சமூகம்
Published:Updated:

“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்

“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்
பிரீமியம் ஸ்டோரி
News
“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்

திருவண்ணாமலை மல்லுக்கட்டு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களுக்கு யார் பூஜை செய்வது... என்பதில் சிவனடியார்களுக்கும் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது!

“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்

‘அண்ணாமலையாரின் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்கள் மற்றும் திரு நேர் அண்ணா மலையார் கோயில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்களுக்கு, கடந்த 40 ஆண்டுகாலமாகச் சிவனடியார்கள் மட்டுமே ஆகம முறைப்படி பூஜை செய்துவந்தனர். இந்த நிலையில், ‘அஷ்டலிங்கங்களுக்கு வருங்காலங்களில், சிவனடியார்கள் யாரும் பூஜை செய்யக்கூடாது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்யவேண்டும்’ என 17-12-2018 அன்று, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் உத்தரவைப் பிறப்பித்தார். அன்றுமுதல், அஷ்டலிங்கங்கள் சிவாச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இதனால், சிவாச்சாரியார்களுக்கும் சிவனடியார்களுக்கும் இடையே பிரச்னை முற்றியுள்ளது.

இதுசம்பந்தமாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மனு அளித்த, திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தன், “அஷ்டலிங்கங்களை அண்ணாமலை யார் கோயில் நிர்வாகம், வழிநடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 40 ஆண்டுகாலமாகச் சிவத்தொண்டு செய்துவந்த சிவனடியார்களை வெளியேற்றிவிட்டு, லிங்கங்களுக்குச் சம்பந்தமே இல்லாத சிவாச்சாரியார்களிடம் பூஜைசெய்யும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதுதான் அதிகாரத்தின் உச்சம். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜைசெய்து வந்ததாகவும் கோயில் திருப்பணிக்காகத்தான் அவர்கள் பூஜையை நிறுத்தியதாகவும் கோயில் இணை ஆணையர் கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே பூஜைசெய்யாமல், அஷ்டலிங்கங்கள் பராமரிப்பின்றி இருந்தன. 

“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்

லிங்கங்களுக்குச் சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அதைச் சிவனடியாரான மூப்பனார் சுவாமிகள், உள்ளூர் மக்களின் துணையோடும் பக்தர்களின் உதவியோடும், ‘அஷ்டலிங்க பரிபாலன கமிட்டி’ ஒன்றைத் தொடங்கி மக்களிடம் நன்கொடை பெற்று லிங்கங்களை மீட்டெடுத்து, திருப்பணி செய்தார். அதன் சாட்சியாக மூப்பனார் சுவாமிகள் மறைவுக்குப் பிறகு, அஷ்டலிங்க கோயில்களில் அவருடைய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிபாலன கமிட்டியின் நன்கொடை வருமானத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கும் பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். இப்படி அஷ்டலிங்கங்களுக்காக உழைத்த சிவனடியார்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பெளர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் அஷ்டலிங்கங்களில் கிடைக்கும் வருமானம் ஏராளம். தீபாராதனை தட்டுகளில் மட்டுமே பல ஆயிரம் ரூபாய் விழும். மற்ற நாட்களில் தனி. இதற்காகத்தான் சிவாச்சாரியார்களைப் பூஜை செய்யும்படி கோயில் நிர்வாகம் அனுப்பியுள்ளது” என்றார்.

இதுகுறித்து திரு நேர் அண்ணாமலையார் கோயில் சிவனடியார் எல்லப்பன் சுவாமிகள், “கிரிவலப் பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் கோயிலைச் சீரமைக்கப் பக்தர்களிடமும் தீபம் அறக்கட்டளையிடமும் நன்கொடை வாங்கி சீரமைத்து 2002-ல் கும்பாபிஷேகமும் செய்தேன். அதன் பிறகு, அந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே நவக்கிரகம் அமைத்தேன். ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாநிதி கொடுத்த நன்கொடையில், காயத்திரி கோயில் கட்டினேன். அப்போதெல்லாம் இந்தச் சிவாச்சாரியார்கள் வரவில்லை. இப்போது கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. அதைப் பார்த்த பிறகுதான், ‘நாங்கள் பூஜைசெய்வோம். நீங்கள் செய்யக்கூடாது’ என்று சொல்வதுடன், அவர்களே பூஜை செய்தும் வருகின்றனர். நான் பூஜை செய்யும்போது, விடியற்காலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கி, அலங்காரம் பண்ணி முடிக்க 5.30 மணி ஆகிவிடும். கோயிலும் தூய்மையாக இருக்கும். ஆனால், இப்போது சிவாச்சாரியார்கள் 6 மணிக்கு மேல்தான் கோயிலுக்கே வருகிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில், பக்தர்கள் அதிகமாகக் கிரிவலம் வருவார்கள். அந்த நேரத்தில் தட்டு வருமானம் அதிகமாக வரும். அப்போது மட்டும் அவர்கள் தீபாராதனை தட்டைப் பிடித்துக்கொண்டு இருப்பார்கள். மற்ற நேரத்தில், ‘நீங்க பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். ‘அந்த வழக்கை வாபஸ் வாங்கிவிடுங்கள்; அதே கோயிலில் முழுநேர பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறேன்’ என்று கோயில் இணை ஆணையர் சொன்னார். அதன்படி, வழக்கை வாபஸ் வாங்கினோம். ஆனாலும் இதுவரை அனுமதிக்கப்
படவில்லை” என்றார் வேதனையுடன்.

“அஷ்டலிங்க பூஜை செய்யும் உரிமை எங்களுக்கே!” - சிவனடியார் Vs சிவாச்சாரியார்

இதுகுறித்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர், “சிவனடியார்கள் அஷ்டலிங்க கோயில்களைப் பாதுகாத்து வந்தது உண்மைதான். இந்த நிலையில், ‘திருக்கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோயில்களுக்குப் பூஜை பணிக்காகத் திருக்கோயிலால் நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே பூஜை செய்யவேண்டும்; வெளியாட்கள் யாரும் பூஜை செய்யக்கூடாது’ என உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் காமன் ஆர்டர் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படிதான், சிவனடியார்களை நிறுத்திவிட்டு, சிவாச்சாரியார்களை நியமித்துள்ளோம். சிவனடியார்களை ஒரேயடியாக வெளியே அனுப்பிவிட முடியாது. அதனால்தான், சிவாச்சாரியார்களோடு இணைந்து அவர்களும் கோயில் பணிகள் செய்கிறார்கள். குறிப்பாக, கோயிலில் அசம்பாவிதம் ஏதாவது நேர்ந்தால்,  சிவனடியார்களைக் கேட்க முடியாது, சிவாச்சாரியார்களை மட்டுமே கேட்க முடியும். அதனால்தான் சிவாச்சாரியார்களை நியமித்துள்ளோம்” என்றார்.

பக்தர்களுக்காகப் பூஜைசெய்த காலம்போய், பணத்துக்காகப் பூஜைசெய்யும் காலம் வந்துவிட்டதை என்னவென்று சொல்ல?

- கா.முரளி