பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"
பிரீமியம் ஸ்டோரி
News
“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“அத்தைதான் என் முதல் இசை குரு, ரோல் மாடல் எல்லாமே” என்கிறார் ரீமா. மறைந்த பாடகி சொர்ணலதாவின் அண்ணன் மகளான இந்த இளம் பாடகி, ‘பக்கா’ படத்தில் ‘எங்கே போன...’ என்ற பாடலின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். குரலில் அத்தையின் சாயல் அழுத்தமாய்ப் படர்ந்திருக்கிறது.

 “ஒரேயொரு முறை அத்தையோடு ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போயிருக்கேன். அவங்க பாடுறதை ஆச்சர்யமா பார்த்திட்டிருந்தேன். வீட்டுல அவங்க பாடிக் கேட்டிருந்தாலும், அங்கே வேற மாதிரி இருந்துச்சு. நானும் இப்படிப் பாடணும்னு அப்பவே நினைச்சேன்.”

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“அத்தையுடனான நினைவுகள்...”

“நிறைய நிறைய. என் பிறந்தநாள் அன்னிக்கு அத்தை ஏதோ பரிசு கொடுக்கப்போறதா, அப்பா சொல்லிட்டாங்க. என்னன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் தாங்கல. அத்தை அந்த பாக்ஸைக் கொடுத்ததும், ஆசையா பிரிச்சுப் பார்த்தேன். சின்ன ரேடியோ. அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அதை இப்ப வரைக்கும் பத்திரமா வெச்சிருக்கேன்.”

“பாடகர் மனோவை அழவைத்துவிட்டீர்களே?”

“விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில அத்தை பாடின பாடல்கள் சுற்று நடந்தது. அதுல நான் அவங்க பாடின, ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாட்டைப் பாடினேன். அதைக் கேட்டு எல்லோருமே எழுந்து நின்னு கைதட்டினாங்க. மனோ சார் நெகிழ்ந்து அழுதது இப்பவும் கண் முன்னாடி இருக்கு. அத்தைக்குத்தான் அந்த கிரெடிட் எல்லாம்.’’

“உங்கள் அடுத்தடுத்த பாடல்களை எப்போது கேட்கலாம்?”

“பல மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட நான் பாடினதையெல்லாம் கொடுத்திருக்கேன். எனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருப்பேன். தன் தங்கை மாதிரி என்னையும் பாடகியாக்க ஆசைப்படுற அப்பாவின் கனவை நனவாக்கணும்’’ என்றவர், தன் அப்பா, சொர்ணலதாவின் அண்ணன் கே.சி.ராஜசேகரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

அவரிடம் சில கேள்விகள்...

“சொர்ணலதா சினிமாவில் பாட வந்தது எப்படி?”

“சின்ன வயசிலேயே சொர்ணா நல்லா பாடுவா. `சினிமாவுல பாட வெச்சா என்ன’ன்னு தோணுச்சு. அதனால, மெட்ராஸுக்கு வந்து வாய்ப்பு தேடினோம். சொர்ணா பாட்டுப்பாட, நான் ஆர்மோனியம் வாசிப்பேன் அதை ரெக்கார்டு பண்ணி, அந்த கேஸட்டைத்தான் ஸ்டூடியோவில் கொடுத்து சான்ஸ் கேட்டோம். ரெண்டு வருஷம் பல இடங்கள்ல வாய்ப்பு தேடியும் கிடைக்கல. பிறகு, எம்.எஸ்.வி சார் மியூஸிக்ல ‘சின்னஞ்சிறு கிளியே’ பாட்டு பாடினா. அப்புறமும் ஒரு வருஷம்வரை பெரிய வாய்ப்பு எதுவும் வரல. அந்த நேரத்துல நிறைய ஆடியோ ஆல்பத்துக்குப் பாடினா.”

“மறக்க முடியாத சம்பவம்...”

“சொர்ணா ஒருமுறை சென்னையில் வந்து பாட்டுப் பாடிட்டு, டி.வி-யில் குடும்பத்தோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறதுக்காக கேரளாவுக்கு வந்துட்டா. அந்தளவுக்கு அவளுக்குக் குடும்பமும் கிரிக்கெட்டும் பிடிக்கும். மேட்ச் பார்த்துட்டிருந்தப்போ, ‘பிரபு சார் படத்துல ஒரு பாட்டுப் பாடியிருக்கேன்... ரொம்ப நல்ல பாட்டு’ன்னு சொல்லியிருந்தா. நாங்க திரும்ப மெட்ராஸுக்கு வந்தப்போ, டீக்கடையில ஆரம்பிச்சு, எங்க பார்த்தாலும் அந்த ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டுதான் பாடிட்டிருந்துச்சு. ரசிகர்கள் நிறைய பேர் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. ஏராளமான லெட்டர்ஸ் வந்து குவிஞ்சது. `சினிமா நடிகருக்கு இப்படியெல்லாம் வரவேற்பு இருக்கும்... ஆனா, பாட்டுப் பாடறவங்களுக்கு இருக்குமா’ன்னு ஆச்சர்யப்பட்டுப்போயிட்டோம். ஒருத்தர் ரத்தத்தால லெட்டர் எழுதியிருந்தார். அதைப் பார்த்தப்போ சொர்ணா அழுதுட்டா. இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், இப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு அந்த ரசிகருக்குப் பதில் கடிதம் எழுதினா.”

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“சொர்ணலதாவை நெகிழ்த்திய பாராட்டுகள்..?”

“அவளைப் பாடவெச்ச எல்லா மியூஸிக் டைரக்டர்களுமே அவளைப் பாராட்டியிருக்காங்க. அதேபோல நடிகர்களும். ரஜினி சார், ‘வள்ளி’ படத்துல வர்ற ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாட்டு தனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னார். அது பலருக்கும் பிடிச்ச பாட்டு.’’

“ ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடல் ஒளிப்பதிவில் சொர்ணலதா அழுதாராமே?”

“உண்மைதான். அந்தப் பாட்டு ரெக்கார்ட்டிங்குக்கு நான் கூட போயிருந்தேன். பாடல் வரிகளைப் படிச்சதுமே, மனசுக்குக் கஷ்டமா இருக்குன்னு சொன்னா. அதை உள்வாங்கிப் பாடும்போது தன்னையறியாமல் அழுதுட்டா.”

“சொர்ணலதா திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது ஏன்?”

“அது தங்கை எடுத்த முடிவு. அதில் நாங்க தலையிடலை. இசைதான் அவளுக்கு மூச்சா இருந்தது. எத்தனையோ ஆயிரம் பாடல்களைப் பாடின லதா மங்கேஷ்கர் கல்யாணமே செய்துக்கலை. அவரைப்போல தானும் இருந்துடலாம்னு நினைச்சிருக்கலாம்.”

“அத்தை குரல் அப்படியே எனக்கும்!"

“அவர் மரணத்தின்போது அண்ணன்கள்மீது பணம் தொடர்பாகச் சில விமர்சனங்கள் வந்தனவே?”

“அதெல்லாம் சுத்தப் பொய். சொர்ணாவுக்கு மூணு சகோதரர்கள்தான். ஆனா, ஏழு சகோதர்கள் இருக்காங்கன்னு அவங்க இஷ்டத்துக்குச் சொன்னாங்க. அதிலிருந்தே அவங்க சொன்னது பொய்னு தெரிஞ்சுக்கலாம். விமர்சனம் பண்றவங்க ஆயிரம் சொல்லலாம். சொர்ணாவுக்கு ஐஎல்டி (ILD - Interstitial Lung Disease) என்ற நுரையீரல் நோய் இருந்துச்சு. லட்சத்துல ஒருத்தருக்குத்தான் அது வருமாம். அதை முழுமையா குணப்படுத்தும் மருந்தும் கிடையாதாம். அதுக்காக நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு சிகிச்சை கொடுத்தோம்னு அந்த ஹாஸ்பிடல்ல கேட்டாலே சொல்லுவாங்க. அந்த நோயைப் பத்தி கடைசி வரைக்கும் சொர்ணாவுக்குத் தெரியாமலே வெச்சிருந்தோம். ஆனா, எங்க முகத்தைப் பார்த்து அவ கண்டுபிடிச்சிட்டா. ஒவ்வொரு நாளும் சொர்ணாவை மிஸ் பண்ணிட்டுதான் இருக்கோம். அவ பாட்டைக் கேட்டா, இப்பவும் நாங்க கலங்கிப்போயிடுவோம்.’’

“உங்க பொண்ணு இப்போ பாட ஆரம்பிச்சிருக்கிறது பற்றி..?”

“ரீமா பாடினதைக் கேட்கிறவங்க, சொர்ணலதா குரல் மாதிரியே இருக்குன்னு சொல்றாங்க. சொர்ணா மாதிரி இவளும் பெரிய பாடகியா வரணும்.”

- விஷ்ணுபுரம் சரவணன், படம்: சொ.பாலசுப்ரமணியன்