மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

ஷாஜி - ஓவியங்கள் : ரவி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

எம்.பூவராகவன், சன் ஆஃப் மாயாண்டி, கோம்படி, மதுரை சௌத். மதுரை பொன்மேனிப் பகுதியிலுள்ள டைட்டஸ் அண்ணனின் வீட்டில் தூக்கம் வராமல் புரண்ட அந்த நள்ளிரவில், கிட்டத்தட்ட ஆறாண்டுகளுக்கு முன்பு பூவராகவன் சொல்லித்தந்த அவரது முகவரியை நினைவுகூர்ந்தேன். கோம்படி எனும் ஊரில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்றும் அவரை ஒருமுறை சந்தித்து வருகிறேன் என்றும் டைட்டஸ் அண்ணனிடம் சொன்னேன். அந்த ஊர் பத்து பதினைந்து மைல் தொலைவில் இருப்பதாகச் சொல்லி, இரவாகும் முன் திரும்பி வரவேண்டும் என்கின்ற நிபந்தனையுடன், தனது இரு சக்கர வாகனத்தில் அவரே என்னைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். அவ்வாறாக ஒரு ‘கர்த்தரின் பிள்ளை’யின் வண்டியிலேறி ஒரு கஞ்சா வியாபாரியின் வீட்டிற்குப் பயணமானேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

ஒற்றாலங்குளம் எனும் ஊரில் பேருந்திறங்கி, அங்கிருந்து ஒரு காய்கறி வண்டியின் பின்னால் தொங்கி கோம்படியில் சென்று இறங்கினேன். நீர்ப்பற்றும் இலைப் பச்சைகளுமில்லாமல் வாடி வறண்ட ஊர்கள். ஆங்காங்கே தென்படும் தொன்மையான புளியமர நிழல்களைத் தவிர்த்தால் வெய்யிலில் வெந்து கிடக்கும் மண். இங்கேயெல்லாம் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறார்களோ! கஞ்சா வியாபாரம் போன்ற தொழில்களுக்கு இவர்கள் இறங்காமலிருந்தால்தானே வியக்கவேண்டும்?

பூவராகவனைக் கண்டுபிடிக்க எந்த சிரமும் இருக்கவில்லை. முகவரி கேட்டு முச்சந்தியில் நின்றுகொண்டிருந்த என்னை, ஒரு பையன் அவனது பழகித் துருப்பிடித்த மிதிவண்டியின் பின்னால் அமரவைத்து அவரிடம் கொண்டு சேர்த்தான். மாயாண்டியின் மகன் பூவராகவன், வளையங்குளம் போகும் வழியோரத்தில் ஒரு புளிய மரத்தடி நிழலில் படுத்து விசாலமாய்த் தூங்கிக்கொண்டிருந்தார். தூக்கக் கலைப்பின் அனிச்சையில் தலையைத் தூக்கிய பூவராகவன் ஒன்றுமே புரியாமல் கண் விழித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கஞ்சா வாங்கக் கட்டப்பனைக்கு வந்ததும், அங்கே நிகழ்ந்த எனது பாட்டுப் பாடலும், அவரது முகவரியை நான் எழுதி வாங்கியதும், அதைப் பார்த்து எனது அப்பா என்னை தரும அடி அடித்ததும் அடக்கமுள்ள நிகழ்ச்சி விவரணைகளிலிருந்து பூவராகவன் என்னை அடையாளம் கண்டார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு அவரைத் தேடி மாநிலம் தாண்டி இத்தகைய ஒரு குக்கிராமத்திற்கு நான் வருவேன் என்பதைச் சற்றுமே எதிர்பாராததால் அவர் வியந்துபோனார்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?தனது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லும் வழியில் முற்றிலும் மாறிப்போன தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசினார். கஞ்சா வியாபாரத்தையெல்லாம் பல காலத்திற்கு முன்னரே விட்டுவிட்டார். அதில் சம்பாதித்ததைவிட இழந்ததுதான் அதிகம். இரண்டுமுறை கைதானார். ஓரிரு மாதம் சிறைவாசமும் அனுபவித்தார்.  தற்போது அப்பாவும் அம்மாவும் மனைவியும் இரண்டு குழந்தைகளுமாகப் பணமில்லை பட்டினியும் இல்லை என்று வாழ்ந்து வருகிறார். மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊரான சோழவந்தானுக்குச் சென்றிருக்கிறார். காலையிலும் மாலையிலும் வளையங்குளத்திலுள்ள சிறிய நிலத்தில் கொஞ்சம் விவசாயம், பகலில் புளியமரத்தடிகளில் தூக்கம், வார இறுதிகளில் குலுக்கல் சீட்டுக்கான வசூல் வேலை என வாழ்க்கையை ஓட்டுகிறார். சினிமா பார்த்து கொள்ளைக் காலமாகிவிட்டது. எதற்கும்  ‘கட்டப்பனை சுட்டிப் பையன்’ சாஜி நம்மைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே! கொஞ்சம் கொண்டாடிவிடுவோம் என்று போகும் வழியில் பூவராகவன் பெரிய ஒரு வெடக்கோழியை வாங்கினார்.

இறகையும் அலகையும் நகங்களையும் தவிர நாட்டுக்கோழியின் எந்தப் பகுதியையுமே அங்கு வீணாக்குவதில்லை. கோழிக் குடல்தான் விசேஷமானது. அதைச் சமைத்தது பூவராகவனேதான். சோளக் குச்சியை உள்ளே விட்டுக் குத்தி அழுக்கையெல்லாம் வெளியே எடுத்துத் தண்ணீரில் செம்மையாக அலசிச் சுத்தப்படுத்தி, பச்சை மஞ்சள், கல்லுப்பு, மிளகாய் மூன்றையும் கல்லில் அரைத்து எடுத்து குடல் துண்டுகளின்மேல் நன்றாகத் தேய்த்து ஊறவைத்த பின்னர், வீட்டின் முன்றிலில் உள்ள விறகு அடுப்பில் அதை வேகவைத்தார். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயமும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி, வெந்து பதமான கோழிக்குடலைச் சேர்த்து நன்றாக வறட்டியெடுத்த அட்டகாசமான வறுவல். அதோடு பூவராகவனின் அம்மா சமைத்த நல்லெண்ணெய் ஊற்றிக் கொழுத்த கோழிக்குழம்பும் பண்ணைக்கீரைத் துவையலும் மிளகு ரசமும். கோழி இறைச்சியை மூன்றாம் தடவைக் கழுவும்போது கிடைக்கும் தண்ணீர்தான் அந்த ரசத்தின் பிரதான செய்பொருள். பிரமாதமான விருந்தை மூச்சுமுட்டச் சாப்பிட்டுக் களைத்துப்போய் வசதிகளேதுமில்லாத அவ்வீட்டின் தரையில் விரித்த பாயில் படுத்து அசந்து தூங்கிப் போனேன்.

பக்திப் பாடகன்

நடுஜாமத்தில் விழித்தெழுந்தபோதுதான் அந்தியாகும்முன்னே திரும்பி வருவேன் என்று டைட்டஸ் அண்ணனுக்கு அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. குற்றவுணர்வு என்னைத் தாக்கியது. அடுத்த நாள் அதிகாலையில் அங்கிருந்து புறப்படும்போது “சாஜிக்கு மதுரை சுற்றிப் பார்க்க வேண்டாமா?” என்று பூவராகவனும் என்னுடன் வந்தார். நேரடியாக டைட்டஸ் அண்ணனின் வீட்டிற்குச் சென்று தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பூவராகவனையும் கூட்டிக்கொண்டு அவ்வீட்டிற்குச் செல்ல எனக்கு மனம் வரவில்லை. மீனாட்சியம்மன் கோயில், ஆயிரங்கால் மண்டபம், அழகர் கோயில் எனப் பலவற்றைப் பூவராகவன் எனக்குக் காட்டித் தந்தார். மிதிவண்டி ரிக்‌ஷாக்களிலும் மதுரை மாநகரப் பேருந்துகளிலும் ஏறியிறங்கி நாங்கள் மதுரையைச் சுற்றிப் பார்த்தோம். பழமுதிர்ச்சோலை கோயிலைச் சுற்றி வரும்போது ‘பழமுதிர்சோலை எனக்காகத்தான், படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்’ எனத் தொடங்கும் திரைப்பாடலைப் பாடாமலிருக்க என்னால் முடியவில்லை. அது பிடித்துப்போன பூவராகவன் மேலும் பாட ஊக்குவித்தார். ஆனால் கோயில் வலம் வந்துகொண்டிருந்த சில பக்தர்கள், தெய்விகமான கோயில் வளாகத்தில் சினிமாப் பாடல் பாடியமைக்கு என்னைத் திட்டினார்கள்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

‘சினிமாப் பாடல்தானே பிரச்னை. எதாவது பக்திப்பாடல் பாடு’ என்றார் பூவராகவன். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே...’ எனும் டி.எம்.எஸ் பாடலை உரத்த குரலில் எடுத்துவிட்டேன். “வாய மூடுடா முட்டாள்... இங்கே சத்தம் போடக் கூடாதுன்னு தெரியாதா ஒனக்கு?” என்று ஒரு முதியவர் என்னை வசைபாடினார். இவன் கேரளாவிலிருந்து வந்த ஓர் இளம் பக்தன் என்றும் பக்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் பாடுகிறான் என்றும் பூவராகவன் அவரிடம் சொன்னார். அப்போது அவர் “அட மடையங்களா? முருகர் கோயிலில நின்னுக்கிட்டு கிருஷ்ணர் பாட்டு பாடுறதாடா பக்தி? எதாச்சும் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் அங்கே கத்துங்கடா” என்று சொல்லி எங்கள் இருவரையும் ஏசினார். பூவராகவனின் முகம் கடுங்கோபத்தில் இறுகி விறைத்தது. “எங்களைத் திட்ட நீ யாருடா கெழட்டுக்கூ...மவனே” என்று கத்திக்கொண்டு அவரை அடிக்கக் குதித்தார். அதைக்கண்டு அக்கிழவனைவிட நான்தான் நடுங்கினேன். பூவராகவனுக்கு இப்படியும் ஒரு முகமா?

ஒருவழியாக அவரைச் சமாதானம் செய்து அங்கிருந்து கிளம்பி, மதியம் கடந்த நேரத்தில் நகருக்குத் திரும்பி வந்தோம். அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்று சொல்லி என்னைத் திருமலை நாயக்கர் மஹால் பார்க்கக் கொண்டுசென்றார். ஆனால் அன்றைக்கு அங்கே ஏதோ பெரிய நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பெருங்கைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் யாரையும் உள்ளே விட முடியாது என்று எங்களை அனுமதிக்கவில்லை. திருமலை நாயக்கரின் அரண்மனையை எனக்குக் காட்டியே தீர்வேன் என்று வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றார் பூவராகவன். காவலர்கள் எங்களை இழுத்து வெளியே தள்ளினர். என்னைக் கழுத்தை நெரித்துத் தள்ளிவிட்டு பூவராகவனை லத்தியால் அடித்தார்கள். கோபம் தலைக்கேறிய பூவராகவன், கொஞ்சம் தள்ளி நின்று அவர்களைக் கடுமையாகத் திட்டினார். ஒரு தனியார் காவலாளி, காதுகூசும் கெட்ட வார்த்தைகளைக் கூவிக்கொண்டு பூவராகவனை நோக்கிப் பாய்ந்துவந்தார். ஒரே அடியில் அவரைக் கீழே விழவைத்து கால்தூக்கி மிதி மிதி என்று மிதிக்கத் தொடங்கினார் பூவராகவன். “அய்யோ... அம்மா... ஓடி வாங்க... என்னைக் கொல்லப் போறாய்ங்களே…” என்று அவர் காட்டுக் கத்தல் கத்த, ஒரு போலீஸ்காரரும் மற்றொரு தனியார் காவலாளியும் எங்களை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்டேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

“பூவராகவா... நம்பளப் பிடிக்க போலீஸ் வர்றாங்க...” என்று நான் கத்த, “ஓடிக்கோ சாஜீ... என் பின்னால வேகமா ஓடிக்கோ...” என்று சொல்லிக்கொண்டு பூவராகவன் ஓடத் தொடங்கினார். நானும் பின்னால் ஓடினேன். தனியார் காவலாளியும் போலீஸ்காரரும் எங்கள் பின்னால் சரசரவென ஓடி வருகிறார்கள். பயந்து அரண்டு ஓடுவதால் எனது கால்கள் துளியளவும் நகராததுபோன்ற பீதியோடு ஓடினேன். கொஞ்ச நேரம் ஓடிய பின் திரும்பிப் பார்க்கையில், பின்னால் யாருமில்லை. ஆசுவாசமடைந்தேன். திரும்பியே பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்த பூவராகவன் மீண்டும் சற்றுநேரம் ஓடிய பின்தான் நின்றார். “இனி ஒரு தாயளியும் வரமாட்டான்... வந்தா அவன அடிச்சு நாரு நாரா கிழிப்பேன்...” கடுமையாக மூச்சு வாங்கியபடி பூவராகவன் சொன்னார். ஒரு குளிர்பானக் கடையிலிருந்து எலுமிச்சை கலந்த வெட்டிவேர் சர்பத்தை பல குவளைகள் வாங்கிக் குடித்தோம். கடையின் முன் தெருவில் அமர்ந்து இளைப்பாறினோம். பூவராகவன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஆனால் எனது நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டேயிருந்தது. அவர்கள் துரத்தி வருகிறார்களா என்று நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்போது பூவராகவன் என்னிடம் “பயந்திட்டியா? இதெல்லாம் சும்மா! ஒங்க ஊருல வெச்சு நாம மீட் பண்னப்ப சாஜி பாடிய பாட்ட மறந்திட்டியா? ‘என்னை யாரும் தொட்டதில்லை, தொட்டவனை விட்டதில்லை…’ அவ்ளொதான்”

தங்கமே தங்கம்

ஒரு மிதிரிக்‌ஷாவில் நாங்கள் காக்காத்தோப்புத் தெருவில் வந்திறங்கினோம். அங்கிருக்கும் ‘தங்கம்’ திரையரங்கை எனக்குக் காட்டுவதுதான் பூவராகவனின் நோக்கம். ஒரு பிரதேசம் முழுவதும் பரந்து கிடக்கும் ஒரு நெடுங்கட்டடம். பூதாகரமான தூண்களும் சித்திர வேலைப்பாடுகள் உள்ள பெரும் முகப்பும்கொண்ட ஒரு பழங்கால அரண்மனை. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கு அது. இருக்கைகளிலும் தரையிலுமாக ஒரே நேரத்தில் நான்காயிரம் பேர் வரைக்கும் அமர்ந்து படம் பார்த்த வரலாறுடைய உலகின் ஒரே சினிமா அரங்கம் ‘தங்கம்’. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசனின் முதன்முதல் திரைப்படமான ‘பராசக்தி’யை ஓட்டியவாறு தொடங்கப்பட்டது. நான்கு மாதங்கள் அப்படம் இங்கே ஓடியது. தங்கத்தில் ஒரு திரைப்படம் 50 நாள் ஓடினால் மற்ற திரையரங்குகளில் 500 நாள் ஓடுவதற்கு நிகரான வசூல் வரும். தமிழ் மட்டுமல்லாது இந்திப் படங்களும் ஆங்கிலப் படங்களும் இங்கு மாதக்கணக்கில் ஓடின. ப்ரூஸ் லீயின்  ‘ரிடேர்ன் ஆஃப் த டிராகன்’, தருமேந்திரா நடித்த இந்திப்படம் ‘யாதோம் கீ பாராத்’, அதன் தமிழ் வடிவம் ‘நாளை நமதே’ போன்றவை இங்கே நூறுநாள் தாண்டி ஓடிய படங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாக்யராஜின் ‘தூறல் நின்னுபோச்சு’ போன்ற தமிழ்ப் படங்களும் தங்கத்தில் நூறு நாள்கள் கடந்து ஓடின. ஆனால் அதெல்லாம் அந்தக் காலக் கதை. பேணிப் பராமரிக்காமல் முற்றிலும் மங்கிப்போன தங்கத்தில் இப்போது பெரிய படங்கள் எதுவுமே வருவதில்லை. வந்தாலும் அதைப் பார்க்க மக்கள் வருவதில்லை. குழந்தைப் பருவம் முதல் எத்தனையோ படங்களை தான் ஆர்ப்பரித்துப் பார்த்து ரசித்த தங்கம்  ‘தேட்டரின்’ தற்போதைய அவலநிலை பூவராகவனை மிகவும் வருத்தமடையச் செய்தது.

மேட்னி பாதி முடியும் நேரம். ‘அத்தைமடி மெத்தையடீ’ என்று ஒரு படம்தான் அப்போது அங்கே ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க விரும்பவில்லையென்றாலும் தங்கத்தின் உள்ளே சென்று அந்த அதிசயத் திரையரங்கின் உட்புறத்தை உற்றுப் பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அடுத்த காட்சி ஆரம்பிக்கும் வரை காத்திருக்கவும் முடியாது. இருட்டாகும் முன் டைட்டஸ் அண்ணனின் வீடு சேரவேண்டும். இடைவேளை நேரத்தில் உள்ளே போக வழியிருக்கா என்று பார்ப்போம் என்கிறார் பூவராகவன். அப்போதுதான் அந்தத் திடுக்கிடும் காட்சியைப் பார்த்தேன். திரையரங்கிற்கு எதிரே உள்ள சாலையிலிருக்கும் கிறிஸ்தவ இலக்கியக் கடைக்கு முன் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறார்கள் டைட்டஸ் அண்ணனும் மனைவியும். எனது நெஞ்சினூடாக ஒரு மின்னல் பாய்ந்தது. கிறிஸ்தவப் பக்திப் பாடல்களைத் தவிர மற்ற அனைத்துக் கலைகளுமே கர்த்தருக்கு எதிரானவை, அவை சாத்தானின் திறவுகோல்கள் என்று ஆழமாக நம்புகிறவர்கள். அப்போது ‘சகல தீமைகளின் விளைநில’மாகயிருக்கும் சினிமாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? திரையரங்கின் முன்னால் நான் நிற்பதை அவர்கள் பார்த்தால் அதோடு எல்லாமே முடிந்துவிடும். ஏதேதோ சொல்லி பூவராகவனைத் திசைதிருப்பி அங்கிருந்து வேறு வழியில் தலைமறைவானோம்.

பூவராகவனிடமிருந்து பிரியும் நேரம் வந்தது. எனக்குப் போவதற்கான பேருந்தை எதிர்நோக்கி நிற்கும்பொழுது “ஓரிரு மாசத்துல நான் கட்டப்பனாவுக்கு வாரேன். ஒன்னைப் பார்க்க” என்று சொன்னார் பூவராகவன். எனக்குக் கண் கலங்கியது. ஊரைவிட்டு ஓடிவந்தேன் என்றும் இனி கட்டப்பனாவுக்குத் திரும்பிப்போக மாட்டேன் என்றும் சொல்லி அதன் காரணங்களும் பூவராகவனுக்கு விளக்கினேன். எனது கதை கேட்டுக்கொண்டிருந்த பூவராகவனின் முகத்தில் எனக்கு உதவ வழியெதுவுமில்லையே எனும் கையறுநிலை வெளிப்பட்டது. நான் அவருக்கு ஆறுதலாக திடீரென்று “நாளை காலையில நான் மெட்ராஸ் கெளம்பறேன். அங்கே எனக்கு சுரேஷ்னு ஒரு பணக்கார ஃபிரெண்ட் இருக்கான். அவன் வரச் சொல்லியிருக்கான்” என்று சொன்னேன். அந்த கணம் மனதில் வந்த வார்த்தைகளை ஒரு முடிவென அவரிடம் சொன்னதுதான். எனக்கான பேருந்து வரும்முன் கோம்படி செல்லும் பேருந்து வந்தது. எனது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு சில நொடிகள் நின்றபின் எதுவுமே பேசாமல் பேருந்தில் ஏறிப்போன பூவராகவனின் கண்கள் பனித்திருந்தன.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?

அந்தி நேரத்தில் நான் டைட்டஸ் அண்ணனின் வீட்டை அடையும்போது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்தார்.  “நேற்றிரவு ‘நீ’ எங்கே இருந்தே?” கடுமையான குரலில் அவர் கேட்கிறார். “இன்னிக்கு நீ சினிமாப் பாக்கப் போனியா?” சந்தேகமும் வெறுப்பும் கலந்த குரலில் அவர் கேட்கிறார். எனது உள்ளம் நடுங்கியது. தங்கம் திரையரங்கின் முன்னால் நின்றுகொண்டிருந்த என்னையும் பூவராகவனையும் அண்ணனும் அண்ணியும் பார்த்துவிட்டனர். வேறுவழியில் அங்கிருந்து நான் தப்பித்ததையும் அவர்கள் பார்த்திருக்கக் கூடும். “ஒங்கூட இருந்த அந்த தமிழன் யாருடா?” இடி இடிப்பதுபோல் அடுத்த கேள்வி. இனிமேல் என்ன நியாயத்தைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை. “நான் இங்கேர்ந்து கெளம்புறேன். மெட்ராஸில எனக்கு ஃபிரெண்டு இருக்கு. அவன்ட்ட போறேன்” என்று ஒருவழியாகச் சொன்னேன். “இனி ஒரு நிமிசம் ஒன்ன இங்கே நிக்க விடுவோமா? ஆனா நேத்து நைட்டுல நீ எங்கே இருந்தே, ஓங்கூட இருந்த அந்த ஆளு யாரு, இதச் சொல்லாம நீ இங்கேர்ந்து நகர முடியாது” என்று எச்சரித்தார் அண்ணன். ஒன்றுவிடாமல் எல்லாமே சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். பூவராகவன் ஒரு கஞ்சா வியாபாரி என்பது உட்பட. “யேசுவே... கண்டகண்ட திருடனுக்கும் கஞ்சா வியாபாரிக்கும் வீட்டுல எடங்கொடுத்திட்டோமே... இந்தப் பாவத்த எங்கே கொண்டுபோய்த் தீர்ப்பேன்” அண்ணி சத்தமாக அழத்தொடங்கினார். “இப்ப நீ இங்கேர்ந்து கெளம்பணும். இனிமே ஒருபோதும் நீ ஏன் மூஞ்சில முழிக்கக் கூடாது...” கோபமே வராதவர் என்று நான் நினைத்த டைட்டஸ் அண்ணனின் உடம்பெல்லாம் கோபத்தால் கொதிக்கிறது. கையில் கிடைத்த எனது உடைமைகளை அள்ளியெடுத்துக்கொண்டு வெளியே அடர்ந்த இருட்டுக்குள்ளே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை?சென்னையில் திருமங்கலத்திற்கு அருகேயுள்ள சுரேஷின் வீட்டைத் தேடிப்பிடிப்பதற்கு நெடுநேரமானது. கனமான கம்பிக் கதவுக்கு முன்னால் நின்று பலமுறை அழைப்பு மணியை அடித்தேன். உள்ளேயிருந்த மரக்கதவைத் திறந்து ஒருவர் தலை நீட்டினார். சந்தேகப் பாவனையுடன் “ஹூ ஆர் யூ? வாட் யூ வாண்ட்?” எனக் கடுமையாகக் கேட்டார். அவருக்கு சுரேஷின் முகச்சாயல் இருந்தது. நான் சுரேஷின் நண்பன் என்றும் கேரளத்திலிருந்து வருகிறேன் என்றும் மலையாளத்தில் சொன்னபோது அவரது இறுக்கம் சற்று குறைந்தது.

“ஊர்ல எங்கிருந்து வறே?”

“இடுக்கியிலேர்ந்து.”

“எதுக்கு வந்தே?”

“மெட்ராசுக்கு வரும்போது அவசியம் வந்து பாக்கணும்னு சுரேஷ் சொல்லியிருந்தார்.”

“சுரேஷ் இப்பொ இங்கே இல்லியே...”

“எங்கே போனாரு?”

“ஆஸ்ட்ரேலியாவுக்கு.”

“எப்ப வருவாரு?”

“வரமாட்டான். அங்கேயே செட்டில் ஆகப்போறான்.”

ஒட்டுமொத்தமாக இடிந்துபோனேன். அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து நின்ற என்னைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றபின், எதுவுமே சொல்லாமல் அவர் கதவைச் சாத்தினார். “எந்தப் பிரச்னை இருந்தாலும் எனக்குச் சொல்லணும். எப்போ வேண்ணாலும் என்ன வந்து பார்க்கணும்” என்று சொல்லியிருந்த சுரேஷ்மேல்தான் இறுதி நம்பிக்கை வைத்திருந்தேன். அதுவும் வீணாகிவிட்டது.

ஐதராபாத்திற்குப் புறப்படுவதைத் தவிர இனி வேறு வழியெதுவுமில்லை. அங்கே எனக்கு உறவினர்கள் மட்டுமல்ல சில நண்பர்களும் இருக்கிறார்கள். இனிவரும் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வருவது வரட்டும் என்ற உறுதியுடன் ஐதராபாத்தை நோக்கிக் கிளம்பினேன். சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து ஐதராபாத் நாம்பள்ளி வரை செல்லும் சார்மினார் விரைவு ரயில் வண்டியில் ராம்பாபுவைச் சந்தித்தேன். அதுவரைக்கும் மலையாளமும் தமிழும் அல்லாமல் வேறு எந்த மொழியிலுமே யாரிடமும் பேசியதில்லை. ஆங்கிலமும் இந்தியும் நன்றாகப் படிப்பேன், எழுதுவேன். ஆனால் அவற்றைப் பேச முடியும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எத்தனையோ இந்தி சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ இந்தித் திரைப்பாடல்கள் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த தைரியத்தில் ராம்பாபுவுடன் இந்தியில் பேசத் தொடங்கினேன்.

ராஜேந்திர சிங் பேடி, குல்சார், சலிம் ஜாவேத், காதர் கான் போன்றவர்கள் எழுதிய திரை வசனங்கள் என்னைக் கை விடவில்லை. மனதால் அந்த வார்த்தைகளைத் தேடிப்பிடித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். ராம்பாபு ஒரு தெலுங்கு சினிமா ரசிகன். அவரிடமிருந்து தெலுங்கு சினிமாவைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களும் எனக்குக் கிடைத்தன. அடுத்த நாள் காலையில் ஐதராபாத் சென்றிறங்குவதற்குள் எவ்வளவு தப்பு வந்தாலும் பரவாயில்லை தைரியமாக இந்தி பேசுவேன் என்று ஆயத்தமானேன். ஐதராபாத் மாநகரம் என்னை இரு கைகளாலும் வரவேற்றது. ஐந்தாண்டுக்காலம் நீடித்த அந்த ஐதராபாத் வாழ்க்கையில், என்னால் ஒருபோதும் மறக்கமுடியாத சில சினிமா இடங்களும் சினிமா மாந்தர்களும் சினிமாக் காட்சிகளும் இருக்கின்றன.

(தொடரும்)