
சொல்வனம்

சுவரொட்டி
சுவரொட்டிகளை வீதியெங்கும் பார்ப்பது
பரவசமாக இருக்கிறது
நள்ளிரவில் நான் ஒட்டியது
யாருக்கும் தெரியாது
கடந்து செல்லும் ஒவ்வொருவரும்
என்னைப் போலவே பூரிப்பார்கள் என்று
அடுத்தடுத்த சுவரொட்டிகள் தயார் செய்தேன்
மாடுகள் சுவரொட்டிகளுக்கு அருகே
பசியோடு நிற்கும்போது
உடனடியாக என்னால் விரட்ட முடிவதில்லை
சுவரொட்டியில் என்னைப் பற்றி
நான் எழுதிய வாசகங்களை
மாடுகளுக்குப் படித்துக் காண்பித்து
சுவரொட்டிகளைக் காப்பாற்ற வேண்டும்
மாடுகளின் மொழியைக் கற்றுக்கொள்ள
எங்கு செல்வதெனத் தெரியவில்லை
என் படத்தினருகில்
மாடுகளையும் வரைந்துவிட்டதால்
நாவால் என்னைத் தடவி விட்டு
நகர்ந்துவிடுகின்றன
காகங்களுக்கு நான் என்ன செய்வது
அவற்றின் படங்களும் வரையப்பட்டன
கொஞ்சம் கொஞ்சமாக
பூச்சிகள் கறையான்கள் புகுந்துகொண்டன
இப்போது எனது சுவரொட்டிக்குள்
விலங்குகள் நடுவே
எனது தலை மட்டுமே தெரிகிறது
என்னை அதற்குப்பிறகு
விலங்கு என அழைக்கிறார்கள்
நான் இப்போது
நள்ளிரவில்
என் சுவரொட்டிகளை
மேய்ந்துகொண்டிருக்கிறேன்.
- இரா.கவியரசு
போதிமரத்தின் இழுபலகைகள்
கௌதமனைக் கொன்ற வழக்கில்
மரணதண்டனை பெற்ற சித்தார்த்தனிடம்
நீதிமன்றத்தில் கடைசி ஆசை கேட்கப்பட்டது
தூக்குமேடையில் தன் கால்களுக்குக் கீழே
போதிமரத்தில் இழுபலகைகள்
அமைக்குமாறு வேண்டினான்
முகத்தில் கறுப்புத்துணி அணிவித்து
மேடை ஏற்றப்பட்டவுடன்
உத்தரவுக்குப் பிறகு காலுக்கடியில் பலகைகள் நகர
கழுத்தில் கயிறு இறுகி
பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார் புத்தர்.
- வலங்கைமான் நூர்தீன்
சிறுநொடி
கணம்தோறும் திறக்கப்படுகிறது
ஒரு வழி
எங்கேனும் பரவசத்தோடு
கோத்துக்கொள்ளப்படுகின்றன
இரண்டு கரங்கள்
புன்னகையோடு விடைபெறுகிறது
ஒரு நிரந்தரப் பிரியம்
காய்ந்துகொண்டிருக்கும் நெல் வயலில் விழுகிறது
ஒரு பெருமழைக்கான முதல் துளி
ஆறிப்போனதாய் நினைத்த காயத்தின் உள்ளிருந்து பரவுகிறது பெருவலி
மென் காற்றில் விழுந்து
துப்பட்டாவில் சிக்கிக்கொள்கிறது ஒரு மஞ்சள் சரக்கொன்றை
தொலைவில் இருந்தாலும் அருகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ
தேவநொடியில் துளிர்க்கிறது ஒரு சிறுசெடியும் கொஞ்சம் காதலும்.
- வே.சத்யா