
ஓவியம்: செந்தில்

அயல்
அந்தி நிழலென
நீண்ட பிரிவின் பின்னான
ஒரு சந்திப்பில்
துணை இழந்த தோழியினை விசாரித்த துக்கத்தில்
‘தவணையில் இழக்கிறேன் அவனை
கேள்விகளின் கொக்கிகளில்’ என்கிறாள்
பதில்களின் தூக்குக் கயிற்றில்
இறுகிவிட்டதென் பேரார்வம்
- தேவசீமா
டீச்சர் `அம்மா'
தமிழ் வகுப்பெடுத்த சீத்தாலட்சுமி டீச்சருக்கு
அடிக்கத் தெரியாது; திட்டத் தெரியாது,
வகுப்பிற்குள் நுழைந்ததும்
சுவரில் சாய்த்துவைத்திருக்கும் பிரம்பினை எடுத்து
டேபிளில் வைத்துவிட்டால்
அதுவாக அடித்துவிடுமென்று நம்பியிருப்பார்.
என்னுடைய ஒழுங்கீனம்
தலைமை ஆசிரியர் வரைக்கும்
போனபோதுகூட
என்னை அடித்துவிடும் வாய்ப்பை
அழுதே தவிர்த்துவிட்டார்.
படிப்பைவிடவும் தன்னைப் 'பிள்ளே'ன்னு
டீச்சர் கூப்பிடணும்கிற ஆசைதான்
ஒவ்வொரு வருஷமும்
எல்லோருக்குள்ளும் இருந்தது.
பணி ஓய்வு பெற்றுவிட்ட
சீத்தாலட்சுமி டீச்சரை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
பார்க்க நேர்ந்தபோது `டீச்சர்’ என்றேன்
`பிள்ளே’ என்றார்
`படிக்கும்போது நான்
உங்க பிள்ளயா இல்லயே' என்றதும்
என்னை அடித்துவிடும் வாய்ப்பை
இப்போதும் அழுதே தவிர்த்துவிட்டார்.
- ஆண்டன் பெனி
பட்டாம்பூச்சி
ஒரு கொடுக்கோ
கொஞ்சம் விஷமோ
கொடுத்திருக்கலாம் கடவுள்
தொடுமுன்
ஆயிரம் முறை
யோசித்திருப்பார்கள்.
- தேவசீமா
சருகானது துளிர்த்த கதை...
வேண்டுதலின்பொருட்டு
பலியிடலுக்காய்
இளங்கிடாய் ஒன்றை
நிகர எடை கணித்து
உரிய விலைக்கு
சந்தையில் வாங்கி
வண்டியில் ஏற்றிவருவதற்காகக்
காத்திருக்கிறேன்
பசியால்
தவித்த அதற்கு
மாவிலைகள் சிலவற்றை
உருவிக்கொடுக்க
அது வாலாட்டியவாறே
தின்று முடித்தது.
குட்டிக்கயிற்றில்
கட்டியிருந்த இடம்
உயரமாய் இருப்பதை
அது குறிப்பால் உணர்த்த
படுத்துக்கொள்ள
வசதியாய்
அவிழ்த்துக் கட்டினேன்.
இப்போது அதன்
அசை போடுதலில்
ஒருதுள்ளலான
பாடல் கேட்கிறது.
வண்டியில் ஏற்றிய அதன்
அமைதியான வருகை
ஏதோ வளர்ந்த வீட்டுக்கு
வருவதாய் உணர்த்துகிறது.
வீடிறக்கி
அச்சில் கட்டுகையில்
என் கால்களை மோந்தவாறு
பாச வாசனையைக் காட்டுகிறது.
நாளை மறுநாள்
வெட்டுவதற்காக
நேற்று வாங்கிய கிடாய்
இன்றுமுதல்
வளரத் தொடங்கியது வீட்டில்.
மனப்பூர்வமாக.
- சாமி கிரிஷ்