80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்! - ஜெயப்ரதா

அடுத்த ஜென்மத்திலும் திரைப்படத் துறையில் வேலை செய்யவே விருப்பப்படறேன்...
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ஜெயப்ரதா. தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ஒரே நேரத்தில் கனவுக் கன்னியாக ஜொலித்தவர். நடிப்பு, நடனம், அழகு எனக் கலக்கிய ஜெயப்ரதா, அரசியலிலும் புகழ்பெற்றார். இன்றும் நடிப்பைத் தொடர்ந்துகொண்டிருப்பவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
உதவும் குணம்... அம்மாவிடம் வாங்கிய அடி!
பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திராவில். ரொம்ப மகிழ்ச்சியான குழந்தைப் பருவம். என் சந்தோஷம் எதுவானாலும், அதைப் பிறருக்கும் கடத்துவேன். தனியாகவும் நண்பர்களுடன் சேர்ந்தும் சேவைப் பணிகளைச் செய்வேன். என் ஏழு வயசுல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஓர் உண்டியல்ல நிதி வசூல் பண்ணினேன். அப்போ கார்ல வந்த ஒருவர், என் உண்டியலைத் திருடிட்டுப்போயிட்டார். பல நாள்களுக்கு வருத்தப்பட்டு அழுதேன். பிறகு, அப்பாவின் பணத்தில் மக்களுக்கு உதவி செய்தேன்.
நல்லா படிப்பேன். ஆர்வமா மியூசிக், டான்ஸ் கத்துக்கிட்டேன். ஒருமுறை கடும் நெரிசலில் ஆபத்தான முறையில் ரயில் பயணம் மேற்கொண்டு, பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். நான் ரிஸ்க் எடுத்து போட்டிக்குப் போனதால், எங்கம்மா பயங்கரமா அடிச்சாங்க. ஆனாலும், என் கலைப்பயண ஆர்வம் அதிகரிச்சுது. அப்பா கிருஷ்ணா ராவ், தெலுங்கு சினிமா ஃபைனான்ஸியர். அப்பாவுடன் அவ்வப்போது சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி விடுமுறை நாள்கள்ல, அப்பாவுடன் சென்னைக்கு வருவேன். அப்போ என்.டி.ராமராவ் சார் பட ஷூட்டிங்குகள் பார்ப்பேன். அவர் வீட்டுல ஒரு பொண்ணு மாதிரி வளர்ந்தேன். பிற்காலத்துல அவர்கூட ஜோடியா நிறைய படங்கள்ல நடிச்சது எனக்கே ஆச்சர்யம்தான்!

10 ரூபாய் சம்பளம்... எம்.ஜி.ஆர் சந்திப்பு!
அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருந் தேன். பள்ளி ஆண்டு விழாவுல நான் கிளாஸிக்கல் டான்ஸ் ஆடினேன். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்ட தெலுங்கு சினிமா இயக்குநர் ஒருவருக்கு என் டான்ஸ் பிடிச்சுப்போச்சு. பிறகு, அவரின் `பூமி கோஷம்’ படத்தில் என்னை மூணு நிமிஷ பாடல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு கொடுத்தார். நடிக்க தயங்கின என்னை என் குடும்பத்தார்தான் உற்சாகப்படுத்தினாங்க. அந்த முதல் சினிமா வாய்ப்புக்கு 10 ரூபாய் சம்பளமா கிடைச்சது. சினிமா வட்டாரத்தில் பிரபலமானேன். இயக்குநர் கே.பாலசந்தர் சார், அவர் படத்துக்காக ஒருமுறை என்கிட்ட பேசினார். `ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கே, பரவாயில்ல... உன்னை நான்தான் ஹீரோயினா அறிமுகப்படுத்துவேன்’னு சொன்னார். அதன்படி, `அந்துலேனிகாதா’ (`அவள் ஒரு தொடர்கதை' ரீமேக்) தெலுங்குப் படத்தில் என்னை ஹீரோயினாக்கினார். அந்தப் படம் செம ஹிட். ஒரு வருஷத்துக்கும் மேல ஓடிச்சு. பிறகு `மன்மத லீலை’ படத்தின் மூலம் தமிழிலும் என்னை அறிமுகப்படுத்தினார் பாலசந்தர் சார்.
தொடர்ந்து, பிஸியான நடிகையாகிட்டேன். சென்னையில் ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங்ல இருந்தேன். பக்கத்து செட் ஷூட்டிங்ல இருந்த எம்.ஜி.ஆர் சார், அவரை சந்திக்க என்னை அழைச்சிருந்தார். தன் பக்கத்துல இருந்தவங்ககிட்ட, `இந்தப் பொண்ணு பெரிய நடிகையா வருவா’ன்னு சொன்னார். மேலும், `நாம இருவரும் சேர்ந்து நடிப்போம்’னு சொன்னார். ஆனா, அவர் அரசியலில் பிஸியானதால் அந்த வாய்ப்பு அமையலை. இயக்குநர் கே.விஸ்வநாத் சாருக்கும் என் வளர்ச்சியில் பெரிய பங்குண்டு. அவர் இயக்கிய `சிரி சிரி முவ்வா’ தெலுங்குப் படத்தில் நடிச்சதுடன், அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கான `சர்கம்’ படத்தின்மூலம் இந்தியிலும் அறிமுகமானேன். ரெண்டு படமும் பெரிய ஹிட். அப்போ எனக்கு இந்தி சுமாராத்தான் தெரியும். அதனால பலரும் என்னை கிண்டல் பண்ணினாங்க. ஆனா, ஆர்வத்துடன் சீக்கிரமே இந்தி கத்துக்கிட்டேன். பாலிவுட்டில் பெரிய நடிகையாக வர, நான் கொடுத்த உழைப்பு ரொம்ப அதிகம். மொழி மற்றும் கலாசாரத்தினால், அந்தக் காலத்தில் தென்னிந்தியர்களுக்கு வடமாநிலங்கள்ல உரிய வரவேற்பு கிடைக்காது. ஆனாலும், என் நடிப்பையும் ஸ்ரீதேவி நடிப்பையும் வடமாநில மக்கள் கொண்டாடினாங்க.

கமலுக்கு ஜோடி... மூவர் நட்புக் கூட்டணி!
`நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மூலம் என்னை தமிழிலும் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாலசந்தர் சார். அப்போ நான், கமல்ஹாசன், ரஜினியெல்லாம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அந்தப் படத்தின் ஷூட்டிங் சிங்கப்பூரில் பல நாள்கள் நடந்துச்சு. காலையிலேருந்து இரவு வரை ஷூட்டிங். கொஞ்ச நேரம் ஓய்வு கிடைச்சா, ஊர் சுத்திப் பார்க்கலாம்னு நாங்க ஆசைப்படுவோம். பாலசந்தர் சார்கிட்ட அனுமதி கேட்டால், திட்டுவார். அதனால ஷூட்டிங் கேன்சலாகணும்னு ஆசைப்படுவோம். கெஞ்சிக் கேட்டு, அவரிடம் பர்மிஷன் வாங்கி மூணு பேரும் நல்லா ஊர் சுத்துவோம்.
அப்போ எனக்கு தமிழ் சரளமா தெரியாது. அதனால கமலும் ரஜினியும் என்னை தமிழில் கிண்டல் பண்ணுவாங்க. எங்களுடைய நட்பு, இப்போவரை தொடருது. பாலசந்தர் சார்கிட்ட நாங்க பலமுறை திட்டு வாங்கியிருக்கிறோம். நான் கோபத்தில் அழுதுகிட்டே, `வீட்டுக்குப் போறேன்; படிக்கப் போறேன்’னு சொல்லுவேன். என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைப்பார்.
நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். டான்ஸுக்கு முக்கியத்துவமுள்ள படங்களே எனக்கு அதிகம் கிடைச்சது. அதில், `சலங்கை ஒலி’ முக்கியமான படம். அதேபோல, தெலுங்கில் `அக்னி போலு’ படத்துல பாம்பு டான்ஸர் ரோலுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். `உங்களால முடியுமா? முடியலைன்னா வேறு ஏற்பாடு பண்ணிக்கலாம்’னு படத்தின் இயக்குநர் கேட்டார். என் திறமையை நிரூபிக்கணும்னு, பயிற்சி எடுத்தேன். பாடல் ஷூட்டிங் நடந்த ஆறு நாளுமே வெறும் பாலும் முட்டையும்தான் எனக்கு உணவு. ஒவ்வொரு படத்துக்கும் தினமும் காலையில சீக்கிரமே லொக்கேஷனுக்குப் போய் ரிகர்சல் எடுத்துப்பேன். இப்படியெல்லாம் என் வெற்றியைப் பலப்படுத்திக்கிட்டேன்.

கனவுக் கன்னி... `தசாவதாரம்’ ரீ என்ட்ரி!
பிரபல நடிகர்கள், ரெண்டு படத்துக்கு மேல ஒரு நடிகையைத் தங்களோடு ஜோடியா நடிக்கவைக்கத் தயங்குவாங்க. ஆனா, பல மொழி சூப்பர் ஸ்டார்களும் என்னுடன் தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிக்க விருப்பப்படுவாங்க. அந்த அளவுக்கு 1980, 90-களில் புகழுடன் இருந்தேன். இந்தியில் ஜிதேந்திராவுடன் 35 படங்களில் நடிச்சிருக்கேன். அதற்கடுத்து அமிதாப் பச்சன் சார்கூட அதிக படங்களில் நடிச்சேன். மற்ற மொழிகளைக் காட்டிலும் இந்தி, தெலுங்கில்தான் ரொம்ப பிஸியா நடிச்சேன். அதனால, `ஜெயப்ரதா தமிழில் நடிக்க மாட்டாங்க’ன்னு வதந்தி கிளம்பிடுச்சு. என்கிட்ட தமிழ் சினிமாவிலிருந்து யாருமே நல்ல புராஜெக்ட்ஸுடன் வரலை. அதனாலதான் எனக்குப் பெரிய இடைவெளி ஏற்பட்டுச்சு. இடையிடையே சில தமிழ்ப் படங்கள்ல நடிச்சேன்.
என் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும், அந்தப் படத்தின் ரிசல்ட் எப்படியிருக்குமோனு நினைச்சு எனக்குள் ஒருவித பயம் உண்டாகும். `படம் சூப்பர்’னு ரிசல்ட் வந்தால்தான், என் படங்களைப் பார்ப்பேன். படம் தோல்வியடைந்தால், அதற்கான காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, என் தரப்பில் தப்பிருந்தால் உடனே சரிசெய்துக்குவேன். சாப்பாடு, தூக்கம் மறந்து அஞ்சு ஷிஃப்ட்டுகள் நடிச்சேன். இந்தி, மராத்தி, வங்காளம் உட்பட ஏழு மொழிகள்... எக்கச்சக்க வெற்றிகள்... `கனவுக் கன்னி’ பட்டமும் கிடைச்சது. மக்களின் அன்பினால்தான் இன்னிக்கு வரைக்கும் எனக்கான அடையாளத்தை தக்கவெச்சிருக்கேன்.
250 படங்களில் ஹீரோயினா நடிச்சது உட்பட, மொத்தம் 300 படங்களில் நடிச்சிருக்கேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கமல்ஹாசன் சார் என்னை வலியுறுத்தி `தசாவதாரம்’ படத்துல அவருக்கு ஜோடியா நடிக்க வெச்சார். மீண்டும் தமிழில் நடிச்சதால ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்போதிலிருந்தாவது தமிழ்ல தொடர்ச்சியா நடிக்கணும்னு நினைச்சேன். ஆனா, அது நடக்கலை. தமிழ்ல தொடர்ந்து நடிக்க விருப்பப்படறேன்.
அரசியல் வாழ்க்கை... இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா!
`உன்னால முடியுமா?’ - இந்தக் கேள்வி என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. அப்படிக் கேட்கப்படும் விஷயம் எனக்கு முக்கியமா பட்டுச்சுனா, எந்த ரிஸ்க்கையும் எடுத்து என் திறமையை நிரூபிப்பேன். அப்படித்தான் நடிப்பு, அரசியல், பிசினஸ்னு பல துறைகளில் களமிறங்கினேன்.
சினிமாவுக்குப் பிறகு, அரசியல் என் வாழ்க்கையின் முக்கிய அங்கம். கர்நாடகாவில் ஷூட்டிங்ல இருந்தேன். ஒருநாள் அதிகாலை 5 மணியிருக்கும். அப்போ ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவ் எனக்கு போன் பண்ணி, `நீ அரசியலுக்கு வந்து, எனக்கு சப்போர்ட் செய்யணும்’னு வலியுறுத்திக் கேட்டார். தனிப்பட்ட நட்பு மற்றும் அவருடன் நிறைய படங்கள்ல நடிச்ச நட்பு என அவர்மீது எனக்கு மரியாதை இருந்துச்சு. அதனால, அவர் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டேன். பிறகு கால சூழ்நிலைகளால், சந்திரபாபு நாயுடுவின் கட்சியில் பணியாற்றியது உட்பட பல மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு உண்டாச்சு. பலமுறை எம்.பி-யாக இருந்து, இப்போ பா.ஜ.க-வில் செயல்படுகிறேன்.

அரசியலில் பெண்கள் வெற்றிபெறுவது எளிதில்லை. இதில் நான் சந்தித்த பிரச்னைகளுக்கும் வேதனைகளுக்கும் குறைவில்லை. `நாம அரசியலுக்கு வராம இருந்திருக்கலாமோ’னுகூட முன்பு நினைச்சதுண்டு. சினிமா மற்றும் அரசியலில் ஒருமுறை வெற்றி கிடைச்சுட்டா, மக்கள் மனசுல ஆழமா பதிவாகிடுறோம். அதனால, அந்தப் பிம்பத்தைவிட்டு விலகி எங்களுக்கு விருப்பமான வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதில்லை. அப்படித்தான் நானும் இருக்கேன்.
ஜெயலலிதா எனக்கு சீனியர். நான் பிஸியாக நடிச்சுக்கிட்டிருந்தபோது அவங்க அரசியலுக்கு வந்துட்டாங்க. நான் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு இடங்களில் நாங்க சந்தித்ததுண்டு. அப்போ மனம்விட்டு பேசுவோம். அந்த நட்பில்தான், சினிமா நூற்றாண்டு விழாவில் எனக்கும் விருது கொடுத்துப் பாராட்டினார். அரசியலில் எனக்குப் பிரச்னை வரும்போதெல்லாம், நிச்சயம் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை நினைச்சுப் பார்த்து நம்பிக்கையை ஏற் படுத்திக்குவேன்.
என்னை அறிந்தோர்... அறியாதது!
உழைப்பு, சவால், புறக்கணிப்பு, தோல்வி, வேதனை, கவலைகள் இல்லாம என்னுடைய வெற்றி சாத்தியமாகிடலை. என் வெற்றியை அறிந்த ரசிகர்களுக்கு, என் வலிகள் பத்தி தெரிய வாய்ப்பில்லை. நான் விரும்பிய சில விஷயங்கள்ல, பெரிய ஏமாற்றங்களைச் சந்திச்சிருக்கேன். அதில், என் கல்யாண வாழ்க்கைதான் மிக முக்கியமானது. நான் ஆசைப்பட்டபடி அந்த வாழ்க்கை சரியா அமையலை. அதனால, நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். தனிமையில் பலமுறை கலங்கியிருக்கேன். அந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டேன்னு இப்போ நினைச்சாலும் வியப்பா இருக்கு. இதெல்லாம், என் சொந்த முடிவுகளால் ஏற்பட்ட விளைவு. அதுக்கு நானே முழுப் பொறுப்பு.
நடிகர்கள் வெள்ளைப் பேப்பர் மாதிரி. கிறுக்கல்களும் கறைகளும் இல்லாத வரையில்தான் அந்த பேப்பருக்கு அழகு. எங்களுக்குள் இருக்கிற கவலைகளை முகத்தில் தெரியப்படுத்திக்காம இருக்கிற வரைத்தான் சிறப்பா நடிக்க முடியும். அதனால எங்க கவலைகளை மறைச்சுக்கிட்டு, சினிமாவுலயும் நிஜ வாழ்க்கையிலயும் நாங்க நடிச்சுதான் ஆகணும். இது எங்க விதி. அதனால, பிரச்னைகளை யார்கிட்டயும் பகிர்ந்துக்காம, எப்போதும் சந்தோஷமா இருக்கிறமாதிரியே என்னைக் காட்டிப்பேன்.
இனி வாழப்போற வாழ்க்கையைக் கவனமுடன் வாழ எனக்கு நிறைய பாடம் கிடைச்சிருக்கு. எனக்குள் பலம் இருக்கிறவரை, அரசியலிலும் சினிமாவிலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். அடுத்த ஜென்மத்திலும் திரைப்படத் துறையில் வேலை செய்யவே விருப்பப்படறேன்.
- நாயகிகள் பேசுவார்கள்!
-கு.ஆனந்தராஜ், படம் : வீ.நாகமணி
என் இனிய ஸ்ரீதேவி!

1980, 90-களில் நானும் ஸ்ரீதேவியும் இந்தி மற்றும் தெலுங்கில் உச்ச நடிகைகளாகப் புகழுடன் இருந்தோம். நிறைய படங்கள்ல இணைந்து நடிச்சோம். போட்டி போட்டு நடிச்சோம்; ஹிட்ஸ் கொடுத்தோம். நம்ம திறமையை முழுமையா வெளிப்படுத்த, மிகச்சிறந்த போட்டியாளர் இருக்கணும். ஸ்ரீதேவி என் போட்டியாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அது, தொழில்ரீதியான ஆரோக்கியமான போட்டி மட்டுமே. ஆனா, எங்களுக்குள் பெரிய பகை இருப்பதுபோல மீடியாக்களில் செய்திகள் வெளியாச்சு. அப்போ இருந்த பிஸியான சூழலில், நாங்க அதற்கெல்லாம் பெரிசா ரியாக்ட் பண்ணலை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு எங்களுக்குள் உண்மையான நட்பு ஏற்பட்டுச்சு. அவ்வப்போது நாங்க மீட் பண்ணி பேசுவோம். அது பிறருக்குத் தெரியாது.
ஸ்ரீதேவி இறந்துபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து கண்கலங்கினேன். ஒரு சிறந்த தோழியையும் போட்டியாளரையும் இழந்துட்ட வருத்தம் இப்பவரை என்னைவிட்டு நீங்கலை. லவ் யூ அண்டு மிஸ் யூ ஸ்ரீதேவி!
அன்னை தெரசாவின் ஆட்டோகிராப்!

அன்னை தெரசா மீது எனக்கு அளவுகடந்த அன்பு உண்டு. வங்காளப் பட ஷூட்டிங் முடிச்சுட்டு, கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானத்துல வந்தேன். அதே விமானத்துல அன்னை தெரசாவும் பயணம் செய்தாங்க. இன்ப அதிர்ச்சியாகி ஓடிப்போய் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். பிறகு ரெண்டு மணிநேரம் அவர்கூட பேசியதுடன், ஆட்டோகிராப்பும் வாங்கினேன். அதுவே என் வாழ்க்கையில மறக்க முடியாத பொக்கிஷ நிகழ்வு!