
முகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்! - ரம்யா ஹரிதாஸ்
கேரளாவிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஒரே பெண் எம்.பி, 48 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பட்டியலினப் பெண் எம்.பி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் காங்கிரஸ் பெண் எம்.பி, 36 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த தொகுதியைக் கைப்பற்றியவர்... தனது ஒரே வெற்றியில் இத்தனை சாதனைகளையும் படைத்திருக்கிறார், ரம்யா ஹரிதாஸ்!
கேரள மாநிலம், ஆலத்தூர் தொகுதியின் 32 வயது காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸின் வெற்றியை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. அப்பா ஹரிதாஸ் கூலித் தொழிலாளி, அம்மா ராதா டெய்லர். ராகுல் காந்தி நடத்திய திறமை வேட்டை (talent hunt) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது திறமையை வெளிப் படுத்தினார் ரம்யா. ராகுல் தொடங்கி காங்கிரஸின் அனைத்து நிர்வாகிகளும் ரம்யாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டனர். சமூக சேவகியாகவும் காங்கிரஸ் நிர்வாகியாகவும் சுறுசுறுப்பாக வலம்வந்தார். அதன் பலனாக, கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆலத்தூர் தனித் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்தவர் பி.கே.பிஜு. இந்தத் தேர்தலில் ஆலத்தூரை கைப்பற்ற காங்கிரஸால் களமிறக்கப்பட்டார் ரம்யா ஹரிதாஸ். யூ.டி.எஃப் கூட்டணியில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், இரண்டு பெண் வேட்பாளர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிக சவால்களைச் சந்தித்தது ரம்யாதான். இவருக்கு இசை ஆர்வம் அதிகம் என்பதால், மக்களிடம் பாட்டுப்பாடி வாக்கு கேட்டார். இடதுசாரிகளின் விமர்சனங்களைத் தாண்டி, தன் பாடல்கள் மூலமாகவும் கொள்கைகள் மூலமாகவும் மக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தார். ரம்யாவைத் தங்கள் சொந்த மகளாகவே பார்த்த ஆலத்தூர் மக்கள், 1.58 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தனர். இதையடுத்து, கேரளாவிலிருந்து சிங்கிள் பெண் சிங்கமாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார் ரம்யா.
ஆலத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த ரம்யாவை, தமிழக - கேரள எல்லையான கன்னிமாரி பகுதியில் சந்தித்தோம். ரம்யா வுடன் போட்டோ எடுக்க அனைவரும் முயல, மிகவும் இயல்பாக, சிரித்த முகம் மாறாமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டபின், நம்மிடம் பேசத் தயாரானார்.
குன்னமங்கலம் பஞ்சாயத்துத் தலைவர் டு ஆலத்தூர் தொகுதி எம்.பி... எப்படி உணர்கிறீர்கள்?
நான் பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் எனக்கு காங்கிரஸ் மீது ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு உண்டு. ‘தேடல் வேட்டை’ நிகழ்ச்சியில் தொடங்கி ராகுல் காந்தி எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் அனைத்தும் சாத்தியமானது. ராகுல் காந்தியே கேரளாவில் போட்டியிட்டது, எங்களை மேலும் உற்சாகமாக இயங்கவைத்தது.

தேர்தல் நேரத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தீர்கள். வெற்றிபெற்ற பிறகு, நாடாளு மன்றத்துக்குள் நுழைந்த அந்த நொடி..?
எனக்கு அரசியல் ஆர்வம் ஊட்டிய வரலாற்றுத் தலைவர்கள் கோலோச்சிய நாடாளுமன்றத்துக்குள், மக்கள் பிரதிநிதியாக நான் நுழைந்தபோது அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன். என்னைத் தங்கள் வீட்டில் ஒருத்தியாகப் பார்த்த, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்த என் ஆலத்தூர் மக்கள் எனக்களித்த வாய்ப்பு அது. அவர்கள்தாம் என் சக்தி. அவர்களின் பிரதிநிதியாக அங்கு நிற்பதில் பெருமையுடன் பொறுப்பையும் உணர்கிறேன்.
அப்பா, அம்மா என்ன சொன்னார்கள்?
என் அனைத்து சமூகச் செயல்பாடுகளுக்கும் அம்மா பக்கபலமாக இருந்தார். அதனால்தான் என்னால் மற்ற பெண்களிடமிருந்து வித்தியாச மாகவும் தைரியமாகவும் செயல்பட முடிந்தது. பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து முன்னேற, பெற்றோர் இப்படிப் பலமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த விதத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
வேட்புமனு தாக்கல் செய்தபோது, உங்கள் வங்கிக் கணக்கில் 22,000 ரூபாய் இருப்பதாகக் கூறியிருந்தீர்களே...
அதுதான் என் பொருளாதார நிலைமை. மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பிவந்தேன். இப்போது என்னிடம் 66 ஜோடி உடைகள் இருக்கின்றன. இவை எல்லாமே இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்களும் பொதுமக்களும் கொடுத்தவை. ஆலத்தூரைக் கடந்து, வெளியில் இருந்தும் மக்கள் எனக்காக உதவி செய்தனர்.

வெற்றிபெற்ற பிறகு ராகுல் மற்றும் பிரியங்கா என்ன சொன்னார்கள்?
ராகுல் காந்தி வாழ்த்துகள் சொன்னார். பிரியங்கா காந்தி என்னுடைய பிரசாரத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது என்னிடம் பேசுவார். நான் பாட்டுப் பாடி பிரசாரம் செய்வதையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்வார். வெற்றிபெற்ற பிறகு, ‘இதே வேகம் மற்றும் நம்பிக்கையோடு இன்னும் அதிக உயரத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று பிரியங்கா வாழ்த்தினார். அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!
இசை ஆர்வம் எப்படி வந்தது?
சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் அதிகம். முறைப்படி இசை கற்றேன். அந்த இசையறிவைப் பிரசாரத்தில் பயன்படுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தேர்தல் களத்தில் உங்க ளுக்குக் கிடைத்த நம்பிக்கை...
ஒரு மூதாட்டி, தன்னுடைய பென்ஷன் தொகையை எனக்குக் கொடுத்து வாழ்த்தினார். இன்னும், வீட்டுச் சாப்பாடு, பலாப்பழம், பிரசாதம் என மக்கள் தங்கள் அன்பைப் பல வழிகளிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். அப்போதே எனக்கு வெற்றிக்கான நம்பிக்கை கிடைத்துவிட்டது. ஆனாலும், தேர்தல் முடிவுகள் வந்தபோதுதான், நான் எதிர்பார்த்ததைவிட மக்கள் என்மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை.
எப்போது திருமணம்?
ஆலத்தூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் என் முதல் பணி. மக்களுக்கு சேவை செய்வதுதான் என் இலக்கு. அதைப் புரிந்துகொள்ளும் இணை வந்தால் திருமணம் செய்துகொள்வேன்.
ஆலத்தூர் மக்களுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், பழங்குடி மக்கள், பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. ரயில் போக்குவரத்து, மருத்துவம் என்று பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. அவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் அணுகி, தீர்வை நோக்கி பயணிப்பேன்!
-இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்