மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: உடையாள் - 31

Human Gods Stories - Udaiyal
பிரீமியம் ஸ்டோரி
News
Human Gods Stories - Udaiyal

தவற்றுக்கும் கொடுமைக்கும் எதிரா வாளெடுத்து நிக்கிறா வெட்டுடையா!

முத்து வடுகநாதரை அந்த வெள்ளைக்காரப் படுபாவி சுட்டுக்கொன்னுட்டானாம். சீமையே கதி கலங்கிக் கெடக்கு. ராணி என்ன ஆனாகன்னு யாருக்கும் தெரியல. மதுரை நாயக்கர்மேல வெள்ளைக்காரப் பயலுக போர்தொடுத்துப் போனபோது வடுகநாதர், நாயக்கருக்குத் துணையா நின்னாரு. அதுல இருந்தே வெள்ளைக்காரனும் அவனுக்குத் துணையாயிருந்த நவாப்பும் வடுகநாதர் மேல கண்ணு வெச்சுட்டாங்க. ‘நமக்கெதிரா சீமை படை திரட்டுது’ன்னு அவனுகளுக்குத் தெரிஞ்சுபோச்சு. வெள்ளைக்காரப் படைக்கு புதுசா வந்த தளபதி, ‘சீமையில ஆட்சி நடத்தணும்னா எங்களுக்கு வரி கட்டணும்’னு வடுகநாதருக்குத் தூதுவிட்டான். வடுகநாதர் கட்ட மறுத்துட்டாரு.

வெள்ளைக்காரனுக்குக் கோவம் வந்திருச்சு. ‘நாடே எங்களுக்கு அடிபணிஞ்சு கெடக்கு. இவன் அடங்க மறுக்குறானே’ன்னு படையெடுத்து வந்துட்டான். சீமைப் படைக்கு முன்னாடி வெள்ளைக்காரனுவ தாக்குப்பிடிக்க முடியலே. ஓடி ஒளிஞ்சுட்டானுவ. ‘இந்தாளை சண்டை போட்டு அழிக்க முடியாது... சூழ்ச்சியாலதான் வெல்ல முடியும்’னு வெள்ளைக்காரன் திட்டம் போட்டான்.

`இனிமே சண்டை வேணாம், சமாதானமாப் போகலாம்'னு தூது விட்டான்.  வடுகநாதர் அதை நம்பிட்டாரு. சண்டையில செத்துப்போன தன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துறதுக்காக  ராணியைக் கூட்டிக்கிட்டு காளையார்கோயிலுக்குப் போனாரு வடுகநாதர். கையில ஆயுதம் ஏதுமில்லை. கூட காவலாளுகளும் இல்லை. அதைத் தெரிஞ்சுக்கிட்டு சுத்தி வளைச்சுட்டானுக வெள்ளைக்காரப் பயலுக. வடுகநாதர் சுதாரிக்கிறதுக்குள்ள துப்பாக்கியை வெச்சு சுட்டுப்புட்டான் ஆங்கிலத் துரை. ராணி எப்படியோ தப்பிச்சுட்டாக.

வடுகநாதர் செத்துப்போனதால சீமையே கேதவீடாப் போச்சு. மக்கள், வாயிலயும் வவுத்துலயும் அடிச்சுக்கிட்டு அழுவுதுக. வெள்ளைக்காரனுகளுக்கு சாபம் மேல சாபமா குடுத்து மண்ணையள்ளி எறைக்கிறாக. வடுகநாதர் இறந்துபோன செய்தி கேட்டதுல இருந்து வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடந்தான் குருவப்பன்.

Human Gods Stories - Udaiyal
Human Gods Stories - Udaiyal

குருவப்பனுக்கு ஆடு மாடு மேய்க்கிறதுதான் தொழில். ஊராளுக வூட்டு மாடுகளையெல்லாம் பத்திக்கிட்டுப் போய் காடுகரையில மேச்சுக் கொண்டாருவான். மாசாமாசம் தானியம் அளப்பாக. அதை வெச்சுத்தான் ஓடுச்சு குடும்பம். கம்மாக்கரைக்கு மேக்கால வீடு. கூரையெல்லாம் பொத்துப்போயி வெயிலும் மழையும் தடையில்லாம உள்ளே விழுகும். ஒரே பொம்பளைப் புள்ள. பேரு உடையாள். புள்ள, தெய்வாம்சமா இருப்பா. அந்த அம்பிகையே தனக்குப் புள்ளையா வந்து பொறந்திருக்கான்னு நம்புனான் குருவப்பன்.

குருவப்பனோட பொஞ்சாதி உடம்புக்கு முடியாதவ. புருஷனுக்கும் புள்ளைக்கும் ஆக்கிப்போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும். உக்காந்தா உக்காந்த இடம்... படுத்தா படுத்த இடம்னு இருப்பா... உடையாளுக்கு வயசு எட்டுதான் ஆவுது. ஆனாலும், பெரிய மனுஷி கணக்கா வேலை பாப்பா.

அப்பங்காரன் திடீர்னு வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறதைப் பாத்து உடையாளுக்கு ஒண்ணுமே புரியல. ஊரா வூட்டு மாடுகள்லாம் பாதையில நின்னு ‘மா’, ‘மா’னு கத்திக்கிட்டுக் கெடக்கு. உடம்பெல்லாம் கனலாக் கொதிச்சுக் காய்ச்சலடிச்ச நேரத்துலகூட தூக்குச்சட்டியில கஞ்சித்தண்ணிய ஊத்திக்கிட்டு மாடுகளைப் பத்திக்கிட்டுப் போறவரு, இன்னிக்குக் கயித்துக்கட்டில விட்டு எறங்காம மூசுமூசுன்னு அழுதுக்கிட்டு கெடக்குறாரேனு உடையாளுக்குக் குழப்பமா இருந்துச்சு.

“அப்பு... மாடெல்லாம் பத்தையில நின்னு கத்திக்கிட்டிருக்குக. நீபாட்டுக்கு படுத்துக்கெடக்குறியே”னா உடையாள். குருவப்பன்கிட்ட இருந்து பேச்சில்லை. மூலையில குத்துக்காலு போட்டுக்கிட்டு உக்காந்திருந்த குருவப்பன் பொஞ்சாதி, “ஏட்டி... நம்ம ராஜாவை வெள்ளைக்காரன் சுட்டுப்புட்டானாம். அதாம் உன் அப்பன் முனகிக்கிட்டு கெடக்கு”ன்னா. 

“இந்தப் படுபாவி வெள்ளைக்காரங்க நம்ம சீமையைப் புடிச்சுட்டானுவ. இனி நிம்மதியா வாழ முடியாது. நம்மளை மாதிரி ஏழை பாழைகள்லாம் சோத்துக்கில்லாம சாக வேண்டியதுதான்” - குருவப்பன் கண்ணுல இருந்து ஆறாப் பெருகுது நீரு.

சுட்டுக்கொன்ன ராஜாவை காளையார் கோயில்லயே அடக்கம் செஞ்சாக. தளபதி களோட தப்பிச்சு விருப்பாச்சிக்குப் போன ராணி, தன் சீமையை வெள்ளைக்காரங்கிட்ட இருந்து மீட்டுக்கொண்டுவர, படை தெரட்டிக்கிட்டு  இருந்தாக. இந்த சேதி கேட்டு வெள்ளைக்கார துரைக பயந்துட்டானுக. ராணியையும் தளபதிகளையும் எங்கே பாத்தாலும் கொன்னுடுங்கன்னு எல்லாருக்கும் தகவல் அனுப்பிட்டானுவ.

ராணிக்குக் கொஞ்சநாளாவே மனசு சரியில்லை. தன் கணவரோட சமாதியைப் பாத்து அஞ்சு நிமிஷம் அழுதுட்டு வரலாமேன்னு தோணுச்சு. தளபதிகள்கிட்ட சொன்னாக. ‘ராணி... நிலைமை சரியில்லை. எல்லாப் பக்கமும் நம்மளைத் தேடி ஆளனுப்பியிருக்கானுவ வெள்ளைக்காரனுக. நாமளே போய் தலையைக் குடுக்கிறதுமாதிரி ஆயிருமே’னு தளபதிகள்லாம் யோசிச்சாக. ஆனா, ராணி உறுதியா இருந்தாக.

Human Gods Stories - Udaiyal
Human Gods Stories - Udaiyal

‘சரி... அரியாக்குறிச்சி, நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி வழியா வயக்காட்டுப் பாதையில போவலாம், எது வந்தாலும் சந்திக்கலாம்’னு முடிவு பண்ணி கிளம்பிட்டாக.

குருவப்பன் இப்பல்லாம் சரியா மாடு ஓட்டிக்கிட்டுப் போறதில்லை. ராஜா இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதுல இருந்து பித்துக்கொண்டதுமாதிரி திரிஞ்சான். உடையாள்தான் மாடுகளை ஓட்டிக்கிட்டுப் போய் மேச்சுக்கொண்டு வர்றா. ‘பாவம்... பச்சைப் புள்ளை கஷ்டப்படுதே’னு அளக்குறவுக கூடுதலா ஒரு படி தானியத்தை அளந்து விடுறாக. பட்டினியில்லாம குடும்பம் ஓடுது.

அன்னிக்கு கீரனூர் கம்மாய்க்குள்ள மாடுகளை மேயவிட்டுட்டு கரையில உக்காந்திருந்தா உடையாள். நல்ல வெயிலு. புளியமர நிழலு பூதம் மாதிரி பூமியில விரிஞ்சு கெடந்துச்சு. அதுல உக்காந்து புளியம் பிஞ்சுகளை செங்கக்கல்லுல உரைச்சு உரைச்சு தின்னுக்கிட்டிருந்தா.

அப்போபாத்து அஞ்சு குதிரைங்க அந்தப் பக்கமா வருது. நாலு பக்கமும் நாலு குதிரை காவலு. நடுவுல ஒரு வெள்ளைக்குதிரை. அந்தக் குதிரையில தலையில முக்காடு போட்டுக்கிட்டு ஓர் அம்மா உக்காந்திருந்தாக. குதிரைக எல்லாம் உடையாள்கிட்ட வந்து நின்னுச்சு. குதிரையில வந்த எல்லாப்பேரும் களைப்பா இருந்தாக. ‘பாப்பா... குடிக்க தண்ணியிருக்கா’னு கேட்டாக அந்த அம்மா. உடையாள், ‘நீங்கள்லாம் யாரு... ஏம் மூஞ்சியை மூடியிருக்கிய’ன்னு கேட்டா.

‘நான்தான் சீமையோட ராணி... எங்களை வெள்ளைக்காரனுவ தேடிக்கிட்டுத் திரியுறானுவ. அதான் முகத்தை மறைச் சிருக்கேன்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னாக ராணி.

திகைச்சுப்போனா உடையாள். ராணியா... வாளைச் சுழட்டினா தலையெல்லாம் பறக்குமே... அந்த ராணியா?! அவளுக்கு ஆச்சர்யம் தாங்கல. தூக்குப்பாத்திரத்துல கொண்டுவந்திருந்த தண்ணியைக் குடுத்தா. ராணியும் கூட வந்தவுகளும் தாகம் தீரக் குடிச்சாக.

‘வெள்ளைக்காரனுவ தேடிவந்து எங்களைப் பத்தி விசாரிச்சா, தெரியாதுனு சொல்லிடு தாயி’னு சொல்லிட்டு வேகவேகமா காளையார் கோயிலு பக்கமா கிளம்பிட்டாக.

அவுக அந்தப் பக்கம் போயி, கொஞ்ச நேரத்துல பத்திருபது குதிரைங்க படபடன்னு வந்து புளியமர நிழல்ல நின்னுச்சுக. எல்லாக் குதிரையும் வெள்ளைக்குதிரை. பாத்தவுடனே மிரண்டுபோனா உடையாள். மெதுவா அந்த இடத்தை விட்டு நகரப்போனா.

ஒருத்தன் குதிரையை விட்டு இறங்குனான். “ஏ பாப்பா... இங்கே வா”னு கூப்பிட்டான். ஆளு வித்தியாசமா உடை போட்டுருக்கான். இடைவார்ல வாளு இருக்கு. கையில பெரிய கம்பு வெச்சிருக்கான். பதில் பேசாம நின்னா உடையாள்.

“ஏய்... இங்கே   வான்னு சொல்றேன்ல”ன்னான் வெள்ளைக்காரன். பயந்துக்கிட்டே பக்கத்துல வந்தா உடையாள். ‘இந்தப் பக்கமா அஞ்சு குதிரையில ராணி போனதைப் பாத்தியா’னு கேட்டான்.

உடையாளுக்கு எங்கேயிருந்துதான் அந்த தைரியம் வந்துச்சோ... “ஆமா... பாத்தேன்...”னா.

வெள்ளைக்காரன் முகம் இருண்டுபோச்சு.

“பாத்தியா... எந்தத் திசையில போனாக”னு கேட்டான்.

“எந்தத் திசையில போனாகன்னு தெரியும்... ஆனா, சொல்ல மாட்டேன்''னா உடையாள். வெள்ளைக்காரன் அத்தனை பேரும் மிரண்டு போனானுக. ‘இத்தனூண்டா இருந்துக்கிட்டு இப்படி பேசுதே’னு.

ஓர் ஆள்காட்டி குதிரையில இருந்து இறங்குனான்... “இந்தா புள்ள... இவுகள்லாம் வெள்ளைக்காரத் துரைக. சரியா அவங்க போன திசையைச் சொல்லிட்டா உசுரோட விட்டுருவாக. இல்லே, உசுரை எடுத்திருவாக”ன்னான்.

“நீ என்ன வேணுன்னாலும் செஞ்சுக்கோ... ராணி போன திசையைச் சொல்ல மாட் டேன்”னு உறுதியாச் சொன்னா உடையாள்.

வெள்ளைக்காரன் கண்ணு ரெண்டும் செவந்து போச்சு. இத்தனை வயசு அனுபவத்துல இதுமாதிரி ஓர் அவமானத்தை அவன் சந்திச்சதில்லை. இடையில இருந்து வாளை உருவுனான். எடுத்து வீசுனான் பாருங்க. உடையாளோட தலை தனியா உருண்டுருச்சு. பச்சைப்புள்ளன்னுகூட பாக்கலே பாவிப்பய. வெட்டிப் போட்டுட்டு, ராணியைத் தேடி கிளம்பிட்டானுக.

மேயப்போன மாடெல்லாம் திரும்பி வந்திருச்சு. உடையாளை மட்டும் காணோம்.  மவளைக் காணுமேன்னு அம்மாகாரிக்கு தவிப்பாப்போச்சு. குருவப்பன் ஒருபக்கம் உலகத்தை மறந்து கெடக்குறான். அவனால ஒரு பிரயோஜனமும் இல்லை. அக்கம் பக்கத்துல போயி, புள்ளையக் காணோம்னு சொல்லி அழுதா. நாலைஞ்சு பயலுக கம்மா பக்கம் போய் தேடிப்பாத்தானுங்க. உடையாள் வெட்டுப்பட்டுக் கெடந்தா. உடலை எடுத்தாந்து அடக்கம் செஞ்சாக.

இது நடந்து ஏழெட்டு வருஷமாச்சு. ராணி, பெரிய படையைத் திரட்டிக்கிட்டுப் போய் வெள்ளைக்காரங்களை ஜெயிச்சு சீமையைப் புடிச்சுட்டாக. ஒருநாள், ராணியும் தளபதிகளும் கிளம்பி கம்மாய்க்கரை வழியா திருப்பாச்சிக்குப் போய்க்கிட்டிருந்தாக. உடையாள் வெட்டுப்பட்ட இடம் வந்ததும், ராணிக்கிட்ட அவளைப் பத்தி சொன்னாக. ராணிக்கு உடையாளோட முகம் ஞாபகம் வந்துச்சு. குதிரையை விட்டு இறங்கி, அந்த இடத்துல நின்னு கண்கலக்கிட்டாக.

“அவ சாதாரண புள்ளையில்லை. தெய்வக் குழந்தை... அவளுக்கு இந்த இடத்துலயே ஒரு கோயில் கட்டுங்க”ன்னு உத்தரவு போட்டாக. அதுக்காக நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தாக.

அதுக்கப்புறம், “வெட்டுடையா”, “வெட்டு டையா”னு மக்களெல்லாம் அந்தப் புள்ளைய சாமியாக்கும்பிட ஆரம்பிச்சுட்டாக. அவளும், கஷ்டம்னு வர்ற மக்களுக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செஞ்சு அனுப்பிக்கிட்டிருக்கா. நாட்டரசன்கோட்டை பக்கத்துல கொல்லங்குடின்னு ஒரு ஊரு... அங்கேதான் சாமியா குடியிருக்காக உடையா. ஏமாத்துனவுக, பொய் சொன்னவுகளுக் கெல்லாம் ‘கூலி குடு தாயே’னு எல்லாப்பேரும் போயி காசை வெட்டிப்போட்டுட்டு வர்றாக. தவற்றுக்கும் கொடுமைக்கும் எதிரா வாளெடுத்து நிக்கிறா வெட்டுடையா!

- வெ.நீலகண்டன், படம்: எஸ்.சாய்தர்மராஜ், ஓவியம்: ஸ்யாம்