
`பஞ்சாப்பின் மகள்’ டாக்டர் ஹர்ஷிந்தர் கௌர்
‘`பெண் சிசுக்கொலை குறித்து நான் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டேன். அது பற்றி பிரசாரம் செய்தேன். அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக நினைத்து, என்னை அரசுப் பணியிலிருந்து பலமுறை விடுவித்தது அரசாங்கம். ஒவ்வொரு முறையும் என் பக்கம் இருந்த நியாயத்தை எடுத்துரைத்த பின், உண்மையை உணர்ந்து மீண்டும் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது’’ - இப்படி, தன் நீண்ட பயணத்தில் டாக்டர் ஹர்ஷிந்தர் கௌர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். பெண் சிசுக்கொலை தடுப்புக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, சர்வதேச அளவில் கவனம்ஈர்த்து பல விருதுகளைப் பெற்று, ‘பஞ்சாப்பின் மகள்’ என போற்றப்படும் அரசாங்க மருத்துவர் இவர். பட்டியாலா நகரில் வசிக்கும் 52 வயதான ஹர்ஷிந்தரிடம் பேசினோம்.
‘`என் கணவரும் மருத்துவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் நானும் என் கணவரும் இணைந்து பஞ்சாப்-ஹரியானா மாநில எல்லையில், மருத்துவ வசதிகள் எதுவும் எட்டிப்பார்த்திராத மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அப்போது, சற்று தொலைவிலிருந்து குழந்தை வீறிட்டு அலறும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தோம். பெரிய குப்பைமேடு ஒன்றில், பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று கடித்துத் தின்றுகொண்டிருந்தது. குழந்தை தனது கடைசி முயற்சியாக அலறிய அந்தக் காட்சியைக் கண்டு நானும் என் கணவரும் பரிதவித்துப்போனோம். கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, ‘ஏழைகளுக்குப் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும்? இங்கு இதெல்லாம் சாதாரணம்’ என்றனர்.
ஹர்ஷிந்தர் கௌர்

பஞ்சாப், ஹரியானா மாநில கிராமங்களில், ஏன்... நகரங்களிலும் கருக்கொலை மற்றும் சிசுக்கொலை இயல்பான நிகழ்வாகவே இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் கருவின் உடல் மற்றும் சிதைந்த பாகங்களைப் புதைக்க தனி இடமே இருந்தது. இந்த சமூகக் கொடுமையை இல்லாமல் செய்ய நானும் என் கணவரும் உறுதிபூண்டோம். அன்றிலிருந்து இன்றுவரை கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்வுரிமை குறித்து தேசிய, சர்வதேச அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பல கருத்தரங்குகளில் பங்குகொண்டு எங்களால் முடிந்ததைச் செய்துவருகிறோம்.
மாதவிடாய், பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசுவதே தவறு என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியிருந்த காலம் அது. குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்குத் தாய்தான் காரணம் என்கிற தவறான எண்ணம், நன்கு படித்தவர்கள் மத்தியில்கூட நிலவியது. `பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா' என்பதை ஆணின் விந்தில் இருக்கும் X மற்றும் Y குரோமோசோம்கள்தாம் உண்மையில் தீர்மானிக்கின்றன. இதை விளக்கும் விதத்தில் முதற்கட்டமாக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினேன். அடுத்து, கிராமப் பஞ்சாயத்துக் கூட்டம், மத சம்பந்தமான விழாக்கள், சமூக சேவை நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமாகத் திருமண வீடுகளில் தொடர்ந்து பிரசாரம் செய்தேன்’’ என்கிற ஹர்ஷிந்தர், அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.
‘`வணிகரீதியாக மட்டுமே செயல்படும் மருத்துவமனைகள் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் கருவியின் மூலம் கர்ப்பிணியின் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தெரியப்படுத்துவதுண்டு. இதனால் நிகழும் பல கருக்கொலைகள் அரசின் கவனத்துக்கு வராமலேயே போயின. பெண் குழந்தைகளைக் கொல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் இன்றுவரை இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் குழந்தைகளைக் கொல்வது தொடர்கிறது என்பது கசப்பான உண்மை.

பட்டியாலா அருகில் உள்ள ஒரு கிராமத்தில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், கர்ப்பம் தரிக்கும் முறை பற்றி பிரசாரம் செய்தேன். இதன் விளைவாக ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் அங்கு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. படிப்பறிவற்ற கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில், பெண் பருவமடைவதில் தொடங்கி அவளது உடலில் நிகழும் மாற்றங்களை ஒவ்வொரு நிலையிலும் விளக்கியது பெரும் பயனைத் தந்தது.
சமூகத்தில் மாற்றம் ஏற்பட பல வருடங் களானாலும் நான் சோர்ந்துவிடவில்லை. பெண்களின் சட்டப் பாதுகாப்பு குறித்து அறிந்த பின், ஆண்களும் தங்கள் பொறுப்பை உணரத் தொடங்கினர்’’ - இப்படிப் பல மனங்களில் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஹர்ஷிந்தரை, உலக அளவில் பெண் குழந்தைகள் நலனுக்கெனப் பாடுபடும் அமைப்புகள், சிறப்புப் பேச்சாளராக அழைத்துச் சிறப்பிக்கின்றன. ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் மாநாடு, ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் நாடாளுமன்றம், கனடா நாடாளுமன்றம், டொரன்டோவில் நடந்த சர்வதேச கருத்தரங்கம் ஆகிய உயர் சபைகளில், பெண் சிசுக்கொலைக்கு எதிராக இவரின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கௌரவப்படுத்திய 100 பெண் சாதனையாளர்களில் இவரும் ஒருவர்.
‘`இப்போது வரதட்சணை ஒழிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்துகிறேன். இதன் பயனாக 5,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ‘வரதட்சணை வாங்க மாட்டோம்; கொடுக்கவும் மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துள்ளனர். கனடா, மலேசியா, ஹாங்காங், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 800 தம்பதிகள், இந்த உறுதிமொழியின்படி வரதட்சணை இல்லா திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கென அறக்கட்டளை ஒன்றை 2008-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறேன். இதன் மூலம் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிப்பதற்கு பொருளாதார உதவிகளைச் செய்கிறேன்’’ என்று சொல்லும் ஹர்ஷிந்தர், `ஒரு பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றினால், அவளால் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்பதை விளக்கி பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
‘`உலக அளவில் பெண்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக என் வாழ்நாளை அர்ப்பணிக்கத் தொடர்ந்து பயணிப்பேன்’’ என்கிறார், டாக்டர் ஹர்ஷிந்தர் கௌர்.
சூப்பர் டாக்டர்!
-ஸ்ரீ அகத்தியஸ்ரீதர்