மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்! - ராதா

1980s evergreen Heroins  - Radha
பிரீமியம் ஸ்டோரி
News
1980s evergreen Heroins - Radha ( Aval Vikatan )

முதல் மரியாதைப் படத்துக்காக எனக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது மிஸ் ஆகிடுச்சு...

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ராதா.

ஹோம்லி, கிளாமர் என இரண்டு ரோல்களிலும் `அடி தூள்’ கிளப்பி ரசிகர்களை வசீகரித்தவர் ராதா. இவரும் இவரின் அக்கா அம்பிகாவும் ஒரே காலகட்டத்தில் நாயகிகளாகப் புகழின் உச்சத்தில் இருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்கமுடியாத நாயகியாக வலம்வந்த ராதா, திருமணத்துக்குப் பிறகு இதுவரை நடிக்கவில்லை. ஆனாலும், ரசிகர்களின் அன்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

டாம் கேர்ள்... டூயட் கனவு!

திருவனந்தபுரம் அருகிலுள்ள கல்லற கிராமம்தான் எங்க பூர்வீகம். அக்காக்கள் அம்பிகா, மல்லிகா மற்றும் ரெண்டு தம்பிகள் எனக்கு. இன்ஜினீயரான அப்பா வேலையில பிஸியா இருந்ததால, அம்மாவின் அரவணைப்புல வளர்ந்தோம். தினமும் சாயந்தரம் வராண்டாவுல குடும்பமா உட்கார்ந்து கதை பேசுவோம்; டான்ஸ், பாட்டுனு குதூகலமா இருப்போம். இப்படி எங்க குழந்தைப் பருவத்தை நிறைவா அனுபவிச்சு, கிராமத்து வாழ்க்கையை சந்தோஷமா கழிச்சோம். பிள்ளைங்க நாங்க அஞ்சு பேருமே படிப்பைத் தவிர, கல்ச்சுரல் நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் கலந்துக்கணும். அதில் வெற்றி இரண்டாம்பட்சம்தான். நாங்க குறும்பு செய்தா, ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே இருக்கும் பிரம்பினால் அம்மா அடிப்பாங்க.

1980s evergreen Heroins  - Radha
1980s evergreen Heroins - Radha
Aval Vikatan

நான் கொஞ்சம் டாம் பாய் மாதிரிதான் வளர்ந்தேன். அக்கா அம்பிகா எல்லோருக்கும் பிடிச்ச மாதிரியான திறமை சாலிக் குழந்தையா இருப்பாங்க. அதனால, பல படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிக்கும் வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சுது. அக்கா நடிச்ச `விடருன்ன மொட்டுகள்’ பட ஷூட்டிங் பார்க்கப் போன என்னையும் சில காட்சிகள்ல நடிக்க வெச்சாங்க. சந்தோஷமா நடிச்சாலும், எனக்கு நடிக்கிற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா, ஸ்கூல் கட் அடிச்சுட்டு தியேட்டருக்குப் போற அளவுக்கு சினிமா பிரியை. வாரம்தோறும் குடும்பமா தியேட்டருக்குப் போவோம். அப்போ சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் நடிச்ச தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு இருக்கும். வீட்டுக்கு வந்து அவங்ககூட டூயட் ஆடுற மாதிரி கனவு காண்பேன். அப்போ ஜெயலலிதா அம்மாவின் மாடர்ன் நடிப்பும், ஸ்ரீப்ரியாவின் டாம் கேரக்டர் நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஹீரோயின் வாய்ப்பு... `ராதா’ பெயர் மாற்றம்!

அம்பிகா அக்கா மலையாளத்தில் ஹீரோயினா பிரபலமாகிட்டாங்க. அப்போ, பாரதிராஜா சாரின் புதுப் பட ஹீரோயின் தேர்வுக்கு அக்காவை எங்கம்மா கூட்டிட்டுப்போனாங்க. கேரளப் பொண்ணு சாயலில் இருந்ததால, அந்தக் கதைக்கு அக்கா பொருந்தலை. அம்மா வருத்தப்படக் கூடாதுன்னு, `உங்களுக்கு வேற பொண்ணுங்க இருக்காங்களா?’னு பாரதிராஜா சார் கேட்டிருக்கார். சகோதரிகள் நாங்க மூவரும் இருக்கிற ஒரு போட்டோவை பாரதிராஜா சார்கிட்ட அம்மா கொடுத்திருக்காங்க. மல்லிகா அக்காவும் மலையாள சாயலில் இருந்ததால, `சின்ன பொண்ணு தமிழ்நாட்டு சாயல்ல இருக்கு. நான் நேர்ல வந்து பார்க்கிறேன்’னு அம்மாகிட்ட சொல்லியிருக்கார் பாரதிராஜா சார். எங்க வீட்டுக்கு அவர் வந்தப்போ, முன்கூட்டியே அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்தபடி, பாரதிராஜா சார் என்கிட்ட கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேன்.

பிறகு, சென்னையில் போட்டோஷூட் முடிஞ்சு, பாரதிராஜா சார் சொன்னபடி பேசிக்காட்டினேன். என்னை `அலைகள் ஓய்வதில்லை’ படத்துல நாயகியாக்கினார். அந்தப் படத்துக்கான இசைப் பணிகள் பிரசாத் ஸ்டூடியோவுல நடந்துட்டிருந்துச்சு. அங்கு என்னை ஒருநாள் கூட்டிட்டுப்போன பாரதிராஜா சார், ஜானகி அம்மா, இளையராஜா சார் உட்பட பலர்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்திவெச்சார். அவங்களுடைய புகழ் எல்லாம் எனக்கு அப்போ சுத்தமா தெரியாது. பத்தாம் வகுப்பு தொடங்க சில நாள்கள் இருக்க, ஷூட்டிங் ஆரம்பமாச்சு. மலையாளத்தில் எழுதிவெச்சுதான் தமிழ்ல பேசுவேன். ஹீரோ கார்த்திக்குக்கும் தமிழ் தெரியாது என்பதால அவரும் என்னை மாதிரிதான் கஷ்டப்பட்டார். ஒருநாள் திடீர்னு, `உதய சந்திரிகாங்கிற உன் பெயரை ராதான்னு மாத்துறேன்’னு சொன்னார் பாரதிராஜா சார். அது எனக்குப் பிடிக்கலை. `பாரதிராஜா சார் அறிமுகப்படுத்தும் நாயகிகளின் பெயர் ‘ஆர்’லதான் ஆரம்பிக்கும், அது ராசியும்கூட’னு என்னைச் சமாதானப்படுத்தினாங்க எங்கம்மா. பாரதிராஜா சார், பெண் போலவே அழகா நளினத்துடன் டயலாக் சொல்லிக்கொடுக்கிற விதத்தைப் பார்த்து அசந்துபோவேன். என்னைப்போலவே, அவர் முன்னாடி கல்லாக போய் நிக்கிற புதுமுக நடிகர்கள் பலரையும் செதுக்கின சிற்பி அவர். அவர்கிட்ட நான் திட்டுவாங்கினதில்லை; அவரை நான் கோபப்படுத்தினதுமில்லை.

1980s evergreen Heroins  - Radha
1980s evergreen Heroins - Radha
Aval Vikatan

லக்கி ஜோடி... சிவாஜியின் பெருந்தன்மை!

`அலைகள் ஓய்வதில்லை’ படத்தை தியேட்டரில் பார்த்தப்போ, என்னை ஸ்கிரீனில் பார்க்க எனக்கே ரொம்ப வெட்கமா இருந்துச்சு. கூச்சப்பட்டு கண்ணுல கையை வெச்சு மறைச்சுட்டேதான் என் நடிப்பைப் பார்த்தேன். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்தன. நடிப்புக்கு இடையே படிப்பையும் தொடர்ந்தேன். 10-ம் வகுப்புக்குப் பிறகு கரஸ்ல டிகிரி படிச்சேன். எங்கம்மா கட்டளைப்படி தினமும் காலையில நியூஸ் பேப்பர் படிப்பேன். இதுக்கிடையே கார்த்திக்கும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம். எங்களை லக்கி ஜோடினு சொல்லுவாங்க. நானே எதிர்பாராத வகையில, ஒரு வருஷத்துலயே முன்னணி நடிகையாகிட்டேன்.

அக்காவும் நானும் ஒரே நேரத்துல இரண்டு தலைமுறை நடிகர்களுடனும் ஜோடியா நடிச்சோம். அப்படித்தான் பிரபு சார்கூட பல படங்கள்ல ஜோடியா நடிச்சேன். அவர் வீடு, எனக்குப் பிறந்த வீடு மாதிரி. அதனால, சிவாஜி சாரை அப்பானுதான் கூப்பிடுவேன். `முதல் மரியாதை’ படத்துல அவருக்கு நான் ஜோடின்னு கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாவும் பயமாவும் இருந்தது. அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் என்னைக் கூப்பிட்ட சிவாஜி சார், `நம்ம ரெண்டு பேரோட நடிப்பும் பாரதிராஜாவுக்குத் திருப்தியில்லைனு நினைக்கிறேன். `தில்லானா மோகனாம்பாள்’ படத்துல மனோரமாவின் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சுல்ல... அதுபோல நம்மையும் புதுமையான கோணத்துல நடிக்கவைக்க நினைக்கிறார்’னு சிவாஜி சார் என்கிட்ட சொன்னார்.

அவ்வளவு பெரிய நடிகர், ‘நாம டைரக்டருக்குப் பிடிக்கிற மாதிரி நடிக்கணுமே’ன்னு ஒரு தவிப்போட சொன்னது, எனக்கு ரொம்ப பிரமிப்பையும் மரியாதையையும் உண்டாக்கிச்சு. நாங்க ரெண்டு பேருமே புது நடிகர்கள் மாதிரி பாரதிராஜா சாரின் எதிர்பார்ப்புப்படி நடிச்சோம்; மேக்கப் இல்லாம இயல்பா நடிச்சோம். என் கதாபாத்திரத்துக்கு நான் டப்பிங் கொடுக்காததால, ‘சிறந்த நடிகை’னு அந்தப் படத்துக்காக எனக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது மிஸ் ஆகிடுச்சு. விருது மட்டுமே ஒருவரின் திறமைக்கு அடையாளமும் அங்கீகாரமும் கிடையாது, இல்லையா?

என் சம்பளம்... போட்டியாளர் யார்?

`எங்கேயோ கேட்ட குரல்’, `அம்மன் கோயில் கிழக்காலே’, `நினைவே ஒரு சங்கீதம்’, `காதல் பரிசு’, `மெல்லத் திறந்தது கதவு’ன்னு நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சேன். என் படங்களின் வெற்றி விழா நிகழ்ச்சிகளில்தான் என் புகழை உணர்ந்தேன். தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சார்தான் என் கால்ஷீட் மற்றும் கதை கேட்கும் விஷயங்களைக் கவனிச்சுக்கிட்டார். அவருக்கும் என் அம்மாவுக்கும்தான் என் சம்பளம், நான் நடிக்கும் படங்கள் பத்தியெல்லாம் தெரியும். அப்போ என் கையில ஒரு ரூபாய்கூட இருக்காது. அதற்குத் தேவையும் ஏற்படலை. எனக்குத் தேவையான எல்லா விஷயங்களும் நிறைவாகக் கிடைச்சது.

அப்போ சென்னை ஜெமினி மேம்பாலத்துக்குப் பக்கத்துல ஒரு தியேட்டர் (சபையர்) இருந்துச்சு. அங்க நிறைய படங்களைப் பார்த்துத்தான் தமிழ்நாட்டின் கலாசாரத்தைத் தெரிஞ்சுகிட்டேன். அக்கா அம்பிகா, ராதிகா, ரேவதி போன்றோரின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். எங்க காலத்துல ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு விதத்தில் திறமையாளரா இருந்தோம். நான் யாரையும் போட்டியாளராக எடுத்துக்கலை. சந்தோஷமா நடிச்சேன்.

கமலின் தீவிர ரசிகை... கல்யாண வாழ்க்கை!

தேவலோகத்திலிருந்து வந்த அழகன்போல, கமல் சார் மேல அவ்ளோ கிரேஸ் எனக்கு. நான் கனவில் டூயட் பாடிய சிவாஜி சார், ரஜினி சார், கமல் சார்கூடயெல்லாம் ஜோடியா நடிச்சதை இப்போவரை பிரமிப்பாதான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் சார்கூட நடிக்க முடியலைன்னாலும், அவருடன் நல்ல நட்பு இருந்துச்சு. தமிழைவிட, தெலுங்கில்தான் அதிக வெரைட்டி மற்றும் கிளாமரான ரோல்களில் நடிச்சேன். என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சோபன் பாபு, சிரஞ்சீவி உட்பட அப்போதைய எல்லா தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடனும் ஜோடியா நடிச்சேன். பணம், புகழ், ரசிகர்களின் அன்புன்னு சினிமா எனக்குக் கொடுத்தது நிறைய.

1991-ல் டி.ராஜேந்தர் சாரின் இயக்கத்துல `சாந்தி எனது சாந்தி’தான் என் கடைசி தமிழ்ப் படம். பிறகு, குடும்பத்தினர் ஏற்பாட்டில் என் கல்யாணம் முடிஞ்சது. 13 வயசுல சினிமாவுல அறிமுகமாகி, 23 வயசுல என் ஹீரோயின் பயணத்தை முடிச்சுக்கிட்டேன். 10 வருஷங்களில், 125-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினா நடிச்சேன். ஓர் இந்திப் படம் உட்பட ஐந்து மொழிகளில் நடிச்சேன். எந்த இலக்கும் இல்லாம சினிமாவில் நடிச்சேன். ஆனா, என் கல்யாண மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முன்பே திட்டமிட்டிருந்தேன். அன்பான கணவர் ராஜசேகரன் நாயர். அடுத்தடுத்து மூணு குழந்தைகள் பிறந்ததாங்க. இல்லத்தரசி வேலையை ரசிச்சு செய்ததால, நடிக்காம இருந்ததால் வருத்தப்படவேயில்லை. என் வெற்றி, புகழ் எல்லாவற்றையும் என் திருமணத்துக்குப் பிறகுதான் உணர்ந்தேன்.

என் பிள்ளைகள்... நானும் தமிழச்சி!

கார்த்திகா, விக்‌னேஷ், துளசின்னு என் மூணு பிள்ளைகளும் சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கார்த்திகா மற்றும் துளசியைத் தேடி வந்தது. சில படங்களில் நடிச்சாங்க. என் காலமும் இப்போதைய சினிமா சூழலும் மாறுபட்டது என்பதால, அவங்க வெற்றியைவிட பங்களிப்பையே முக்கியமானதா பார்க்கிறேன். என் விருப்பப்படி மூணு பிள்ளைகளும் நல்லா படிக்கிறாங்க. எங்க பிசினஸ் பொறுப்புகளை எதிர்காலத்தில் அவங்க ஏத்துப்பாங்க.

என் தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில்தான் நடிச்சேன். அதனால் வருத்தமில்லை. என்னை யாராச்சும் மலையாளி இல்லைன்னு சொன்னாக்கூட கவலைப்பட மாட்டேன். ஆனா, தமிழ்ப் பொண்ணு இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன். நான் தமிழச்சின்னுதான் இப்போவரை பெருமையா நினைச்சிட்டிருக்கேன். இப்போ தினமும் டைரி எழுத ஆரம்பிச்சிருக்கேன். என் குடும்பத்தினரின் போட்டோஸை சேகரிச்சிட்டிருக்கேன். என் கணவரின் குடும்பத்தில் நான்தான் மூத்த மருமகள். அந்தப் பொறுப்பையும் சிறப்பா செய்றேன். பிறந்த வீடு, புகுந்த வீடு தவிர, என்னை வாழவெச்ச தமிழ் சினிமான்னு எனக்கு மூணு வீடு. தமிழ் சினிமாவுக்கும், என் நலனில் உண்மையான அன்பு கொண்டிருக்கிற என் குருநாதர் பாரதிராஜா சாருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருக் கிறேன்.

- நாயகிகள் பேசுவார்கள்!

-கு.ஆனந்தராஜ், படம்: சொ.பாலசுப்ரமணியன்

பிசினஸ் சாம்ராஜ்யம்!

`Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites - The Garden Hotel, Uday Backwater Resort’னு கேரளாவில் எங்களுக்கு மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கு. கேரளாவில் சாய் கிருஷ்ணா ஸ்கூல் மற்றும் சினிமா தியேட்டர் ஒன்றும் இருக்கு. சென்னை மற்றும் கேரளாவில் `ஏ.ஆர்.எஸ் கார்டன்ஸ் & ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஸ்டூடியோஸ் இருக்கு. மும்பையில் பல ரெஸ்டாரன்ட்ஸ் இருக்கு.

1980s evergreen Heroins  - Radha
1980s evergreen Heroins - Radha
Aval Vikatan

கணவரும் நானும் இணைந்து பிசினஸை கவனிச்சுக்கிறோம். நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. குடும்பம், பிசினஸ் பொறுப்புகளுக்கே நேரம் சரியா இருக்கு. இதற்கிடையே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வேலை செய்தது, தமிழ் ரசிகர்களுடன் ஒரு பிணைப்பை கொடுத்தது. மீண்டும் நடிக்கிறது பத்தி எந்த முடிவும் எடுக்கலை. ஆனா, நல்ல கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்!

அம்பிகா என் அம்மாபோல!

1980s evergreen Heroins  - Radha
1980s evergreen Heroins - Radha
Aval Vikatan

வீட்டில்தான் நாங்க அக்கா - தங்கை. ஷூட்டிங் ஸ்பாட்டில் பர்சனல் மேட்டர்ஸ் பேசிக்காம, சக நடிகைகள் மாதிரிதான் நடந்துப்போம். அப்போ எனக்கான காஸ்ட்யூம் விஷயங்களுக்கு அக்காதான் அதிகம் உதவுவாங்க. நான் தமிழ், தெலுங்கில் அதிகம் நடிச்சேன். தமிழ், கன்னடம், மலையாளத்தில் அக்கா அதிகம் நடிச்சாங்க. அவங்க சரியா தூக்கமில்லாம, ஒரு நாளைக்கு நாலு ஷிஃப்ட்டெல்லாம் நடிப்பாங்க. ஆனா, நான் ஒரு நாளைக்கு ரெண்டு ஷிஃப்ட்டுக்கு மேல நடிக்க மாட்டேன். அக்கா அளவுக்கு நான் கிளாமர் குயினெல்லாம் இல்லை. அக்கா நடிச்ச அளவுக்கு வெரைட்டியாவும் நான் நடிக்கலை. அக்காவின் அழகுதான் எனக்கு விசிட்டிங் கார்டா அமைஞ்சு, சினிமாவில் வாய்ப்பு வாங்கிக்கொடுத்துச்சு. அக்காவாலதான் நான் சினிமா வில் புகழ்பெற்றேன். அவங்க எனக்கு இன்னொரு அம்மா! என் கல்யாணத்துக்குப் பிறகுதான் அக்காக்களுடன் பழகுவதற்கு அதிக நேரம் கிடைச்சுது. எங்க வாழ்க்கையில எந்த நிகழ்வா இருந்தாலும், அதை உடனடியாகப் பகிர்ந்துப்போம்.