
மண்புழு மன்னாரு
அண்மையில சென்னை, கலைவாணர் அரங்கத்துல நடந்த பல்லுயிர் சம்பந்தமான அரசு விழாவுக்குப் போயிருந்தேன். அரங்கம் முழுக்க மக்களால் நிரம்பி வழிஞ்சது. அரசாங்க விழாவுக்கு இவ்வளவு கூட்டமான்னு ஆச்சர்யத்தோடு பார்த்தேன். பாதிபேருக்கு மேல, சுய உதவிக்குழு பெண்கள் இருந்தாங்க. தமிழ்நாட்டுல சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் மிகப்பெரியது. நம்ம அரசியல்வாதிங்க தங்கள் ஆட்சியிலதான், சுய உதவிக்குழுக்களுக்கு நிறைய உதவிகள் செய்தோம். நாங்கள்தான் சுய உதவிக்குழு திட்டத்தையே உருவாக்கினோம்ங்கிற கணக்கா முழங்குவாங்க. உண்மையில், சுய உதவிக்குழு முறை வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்துச்சு. இந்த அற்புதமான முறையை உருவாக்கின பொருளாதார பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்திருந்த சமயத்துல இவரைச் சந்திச்சிருக்கேன்.

கல்லூரி நிகழ்ச்சியில இவர் பேசின விஷயங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திச்சு. இவர் உருவாக்கிய கிராமின் (கிராமிய) வங்கிக்கும் இவருக்கும் 2006-ம் ஆண்டுச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தன் பங்காக கிடைத்த சுமார் 7 கோடி ரூபாயைப் பொதுப்பணிகளுக்காக அசால்ட்டாக கொடுத்துட்டார். இவருடைய ‘பேங்கர் டூ தி புவர்’ (Banker to the Poor) புத்தகம் அறிவுஜீவிகள் மத்தியில பிரபலமானது. இவர் பெங்களூரு நிகழ்ச்சியில பேசின தகவல்களையும் இந்தப் புத்தகத்துல உள்ள செய்திகளையும் கலந்து கட்டி கலவையான கதையா சொல்றேன்.
‘‘வங்கதேசத்தில் 1974-ம் ஆண்டு மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. நான் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி மூலம் கற்றுத் தரும் பொருளாதாரக் கொள்கைகள், அன்றாட வாழ்க்கையுடன் அவ்வளவாகத் தொடர்பின்றி இருப்பதைக் கண்டுபிடித்தேன். என் தாய்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளாதாரம் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக நான் பணியாற்றிய சிட்டகாங் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே ‘போன்ஜோப்ரா’ என்ற கிராமம் இருந்தது. ஒரே ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை உண்மையாக அறிந்துகொண்டால், அது வழக்கமான பாடத்திலிருந்து வித்தியாசமானதாக இருக்கும். அதன்மூலம் என்னால் எதையாவது சாதிக்க முடியும் என்று நம்பினேன்.

ஏழைகளுக்கு வழங்கப்படும் மிகச்சிறிய கடன்கூட அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. முதன்முறையாக என்னிடமிருந்த 27 அமெரிக்க டாலரை (1,800 ரூபாய்) கிராமத்திலுள்ள மக்களுக்குக் கடனாகத் தந்தேன். இப்படித்தான், கிராமின் வங்கியும் சுய உதவிக்குழுக்களும் உருவானது. கடனை வாங்கிய கிராம மக்கள் அதைக்கொண்டு பொருள்களை வாங்கி, அவற்றை விற்பனை செய்தபின் உடனடியாகக் கடனை அடைத்து விடுவதைக் கண்டேன். இதற்கு முன் கிராமப்புற மக்கள் அந்தப் பகுதியில் உள்ள கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். சில நேரங்களில் வாரத்தில் 10 சதவிகித வட்டி என்ற கணக்கில் கடன் பெற்றனர். இதெல்லாம் தெரிந்த பிறகும்கூட வங்கதேச வங்கிகள், ஏழைகளுக்குக் கடன் தர மறுத்தன. ஏனெனில், ஏழைகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தமாட்டார்கள் என வங்கிகள் நினைத்தன.
ஆனால், யார் யாரெல்லாம் மிகவும் வறுமையில் இருக்கிறார்களோ, அவர்களுக்குக் கடன் வழங்குவதற்கு நாங்கள் அதிக ஆர்வம் காட்டினோம். சாதாரண வங்கிகள் கடன் தர மறுக்கும், ஏழைகளிலும் ஏழைகளானவர்களுக்கும், பிணையாக வழங்க எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்கும் நாங்கள் சிறிய அளவிலான கடன்களை வழங்கினோம். எங்களிடம் கடன் பெறுவோரில் 97 சதவிகிதம் பேர் பெண்கள். எங்களின் வங்கியில் எந்த ரகசியமும் இல்லை.
வங்கி தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் பொது இடத்தில்தான் நடக்கின்றன. எங்களிடம் கடன் பெறுவோர் அனைவருமே வங்கியின் உரிமையாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. கிராமின் வங்கி இதுவரை 70 லட்சம் பேருக்குக் கடன்களை வழங்கியுள்ளது. இதற்குப் பிணையாக எந்தப் பொருளும் பெறப்படுவதில்லை. இப்படி வழங்கப்படும் கடன்களில் 98 சதவிகிதம் திரும்ப வசூலாகிறது. நீங்கள் ஒரு மரத்தின் அடிப்பகுதியை ஆட்டினால், மரம் முழுவதும் ஏதேனும் மாற்றம் நிகழும்தானே? அதேபோல் ஏழை மக்களுக்குக் கடன் வழங்கினால், ஒட்டுமொத்த சமுதாயமும் முன்னேறும் என்பதை என் கண்களால் கண்டேன்.
எங்களின் கடன் திட்டத்தை விமர்சிப்போர் அடிக்கடி என்னிடம் கூறும் ஒரு விஷயம் இதுதான். ‘எல்லா ஏழைகளுமே தொழில்முனைவோராகிவிட முடியாதே’ இந்த எண்ணத்தைப் போக்கும் வகையில், பிச்சைக்காரர்களுக்குக்கூடக் கடன் வழங்கத் தொடங்கினோம். பிச்சைக்காரர்கள் தினமும் வீடுவீடாகச் சென்று பிச்சை எடுப்பதற்குப் பதில், ஏதேனும் ஒரு பொருளை விற்கலாமே என்பதுதான் எங்களின் எண்ணம். சில ஆண்டுகளுக்கு முன் பிச்சைக்காரர்களுக்குக் கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினோம். இப்போது ஒரு லட்சம் பிச்சைக்காரர்கள் எங்களது கடன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு 15 (1,000 ரூபாய்) டாலர் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் நம்பவே முடியாத விஷயம் என்னவெனில், தங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று மிகவும் ஆர்வமாகச் சிந்திக்கின்றனர். மக்கள் அனைவருக்குமே ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதைப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்கிவிடுகின்றனர்.
இப்போது, நமது நிர்வாக முறையில் நிலவும் மிகப்பெரிய குறையைப் பற்றிப் பேசப்போகிறேன். தாராள சந்தைப் பொருளாதாரம் அல்லது முதலாளித்துவப் பொருளாதாரம் என்ற தத்துவம்தான், அந்த மிகப் பெரிய குறையாகும். இத்தகைய தத்துவத்தின்படி நீங்கள் அதிக லாபம் ஈட்டும் வணிகத்தை மட்டும்தான் செய்யமுடியும். வேறு எதையும் செய்ய முடியாது. இந்தத் தத்துவத்தின்படி லாபத்தை அதிகரிப்பதுதான் ஒரே நோக்கமாக இருக்கும். எனவே நீங்கள் வணிகம் செய்தால் அதில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதுதான் உங்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இதுதான் இந்தத் தத்துவம் சொல்லும் பாடம். அதைச் செய்வதற்குத் தான் நீங்கள் முயற்சி செய்வீர்கள். மனிதர்களை இப்படிக் கருதுவது மிகவும் தவறு என எண்ணுகிறேன். மனிதர்கள் ரோபோக்களோ பணம் தயாரிக்கும் எந்திரங்களோ அல்லர். மனிதர்கள் அதைவிட மிகவும் பெரியவர்கள். பணம் ஈட்டுவதைத் தவிர்த்து மனிதர்கள் மீது அக்கறை செலுத்துதல், மனித உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வேறு சில அம்சங்களும் உள்ளன. எனவே, இந்தப் புதிய தத்துவம், மனித இடத்தின் ஒரு பகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதத்திற்கு முழு உருவம் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைதான் மற்றொரு வகையான வணிகம். அது தனிநபர் லாபம் எதையும் எதிர்பாராமல் மக்களுக்கு நன்மை செய்வதாகும். சமூக வணிகம் என்ற இந்தக் கொள்கை, உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டதாகும். இந்த வணிகத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் அவர்களின் முதலீடு திரும்பத் தரப்படும். ஆனால், அதற்காக லாபம் ஏதும் தரப்படாது. வணிகத்தை வளர்ப்பதற்காக அதில் கிடைக்கும் லாபம் மீண்டும் அதிலேயே முதலீடு செய்யப்படும். இந்தச் சமூக வணிகம் என்பது லாபமோ நஷ்டமோ இல்லாத நிறுவனமாகும்.

சமூக வணிகம் திட்டத்தை ‘தனோன்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் தொடங்கினோம். ஏற்கெனவே இயங்கத் தொடங்கிவிட்ட எங்கள் நிறுவனம், தாது மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிரம்பிய குளிர்பானங்களை விற்பதன் மூலம் ஏழைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனோன் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஃபிராங்க் ரிபோர்ட்டை 2005-ம் ஆண்டுச் சந்தித்தேன். கிராமின் வங்கி பற்றியும், அதன்மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதும் பேசுவதும் ஏன் என்பது பற்றியும் என்னிடம் கேட்டார். மேலே சொல்லிய விஷயங்களைச் சுருக்கமாக விளக்கினேன். அதன்பின் சிறிது நேரம் கழித்து, ‘கிராமின்-தனோன்’ என்ற பெயரில் நாம் ஏன் புதிய நிறுவனம் தொடங்கக்கூடாது என்றார். அப்படி நாம் தொடங்கும் நிறுவனம் சமூக நிறுவனமாகவும் இருக்கும் என்றார்.
இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் முழுவதையும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். லாபத்தை மட்டும் திரும்ப எடுக்க முடியாது’ என்று கூறினேன். அதைக் கேட்டதும் ரிபோர்ட் எழுந்து எனது கைகளைப் பிடித்துக் குலுக்கி ‘உடனடியாகத் திட்டத்தைத் தொடங்குவோம்’ என்றார். அது மட்டுமின்றி முதலீடு தவிர மற்ற லாபத்துக்கு உரிமை கோரக் கூடாது என்ற திட்டத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிராமின் தனோன் நிறுவனமும் கிராமின் வங்கியைப் போலவே ஏழை மக்களுக்குச் சொந்தமான நிறுவனமாக மாறிவிடும். இப்படியாக எங்களின் சமூக வணிகம் தொடர்கிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் நல்ல மாற்றங்களை உருவாக்கியுள்ளது.’’
இந்த அளவில் பேராசியர் முகமது யூனுஸ் கதையை நிறுத்துவோம். சென்னையில உள்ள நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன். அங்கு சுய உதவிக்குழுக்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவாங்க. சிறப்பாகச் செயல்படும் சுய உதவிக்குழுக்களுக்குப் பரிசுகளும் மானியங்களும் கை நிறைய கொடுப்பதைப் பார்த்திருக்கேன். முகமது யூனுஸ் போலவே தமிழ்நாட்டுலயும் சமூக வணிகம் செய்யும் அமைப்புகள் பல உள்ளன.
மதுரை தானம் அறக்கட்டளையையும் களஞ்சியத்தையும் எல்லோருக்கும் தெரியும். ஆனா, அதை உருவாக்குன வாசிமலை அடக்கமாகச் சமூக வணிகம் செய்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் அவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய குடும்பம் (கொழிஞ்சி பண்ணை) அமைப்பும்கூடச் சமூக வணிகம்தான் செய்கிறது. இப்படிப் பல நல்ல உதாரணங்கள் நம் முன்னாடி இருக்கிறதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாத்தான் இருக்கு!