அரசியல்
அலசல்
Published:Updated:

“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...

“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...

“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...

ஜூன் 3-ம் தேதி, கருணாநிதியின் பிறந்தநாள்... தி.மு.க-வினருக்கு உற்சாகப் பெருவிழா. ஒரு மாதத்துக்கு முன்பே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். பிறந்தநாள் அன்று அதிகாலை 5.30 மணியளவில் சி.ஐ.டி நகர் இல்லத்தில் மரக்கன்று நட்டுவிட்டு கோபாலபுரம் வருவார் கருணாநிதி. கோபாலபுரத்தின் தெருமுனை வரை தி.மு.க தொண்டர்கள் திரண்டு நிற்பார்கள்.

கோபாலபுரம் வீட்டில் தாய், தந்தைப் படங்களுக்கு மாலை அணிவித்துவிட்டு, பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று வணங்கும் கருணாநிதி, மீண்டும் கோபால புரம் திரும்புவார். முக்கியப் பிரமுகர்கள் சந்திப்பு நிகழும். தொண்டர்கள் நெரிச லில் அண்ணா அறிவாலயம் திக்குமுக்கா டும். அங்கு வரும் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். வாழ்த்து, பரிசளிப்பு நிகழ்ச்சிகள் முடிந்து மீண்டும் சி.ஐ.டி நகர் வருவார். அன்றைய தினம் உற்சாகம் கரைபுரளும். ஆனால், இந்த ஆண்டு... கருணாநிதி இல்லாத அவரது முதல் பிறந்தநாள் வருகிறது. இந்தச் சூழலில், கருணாநிதியின் பிறந்தநாள்களில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அவருடன் பழகியவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...

பேராசிரியர் மு.நாகநாதன், திட்டக்கமிஷன் முன்னாள் துணைத் தலைவர்.

“ஒவ்வோர் ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளுக்குத் தனியாக நிகழ்ச்சி நடத்துவேன். 1974-ல் கலைஞரின் பொன்விழா. ஒரிசா முன்னாள் முதல்வர் மறைந்த பிஜு பட்நாயக்கை அழைத்து வந்தேன். அப்போது நான் பிஹெச்.டி மாணவன். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிஜு பட்நாயக், ‘வட இந்தியர்கள், டெல்லியில் உட்கார்ந்துகொண்டு இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கிறார்கள். அதற்கு எதிராகத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு முழக்கம் எழுந்தது. அந்த முழக்கத்துக்குச் சொந்தக்காரர், அண்ணா. அவருடைய கொள்கையை, இடை விடாமல் எடுத்துச்செல்பவர் கலைஞர்’ என்று குறிப்பிட்டார். கலைஞரின் 75-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பங்கேற்றார். அவர், ‘அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதில்லை. ஆனால், கலைஞரை வித்தியாசமாகப் பார்க்கிறேன். அவர் தென்னகத்தின் தலைசிறந்த அறிஞர். அதனால்தான், இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’ என்றார்.

என் ஏற்பாட்டில் நடக்கிற இந்தப் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்குக் கலைஞரை நான் அழைப்பதே இல்லை. ஒரு தடவை பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து, மறுநாள் அறிவாலயத்தில் நடைப்பயிற்சி போய்க் கொண்டிருந்தபோது, ‘நாகநாதன்... நீ வித்தியாசமான ஆளா இருக்கியேப்பா. நீ நடத்துற என் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைக்கமாட்டேங்கிறே?’ என்று கேட்டார். ‘இல்லைங்கய்யா... கட்சி சார்பா பிரமாண்டமா நிகழ்ச்சி நடத்துறாங்க. அதனுடன் என்னால போட்டியிட முடியாது... இது அறிவார்ந்த சமூகத்துக்கு விழிப்பு உணர்வு தேவைங் கிறதுக்காக மாணவர்களையும், ஆசிரியர் களையும் வைத்து நடத்துறேன்’ என்று சொன்னேன். அதைக் கேட்டுச் சிரித்தார்.”

“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...

மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ, தி.மு.க.

“நான், சென்னை மேயராக இருந்த காலம். புவி வெப்பமயமாதல் குறித்த மாநாடு, உலக மேயர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜெர்மனியில் நடந்தது. ஜூன் 2-ம் தேதி மாநாடு. அதில் பேசினேன். ‘பிறந்த நாளை ஒவ்வொருவரும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். எங்கள் தலைவரோ, ஒரு மரக்கன்றை நட்டுவிட்டுத்தான் பிறந்தநாளைத் தொடங்குவார்’ என்றேன். நிறைவுரையாற்றிய மேயர் கூட்டமைப்பின் தலைவர், ‘மரக்கன்று நட்டு தன் தலைவர்  பிறந்தநாள் கொண்டாடுவார் என்று சென்னை மேயர் கூறினார். கேக் வெட்டுவதால் ஒரு சிலருக்கு மட்டுமே சந்தோஷம். ஆனால், இவரின் தலைவர் மரக்கன்று நடுவதால், சமுதாயத்துக்கே சந்தோஷம்’ என்று பேசினார். மறுநாள் தலைவரின் பிறந்தநாள். உடனே கிளம்பி நள்ளிரவில் சென்னைக்கு வந்து, காலை 4 மணிக்குத் தலைவரைப் பார்க்கப்போனேன்.

‘ஜெர்மனியிலருந்து எப்பய்யா வந்தே... அங்கே நீ பேசின செய்தியைப் பார்த்தேன்... நான் மரக்கன்று நடுறதைப் பத்தி நல்லா பேசியிருந்தே’ என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.”

சல்மா, கவிஞர், எழுத்தாளர்.

“மகளிர் அணித் தலைவராகக் கனிமொழி பொறுப்பேற்ற பிறகு, தலைவரின் பிறந்த நாளுக்கு மகளிர் அணியினர் எல்லோரும் சேர்ந்து போனோம். எங்களைப் பார்த்ததும் ‘என்ன... போருக்கு வர்ற மாதிரி மகளிர் அணி படை திரண்டு வந்திருக்கீங்க?’ என்றார். அதற்கு, ‘மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்கள்ல... அதான் பார்த்துட்டுப் போகலாம்னு  வந்தோம்’ என்று மகளிர் அணிச் செயலாளராக இருந்த நூர்ஜஹான் கிண்டலாகச் சொன்னார். சிரித்துக்கொண்டே, ‘அப்படீன்னா... எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா?’ என்று தலைவரும் கிண்டலடித்தார். அந்த இடமே கலகலப்பாகிவிட்டது.”

- ஆ.பழனியப்பன்