
காரணம் கண்டுபுடிச்சுட்டேன் தம்பி... இப்ப புதுசாப் போன வூட்ல மேல் தளத்துல குடியிருந்தவரு ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி.
சம்பந்தமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு சித்திரம் அடிக்கடி கனவுகளில் வருவது எல்லோருக்கும் நடக்கும் இல்லையா?

கொஞ்ச காலம் முன்பு நண்பர் லோகுவுக்கு இது பெரிய பிரச்னையாக இருந்தது. ''ஏன்... எதுக்குன்னே தெரியல முருகா... ஒரு கை பொட்டேர்னு சுடுது. காந்தி ரத்தம் தெறிக்க 'லோகூஊஊஊ’னு கத்திக்கிட்டே துள்ளி விழறாரு... எம் பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் கத்திக்கிட்டே ஓடி வருதுங்க... பின்னாடி துப்பாக்கியோட பெரிய கூட்டமே தொரத்திக்கிட்டு வருது... தடார்னு முழிச்சு எந்திரிச்சுருவேன். இப்பிடி ஒரு கனவு அடிக்கடி வருதுப்பா. கழுத... நாம கம்யூனிஸ்ட்டு... ஒரு ஜீவாவோ ஏ.கே.ஜி-யோ வந்தாலும் பரவாயில்ல. இந்த காந்தி எதுக்கு வர்றாப்ல?'' எனப் புலம்புவார். அதன் பிறகு, ஒரு நாள் லேட்டாக வந்தவர், வாஷருக்கு எண்ணெய் போட்டபடியே சொன்னார், ''காந்தி கனவுக்குக் காரணம் கண்டுபுடிச்சுட்டேன் தம்பி... இப்ப புதுசாப் போன வூட்ல மேல் தளத்துல குடியிருந்தவரு ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. காந்தி மதுரைக்கு வந்தப்ப, முன்னாடி போய் நின்னு துண்டுப் பிரசுரம் போட்ட ஆளுகள்ல ஒருத்தராம். காலைல தல டிக்கெட் வாங்கிருச்சு.
இனிமே, காந்தி வர மாட்டாருனு நெனைக்கிறேன்.'' நண்பர் முருகேஷ§க்கு எப்போது பார்த்தாலும் டிஸ்கவரி சேனல் மாதிரி விதவிதமான பாம்புகள் கனவுகளில் வந்து அதிரவைத்துக்கொண்டே இருக்கின்றன. ''பாம்புக் கனவுக்குப் பலன் என்னப்பா?'' என அவர் பார்க்கிறவர்களிடம் எல்லாம் கேட்பார். சித்தார்த்தனுக்கு, ஆங்கிலப் படங்கள் மாதிரி பின்னணியில் கட்ட டங்கள் சீட்டுக் கட்டுக்களாகச் சரிய, இவன் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு சேஸிங். பவானிக்கு, ஏதோ ஓர் உருவம் பெரிய கோட்டைச் சுவரில் இருந்து அவளைத் தூக்கி முதலைகள் வாய் பிளந்து நிற்கும் அகழியில் போடுவது மாதிரியான விஷ§வல். பாஸ்கருக்கு அவன் உடல் கிடத்தப்பட்டு இருக்க, தெரிந்தவர்கள் அழுதுகொண்டு இருக்கிற சித்திரம்.
ஜெகத்துக்குப் பனிமலைப் பயணம். விஜிக்கு குதிரை ரேஸ். பகவதிக்கு மூச்சடைக்கும் ஆழ் கடல் நீச்சல். இப்படி சமீபமாக என் கனவுகளில், அடிக்கடி ஒரு விசித்திரமான காட்சி வருகிறது. இலை தழைகளை உடுத்திக்கொண்டு (ஆதாம் - ஏவாள்தான்) இருவர் ஒரு ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கும்பலே அவர்களை நெருக்கி இழுத்து வெளியே தள்ளுகிறார் கள். அதோடு அந்த விஷ§வல் அறுந்து விடுகிறது. சம்பந்தமே இல்லாமல், தொடர்பறுந்த கண்ணியாக இப்படி ஒரு காட்சி அடிக்கடி வந்துபோகிறது!
கனவுகளை ஆழ்மனப் பாதிப்புகளின் படிமங்கள் என்கிறார் ஃப்ராய்ட். 'மௌனத்தின் ஆழ்கடலில் படிந்துகிடக்கும் நிராசையின் பாசி’ என்கிறார் மௌனி. எனில், எனக்கு அடிக்கடி வரும் இந்த ஏ.டி.எம். மெஷின் கனவின் அர்த்தம் என்ன? பணமும் பொருளும் அற்ற ஆதி வாழ்வின் வனக் குகையில் தொலைந்துவிடத் துடிக்கிறதா இந்த மனம்? பணத்தின் தேவைகளால் உயிரனைய சில உறவுகளை இழந்துவிடுவேனோ எனத் தவிக்கும் ஓர் ஏழை மனதின், பதற்றத்தின் படிமமா அது? பணத்தை முன்வைத்து நடக்கும் சூதாட்ட மாக வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நல்ல நண்பர்கள் தந்த அழுத்தமா?மருத்து வமனையில் இருந்த கர்ப்பிணித் தங்கைக் குப் பழங்கள் வாங்கிப் போகவும் யோசிக் கும் நிதி நிலையில் இருந்த ஓர் அண்ணனின் நினைவில் எரியும் காயமா? மருத்துவ மனைகளிலும் விசேஷங்களிலும் பணத் தின் திசை தேடி அலைந்துகொண்டே இருக்கும் நடுத்தரவர்க்கத்து உப்புச் சமுத்திரத்தின் ஒரு துளியா அது? கடன் கேட்கும் கணங்களின் மிகு துயர் கூச்சங் களை அடிக்கடி அனுபவிக்கும் ஆத்மாக் களின் குரலா? எதுவெனினும் இந்தக் கனவுக்கான எல்லா சாத்தியங்களும் தொடங்கும் வார்த்தை... பணம்!

என் அண்ணன்களின் வாழ்க்கை ஒரு காசு, ரெண்டு காசில் தொடங்கியது. என் தலைமுறையின் பொருளியல் வாழ்வு தொடங்கியது ஐந்து பைசா, பத்து பைசா வில். வீட்டில் இருந்து 50 பைசா எடுத்து வருவது எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தது? தினமும் ஜாமெட்ரி பாக்ஸில் பதுக்கி ரெண்டு ரூபாய் எடுத்து வரும் சாதிக்தான் அப்போது எங்கள் வகுப்பின் வி.ஐ.பி. வாத்தியார் வெளியில் போகும் ரீஸஸ் பீரியடில், வகுப்பறையின் நடுவே வந்து நின்று ஜாமெட்ரி பாக்ஸை ஸ்டைலாகத் திறந்தபடி, '' 'விஜயகாந்த்து வாழ்க’ சொல்றவங்கள்லாம் இந்தப் பக்கம் வா... கலைவாணி வூட்டுக்கு ஜவ்வு மிட்டாய் வாங்கப்போறேன்... டுர்ர்ர்ர்ர்'' என்பான். உடனடியாகப் பாதி கிளாஸ், ''விஜயகாந்த் வாழ்க...'' எனக் கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடும். அவன் அப்போது விஜயகாந்த் வெறியன். ரெண்டு ரூபாயைக் காட்டிக் காட்டியே பாதி வகுப்பை விஜயகாந்த்ரசிகர் களாக மாற்றி வைத்திருந்தான். இப்போது சாதிக் சவுதியில் ஒரு ஷேக் வீட்டில் கார் ஓட்டுகிறான். சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குப் போனபோது சாதிக் வந்திருந் தான்.
காலையில் இருந்தே குடிப்பவனாக மாறி இருந்தான். அதனாலேயே அவன் வீட்டில் எப்போதும் பிரச்னையாகக்கிடந் தது. வீட்டுக்குத் தெரியாமல் காலையி லேயே போய் எங்காவது குடித்துவிட்டு வந்து கரைச்சல் பண்ண ஆரம்பிப்பான். ஒரு நாள் மிக அதிகமாகக் குடித்துவிட்டு, சந்திக் கரையில் கிடந்தவனை எல்லோரும் போய்த் தூக்கி வந்தோம். நல்ல போதையில் அவன் திமிறிக்கொண்டு எழுந்து நின்று, ''டேய்... விடுங்கடா. நான் சம்பாதிக்கிறேன்... காசனுப்புறேன். இதுங்க யாருக்கும் என்னைக் கேக்க அதிகாரம் கெடையாது... கல்யாணம் ஆயி நாலு நாள்ல பிளைட்டு ஏத்தி வுட்டவுனுவோதான இவுனுவோ... இங்க பாரு... இங்க பாரு...'' என்றபடி கைலியைத் தூக்கி சாதிக் காண்பித்தபோது அதிர்ந்து போனேன். அவன் தொடையில் ரெண்டு உள்ளங்கை சைஸுக்கு முற்றாக ஆறாத தழும்பு இன்னும் ரணமாகக்கிடந்தது. ''ரோத்தாடி தெரியுமா... ரோத்தாடி. ஆறு மாசம் தூங்க முடியாது. சும்மானு நெனைச் சியா இந்த சாதிக்க...'' எனக் கத்திக்கொண்டே அவன் தள்ளாடி நடந்த காட்சியை மறக் கவே மாட்டேன்.
எனது இன்னொரு பால்ய நண்பன் சாகுல், வீட்டோடு மாப்பிள்ளையாகக் கொழும்பில் இருந்து 200 கி.மீ. தள்ளி இருக்கிற ஒரு சிங்களக் கிராமத்தின்சைக்கிள் கடை ஒன்றில் பஞ்சர் ஒட்டுகிறான். இன்னொருவன் குரோம்பேட்டை லெதர் கம்பெனியில் மூச்சடைக்க மூச்சடைக்க கெமிக்கல் அடிக்கிறான். ஆசை ஆசையாக மேரியைக் காதலித்து, பணம் இல்லாததால் தோற்றுப்போன சேகர், நைஜீரியாவில் மெக்கானிக் ஆகி மோட்டார் பிரிக்கிறான். நான் பர்ஸில் ஒரு டெபிட் கார்டும்கிரெடிட் கார்டும் வைத்துக்கொண்டு, ''என்னது... டீ ஆறு ரூபாயா? எப்போலேர்ந்துங்க?'' என அண்ணா சாலையில் ஒரு டீக்கடை முன்பு அதிர்ச்சியாகி நிற்கிறேன். 50 காசே போதுமானதாக இருந்த காலம், ஆறு ரூபாய் தேநீரில் நுரைக்கிறது மீள முடியாத நினைவுகளாக.
ஒரு நண்பர், வட்டிக்கு வளைத்து வளைத்துப் பணம் வாங்கிக்கொண்டு, 12 சிம் கார்டுகளுடன் கிட்டத்தட்ட அபோதா பாத் வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடன் மாதிரி வாழ்கிறார். ''என்னோட வாழ்நாள் சாதனை என்ன தெரியுமா? நான் இன்னும் தற்கொலை பண்ணிக்காம இருக்கறது தான்...'' என அவர் ஒரு முறை சொன்ன போது, நிம்மதி இல்லாத அவருடைய அன்றாடங்களின் வலி முகத்தில் அறைந்தது!
காலக் கொடுமையில், ஆறேழு வருடங் களுக்கு முன்பு நானும் தவணையில் ஒரு கணினி வாங்கினேன். 30 மாதங்கள் கட்ட வேண்டிய தவணையில் பாதியைக் கட்டா மல் அப்படியே மறந்துவிட்டேன். (அதெப் படி மறக்கும்... பணக் கஷ்டம்தான் பாஸ்.)
இந்த மாதிரியான குற்றங்கள் கிரிமினலா... சிவிலா? என்றுகூட அறியாத பாலகன் நான். சில பல மாதங்கள் கழித்து திடுதிப் என்று ஹை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி ஒரு கடிதம் வரவே வெலவெலத்து, இந்த விவகாரங்களில் தளபதியான நண்பர் ஒருவரிடம் ஆலோ சித்தேன். அவர் ஆறு சிம் பார்ட்டி. ஆகவே, ஐடியாக்களைப் பொழிந்தார்.
''அவங்க வரச் சொன்ன அன்னிக்குப் போயிரு... இருக்கறதுலயே டஞ்சனா ஒரு சட்டை-பேன்ட்டை மாட்டிக்கிட்டுப் போ. அவங்க என்ன சொன்னாலும் 'அய்யா... நான் ரொம்ப ஏழைங்க. சாப்பாட்டுக்கே கஷ்டங்க. என்னால அவ்வளவு கட்ட முடியாதுங்க’னு கதறு. கஷ்டப்பட்ற மாதிரியே நடி.''
''நடிக்கிறது என்ன பாஸ்... அப்பிடித்தானே இருக்கு பொழப்பு. நீங்க மேல சொல்லுங்க...''
''அப்பிடி இப்பிடிப் பாதி அமௌன்ட் டுக்கு வருவாங்க. ஒரு டைம் வாங்கிட்டு வந்து கட்டிரு. நீ கொஞ்சம் டீசன்ட்டுங் கிறதால இப்பிடிச் சொல்றேன். நம்மள மாதிரி ஆட்டத்துக்கு ரெடின்னா சொல்லு... சிம்மை உருவி வீசிட்டு, வீட்டை மாத்திட் டுப் போயிட்டே இருக்கலாம்.''
''இல்ல... நான் அவங்களையே டீல் பண்ணிக்கிறேன்...''
குறிப்பிட்ட நாளில் கோர்ட்டுக்குப் போனேன். நாலைந்து நீதிபதிகள் உட் கார்ந்து இருக்க, அந்த ஹால் முழுக்கக் கூட்டம் கும்மியது. டோக்கன் போட்டு வரிசைப்படி பார்ப்பதற்குள் மூச்சு முட்டி யது. அங்கே இருந்த கூட்டத்தைப்பார்க்கும் போது... நமது தேசத்தின் கடன், ஸ்பெக்ட் ரம் ஊழல் தொகை, கலைஞர் - சசிகலா குடும்பங்களின் சொத்து மதிப்பு, அஜீத் - விஜய் - சூர்யா சம்பளங்கள், பெப்ஸி - கோக் வியாபாரம், மல்லையா மகன் முகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. ஆனாலும், நான் எளியன் இல்லையா?
''அய்யா... நான் ரொம்ப ஏழைங்க... இவ்வளவு பணம் கட்ட முடியாதுங்க'' என ஒரு நீதிபதியின் கையைப் பிடிக்கத் தவ்வினேன்.
அவர் சிறு சலனமும் இல்லாமல், ''எஸ்.பி. லோன் கேஸா? முதல்ல கைல இருக்கிற பணத்தைக் கட்டிட்டு, அப்பிடி ஓரமா உக்காரு'' என்றார்.
''அய்யா... முப்பத்தஞ்சு ரூபா இருக்குங் கய்யா...'' என நான் அப்பாவியாகபாக்கெட் டைத் தடவ, அவர் பயங்கர டென்ஷன் ஆனார். ''நீ அப்பிடி உக்காரு... பேங்க்காரங்க பேசுவாங்க... உன் மூஞ்சே சரியில்லையே...'' என உட்காரவைத்தார்.
உண்மையைச் சொல்லப்போனால், அங்கே அன்று இருந்த முகங்களில் நான் கொஞ்சம் அபவ் ஆவரேஜ். அந்த அளவுக்குப் புலம்பல்களாலும் கதறல்களாலும் நிறைந்து கிடந்தது ஹால். அப்போது என் பக்கத்தில் தனது மனைவியுடன் கைலியில்சல்பேட்டா மணக்க உட்கார்ந்து இருந்த ஒருவர், ''கோடிக் கணக்குல கொள்ளை அடிக்கிறவன்லாம் கொட்டடிச்சுட்டு சுத்துறான்... மாட்னாலும் ஜெயில்ல ஏ.சி. போட்டுக்கறான். நமக்குஎன்னடி... இப்பப் பாரு... நீ பாட்டுக்குப் பின்னாடியே வா...'' என எழுந்தார்.
திடுதிப்பென மனைவியை இழுத்துக் கொண்டு எதிரே இருந்த நீதிபதியின் முன்னால் தடாலென விழுந்தார். ''அய்யா... நீங்க இப்ப மனசுவைக்கலைன்னா, நாங்க ரெண்டு பேரும் வெளிய போய் வெஷம் வாங்கிக் குடிச்சுட்டு, இங்கயே ஓடி வந்து வுழுந்து செத்துருவோம்யா...'' எனக் கைலி கதற, அந்த நீதிபதி அலட்சியமாகப் பக்கத் தில் இருந்த வங்கி அதிகாரியிடம் திரும்பி அடித்ததுதான் செம பஞ்ச்... ''கேட்டீங்கள்ல... நீங்கதானே கடன் குடுத்தீங்க. அப்பிடியே அந்த விஷத்தையும் வாங்கிக் குடுத்துருங்க... பாவம், ரொம்பக் கஷ்டப்பட்றாங்க...'' எப்படியோ உருட்டிப் புரட்டி அந்த லோனை அடைத்தேன்!
சாதாரணமாகவே வங்கிகளில் இருந்தும் கால் சென்டர்களில் இருந்தும் ''சார்... உங்க மன்த்லி சேலரி சொல்ல முடியுமா?'' என்கிற பெண் குரல்கள் எரிச்சலூட்டும். மேற்சொன்ன சம்பவத்துக்குப் பிறகு தீவிர வாதம் ஏறியிருந்தது. அப்படி ஒரு கணத்தில், பேசிய பெண் குரலிடம் கண்டபடி திட்டி விட்டேன். சட்டென்று எதிர் முனை அழுதபோது சுருக் என்றது. ''அய்யோ ஸாரிம்மா... ஸாரிம்மா...'' எனத் தேற்றிய பிறகு கேட்டேன், ''ஏம்மா... இப்பிடி நிறை யப் பேர் ஏதேதோ பேசுவாங்களே... உங்க ளுக்குக் கஷ்டமா இருக்காதா?''அதற்கு அந்தப் பெண் சொன்னாள், ''என்ன பண்றது சார். அவங்கவங்க மூடுக்கு ஏதேதோ பேசுவாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அப்புறம் எங்களுக்கு சேலரி யார் சார் கொடுப்பாங்க... இந்த லைன்ல பெர்சனல் பேசக் கூடாது சார்'' எனத் தேம்பியபடி வைத்துவிட்டாள். அதன் பிறகு, இப்படிப் பேசுகிற யாரிடமும் நான் எரிச்சலைக் காட்டுவது இல்லை!

எங்கள் ஊர்ப் பக்கம் உள்ள பேராவூரணி யில் மொய் விருந்து பிரபலம். எதாவது ஒரு வீட்டில் பணக் கஷ்டம் என்றால், பத்திரிகை அடித்து சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கொடுத்து வீட்டில் மொய் விருந்து நடத்துவார்கள். விருந்துக்கு வரும் உறவுகள் சாப்பிட்டுவிட்டு வைத்துப்போகிற மொய்யில் அந்த வீட்டின் தேவைகள் தீர்ந்துவிடும். மைக் கட்டி, போஸ்டர் அடித்து, கிடா வெட்டி இது பெரிய களேபரத் திருவிழாவாகவே நடக்கும். சில வீடுகளில் லட்சக்கணக்கில் மொய் நடந்த ரெகார்ட் பிரேக் எல்லாம் உண்டு. தான் வைத்ததைவிடக் குறைவாக வைத்து உறவு களுக்குள் பெரிய வெட்டுக் குத்தெல்லாம் நடக்கும். பொதுவாக, இந்த மொய் விவகாரங்களால் நமது கிராமங்களில் உடைந்துபோன உறவுகள் எத்தனையோ உண்டு. ''காளி... அசிங்கப்படுத்திட்டா னுவோ. இங்க குடுறி...'' என பொண்டாட்டி போட்டிருந்த மூக்குத்தியைப் பிடுங்கி வாசல் கூரையில் எறிந்துவிட்டுப்போன மாமாக்களை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர் ஒருவர் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். காதல் திருமணம் என்பதால் ஊருக்குப் போகா மல் சென்னையிலேயே நடந்தது கல்யா ணம். நண்பர் சொன்னார்,
''எங்க அம்மாவுக்குப் பெரிய வருத்தம்... ஊர்க்காரங்க மொய் எல்லாம் போச்சேங்கறதுதான். ஏன்னா... எங்க சொத்துல பாதியை இது வரைக்கும் சொந்த பந்தங்களுக்கு மொய் யாவே வெச்சுருப்போம். பையன் கல்யா ணத்துலதான் அதை நேர் செய்யணும்னு நெனைச்சவங்களுக்கு, அது மொத்தமும் போச்சேங்கறதுதான் பெரிய வருத்தம்!''
அடையாறு மருத்துவமனை ஒன்றில் கேன்சருக்காகச் சேர்க்கப்பட்ட நண்பனின் அப்பா இறந்துவிட்டார். ஒன்றரை லட்சம் கட்டினால்தான் உடலைத் தருவோம் என்றார்கள் மருத்துவமனையில். உடலை வாங்குவதற்காக இரண்டு நாட்கள் ஏகப் பட்ட பஞ்சாயத்துக்கள் செய்து, ஒரு வழி யாக ஒரு லட்சம் திரட்டிக் கட்டி, போய் எரித்துவிட்டு வந்தோம். திரும்பும்போது, ''நல்ல வேளைங்க... இந்தக் காசு கெடைக் கலைன்னா, எங்கப்பாரு புள்ள இருந்தும் அநாதையாப் போயிருப்பாரு...'' என நண்பன் சொன்னபோதுதான் எனக்குத் தோன்றியது... வாழும்போது, எதை வேண்டுமானாலும் பணம் தீர்மானிக் கட்டும், நமது பிரியங்களை மட்டும் ஒருபோதும் அது தீர்மானித்துவிடக் கூடாது!
(போட்டு வாங்குவோம்...)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan