
கார் வாங்கிய முதல் நாளே... பிரேக்டவுன்!விமல்நாத், ஓவியம்: ராஜன்
சென்ற மாதம் வெளியான `மலைப் பயணங்களில் 4-வது கியரில் இறங்கினால் என்னவாகும்’ கட்டுரை சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆனதைப் பார்த்தபோது, நீங்கள் என்ன மாதிரி விஷயங்களை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். நன்றி வாசகர்களே!
அந்த நண்பருக்கு முதல் கார் அது. தன் கனவு நனவாகும் சமயம், அதாவது காரை டெலிவரி எடுக்கும்போது, ஷோரூம் ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், சாக்லேட் எனக் கொண்டாடித் தீர்த்துவிட்டார். குழந்தை, மனைவியுடன் காரை மகிழ்ச்சியாக டெலிவரி எடுத்துக்கொண்டு போனவர், மறுநாள் அந்த காரை வாங்கியதற்காக, மறக்க முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாக என்னிடம் புலம்பினார்.

`காரை எடுத்துட்டு முதல்ல குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்’ என்று கோயிலுக்கு விசிட் அடிக்க, தனது புது காரிலேயே கிளம்பியிருக்கிறார் அவர். நகரத்திலிருந்து ஒரு கிராமம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, காரில் ஏதோ அடைப்பு தென்பட்டதுபோல ஓர் உணர்வு. ஆக்ஸிலரேட்டர் மிதித்தால், பவர் டெலிவரி ஆகவேயில்லை. `தடதட’வென ஆட்டமாக ஆடி, ஒருகட்டத்தில் கார் நின்றேவிட்டது. இருட்டும் நேரம்... கண்ணுக்கு எட்டும் தூரம்வரை ஆள் அரவமே இல்லை!
நண்பருக்கு `பக்’கென்று ஆகிவிட்டது. `என்னடா இது, காரை டெலிவரி எடுத்து, கொஞ்ச நேரம் கூட ஆகலை... அதுக்குள்ள பிரேக்-டவுன்! ’ என்று நொந்து போய் விட்டார். ஷோரூமுக்கு போன் செய்து, கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்த்துவிட்டார். உடனே சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து, ஆளை அனுப்பி என்னவென்று பார்க்க வைத்தோம்.
கார் ஸ்டார்ட்டாகவே இல்லை. அது, எரிபொருள் இல்லாமல் கார் திணறுமே... அந்த மாதிரியான ஓர் அடைப்பு. ``பெட்ரோல் போட்டீங்களா?’’ என்று விசாரிக்க, ``என்னங்க முட்டாள்தனமா கேட்கறீங்க... நீங்க குடுத்த 10 லிட்டரோட சேர்த்து ஃபுல் டேங்க்கையும் இப்பதான் ஃபில் பண்ணினேன்’’ என்று மறுபடியும் கோபமாகக் கத்தியிருக்கிறார் நண்பர். திகைத்துப்போன சர்வீஸ் ஆள்கள், பெட்ரோல் டேங்க்கைத் திறந்து பார்த்தால், டீசல் வாசம் அடித்திருக்கிறது. விஷயம் புரிந்துவிட்டது. ``இது பெட்ரோல் காராச்சே... டீசல் நிரப்பினீங்களா?’’ என்று கேட்க, அப்போதுதான் நண்பருக்கு உறைத்தது. அடடா, அவசரத்தில் பெட்ரோல் நிரப்பினோமா, டீசல் நிரப்பினோமா என்றே ஞாபகம் இல்லை.
இதற்குப் பெயர் ஃப்யூல் ஸ்வாப் (Fuel Swap). பங்க் ஊழியர்கள் பெட்ரோல் காரில் டீசலை நிரப்பிவிட்டிருக்கிறார்கள். ஊழியர்களிடம் விசாரித்தால், அந்த பில்லில் டீசலில்தான் டிக் அடித்ததாகச் சொல்ல... பயங்கர வாக்குவாதம். ஷோரூம்களில் காரை டெலிவரி எடுக்கும்போது, இலவச பெட்ரோல் கூப்பன் கொடுப்பார்கள். பெட்ரோல் பங்க்குக்கும் ஷோரூமுக்கும் உள்ள டை-அப் அது. குறிப்பிட்ட அந்த பெட்ரோல் பங்க்கில் மட்டும் அதற்கான எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். அதில்தான் டீசலில் டிக் அடித்திருப்பதாக ஊழியர்கள் சொல்ல... விஷயம் அதுவல்ல! தவறு எல்லோர் மீதும் இருக்கிறது.
என்ன நடந்திருக்கும்?
பெட்ரோல் கார்களில் ஸ்பார்க் பிளக் இருக்கும். இது ஏற்படுத்தும் தீப்பொறியால்தான் பெட்ரோலும் காற்றும் கலந்த கலவை எரிகிறது. டீசல் கார்களில் ஸ்பார்க் பிளக்குகள் கிடையாது. சிலிண்டரில் இருக்கும் காற்று அழுத்தப்படுவதால் ஏற்படும் வெப்பத்தின் போது, இன்ஜெக்டர் டீசலை ஸ்ப்ரே செய்வதன் மூலம் எரிதல் நடக்கும். பெட்ரோல், சட்டெனப் பற்றக்கூடியது; அடர்த்தி குறைவானது; ஆவியாகும் தன்மைகொண்டது. டீசல், அப்படியே உல்டா... அடர்த்தி அதிகம்; எனவே விரைவில் ஆவியாகாது.
டீசலை நிரப்பி காரை ஆன் செய்ததுமே, இது தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். அதுவும் இவர் கிட்டத்தட்ட 20 கி.மீ வரை பயணித்திருக்கிறார். டீசலை எரிக்க முடியாமல் ஸ்பார்க் பிளக்குகள் திணறிய பின்பு, இன்ஜின் ஆஃப் ஆகியிருக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
புது கார்களை `டோ’ செய்யக் கூடாது. இதை கம்பெனியே அனுமதிக்காது. இதற்கு `ஃப்ளாட் பெட்’ என்றொரு சிஸ்டம் இருக்கிறது. அதாவது, காரை அப்படியே அலேக்காக ட்ரக்கில் ஏற்றி வருவது. முடிந்தளவு ஃப்ளாட் பெட் மூலம்தான் காரை ஏற்றி வர வேண்டும். வந்தவுடன் உடனடியாக பெட்ரோலையோ டீசலையோ `சர்’ரென வெளியே எடுத்துவிட முடியாது. இன்ஜின் ஆயில், கியர்பாக்ஸ் ஆயிலுக்கு மட்டும்தான் டிரெயின் ப்ளக் உண்டு. எரிபொருள் டேங்க்கையே இறக்கித்தான் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இன்ஜினுக்கு வரும் ஃப்யூல் லைன்கள் அனைத்தையும் காற்றை அனுப்பி க்ளீன் செய்வோம். ஃப்யூல் ஃபில்ட்டர், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர் எல்லாவற்றையும் ரீ-ப்ளேஸ் செய்ய வேண்டும். இவ்வளவு வேலைகளைச் செய்த பிறகே, பெட்ரோலை நிரப்பி காரை ஆன் செய்ய முடியும்.
காரின் உரிமையாளர், ஷோரூமில் அமர்ந்துகொண்டு ``எனக்கு இந்த கார் வேண்டாம். இன்ஜினே சீஸ் ஆகியிருக்கும். வேறு கார்தான் வேணும்’’ என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். ரிஜிஸ்ட்ரேஷன் செய்த காரை ரிட்டர்ன் எடுக்க முடியாது. இதை அவர் புரிந்துகொள்ளவில்லை. ``இந்த முதல் கனவு கார், எனக்கு முற்றும் கோணலாகிவிட்டது’’ என்று சென்டிமென்ட்டாகப் பேச ஆரம்பித்துவிட்டார். பிறகு டெக்னிக்கல் டீம் சார்பாக நான் சில விஷயங்களை அவருக்குப் புரியவைத்து, இன்ஜினுக்கு இதனால் எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கிய பிறகே, அவர் அந்த காரை டெலிவரி எடுக்க ஒப்புக்கொண்டார்.
இன்னொரு நண்பரும் இதேபோல்தான். பெட்ரோல் எர்டிகா வைத்திருந்தார். 25,000 கி.மீ ஓடிய கார் அது. காலையில் அவசரமாக 4 மணிக்குக் கிளம்பியவர், பெட்ரோல் பங்க்கில் காரைவிட்டுக் கீழே இறங்காமல் பாட்டுக் கேட்டபடியே ``2,000 ரூபாய்க்கு ஃபில் பண்ணுப்பா’’ என்று மட்டும் மொட்டையாகச் சொல்ல, பங்க் சிறுவன் பெரிய காராக இருந்ததால் டீசலாகத்தான் இருக்கும் என்ற ஐடியாவில் டீசலை நிரப்ப, அவரும் இதே பிரச்னையைச் சந்தித்து, அன்றைய நாள் முழுவதையும் சர்வீஸ் ஸ்டேஷனில்தான் கழித்தார்.
பெட்ரோல்/டீசல் நிரப்பும்போது அலட்சியம் வேண்டாம் மக்களே!
- தொகுப்பு: தமிழ்
எரிபொருள் நிரப்பும்போது இவற்றைச் செய்யுங்க!
* முடிந்தளவு ஒரே பங்க்கில் எரிபொருள் நிரப்பலாம்.
* பங்க்கில் நுழையும்போதே கண்ணாடியை இறக்கிவிட்டு, சரியான லேனில் காரை நிறுத்தி, பெட்ரோலா, டீசலா என்பதை உரக்கச் சொல்லுங்கள்.
* எரிபொருள் நிரப்பும்போது, கார் ஐடிலிங்கில் இருக்கவே கூடாது.
* காரில் ஹாயாக அமர்ந்தபடி பங்க் ஊழியருக்கு ஆர்டர் போடாமல், காரைவிட்டுக் கீழிறங்கி டேங்க் கவரை மூடும் வரை, என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
* பங்க்கில் செல்போன் பேசுவது, குழந்தைகளை அனுமதிப்பது - கூடாது.

* ஃப்யூல் ஸ்வாப் நடப்பதை உடனே கண்டுபிடித்துவிட்டால், சாவியைத் திருகி காரை ஆன் பண்ணாதீர்கள். காரை ஓட்டிய பிறகு கண்டுபிடித்தால், லோக்கல் மெக்கானிக்குகளை வைத்து டேங்க்கை டிரெய்ன் செய்வது தற்காலிகமான தீர்வுதான்.
* காரை டோ செய்யாமல், ஃப்ளாட் பெட் சிஸ்டம் மூலம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.
* இது நடக்காமல் இருக்க ஒரு ஈஸி ஐடியா சொல்லவா? டேங்க்கில் `டீசல்/பெட்ரோல்’ என ஸ்டிக்கர் ஒட்டிவிடுங்களேன்!