பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இது மக்கள் பள்ளி!”

“இது மக்கள் பள்ளி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இது மக்கள் பள்ளி!”

“இது மக்கள் பள்ளி!”

“மதுரையிலிருந்து ஒருவர் அழைத்து, `நாங்க கோயம் புத்தூருக்கே குடிவந்துடுறோம். என் பையனுக்கு உங்க ஸ்கூல்ல இடம் கிடைக்குமா?’னு கேட்கிறார். சென்னையிலிருந்து போன் செய்த ஒருவர் `உங்க ஸ்கூல்ல ரெக்ரூட்மென்ட் எதுவும் இருக்கா?’னு கேட்கிறார். இதுவரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட போன் கால்கள்... பதில் சொல்லிச் சொல்லியே நாங்க டயர்டா கிட்டோம். இன்னொரு பக்கம், `உங்கப் பள்ளிக்கூடத்துக்கு நாங்க ஏதாச்சும் செஞ்சே ஆகணும்’னு தவிக்கும் தன்னார்வலர்கள். நாங்க ஆத்மார்த்தமா செய்த வேலை, கண் முன்னே நிகழ்த்தும் மாற்றங்களைப் பார்க்கும்போது, மனசுக்கு நிறைவா இருக்கு!” கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளி  ஆசிரியர்களின் குரலில் ஆயுளுக்குமான சந்தோஷம் பொங்கி வழிகிறது `கவர்மென்ட் ஸ்கூல்ல என்ன சார் சொல்லித்தர்றாங்க? அடிப்படை வசதிகள்கூட  அங்கே  இருக்காது.  பிள்ளையை அரசுப் பள்ளிக்கு அனுப்பினா அவமானம். தலையை அடமானம் வெச்சாவது என் பிள்ளையை  தனியார்  பள்ளியில் படிக்கவெச்சுடணும்’ இப்படி அரசுப் பள்ளிகள் குறித்து மக்களுக்குள்ள பொதுப்புத்தியை, தங்களின் அர்ப்பணிப்பான உழைப்பால் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் கோவை மசக்காளிபாளையம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

“இது மக்கள் பள்ளி!”

புத்தகப் பாடங்களைக் கடந்து பொம்ம லாட்டம், ஓரிகாமி, பாரம்பர்ய விளையாட்டுகள், கராத்தே, பறை இசை, செஸ், நடனம், யோகா என இந்தப் பள்ளியில் இலவசமாகக் கற்பிக்கப்படும் கலைகளின் பட்டியல் நீள்கிறது. இவை மட்டுமல்லாது, தனியார்ப் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி நடைமுறைகள் என ஒவ்வோர் அசைவிலும் ஆச்சர்யப்படவைக்கிறது இந்த அரசுப் பள்ளி. கட்டணமாகப் பல லட்சங்களைக் கறக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் சாதாரண மாநகராட்சிப் பள்ளியில் எப்படிச் சாத்தியமாகின? மசக்காளி பாளையத்துக்குச் சென்றோம்...

தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் போர்டில், `STAR OF THE MONTH’ என்ற கேப்ஷனுக்குக் கீழே புகைப் படங்களில் சிரிக்கும் மாணவர்கள், வகுப்பறை தோறும் வரையப்பட்டுள்ள சித்திரங்கள், ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும் இணைய வசதியோடுகூடிய கம்ப்யூட்டர்கள், ஆயிரக் கணக்கான புத்தகங்களோடு ஒழுங்குபடுத்தப் பட்ட நூலகம் ஆகியவையே அந்தப் பள்ளி பற்றிய அறிமுகத்தைத் தந்துவிடுகின்றன.

“இது மக்கள் பள்ளி!”

மாணவர்களுக்காக புதிதாக இறங்கியிருக்கும் `ஸ்போர்ட்ஸ் டிரஸ்’ பண்டல்களை தீராத சந்தோஷத்துடன் பிரித்துக்கொண்டிருந்த ஆசிரியை மேரி திவ்யா, ``இதையெல்லாம் நாங்க நினைச்சுக்கூடபார்க்கலை. ஆபீஸ் ஒர்க்குக்கு பிரின்ட்  எடுக்க வெளியிலதான் போகவேண்டிய சூழல் இருந்துச்சு. ஒவ்வொரு முறை பிரின்ட் எடுக்கவும் ஒரு மணி நேரத்துக்குமேல ஆகும்.  `ஒரு பிரின்ட் எடுக்க ஏன் இவ்வளவு அலையணும்? யார்கிட்டயாவது ஸ்பான்ஸர் கேட்டு, நம்ம ஸ்கூலுக்குன்னு ஒரு பிரின்டர் வாங்கிரலாமே’னு சக்திவேல் சார் ஐடியா சொன்னது மட்டுமில்லாம, தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசி, உடனே ஒரு பிரின்டரையும் வாங்கிவந்துட்டார். உதவி செய்த நண்பருக்கு நன்றி சொல்லி ஃபேஸ்புக்ல ஒரு பதிவு போட்டார். அதுதான் எல்லாத்துக்குமான தொடக்கம்’’ என்று உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார்.

`` `நல்ல விஷயம். உங்க பள்ளிக்கூடத்துக்கு வேற எந்த உதவிகள் வேணும்னாலும் கேளுங்க. நாங்க செய்யத்  தயார்’னு சக்திவேல் சாரின் வேறு சில நண்பர்களும் சொல்ல, எங்களுக்கு ஒரே சந்தோஷம். ஏன்னா, ஒண்ணாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில, மாணவர்களின் எண்ணிக்கை போன வருஷம் வெறும் 95-தான். பிரைவேட் ஸ்கூல் மோகம் எங்க மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைச்சுட்டே வந்துச்சு. மாணவர்களைத் தக்கவைக்கவும் சேர்க்கையை அதிகப்படுத்தவும் நாங்களும் எங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். ஆனா, பாடம் நடத்தும்விதத்துல மட்டும் மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் கவர முடியாதுங்கிற யதார்த்தம் எங்களுக்குப் புரிஞ்சது.  எங்க ஹெச்.எம் மைதிலி மேடம் உள்பட இங்கே வேலைசெய்யும் ஏழு பேரில் ஆறு பேர் பெண்கள்தான். சக்திவேல் சார் மட்டும்தான் ஆண். எல்லோரும் கூடிப் பேசினோம்.

“இது மக்கள் பள்ளி!”

முதல்ல க்ளாஸ் ரூம்ஸ் பெயின்டிங்கை கலர்ஃபுல்லா மாத்தணும். அப்பதான் ஸ்டூடண்ட்ஸ் அட்ராக்ட் ஆவாங்கன்னு முடிவெடுத்தோம். சக்திவேல் சார் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமல்லாது, ஒவ்வொரு டீச்சரும் அவங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள், உறவினர்கள், தன்னார்வலர்கள் மூலம் உதவிகள் கேட்டோம். அதுமூலமா முதல்ல வகுப்பறைகளின் உட்புறம் வண்ணமயமாச்சு. அதைப் பற்றியும் ஃபேஸ்புக்ல எழுதினோம். அதுக்கும் செம ரெஸ்பான்ஸ்! அடுத்த உதவி செய்ய, 15 பேர் தயாரா இருந்தாங்க. பள்ளியில இருந்த நாலு கம்ப்யூட்டர்களுக்கும் இன்டர்நெட் கனெக்‌ஷன் செய்துகொடுக்கச் சொன்னோம். உடனடியா செஞ்சு கொடுத்தாங்க. வகுப்பறைகள் ஸ்மார்ட் க்ளாஸாக ஜொலிச்சுது. இதைப் பார்த்த இன்னொரு தன்னார்வலர், `இது நான் படிச்ச பள்ளிக்கூடம்’ என்ற வாஞ்சையோடு ஆறு வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார்.

இன்னொருவர்  ஏழு மற்றும் எட்டாம் மாணவர்களுக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார். இங்க இருந்த நூலகத்துக்கு முறையான ரேக் இல்லாம புத்தகங்கள் எல்லாம் வீணாகக்கூடிய சூழல் இருந்துச்சு. அதைப் பற்றி ஃபேஸ்புக்ல பதிவுசெய்தோம். அதைப் பார்த்த கல்லூரி மாணவர்களும், பள்ளி நூலகரும் இருந்த புத்தகங்களை தலைப்புவாரியா பிரிச்சு அழகா அடுக்க முன்வந்தாங்க. அது தொடர்பான செய்தி வெளியானதும் நூலகத்துக்கு ஏராளமான புத்தகங்கள் இலவசமா வந்து சேர்ந்தது” என்று திவ்யா நிறுத்த, சக்திவேல் தொடர்ந்தார்.

“இந்த மாற்றத்தால் மாணவர்களின் எண்ணிக்கை ஒரே வருஷத்துல 95-லிருந்து 140-ஆக உயர்ந்தது. அதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? 140-ல் 10 பேர் பிரைவேட் ஸ்கூல்ல படிச்சவங்க!

இதே பகுதியில் குடியிருக்கும் இன்னொரு தன்னார்வலர் எங்க பள்ளி நடவடிக்கைகள் எல்லாம் தெரிஞ்சு  `பிள்ளைகளுக்கு நான் பறை இசை கத்துத்தர்றேன்’னு வந்தார். அடுத்து கம்ப்யூட்டர் கொடுத்த  தன்னார்வலர் மூலமாவே பொம்மலாட்டம், ஓரிகாமி, பாரம்பார்ய விளையாட்டுகள் ஆகியவற்றுக்கான கோச் வந்தாங்க. பாட்டு, டான்ஸ் சொல்லிக் கொடுக்கவும் தன்னார்வலர்கள் எங்களை அணுகியிருக்காங்க” என்கிறார் உற்சாகமாக.

“இது மக்கள் பள்ளி!”

தலைமை ஆசிரியை மைதிலி, ``இதுக்கெல்லாம் முழுமுதல் காரணம் எங்க டீச்சர்ஸுக்குள்ள யிருக்கும் ஒற்றுமை. அதனாலதான் தன்னார்வலர்களோட உதவியோடு தனியார் பள்ளிக்கு நிகரா இந்தப் பள்ளியை மாற்ற முடிஞ்சிருக்கு. ஒவ்வொண்ணுக்கும் எங்க மேலதிகாரிகள்கிட்ட அனுமதி வாங்கி, அவங்க  ஆதரவோடதான் செய்திருக்கிறோம். குறிப்பா, பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கிறோம். யார்கிட்டயும் உதவியை முடிஞ்சவரைக்கும் பணமா வாங்குறதில்லை. மாணவர்களுக்குத் தேவையான பொருள்களோ அல்லது பள்ளிக்குத் தேவையான விஷயங்களோ அதை அவங்களையே செய்துதரச் சொல்லிடுவோம். முடியாதவர்களிடம் மட்டும் பணம் வாங்கி, அவர்கள் முன்னிலையிலேயே பள்ளிக்குத் தேவையான விஷயங்களைச் செய்துடுவோம். நாங்க இங்கிருந்து போறதுக்குள்ள இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் இந்தப் பள்ளிக்குச் செஞ்சுடணும்” என்று முடிக்கும்போது ஏனோ அவர் கண்கள் கலங்குகின்றன.

- எம்.புண்ணியமூர்த்தி; படங்கள்: தி.விஜய்