80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 11: குழந்தைத்தனமா கேள்வி கேட்பேன்... கடற்கரையில நண்டு பிடிப்பேன்! - ரேகா

‘அறம்’ நயன்தாரா நடிப்பில் அந்தப் படத்தைப் பார்த்துட்டு, அந்த வாய்ப்பைத் தவறவிட்டது பெரிய தப்புன்னு வருத்தப்பட்டேன்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ரேகா.
ஏராளமான டீச்சர்களை அறிமுகப் படுத்திய தமிழ் சினிமாவில், ‘ஜெனிஃபர் டீச்சர்’ என்றைக்குமான ஆதர்சம். முன்பு ஹோம்லியான கதாபாத்திரங்களில் நாயகி யாக நடித்து லைக்ஸ் அள்ளிய ரேகா, இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இங்கே தன் வெற்றிப்பயணம் குறித்துப் பேசுகிறார், ரேகா.
சினிமாவுக்குத் தடை... ரஜினியின் ஆட்டோகிராப்!
பூர்வீகம் கேரளா. மத்திய அரசு ஊழிய ரான அப்பாவுக்கு குன்னூர் டீ எஸ்டேட்ல பணிமாறுதல் கிடைக்க, அந்த ஊரில் குடியேறினோம். அங்கதான் பள்ளிப் படிப்பு. அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். எனக்கு ஓர் அக்கா, ரெண்டு தம்பிகள். ஸ்கூல், வீடுதான் எங்க உலகமா இருந்தது.எதிர்காலத்துல நல்ல வேலைக்குப் போகணும் என்பதுதான் என் இலக்கா இருந்தது.
எங்க ஊர்ல நிறைய ஷூட்டிங் நடக்கும். அதைப் பார்க்க தோழிகள் போகும்போதுகூட, எங்க வீட்டுல அனுமதிக்கமாட்டாங்க. ஆனா, ஒருமுறை `நெற்றிக்கண்’ பட ஷூட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தப்ப, தோழிகளோடு நானும் ஓடிப்போய் ஆட்டோகிராப் வாங்கினேன். ரஜினி சார் அன்பா பேசினார்.

பாரதிராஜாவுடன் சந்திப்பு... பெயர் மாற்றம்!
ஒருமுறை குன்னூர் வந்திருந்த இயக்குநர் கலைமணி சார், என் தோழியின் வீட்டில் யதேச்சையா எங்க ஸ்கூல் குரூப் போட்டோவில் என்னைப் பார்த்துட்டு, சினிமாவில் நடிக்கவைக்க நினைச்சு நேர்ல வந்து பார்த்தார். `என்னுடையது மாடர்ன் கதை. உனக்கு ஹோம்லி கதைதான் செட்டா கும். இயக்குநர் பாரதிராஜா எடுக்கவிருக்கும் புதுப் படத்துல நீ நடிச்சா நல்லாயிருக்கும். அவர்கிட்ட அறிமுகப்படுத்துறேன்’னு சொன்னார். அடுத்த வாரமே என்னை சென்னைக்கு அழைச்சார். அப்போ பத்தாம் வகுப்பு லீவ்ல இருந்த நான், நடிக்கிற ஆசை இல்லாட்டியும், என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்புக்காக அடம்பிடிச்சு அப்பா கிட்ட அனுமதி வாங்கிட்டு சென்னைக்குப் போனேன்.
`கடலோரக் கவிதைகள்’ படத்துக்கான ஹீரோயின் செலெக்ஷன் முடியுற நேரம். கிட்டத்தட்ட ஹீரோயினையும் பாரதிராஜா சார் தேர்வு பண்ணிட்டார். இந்த நிலையில ஆடிஷன்ல என்னைப் பார்த்தவர், காட்டன் புடவை கட்டிக்கிட்டு, பெரிய பொட்டு வெச்சுக்கிட்டு வரச்சொன்னார். பிறகு, `உன் காலுக்குக் கீழ எறும்பு இருக்கு... நீ எப்படி ரியாக்ட் பண்ணுவே’னு கேட்டார். `இங்கதான் எறும்பே போகலையே சார்’னு சொன்னேன். சுத்தியிருந்த படக்குழுவினர், `சார் சொல்றபடி செய்’னு அதட்ட, பாரதிராஜா சார் பயங்கரமா சிரிச்சுட்டார். தொடந்து அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் நான் வெகுளித்தனமா பேச, என் கேரக்டர் அவருக்குப் பிடிச்சுப்போச்சு. `இந்த ஜெனிஃபர் கேரக்டருக்கு நீதான் பொருத்தமா இருப்பே. நீ செலெக்டட்’னு சொல்லி, எனக்கு 10,001 ரூபாய் அட்வான்ஸா கொடுத்தார். நிறைய பெயர்கள் எழுதி, அதிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச் சொன்னாங்க. அதில் ‘ரேகா’ங்கிற பெயர் வர, `தென்னிந்தியாவுலயும் ரேகானு ஒரு நடிகை இருக்கட்டும்’னு சொல்லி, ஜோஸ்ஃபின் என்கிற என் பெயரை மாத்தினார் பாரதிராஜா சார். அடுத்த மூணாவது நாளே ஷூட்டிங் கிளம்பியாச்சு!
புடவை... டீச்சர்... குழந்தைத் தனம்!
முதிர்ச்சியான டீச்சர் ரோல்ல நடிக்க, மீன், முட்டைனு நிறைய சாப்பிட்டு வெயிட் போடச் சொன்னாங்க. அந்த 16 வயசுல புடவை கட்டிக்கிட்டு, குடை பிடிச்சுட்டு நடக்கும்போது பெரிய பொம்பள மாதிரியிருந்தேன். `என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே சார்’னு பாரதிராஜா சார்கிட்ட கேட்டா, `தியேட்டர்ல படம் பார்க்கிறப்ப நீயே புரிஞ்சுப்பே’னு சொல்வார். அதுவரை புடவையே கட்டாத என்னை, அந்தப் படம் முழுக்க புடவையில நடிக்க வெச்சார்.
சத்யராஜ் சார் கடல்ல காணாமல் போகும் சீன்ல எனக்கு ஃபீலிங்கே வரலை. `அவர் காணாம போனா நான் ஏன் சார் வருத்தப்படணும்’னு கேட்டேன். `நாளைக்கு லட்சக் கணக்கில் சம்பாதிச்சா எனக்கா தரப்போறே... சொல்றபடி நடி’னு கோபப்பட்டார் பாரதிராஜா சார். என்னை நல்லா நடிக்கவைக்க பலமுறை திட்டியிருக்கார். அழுதுகிட்டே, `நான் ஊருக்குப் போறேன்’னு சொல்லுவேன். சித்ரா லட்சுமணன் சார் என்னை சமாதானப்படுத்துவார். நடிகர் ராஜா என்னைவிட அதிகமா திட்டு வாங்குவார். அது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!

ஒளிப்பதிவாளர் கண்ணன் சார் கிட்ட, `போட்டோ நெகட்டிவ்வைத் தண்ணியில கழுவினால் படம் அழிஞ்சுடாதா’னு குழந்தைத்தனமா கேள்விகள் கேட்பேன். விளையாடு வேன்; கடற்கரையில நண்டு பிடிப்பேன். அதன் பிறகு, படிப்படியா என் பொறுப்பையும் சினிமா சூழலையும் உணர்ந்தேன்.
கமலின் முத்தம்... ஹிட் படங்கள்!
15 நாள்களில் `கடலோரக் கவிதைகள்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிய, அதுவரை எடுத்த காட்சிகளை ப்ரிவியூ போட்டுக்காட்டினாங்க. `இது நான்தானா’னு எனக்கு பயங்கர சர்ப்ரைஸ். கூடுதலா இன்னொரு சர்ப்ரைஸும் கிடைச்சது. அப்போ ஆனந்த விகடனின் அட்டைப் படத்துல, நானும் சத்யராஜ் சாரும் இருக்கிற போட்டோ வெளியாச்சு. சில நாள்கள்ல, கே.பாலசந்தர் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. என்னையும் கமல் சாரையும் போட்டோ ஷூட் பண்ணினார். உடனே `புன்னகை மன்னன்’ பட ஷூட்டிங்குக்கு என்னை வரச் சொல்லிட்டார். கமல் சார் நடிக்கிறதைப் பார்த்து நடிப்பைக் கத்துகிட்டேன். அவரும் நானும் பாறை மேல நின்னு தற்கொலை செய்துக்கிற காட்சியின்போது, என்கிட்ட யாரும் எந்த முன்னறிவிப்பும் சொல்லலை. குதிக்கிறதுக்கு முன்னாடி, திடீர்னு கமல் சார் எனக்கு லிப் கிஸ் கொடுத்துட்டார். பயங்கர அதிர்ச்சியா இருந்தாலும், சமாளிச்சு நடிச்சுட்டேன். எல்லோரும் கிளம்பினதும் பக்கத்துலயிருந்த சுரேஷ் கிருஷ்ணாகிட்ட, `ஏன் சார் இப்படி எடுத்தீங்க’ன்னு கோபப்பட்டேன். `இதெல்லாம் சென்சார்ல கட் பண்ணிடுவாங்க’ன்னு அவர் சொல்ல, `அப்படீன்னா என்ன’ன்னு கேட்டேன். அவர் விளக்கம் சொல்ல, அதை நம்பிட்டேன். ரெண்டே வாரத்துல அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சுட்டேன். பிறகுதான் `கடலோரக் கவிதைகள்’ பட ஷூட்டிங் முடிஞ்சது.
தொடர்ந்து, ராமராஜன் சார் ஹீரோவா அறிமுகமான `நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்துல ஹீரோயினானேன். அடுத்தடுத்து வெளியான அந்த மூணு படங்களுமே பெரிய ஹிட்டாச்சு. பிறகு, என்னால மறுக்க முடியாத அளவுக்குப் பட வாய்ப்புகள் வர, சினிமா என் கரியராகிடுச்சு. எங்க போனாலும் எனக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து சந்தோஷமா இருந்துச்சு.
நோ கிளாமர்... கண்ணீர் நாயகி!
ஓய்வு நேரங்கள்ல நிறைய சினிமாக்களைப் பார்த்து, சினிமாவை நல்லா புரிஞ்சுகிட்டேன். டான்ஸ் தெரியாத நான், நல்லா டான்ஸ் ஆடுற நடிகைகளைப் பார்த்து ரொம்ப வருத்தப்படுவேன். பிறகு ஓரளவுக்கு டான்ஸ் கத்துக்கிட்டேன். மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் டிரஸ்ஸர், டிசைனர்னு யாரையும் வெச்சுக்காம, என் தேவைகளை நானே பார்த்துப்பேன். என்னால யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராத வகையில பொறுப்பா நடிச்சேன். அம்மாதான் ஷூட்டிங்குத் துணையா வருவாங்க. நான் நடிக்கிறது அப்பாவுக்குப் பிடிக்காததால, அவர் ரெண்டு வருஷங்கள் என்னுடன் பேசவேயில்லை. பிறகு சமாதானமாகிட்டாலும், என் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை அவர் பார்க்கவேயில்லை.

கிளாமரா நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. அது எனக்கு செட்டாகாது. அதனால, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வந்த கிளாமர் வாய்ப்புகளையெல்லாம் தவிர்த்தேன். நல்ல ஹோம்லியான ரோல்கள் எனக்குக் கிடைச்சது. `எங்க ஊரு பாட்டுக்காரன்’, `புரியாத புதிர்’, `தாயா தாரமா’, `மேகம் கறுத்திருக்கு’னு நிறைய ஹிட் படங்கள் அமைஞ்சது. குறிப்பா, அப்போ ராமராஜன் சார்கூட ஐந்து படங்கள்ல நடிச்சு, அந்தப் படங்களின் பாடல்கள் எல்லாம் பெரிய ஹிட்டாகி எங்களுக்குப் பெரிய புகழைக் கொடுத்துச்சு. அப்போதைய ஹீரோக்கள் பலருடனும் தொடர்ச்சியா பல படங்கள்ல ஜோடியா நடிச்சேன். ஒரு நாளைக்கு பல ஷிஃப்ட் நடிச்சு, ஒரு வருஷத்துல 14 படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்கேன். `குணா’ படத்துல மீண்டும் கமல் சாருடன் நடிச்சேன். அந்த சீஸன்ல கண்ணீர் நாயகியாகவும், அதிகாரி மாதிரியான கண்ணியமான ரோல்கள்லயும்தான் அதிகம் நடிச்சேன். அதெல்லாம் ஹிட்டாக, ஒரு கட்டத்துல அப்படியான ரோல்கள்லதான் என்னால நடிக்க முடியும்னு முத்திரை குத்திட்டாங்க.
ரசத்தை ஊற்றிய ரகுவரன்... ரஜினிக்கு ஜோடி?
`புரியாத புதிர்’ பட ஷூட்டிங்ல என் கணவரா நடிச்ச ரகுவரன் சார், ரசம் சூடா இருந்தது தெரியாம என் முகத்துல ஊத்திட்டார். நான் துடிச்சதும் பதறி ரொம்ப வருத்தப்பட்டார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருக்கு ஜோடியா ரெண்டு படத்துல நடிச்சேன். அப்போ அவரை அடிக்கடி பாடச் சொல்லுவேன். பதிலுக்கு அவர் என்னைப் பாடச் சொல்வார். பாடினதும், `கழுதை பாடுற மாதிரியிருக்கு’ன்னு கிண்டல் பண்ணுவார். `அடுத்த ஜென்மத்துல பெரிய பாடகியாவேன்’னு அவர்கிட்ட சவால்விட்டிருக்கேன்!
இயக்குநர் பாண்டியராஜன் சாருடன் நாலு படங்களில் ஜோடியா நடிச்சேன். அவர் என்னைவிட உயரம் குறைவு என்பதால, அவருக்குப் பக்கத்துல ஓர் அடிக்குத் தொடர்ச்சியா குழிவெட்டி அதில் என்னை நடந்துவரச் சொல்வார்.
1990-களின் தொடக்கத்துல, ரஜினி சாருக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போ மம்முட்டி சாருடன் மலையாளப் படத்தில் நடிச்சுட்டிருந்தேன். கால்ஷீட் பிரச்னையால் ரஜினி சாருடன் நடிக்க முடியலை. பிறகு, `அண்ணாமலை’ படத்துல கேரக்டர் ரோல்ல வாய்ப்பு வந்தப்ப, ரஜினி சாருக்காகவே அந்தப் படத்துல நடிச்சேன். கதையெல்லாம் கேட்ட பிறகு, நேரமின்மையால் `என் ராசாவின் மனசிலே’ பட வாய்ப்பைத் தவற விட்டேன். தமிழைவிட மலையாளத்தில்தான் எனக்கு அதிக புகழ் கிடைச்சது. `தசரதம்’, `ஏ ஆட்டோ’ உட்பட நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நிறைய படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். தெலுங்கு, கன்னடம் உட்பட நாலு மொழிகளில் ஹீரோயினா 130 படங்களில் நடிச்சேன்.
`அறம்’ பட வாய்ப்பு!
ஹீரோயினா நடிச்சிட்டிருந்தப்ப, சரியா தேர்வு செய்யாம சில படங்கள்ல கேரக்டர் ரோல்கள்ல நடிச்சு வருத்தப்பட்டேன். பிறகு, என் காதலரைக் கல்யாணம் செய்துகிட்டு, குழந்தை வளர்ப்புக்காக சினிமாவிலிருந்து விலகினேன். சில வருஷங்கள் நடிக்காமலிருந்த நிலையில, ரஜினி சார், ராதிகா மேடம், கே.ஆர்.விஜயா அம்மா ஆகியோர் மீண்டும் நடிக்கச் சொல்லி ஆலோசனை கொடுத்தாங்க. என்னால நெகட்டிவ் ரோல்ல நடிக்க முடியாதுங்கிறதை பிரேக் பண்ண, `ரோஜாக்கூட்டம்’ படத்தில் வில்லியா ரீ-என்ட்ரி கொடுத்தேன். `கனா காணும் காலங்கள்’ சீரியலும் நல்ல அடையாளம் கொடுத்துச்சு. தொடர்ந்து சினிமா, சின்னத்திரையில் நடிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு, `அறம்’ படக் கதையை இயக்குநர் கோபி நயினார் முதலில் என்கிட்டதான் சொன்னார். அப்போ சில காரணங்களால் என்னால அந்தப் படத்துல நடிக்க முடியலை. பிறகு, நயன்தாரா நடிப்பில் அந்தப் படத்தைப் பார்த்துட்டு, அந்த வாய்ப்பைத் தவறவிட்டது பெரிய தப்புன்னு வருத்தப்பட்டேன்.
நிறைவு
வீட்டிலிருந்தே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு கொண்டுபோவது என் வழக்கம். அந்த வசதி வேணும், இந்த வசதி வேணும்னு தயாரிப்பாளர்களுக்கு ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை. என் சினிமா வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு. எந்தப் பின்புலமும் இல்லாம, நடிக்க வந்து ஓரளவுக்குப் பெயர் எடுத்திருக்கேன். புகழ் வந்த பிறகும் என் குணத்தை மாத்திக் கலை. மொத்தத்தில் நிறைவா இருக்கு!
- நாயகிகள் பேசுவார்கள்!
- கு.ஆனந்தராஜ், படங்கள்: ப.சரவணகுமார்
என்னை நடிகையா ஏத்துக்கலை!
நான் ஹீரோயினா புகழ் பெற்றபோதும், வீட்டுல நான் நாலு பிள்ளைங்கள்ல ஒருத்திதான். ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் இல்லை. சொல்லப்போனா, அப்போதிலிருந்து இப்போ வரைக் கும் என் குடும்பத்தார், நண்பர்கள் யாருமே என்னை ஒரு நடிகையாவே ஏத்துக்கலை. அதனால நானும் யார்கிட்டயும் சினிமா விஷயங்களைப் பகிர்ந்துக்க மாட்டேன். `படிப்பு, வீடு, சர்ச்னு இருந்தே. நீ எப்படி நடிகையானே?’னுதான் இப்போவரை என் தோழிகள் கேட்பாங்க. அதனால சினிமாவுல தான் நான் ரேகா. மத்தபடி என் பர்சனல் உலகத்துல நான் எப்போதுமே ஜோஸ்ஃபின்தான்!
மொட்டையடிச்சுக்கத் தயார்!
அழுகாச்சி ரோல்கள்ல தொடர்ந்து நடிச்சு, சலிப்பாகிடுச்சு. நிறைய வெரைட்டியான ரோல்கள்ல நடிக்கணும்னு ஆசையுண்டு. ரொம்பவே நெகட்டிவான, காமெடியான, சவாலான ரோல்கள்ல நடிக்க ஆசைப்படறேன். அதுக்காக மொட்டையடிச்சுக்கிறது உட்பட எந்தச் சவாலையும் ஏத்துக்கத் தயார். இப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் அக்கா, அம்மா ரோல்ல நடிக்கவும் விருப்பம் இருக்கு.