
ஷாஜி - ஓவியங்கள்: ரவி

போவின்பள்ளியிலிருந்து பாலாநகர் செல்லும் நெடும்பாதையின் இருமருங்கும் பரந்த பிரோஸ்குடாப் பகுதி. அதன் ஓர் எல்லையில் ஐதராபாத் விமானநிலையம். மறுமுனையில் பெட்டிகள் போன்று சிறு வீடுகள் நெருங்கிய சேரிகள். பல மாநிலங்களிலிருந்து வேலைதேடி வந்திறங்கிய ஏழை இளைஞர்கள் இடுங்கலான அத்தெருக்களில் சுற்றித் திரிந்தனர். நெடுக்கிலும் குறுக்கிலும் திறந்து கிடந்த சாக்கடைகளின் கரியெண்ணெய் நிறமான அழுகிய நீருக்குமேல் மனித மலம் மிதந்துகொண்டேயிருந்தது. காற்றில் எப்போதும் பரவிக்கிடந்த மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மூன்று நான்கு நாள்களில் நமக்குப் பழக்கமாகிவிடும். ஏனெனில் சொந்த ஊரையும் வீட்டையும்விட்டு ஓடி வந்தவனுக்கு இங்கே பிழைத்தே ஆகவேண்டும். இடுங்கலான ஒற்றையறை வீடுகளில் எட்டும் பத்தும் பேர் கூடி வாழ்ந்தனர். அறையின் மூலையிலுள்ள ‘மோறி’யில்தான் பாத்திரம் கழுவலும் குளியலும் அத்தியாவசிய நேரங்களில் மூத்திரம் போதலும்கூட. சமையலும் சாப்பிடலும் அதனருகேதான். இரவானால் அங்கேயே ஜமுக்காளம் விரித்துக் கூட்டமாக முண்டியடித்துத் தூங்குவார்கள்.

அவர்களில் ஒருவனாகச் சில நாள்கள் நானும் அங்கே இருந்தேன். ஆனால் அதிகாலையில் அங்கிருந்து தப்பித்து இரவில் தாமதமாகத் திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். தூதஞ்சல் ஆவணங்கள் மற்றும் பொட்டலங்களின் விநியோகக்காரன், தனியார் காவலாளிகளை வழங்கும் நிறுவனத்தின் முகவர் எனப் பல வேலைகளைச் செய்தேன். எதிலுமே இரண்டு மாதத்திற்குமேல் தாக்குப் பிடிக்கவில்லை. அறை வாடகை மற்றும் உணவுக் கணக்கில் எனது விகிதத்தைக் கொடுக்க பெரும்பாலும் கையில் பணமிருக்கவில்லை. கிடைப்பதை வைத்துப் புத்தகங்களையும் இதழ்களையும் வாங்கி, கண்ணில் தெரியும் திரைப்படங்களையெல்லாம் பார்த்துத் திரிபவன் கையில் என்ன மீதமிருக்கும்?
அறையிலிருந்து அரைநாழிகை நடந்தால் நெடும்பாதை முச்சந்தி. அங்கே டெக்கான் ஈரானி உணவுக்கடை. கடும் காக்கித் துணி வண்ணத்தில் கொழுத்த கால் கோப்பை ஈரானித் தேநீரை வாங்கிச் சுவைத்து, மூன்று நான்கு வெண்ணை பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கே அமர்ந்து கொள்ளலாம். கையிலிருக்கும் புத்தகத்தைப் படித்து முடிக்கும்வரை அங்கேயே அமர்ந்தாலும் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். அக்கடைக்கு அருகே மலையாளியான மேரிக்குஞ்சு ஆன்ட்டி நடத்தும் ஜோபின்ஸ் எனும் தட்டச்சுப் பள்ளி இருந்தது. ஜோபின் என்பது அவரது மகனின் பெயர். அவனுக்கும் எனக்கும் ஒரே வயது. தட்டச்சுப் பயின்றால் பல வேலை வாய்ப்புகள் வரும் என்று எண்ணி அங்கே நானும் சேர்ந்தேன். பெரிதாக எதுவுமே பயிலவில்லை என்றாலும் ஜோபினும் நானும் நெருங்கிய நண்பர்களானோம். விரைவில் ஷாஜி என்று பெயருடைய இன்னொருவனும் எங்கள் நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டான். குமரி மாவட்டத்தின் குலசேகரம் பகுதிகளிலிருந்து ரப்பர் தாள்களை வரிப்பணம் செலுத்தாமல் சரக்குந்துகளில் கடத்திக்கொண்டுவந்து ஐதராபாத்திலுள்ள ரப்பர் தொழிற்சாலைகளுக்கு விற்று, பெரும்பணத்தைச் சம்பாதித்துக்கொண்டிருந்த ஒருவரின் உறவினன் அந்த ஷாஜி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்ப்பதே எங்கள் மூவர் படையின் வாடிக்கையாக இருந்தது. செலவையெல்லாம் குலசேகரம் ஷாஜி பார்த்துக்கொள்வான். ஆனால் அவனது விருப்பம் தெலுங்கு மசாலாப் படங்களின் மேல்தாம். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஜோபினுக்கோ ஆங்கிலப் படங்கள்தாம் பிடிக்கும். எனக்கு ஹிந்திப் படங்கள். குறிப்பாக, முன்பு பார்க்க முடியாமல்போன பழைய படங்கள். அப்படிப்பட்ட பல படங்களை குறைந்த செலவில் பார்க்கும் அரிய வாய்ப்பினை பிரோஸ்குடா எனக்கு அமைத்துத் தந்தது.
விமானப்படையினரின் திறந்தவெளித் திரையரங்கு ஒன்று அங்கே இருந்தது. நாலாபக்கமும் மதில்சுவர் இருந்தாலும் அதற்கு மேல்கூரை இருக்கவில்லை. விமானப்படை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாகப் படம் பார்ப்பதற்கான ஏற்பாடு அது. மூன்றோ நான்கோ ரூபாய் சிறு கட்டணம் செலுத்தினால், வெளி ஆள்களும் உள்ளே சென்று படம் பார்க்கலாம். பக்கத்தில் இருக்கும் ஐதராபாத் விமான நிலையத்தின் ஆகாயத்தில் அடிக்கடி உயர்ந்து தாழும் விமானங்களின் இரைச்சல் வசனங்களையும் பாடல்களையும் தட்டிச் செல்லும்போது, அவற்றைச் சரிவரக் கேட்க ஆசைப்பட்டு பார்த்த படங்களையே பலமுறை பார்த்தேன். நாசிர் உசேன் எழுதித் தயாரித்து விஜய் ஆனந்த் இயக்கி ஷம்மி கபூர், ஆஷா பரேக் நடித்த ஆர்.டி.பர்மனின் அதிசயப் பாடல்கள் இடம்பெற்ற ‘தீஸரீ மன்சில்’ எனும் படத்தை மட்டும் ஏழு முறை பார்த்த நினைவிருக்கிறது. ஓர் இரவில் அங்கே ராஜ் கபூரின் ‘மேரா நாம் ஜோக்கர்’ படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கனவுக் காட்சிதானே?
சனிக்கிழமை. படம் பார்க்கப் பெருங்கூட்டம். பலரும் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அரை மணி நேரத்திற்குமேல் படம் ஓடியிருக்க வேண்டும். ரிஷி கபூரும் நண்பர்களும் அடங்கிய பதின்பருவப் பள்ளிமாணவர்களின் குழுவை மேய்த்துக்கொண்டு, மேரி எனும் சட்டைக்காரி ஆசிரியை சுற்றுலா செல்கிறார். சிமி கேர்வாள் எனும் இளம் நடிகைதான் அப்பாத்திரம். நீட்டம் குறைவான குட்டியுடுப்பை அணிந்த அவரைக் கண்டால், ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவி என்றே தோன்றும். “தீத்தர் கே தோ ஆகே தீத்தர், தீத்தர் கே தோ பீச்சே தீத்தர்…” பாடியாடிச் சிரித்து மகிழ்ந்து ஒரு காட்டாற்றில் அந்த மாணவர்கள் குளியலுக்கு இறங்குகிறார்கள். சேட்டை செய்யும் மாணவர்களைக் கோபமாகத் திட்டும்போது தடுமாறிக் கால் வழுக்கி ஆற்றுத் தண்ணீரில் விழுகிறார் சிமி. நனைந்து உடலில் ஒட்டிப்பிடித்த குட்டியுடுப்புடன் தண்ணீரிலிருந்து எழுந்துவரும் அவரது காமக்கிளர்ச்சி யூட்டும் உடலை இன்னும் குழந்தைப் பருவம் விடாத ரிஷி கபூர் வேட்கை யுடன் பார்க்கிறான். பின்னர், அருகேயுள்ள தழைக்காட்டின் மறைவில் உடை மாற்றும் சிமியின் நிர்வாணத்தை அவன் ஒளிந்து நின்று பார்க்கிறான். அன்றிரவு அவனது கனவில் தழைக்காட்டிலிருந்து முழுநிர்வாணமாக இறங்கிவரும் சிமி காட்சியளிக்கிறார்! எல்லோரும் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு பெருவோட்டத் திரைப்படத்தில் கதாநாயகி முழுநிர்வாணமாக நடித்திருக்கிறாள்! பார்வையாளர்கள் வாய்பிளந்தனர். அரங்கம் முழுவதும் ஒரே சலசலப்பு. “அது கனவுக் காட்சிதானே, நிஜமில்லையே” என்று நாங்கள் நகையாடினோம் என்றாலும், குட்டியும் குடும்பமுமாக வந்தவர்கள் அதிர்ந்துபோய் முகத்தோடு முகம் பாராமல் தலைகுனிந்து அமர்ந்தனர். ராஜ் கபூர் இயக்கிக் கதாநாயகனாக நடித்த அப்படத்தில், அவரது குழந்தைப் பருவத்தைத்தான் சொந்த மகனான ரிஷி கபூர் நடித்தான். பால்யம் தாண்டாத தனது மகனை ஒரு தகப்பன் இப்படியெல்லாம் நடிக்கவைக்க லாமா? அனைவருக்கும் பயங்கரமான ஒழுக்க நடுக்கம். திடீரென்று படம் நின்றது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட்டம் சலசலக்கும்போது, ‘இதுவரை பார்த்ததே போதும் சாமீ’ என்று பலர் தமது குழந்தைகளை இழுத்துக்கொண்டு வெளியே சென்றனர். அப்போது அதோ மீண்டும் முதலிலிருந்து படம் தொடங்குகிறது! இது என்ன கூத்து என்று கூட்டம் கூச்சல் போடத் தொடங்கியது. ஆனால் அங்கே யாராலும் எதுவும் செய்ய முடியாது. படம் ஓட்டும் இயந்திரம் உயர்ந்த ஒரு கட்டடத்தில்தான் இருக்கிறது. அங்கே யாருக்கும் அனுமதியில்லை. விமானப் படையின் கண்காணிப்பில் இருக்கும் இடங்கள். யாராவது அத்துமீறி அசைந்தால்கூடப் பிடிபடுவார்கள். ஒரே படத்தைப் பலமுறை பார்க்கும் வியாதி இருந்த நான் சந்தோஷப்பட்டேன். மீண்டும் பார்க்கும்போது விரிவாகப் பார்க்கலாமே. சூட்டை ஏற்றும் சிமி கேர்வாளின் காட்சிகளை மீண்டும் பார்க்கப்போவதன் மெய்சிலிர்ப்பில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அந்தக் காட்சி வந்து முடிந்தவுடன் மீண்டும் படம் நின்றது.
படமோட்டும் அறையின் கீழ்மட்டத்தில் விமானப்படையின் உயர் அதிகாரிகள் அமர்ந்து படம் பார்ப்பதற்கான தனித்தளம் ஒன்று இருந்தது. அங்கே உயர் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கிறங்கி அமர்ந்திருந்தார். போதை மிதப்பில் ஓர் அரசரைப்போல் வீற்றிருந்த அவரது ஆணையின்படிதான் படம் முதலிலிருந்து மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அன்றைக்குப் படம் பார்க்கவந்த ஆண்களில் பெரும்பாலானோர் அக்காட்சியை மீண்டும் பார்க்கவேண்டுமே என்று ஆசைப்பட்டிருப்பார்கள். குடிபோதையில் சூடேறிப்போன உயர் அதிகாரியின் நிலைமை சொல்லவா வேண்டும்! இடுப்புப் புட்டியிலிருந்து குடித்துக்கொண்டேயிருந்த அவர், விரைவில் தலைதொங்கித் தூங்கிப்போனதால் மூன்றாவது தடவை ‘மேரா நாம் ஜோக்கர்’ நில்லாமல் ஓடியது. நிஜத்திலேயே நான்கு மணி பதினைந்து நிமிடம் நீளமிருக்கும் அப்படத்தைப் பார்த்து முடிக்க அன்றைக்கு எங்களுக்கு ஐந்தரை மணிநேரம் தேவைப்பட்டது.
குழந்தைகளுடன் வந்தவர்களில் முன்னரே அங்கிருந்து கிளம்பியவர்கள் தப்பித்தனர். முக்கியக் கதாநாயகியான பத்மினியின் (ஆம்... பழைய தமிழ் நடிகை பத்மினியே தான்) முக்காலும் அம்மணமான மார்பகம், உள்புறம் தெரியும் சேலை மட்டுமே கட்டி மழையில் ஆடிப்பாடும் அவரது உடல்வடிவுகள் எனப் படத்தில் மீண்டும் பல ‘நிர்வாண’க் காட்சிகள் இருந்தன. காலகட்டத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத இத்தகைய காட்சி களாலும், இந்தியப் பெருவோட்டத் திரைப்படங்களில் அதுவரைக்கும் கண்டிராத கதைசொல்லும் பாணியாலும் வெளிவந்த காலத்தில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட படம் ‘மேரா நாம் ஜோக்கர்’. ஆனால் இந்தியாவில் வெளிவந்த மகத்தான ஒரு திரைப்படமாக பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டது.
சங்கீத் சுந்தரிகள்
ஐதராபாத்தில் நான் பலப்பல வேலைகளைச் செய்தேன். ஆனால் பிரதான வேலை சினிமா பார்ப்பதேதான். அந்த மாநகரத்தில் நான் ஏறியிறங்காத திரையரங்குகளே இல்லை என்று நினைக்கிறேன். அவற்றுள் செகந்திரா பாத்தில் இருந்த ‘சங்கீத்’ திரையரங்கம் என்னால் ஒருபோதும் மறக்கமுடியாதது. அன்றுவரை நான் பார்த்தவற்றில் மிகவும் அழகான திரையரங்கு அது. சுட்டெரிக்கும் ஒரு கோடைப்பகலில் முதன்முதலில் ‘சங்கீத்’தினுள் நுழையும்போது, வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு குளிர்மை உணர்வு என்னைப் பொதிந்தது. எங்கு பார்த்தாலும் திரைப்படங்களிலிருந்து இறங்கிவந்த கதாநாயகிகளைப்போல் பேரழகிகளான பெண்கள். ஏதோ திருமண வரவேற்பிற்கோ கொண்டாட்ட விருந்திற்கோ வந்திருப்பவர்களைப்போல் அழகான ஆடைகளில் தோன்றும் மனிதர்கள். ராணுவத்திலோ ரெயில்வே துறையிலோ வேலைபார்க்கும் உயர் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தாம். அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பணமும் பிரதாபமும் நாகரிக நடையும் கொண்டவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். உணவு வகைகள் விற்கும் மேஜைகளுக்கருகே அவர்கள் சிரித்து மகிழ்ந்து அணிவந்தனர். வரத் தகுதியற்ற ஓர் இடத்தில் வந்தேறிய ஒருவனின் பதற்றத்துடன் நான் குழம்பி நின்றேன். ஜோபின், சீட்டுகளை வாங்கி வந்தான்.
அலங்கார விளக்குகளின் ஒளியில் சுத்தமும் குளிரும் நிரப்பி, அதுவரை நான் அறிந்திராத கவர்ந்திழுக்கும் நறுமணத்துடன் ‘சங்கீத்’தின் அகத்தளம் எங்களை வரவேற்றது. ‘கர்ம கர்ம கமேலியன்… யூ கம் ஆண்ட் கோ...’ துள்ளலான பாடல் சிறந்த ஒலித்தரத்தில் ஒலித்தது. இளம் சிவப்பு இருக்கைகள் வில்வளைவு வடிவத்தில் அமைந்திருந்தன. திரையின் இடத்தில் திரை இல்லை, அகம் வளைந்த ஒரு வெண்சுவர் மட்டுமே எனத்தோன்றியது. ‘மயாமி ப்ளூஸ்’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தைத்தான் அன்றைக்கு நாங்கள் பார்த்தோம். சிறந்த ஒரு குற்றவிசாரணைத் திரைப்படம். படம் ஆரம்பமான கணத்திலேயே நான் படத்திற்குள் சென்றேன். நிகழ்வுகளை அருகில் நின்று பார்ப்பதுபோன்ற உணர்வு. அவ்வளவு தெளிவான, துலக்கமான திரைக்காட்சிகளை எந்தவொரு திரையரங்கிலுமே அதுநாள்வரை நான் பார்த்திருக்கவில்லை.

‘சங்கீத்’தில் இருப்பது விசேஷமான வெள்ளித்திரைதான் என்று ஜோபின் சொன்னான். படம் ஓட்டும் இயந்திரத்தில் கார்பன் தண்டுகளை எரிப்பதற்கு மாறாக வலுத்த பிரகாசத்தைத் தரும் ‘க்ஸெனாண்’ வளைவு விளக்கைப் பயன்படுத்துகி றார்கள். பொடிசு ஓசைகள் வரை துல்லியமாக, தெளிவுடன் கேட்க வைக்கும் அல்ட்ரா ஸ்டீரியோ ஒலியமைப்பு. ‘சங்கீத்’தின் சினிமா வேறு எங்குமே காணக்கிடைக்காத அனுபவம். தினசரி நான்கும் ஐந்தும் காட்சிகள் அங்கே இருந்தன. ஒவ்வொன்றும் வேறுவேறு படங்கள். புதுசும் பழசுமான ஆங்கிலத் திரைப்படங்கள். ‘ஸ்கைலைன்’, ‘டிவோளி’ போன்ற திரையரங்குகளிலும் ஆங்கிலப் படங்களைப் பார்த்தேன். ஆனால் தரம் குறைந்த திரைப்படங் களைக்கூடத் தரமான படங் களாகக் காட்டும் மாயவிந்தை ‘சங்கீத்’திற்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.
‘சங்கீத்’ திரையரங்கில் கிட்டத்தட்ட நிரந்தரமாகவே தங்கிவந்தவர் கிட்டார் கலைஞரும் மேற்கத்திய இசைஞருமான ரெஜி. அவர் கேரளத்தின் புனலூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடித்த ‘இன்டியானா ஜான்ஸ்’, ‘ரைடேர்ஸ் ஆஃப் த லோஸ்ட் ஆர்க்’ எனும் படத்தைப் பார்க்கப் போனபோதுதான் அவரை நான் முதலில் சந்தித்து அறிமுகமானேன். சினிமா வெறியும் இசை வெறியும் முற்றிப்போன இரண்டு மலையாளத்தான்கள் ஒரு தொலைதூர நகரத்தின் திரையரங்கில் சந்திக்கிறார்கள். கணநேரத்தில் நண்பர்களாகிறார்கள். விரைவில் ஒரே அறையில் வசிக்கத் தொடங்குகிறார்கள். ரெஜியின் நட்பும் அவருடனான சகவாசமும்தாம் மேற்கத்திய பரப்பிசையை எனக்கு அறிமுகம் செய்தது. சங்கீத் திரையரங்கில் கேட்ட ‘கர்ம கமேலியன்’, ‘கல்ச்சர் க்ளப்’ எனும் இசைக்குழுவிற்காக பாய் ஜார்ஜ் எனும் பாடகர் பாடியது என்றும், சங்கீத்தில் திரைச்சீலை உயரும்போது கேட்கும் மெய்சிலிர்க்கவைக்கும் கருவியிசை யூரோப் எனும் இசைக்குழுவின் ‘ஃபைனல் கௌண்ட் டவுண்’தான் என்பதையுமெல்லாம் ரெஜியிடமிருந்துதான் அறிந்துகொண்டேன்.
பட்டணத்தில் ‘கர்பூதம்’
விரைவில் ரெஜியின் இசைக்குழுவான ‘செலெப்ரேஷன்ஸ்’ இன் ஒருங்கிணைப்புப் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். ‘செலெப்ரேஷன்ஸ்’ எனும் பெயரை ‘கர்ஃப்யூ’ என்று மாற்றினேன், காரணமிருந்தது. அக்காலத்தில் ஐதராபாத் நகரின் மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக இருந்தது ‘கர்ஃப்யூ’ எனும் ஊரடக்குச் சட்டம். நகரின் பல பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் எரிந்து வெடிக்கத் தயாராகி, ஹிந்து-முஸ்லிம் மதக்கலவரத்தின் தீப்பொறிகள் பறந்தன. அதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆங்காங்கே அவ்வப்போது ஊரடக்குச் சட்டத்தை அமல்படுத்தினார்கள். ‘அந்தப் பகுதியில் ‘கர்ஃப்யூ’, அங்கே செல்லாதீர்கள், இந்தப் பகுதியில் ‘கர்ஃப்யூ’, இங்கே வராதீர்கள்’ என்றெல்லாம் தொடர்ந்து கேட்கக் கிடைத்தன. அந்தச் சட்டத்தின்மேல் எங்களுக்கிருந்த கடுமையான எதிர்ப்பி னாலும், கேட்டவுடன் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெயர் வேண்டும் என்கின்ற எண்ணத்தினாலும்தாம் இசைக்குழுவிற்கு ‘கர்ஃப்யூ’ என்று பெயரிட்டேன். ஐதராபாத்தின் மாபெரும் தங்கும் விடுதிகளான ‘ஹாலிடே இன் கிருஷ்ணா’, ‘தாஜ் பஞ்சாரா’ போன்ற பல இடங்களில் கர்ஃப்யூவின் மேற்கத்திய இசைக் கச்சேரிகள் அரங்கேறின.
ஒரு புத்தாண்டு இரவில் குடித்துக் கும்மாளம்போட்ட பார்வையாளர்கள், எமது முக்கியப் பாடகனான மாரியோவின் ஆங்கிலப் பாடல்களுக்கு எதிராகக் கூச்சலிடத் தொடங்கினர். ‘ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும்’ என்று அவர்கள் உரத்துக் கத்தினர். ஆனால் ரெஜிக்கும் அவரது குழுவிற்கும் ஹிந்திப் பாடல்கள் என்றாலே ஒவ்வாது. பாடல் என்றால் அவர்களுக்கு மேற்கத்தியப் பரப்பிசைதான். வேறு வழியில்லாமல் நான் மேடையேறி ‘படி முஷ்கில் ஹே’ என்ற சமகாலப் பாடலையும் ‘லாக்கோம் ஹே யஹாம் தில் வாலே’ என்ற பழைய பாடலையும் பாடினேன். ஒத்திகையில்லாமல், தபேலா, டோலக் போன்ற இந்திய இசைக்கருவிகள் எதுவுமில்லாமல் வெறுமெனே கிட்டார்கள் மற்றும் டிரம்ஸை வைத்துக்கொண்டு அந்தப் பாடல்களைப் பாடும்போது கூட்டத்திலிருந்து செருப்படியைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் ஹிந்திப் பாடல்களை இதயபூர்வமாக நேசித்த அம்மக்கள், குறைகள் எதையும் கணக்கிடாமல் உள்ளார்ந்து எங்களை ஊக்குவித்தனர். சிலர் மேடையேறி வந்து எனது கழுத்தில் ரூபாய் நோட்டு மாலைகளை அணிவித்தனர்! ஹிந்தித் திரைப்படங்களும் ஹிந்திப் பாடல்களும் ஐதராபாத் நகருக்கு உயிர்மூச்சாக இருந்தது. சல்மான் கான், அமிர் கான், ஷாரூக் கான், அஜய் தேவ்கன் போன்ற நட்சத்திரங்களின் வருகையை மும்பையைவிட ஐதராபாத்துதான் கொண்டாடியது என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. சஞ்சய் தத், சன்னி தியோள், அனில் கபூர் போன்றவர்களும் ஐதராபாத்தின் சொந்தங்களாக இருந்தனர். எத்தனையோ புத்தம்புது ஹிந்திப் படங்களை ஒன்றுவிடாமல் அங்கே பார்த்திருக்கிறேன்.
அலங்கோலப் படப்பிடிப்பு
இந்த வாழ்க்கையே ஒரு சினிமாதான் என்று பொருள்கொண்ட ‘ஜீவிதமே ஒக சினிமா’ எனும் தெலுங்குப் படத்தை அக்காலத்தில் பார்த்த நினைவிருக்கிறது. ஆனால் அக்காலத்துத் தெலுங்குப் படங்களில் துளியளவும் நிஜ வாழ்க்கை இருக்கவில்லை. மனித சாத்தியமற்ற வீர சாகசங்களும் அடிக்கடி நிகழும் ஆட்டம்பாட்டங்களும் அப்படங்களில் நிறைந்து வழிந்தன. அவற்றின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் ஆபாசமாக இருந்தன. கதாநாயகிகளின் இளகியாடும் புட்டங்களும் உயர்ந்து தாழும் மார்பகங்களும் தொப்புள் குழிப் பம்பரங்களும் முழுத்திரைக் காட்சிகளாகக் காட்டப்பட்டன. காமம் சூடேற்றிய நடனக் காட்சிகள். அன்றைய தெலுங்கு சினிமாவின் பொதுப்போக்காகவே அது இருந்தது. ஆனாலும் சினிமா பார்ப்பது எனும் அனுபவம் அளிக்கும் உற்சாகத்திலும் மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலும் பல தெலுங்குப்படங்களை நானும் பார்த்தேன். தெலுங்கு மொழியை நான் கற்றுக்கொண்டது அத்திரைப்படங்களின் உதவியினால்தான். மட்டுமல்லாமல் ‘அஞ்சலி’, ‘குணா’ போன்ற அக்காலத்தின் முக்கியமான தமிழ்ப் படங்களை தெலுங்கு மொழிமாற்றத்தில்தான் பார்த்தேன். அக்காலத்து ஐதராபாத்தில் தமிழ்ப் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. ஆனால் அவ்வப்போது சில மலையாளப் படங்கள் வந்தன. ‘லம்பா’ போன்ற துர்நாற்றம் பிடித்த திரையரங்குகளில் காட்டப்படும் ‘சத்திரத்தில் ஒரு ராத்ரி’, ‘அஞ்சரைக்குள்ள வண்டி’ வகையறாப் படங்கள்!

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோர் அக்காலத் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். ஒருநாள் ஏதோ அவசர வேலைக்காக அமீர்பேட் பகுதியில் செல்லும்போது, அங்கே ஒரு சினிமாப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அதுநாள்வரை ஒரு படப்பிடிப்பை நான் நேரில் பார்த்ததில்லை. அனைத்தையும் மறந்து அங்கே சென்று நின்றேன். பெரும்புகழ் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா எனும் தற்கால உச்ச நட்சத்திரம் நடிக்கும் ஏதோ படத்தின் படப்பிடிப்பு. அவர் இரண்டு கைகளிலும் நீளமான இரண்டு துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு அந்தரத்தில் பறந்துவந்து சுடுவதுபோன்ற காட்சியைப் படமாக்குகிறார்கள். சாய்ந்த ஒரு பலகையின் மேலேறி ஓடிவந்து எம்பிக் குதித்து, கேமராவை நோக்கிச் சுட்டபின் அவர் கீழே விழவேண்டும். தரையில் பல அடுக்குகளில் பஞ்சு மெத்தைகள் விரித்திருந்தனர். அவற்றின் மேல்தான் வந்து விழுகிறார். அத்துப்பாக்கிகள் அட்டைக் காகிதத்தில் செய்து கறுப்பு வண்ணம் அடித்தவை என்பது பார்த்தாலே தெரியும். ஆனால் கைவிசை இழுக்கும்போது தீயும் புகையும் வருவதுபோல் அமைத்திருந்தனர். மீண்டும் மீண்டும் அக்காட்சியை எதற்கு எடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இரண்டு மணி நேரமாகியும் அக்காட்சி சரியாக வராததால் படக்குழு ஆத்திரமடைந்தனர். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நின்றுகொண்டிருந்த கூட்டத்தைத் திட்டித் துரத்தத் தொடங்கினர். கதாநாயகனின் கவனத்தைப் பார்வையாளர்கள் கலைக்கிறார்களாம்! கடுமையான தெலுங்குக் கெட்டவார்த்தைகளைத்தாம் பயன்படுத்துகிறார்கள். முக்கியமான வேலையை விட்டுவிட்டுப் படப்பிடிப்பைப் பார்க்க வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இவ்வாறாக வாழ்க்கையில் முதன்முதலாக நான் பார்த்த சினிமாப் படப்பிடிப்பு அலங்கோலமான ஒரு நினைவானது.
ரோஜா ரமணீ ராஜகுமாரி…
மரச் சாமான்களையும் வீட்டு உள்தளங் களுக்கான அலங்காரப் பொருள்களையும் உருவாக்கி விற்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளராக நான் வேலை பார்த்துவந்த காலம். ஒருநாள் அங்கே உயரம் குறைந்து அதிகமாகத் தடித்த ஒரு பெண்மணியும் தலையில் முடியே இல்லாத ஓர் ஆணும் வந்தனர். மரச் சாமான்கள் வாங்க வந்தவர்கள்தாம். அப்பெண்ணின் முகம் எனக்கு நன்கு பரிச்சயமானதாகத் தோன்றியது. கடவுளே... இவர் நடிகை செம்பரத்தி சோபனா அல்லவா…! இனம்புரியாத ஒரு பதற்றம் என்னைத் தாக்கியது. இருந்தும் அவரிடம் சென்று மிகுந்த தயக்கத்துடன் ஆங்கிலத்தில் கேட்டேன்.
“மேடம்... நீங்க திரைநடிகை சோபனாதானே?”
“ஓ... நீங்க மலையாளியா? ஏன்னா மலையாளிகளுக்கு மட்டும்தான் நான் சோபனா...”
“தெரியும் மேடம். உங்க நிஜப்பெயரு ரோஜா ரமணி”
அவர் நடித்த முதல் மலையாளப் படமான ‘பூம்பாற்றா’விலும் அடுத்த படமான ‘இங்குலாப் சிந்தாபாத்’திலும் குழந்தை நட்சத்திரமாக வந்தபோது அவரது பெயர் பேபி ரோஜா ரமணி. ‘செம்பரத்தி’ படம் வழியாக பதின்பருவக் கதாநாயகி ஆனபோது, அதன் இயக்குநர் பி.என்.மேனன் தான் அவரது பெயரை சோபனா என்று மாற்றினார். தமிழிலும் தெலுங்கிலும் எப்போதுமே ரோஜா ரமணி என்ற பெயரில்தான் அவர் அறியப்பட்டார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் தருண், மணி ரத்னத்தின் ‘அஞ்சலி’ படம் வழியாகத் திரைக்கு அறிமுகமானார். தற்போது பல படங்களில் நடிக்கிறார். சோபனா குறித்து என்னிடமிருந்த எல்லாத் தகவல்களையும் ஒரே மூச்சில் நான் எடுத்து விட்டேன்.
“தருண் எப்படி இருக்கிறான் மேடம்?’”
“செய்யும் தொழில் மரச்சாமான் வியாபாரம்! ஆனா உங்க தலமுழுதும் சினிமாதான்போல! என்னப் பத்தி எல்லாமே தெரிஞ்சு வெச்சிருக்கீ ங்களே!”
“என்ன செய்யறது மேடம். எனது குழந்தைப் பருவத்தின் ஒரே கதாநாயகி நீங்கதானே...”
அதைக் கேட்டதும் சோபனா முகம் மலர்ந்து புன்னகைத்தார். முற்றிலுமாக மாறிப்போன அவரது உருவம் என்னைச் சங்கடமடையச் செய்தாலும், பேரழகுடைய அந்தப் புன்னகையும் கன்னக்குழியும் இன்னும் சற்று மீதமிருக்கிறதே என்று எண்ணி ஆசுவாசமடைந்தேன்.
தெலுங்கின் ஆகப்பெரிய நட்சத்திரம் சிரஞ்சீவி, எங்கள் நிறுவனத்தின் வாடிக்கை யாளராகயிருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் எங்கள் கடைக்கோ அலுவலகத்திற்கோ வரவில்லை. அவரது மனைவிதான் அடிக்கடி வருவார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை தமது வீட்டின் உள் அலங்காரங்களையும் மரச்சாமான்களையும் மாற்றியமைப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். இதனால் மிகுந்த பயனடைந்தது எங்கள் நிறுவனம்தான் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. தெலுங்கின் முக்கிய வில்லன் கோட்டா ஸ்ரீநிவாஸ ராவ், பிரபல இயக்குநர் இ.வி.வி.சத்யநாராயணா, நகைச்சுவை நடிகர் பாபு மோகன் எனப் பல சினிமாப் பிரபலங்களை அங்கே சந்தித்தேன். அனைவரிடமும் நிறுவனத்தின் மேலாளர் என்கின்ற முறையில் மட்டுமே பேசிக்கொண்டு தள்ளிநின்ற நான் ஒரேயொரு சினிமாப் பிரபலத்திடம் சினிமாவில் எனக்கும் எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று என்னையறியாமல் கேட்டுவிட்டேன்.
(தொடரும்…)