த முதலும் போடாம செய்ற ஒரு தொழிலா இது மாறிப் பல வருஷமாச்சு. தட்டிக்கேட்கிற பெரிய பொறுப்புல உள்ள நீதிபதி, கலெக்டர், தாசில்தார் அப்புறம் போலீஸ் அதிகாரிகள்னு அவ்வளவு பேருக்கும் இந்த டோல் சலுகைகாட்டி ஒரு சல்யூட்டோடு கேட்டைத் திறந்துவிட்டுடுது. வழக்கம்போல அதிகாரத்துல இல்லாதவனுக்குத்தான் இந்த வரி. இவன்தான் ஓட்டு போடவே காசு வாங்கிறவனா இருக்கானே? யாருக்கு இவன்மேல பெரிய மரியாதையோ இல்ல பரிதாபமோ இருக்கும்?’’

அந்த கார், டோலைக் கடந்துவிட்டது. அதன் தாக்கம் மட்டும் அவர்கள் இருவர் பேச்சிலும் பெரிய அளவில் எதிரொலித்தது. காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ``என்ன மேடம்.. கடைசியில ஓட்டுக்குக் காசு வாங்கினதுல வந்து நிறுத்திட்டீங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மேடம்’’ என்றான்.

அவனின் பேச்சு, பாரதியை நிறையவே யோசிக்கவைத்தது. டிரைவரின் இதே கவனம் தங்களின் எல்லாவிதப் பேச்சிலும் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவள், அவனைக் கத்தரித்து அனுப்பிவிடுவதை சரியென்று கருதினாள்.

வெளியே பார்த்தாள். கார் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் ஓடியபடி இருந்தது. இதே வேகத்தில் போனால், ஒரு மணி நேரத்தில் திருச்சி வந்துவிடும். அங்கே டிரைவரை கட்செய்து அனுப்பிவிட வேண்டியதுதான் என்று முடிவுசெய்தாள்.

அப்போது அவளது கைப்பேசியில் சிணுங்கல்! காதில் மருதமுத்து...

``ம்மா... நான் மருதமுத்துங்க...’’

``என்ன விஷயம் மருதமுத்து?’’

``யார்னு தெரியலம்மா... வடநாட்டுக் காரன் ஒருத்தன் நம்ப பங்களாவுக்குள்ள வந்து பெட்டிய பார்த்து உழுந்து கும்டுட்டுப் போறாம்மா!’’ - ஹக்கென்றது பாரதிக்கு, சட்டென வார்த்தைகள் வரவில்லை.

``ம்மா... நான் பேசறது காதுல உழுவுதுங்களா?’’

``யெஸ்... யெஸ்... யார் அது? அவனை யார் உள்ளேவிட்டது?’’

``பானு மேடம்தாம்மா!’’

``அவன் எப்படி இருந்தான்?’’

``கையில ஒரு விரல் உடாம மோதிரம்மா. வடக்கத்தி ஆளுங்க மாதிரி சட்டைக்கு வெளியே ஒரு பனியன் மாதிரி போட்டிருந்தான்!’’

``அப்ப அது அந்த ஜோசியனேதான்... அப்புறம் என்ன செய்தான்?’’

``பெட்டிய போட்டோ எடுத்துக் கிட்டான். முதல்ல `இதை நான் எடுத்துட்டுப் போகட்டுமா?’ன்னு கேட்டான். பானு மேடம் உங்ககிட்ட கேட்காம கொடுக்க முடியாதுன்னுச்சி. அப்புறம் பாம்பைப் பற்றியும் சொல்லிச்சு...’’

`` `அது பாம்பு இல்ல... சித்தர் சாமி’ன்னு அந்த ஆள் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சி.’’

``அப்புறம், வேற என்ன சொன்னான்?’’

``அது சாதாரணப் பெட்டி இல்லை... சித்தர் சாமி பெட்டி. இதுக்குள்ள விலை மதிப்பில்லாத விஷயங்கள் இருக்குது. இது கிடைக்க, கொடுத்துவெச்சிருக்கணும். குறிப்பா, ஏதோ ஒரு பேர் சொல்லி அந்தப் பேர் கொண்ட யாகம் நூற்றுக்குமேல செய்திருக்கணும்னும் சொன்னான்.’’

``இதை அவன் சொல்லும்போது யாரெல்லாம் இருந்தா?’’

இறையுதிர் காடு - 23

``யாரும் இல்லம்மா... நான்கூட அவுட்ஹவுஸ்லதான் இருந்தேன். காவிக் கொடி பறக்க ஒரு படகுக் கார் வந்து நிக்கிறதைப் பார்த்துட்டு உள்ளே போய்ப் பார்த்தேன். அப்பதான் இதெல்லாம் காதுல விழுந்திச்சு!’’

``உன் பானு பார்க்கலியா?’’

``யாரும் பார்க்கலைம்மா. நான் மறைவா நின்னுதான் எல்லாத்தையும் கேட்டேன். அந்த ஆள் பல பாஷை பேசினான். நடுவுல ஒரு ஸ்க்ரூடிரைவரைக் கொண்டுவந்து பெட்டியைத் திறந்துபார்க்க முயன்றான். பானு `வேண்டாம் வேண்டாம்’னு சொல்லிச்சு. கடைசியில  அவனாலயும் முடியலை. அப்படியே அந்தக் கத்தியையும் எடுத்தான். பானு கன்னத்துல இரண்டு கையையும் வெச்சுக்கிட்டு `வேண்டாம்ஜி...  வெட்டிடப்போகுது’ன்னு சொல்லிச்சு...

 அதே மாதிரி அந்த ஆள்  இடதுகை மணிக்கட்டுக்கு மேல துணியைக் கிழிச்சுக்கிட்டு ஒரு கோடு போட்டிருச்சி. பானு ஓடிப்போய் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்துவந்து கட்டுபோட்டு உட்டுச்சி. அப்புறமா அந்தப் பெட்டி, கத்தி ரெண்டுக்கும் கற்பூரம் கொண்டு வரச் சொல்லி, காட்டி உழுந்து கும்புட்டான்மா...!’’

``அப்புறம்?’’

`` `நான் திரும்ப வருவேன். அப்ப இந்தப் பெட்டியை நிச்சயம் திறப்பேன். இதுக்குள்ளதான் எம்.பி சாப்புக்கும் மருந்து இருக்குது. இனி, எம்.பி. சாப் சாதாரண ஆள் இல்லை. அவர் பிரைம் மினிஸ்டராகூட ஆகலாம். இந்தப் பெட்டி ஆக்கும். இதை வெச்சி, நான் ஆக்குவேன்’னான்!’’

``அது சரி... இவ்வளவுக்கும் நடுவுல அந்தப் பாம்பு வரலையா?’’

``வரலைம்மா... எனக்கும் ஒரே ஆச்சர்யம்!’’

இறையுதிர் காடு - 23``சரி... முடிவா என்னாச்சு?’’

``பெட்டிய திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே போனான். பானுகிட்டயும் `இது சாமி. நீ எதைக் கேட்டாலும் இது கொடுக்கும்’னான். அதுவும் போய் ரொம்ப நேரம் நின்னு கும்புட்டிச்சிம்மா. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்மா! `நான் வந்து போனது எம்.பி தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்’னும் சொன்னான்மா!’’

பாரதிக்கு, நல்ல வளை கழுத்து. அதில் ஒரு வியர்வைத்துளி பாம்பாட்டம் நெளிவதை அருகில் இருந்த அரவிந்தனும் கவனித்தான். அந்த வியர்வைப் பாம்பே, போனில் பேசப்படுவது விபரீதமான பல சங்கதிகளை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது.

``சரி மருதமுத்து... நீ நடந்ததைச் சொன்னதுல ரொம்ப சந்தோஷம். இதேபோல எது நடந்தாலும் எனக்குச் சொல்லத் தவறிடாதே.’’

``நிச்சயமாம்மா... ஒண்ணு மட்டும் நிச்சயம்மா, இந்தப் பொட்டி அந்த ஆள் சொன்ன மாதிரி நிச்சயம் சாமி சமாசாரம்தான்! ஆனா, உங்களுக்குத்தான் சாமின்னாலே ஆவாதே!’’

``மருதமுத்து... சாமி இருக்குதுன்னே வை. அது இப்படியா ஒரு பொட்டிக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு கண்ணாமூச்சி காட்டும்? இதெல்லாம் மிஸ்டிக்கலான விஷயங்கள். நம்ம சாரும் இருக்கார். அதனால, நீயும் தைரியமா எங்களுக்கு உதவியா இரு. பானு மேல ஒரு கண் எப்பவும் இருக்கட்டும்... என்ன?’’

``சரிங்கம்மா..’’

போனை கட் செய்துவிட்டுத் திரும்பியவள், மிக இயல்பாக அரவிந்தன் கைகள் இரண்டையும் இழுத்து மிக இறுக்கமாய்ப் பிடித்தாள். அதற்குள் அவனே ``என்ன பாரதி... அந்த டெல்லி ஜோசியக்காரன் உங்க வீட்டுக்கே வந்து பெட்டிய திறக்கப் பார்த்திருக்கானா?’’ என சரியாகக் கேட்டான்.

``ஆமாம் அர்விந்த்... உங்க யூகம் அவ்வளவும் ரொம்ப சரி. பெட்டிக்குள்ள பெருசா ஏதோ இருக்கு. அதை வெச்சு என் அப்பாவை அந்த ஜோசியன் பிரதமராவே ஆக்கப்போறானாம்..!’’ என்று மிகத் தழைந்த குரலில் சொன்னவள், அடுத்து டிரைவரைத்தான் பார்த்தாள். அவனிடம் அவள் பார்க்கவும் பலத்த தடுமாற்றம்...

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்