உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தற்பொழுது இரண்டு வருடங்களுக்குள் மனிதர்கள் நிலவில் மீண்டும் தரையிறங்க வைக்கும் திட்டத்தில் இருக்கிறது. அதற்கான பணிகள் தற்பொழுது வேகமெடுத்திருக்கின்றன. கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை அங்கே சில காலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக செவ்வாய்க் கிரகத்தில் அடுத்த 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களைத் தரையிறங்க வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நாசாவின் தலைவரான ஜிம் பிரைடென்ஸ்டெயின் (Jim Bridenstine) அண்மையில் Science Friday என்ற ரேடியோ நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் `` நிலவில் அடுத்ததாகக் கால் வைப்பது ஒரு பெண்ணாக இருக்கலாம். அங்கே மட்டுமல்ல செவ்வாய்க் கிரகத்திலும் கூட பெண்கள் முதலில் கால் பதிக்கக் கூடும்" எனத் தெரிவித்திருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த நாசா முடிவு செய்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் கூட முற்றிலுமாக பெண்கள் மட்டுமே இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது. அதன்படி இரண்டு விண்வெளி வீராங்கனைகள் இந்த மாத இறுதியில் அந்த சாதனையை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளனர்.